Sunday, September 26, 2010


விநாயகர் அகவல்

ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான்எழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில்புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் றன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலம்ஒரு நான்கும் தந்து எனக் கருளி
மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின்நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்துஅறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாகஇனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லாமனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டிச்

அணுவிற் கணுவாய்க் அப்பாலுங் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்பு
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே !!!

11 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

ஒளவையின் அகவல் சொல்லியே விநாயகரைத் துதிப்பது என் வழக்கம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

மோகன்ஜி said...

அகவல் ஒரு அற்ப்புதமான துதி. சின்ன வயதில் அர்த்தம் புரியாமல் ஒப்பித்ததும்,அர்த்தம் விளங்க விளங்க ஆச்சர்யப் பட்டதும் நினைவுக்கு வருகின்றன.என் மடிக்கனணியில் சேமித்துக் கொண்டேன் மேடம்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மோகன்ஜி.

ஆயில்யன் said...

//ஒளவையின் அகவல் சொல்லியே விநாயகரைத் துதிப்பது என் வழக்கம். //

அதே! :)

எனக்கு தினவழிபாடே விநாயகர் அகவலில்தான் ஆரம்பிக்கிறது :))

Anonymous said...

Crore Thanks to you Madam! for fulfilling my humble request on Ganesh Chaturthi by comments.
I save it in desktop to read..,
Looking more devotional posts from you!
Regards
Sai Gokulakrishna
http://saigokulakrishna.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆயில்யன்.

நன்றி சாய் கோகுல கிருஷ்ணா.

Menaga Sathia said...

i'm also save this post...thxs!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

Geetha6 said...

super

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

Post a Comment

Related Posts with Thumbnails