Wednesday, June 30, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 1

கடவுள் வழிபாட்டில் மந்திரங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தாய், சுவாமி ஸ்லோகங்கள் சொல்லும்போது, அப்போதே குழந்தை அவற்றை கேட்க ஆரம்பித்து விடுவதாக சொல்கிறார்கள். சிறு வயதிலிருந்தே ஸ்லோகங்கள் சொல்லப் பழகினால் அவர்களது பேச்சு நடையும், மொழி உச்சரிப்பும் நன்றாக இருக்கும். எனக்குத் தெரிந்த சில ஸ்லோகங்களை இங்கே சொல்கிறேன். நம்பிக்கையுடன் சொல்லிப் பயனடையுங்கள்.

********************
ஸ்ரீ விநாயகர் துதி

சித்தி புத்தி வினாயகரே
சிங்கார கணபதியே
முக்தி தரும் மூலவனே
மூஷிக வாகனனே
முருகனுக்கு மூத்தவனே
முக்கண் பெற்றவனே
கருணைக்கும் கைகொடுக்கும்
கணபதியே காப்பாவாய்
அரசமரம் உன்வீடு
ஆலயங்கள் தனிவீடு
கரங்கள் ஐந்துடனே
காத்திட வந்திடப்பாய்
மாம்பழம் பெற்றவனே
மனக்கவலை தீர்ப்பவனே
ஓம் எனும் மந்திரத்தில்
ஒலி வடிவானவனே
குளக்கரையில் குந்திடுவாய்
குடும்பங்களை காத்திடுவாய்
நாட்டைக் காத்திடுவாய்
நன்மையெல்லாம் தந்திடுவாய்
மஞ்சளில் நீ வருவாய்
மாட்டுசாணத்திலும் கொஞ்சியே
நல்ல காரியங்கள் தொடங்கையிலே
கை கொடுப்பாய்
ஆயிரம் வெற்றிகளை அள்ளிக்குவித்திடுவாய்
கொம்பு ஒடிந்து செய்திடுவாய்
கொம்பு ஒடிந்து எழுந்திடுவாய்
நம்பிக்கை தந்திடுவாய்
தும்பிக்கை நாயகனே

என்று, எந்த நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரும் கணபதியை நினைத்து
இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்தால், நல்லபடியாக நடக்கும்.

********************
லெட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்


உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
சர்வதோமுகம் ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

என்று, இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் தீராத கஷ்டங்களும் தீரும். பெருமாள் தனது பக்தனின் கஷ்டத்தை போக்க நரசிம்மர் என்று ஒரு அவதாரமே எடுத்தார் என்றால் அவர் எத்தனை கருணை மிக்கவர் என்பது புரியும்.

********************
கோளறு திருப்பதிகப்பாடல்


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற திருஞானசம்பந்தர் பாடலை தினமும் சொல்லி
வந்தால் நவ கிரஹங்களினால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் தீரும். தினமும் நாம் வெளியே கிளம்பும் போது இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு கிளம்பினால் பத்திரமாக வீடு வந்து சேரலாம்.

********************
ஸ்ரீ ஹயக்ரீவர் துதி


ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

நமது பிள்ளைகள் படிப்பில் நன்கு முன்னேற இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளையும் 11 முறை சொல்லிவரவும்.

********************
ஸ்ரீ நாமகிரி லெட்சுமி சஹாயம்


ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா

இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 12 முறை பாராயணம் செய்துவர, கணித பாடத்தில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை பெறமுடியும். கணித மேதை ராமானுஜருக்கு நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் அருளிய பாடல் இது.

********************

Tuesday, June 29, 2010


இறையருள்

வணக்கம்.

வாழும் தெய்வங்களான என் பெற்றோரை வணங்குகிறேன். என் இஷ்ட தெய்வங்களான கணபதியையும் நரசிம்ஹரையும் வணங்கி இந்த நல்ல விஷயத்தை தொடங்குகிறேன். இங்கே நான் சென்று பார்த்த திருக்கோயில்களைப் பற்றியும், நான் சென்று பார்த்த சுற்றுலா தலங்களைப் பற்றியும், நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும் சந்திக்கும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று திருக்கோயில்கள். திருக்கோயில்கள் என்பவை நமது இந்திய மக்களோடு, இந்திய கலாசாரத்தோடு பிண்ணிப் பிணைந்த ஒரு விஷயம். திருக்கோயில்கள் கடவுளின் இருப்பிடமாக மட்டுமல்லாது, நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், கலை, அப்போது ஆண்ட மன்னர்களுடைய வரலாறு போன்ற செய்திகளை நாம் தெரிந்து கொள்வதற்கான காலக் கண்ணாடிகளாக இந்த திருக்கோயில்கள் அமைந்துள்ளன.


திருநீறு இல்லாத நெற்றியும் கோயில் இல்லாத ஊரும் பாழ்
என்பது ஆன்றோர் வாக்கு. இதனை கருத்தில் கொண்டுதான் அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நிறைய கோயில்களைக் கட்டினர். நாம் கோயில்களுக்கு செல்வதால் நம் மனம் மட்டுமல்லாது உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. நாம் இப்போது மேற்கொள்ளும் நடைப் பயிற்சியினால் கிடைக்கும் பயனை அப்போது கோயில் பிரகாரத்தை சுற்றியே பெற்றார்கள். எப்படியென்றால் கோயில் பிரகாரப் பாதையில் கருங்கல் தரையில் நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்புகள் மூலமாக நமக்கு உள்ள உடல் உபாதைகள் தீரும். கோயிலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் நமக்கு நன்மைகளை அளிக்கும். அங்கு நமக்கு தரப்படும் பிரசாதங்களை ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற நெறி நிலைநாட்டப் படுகிறது. அக்காலத்தில் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளை வளர்க்கும் இடமாகவும், பலவிதமான சிற்பவேலைப் பாடுகளின் இருப்பிடமாகவும் திருக்கோயில்கள் இருந்துள்ளன. அக்காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மக்களுக்கு உறைவிடமாகவும், போர் காலங்களில் மன்னரோ மக்களோ எதிரி நாட்டினரிடமிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ளும் மறைவிடங்களாகவும் இருந்துள்ளன. இவ்வாறு கோயில்கள் அப்போதும் சரி இப்போதும் சரி நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கழுக்காணிமுட்டம் என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் முன் மண்டபத்தை சீரமைப்பதற்காக நிலத்தை தோண்டும்போது 87 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவை சோழர் காலத்து செப்பேடுகள். இதிலிருந்தே கோயில்கள் வரலாற்றை காட்டும் கண்ணாடி என்பது தெரிகிறது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தியை நமக்குக் காட்டும் திருக்கோயில்களை நாம் அன்றாடம் சென்று தரிசித்து அங்கே நெய் விளக்குகளை ஏற்றி வைத்து அதனால் கிடைக்கும் புண்ணியம் மட்டுமே காலங்களை கடந்து நிற்கும் நம் திருக்கோயில்களைப் போல நமது சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் நிலையான சொத்து ஆகும்.


நன்றி,
புவனேஸ்வரி ராமநாதன்


Related Posts with Thumbnails