Thursday, September 30, 2010


மதுர வடை

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 250 கிராம்
அச்சு வெல்லம் : 4
தேங்காய் : 1/4 மூடி
உப்பு : ஒரு சிட்டிகை
கடலை எண்ணெய் : பொரிக்க

செய்முறை:
கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். வெல்லத்தை பொடித்துக் கொண்டு ஊறிய கடலைப் பருப்புடன் போட்டு வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய், ஒரு துளி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அடுப்பை இளந்தீயில் வைத்து வடை போல தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மதுர வடை தயார்.


வீட்டு விசேஷங்களுக்கு நாம் இனிப்பு செய்து படைப்பது வழக்கம். சீக்கிரத்தில் செய்து படைப்பதற்குத் தோதான உணவு வகை இந்த மதுர வடை. விசேஷ தினத்தன்று அவசர வேலை ஏதும் இருந்தால் நம்மால் விரிவாக எப்போதும் போல வடை, பாயசம் செய்து படைக்க முடியவில்லை என்றால் இந்த வடையை படைத்தோம் என்றால், வேலை சுலபமாக முடியும். விருந்தினர்கள் நம் வீட்டிற்கு திடீர் விஜயம் செய்தார்கள் என்றால் உடனடியாகவும், வித்தியாசமாகவும் செய்து கொடுக்கத் தகுந்த சிற்றுண்டி இந்த மதுர வடை.

Wednesday, September 29, 2010


நவரச ரஜினி

ரஜினி - இந்த பெயர் சிறியவர் முதல் பெரியவர் வரை, இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் பிடித்த மந்திரம். சிவப்பானவர்களை மட்டுமே திரையுலகம் ஆராதித்த காலகட்டத்தில் கருப்பானவர்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர். ரஜினி என்றாலே ஸ்டைல் மட்டும் தான் என்பது சிலரது கருத்து. ஆனால், ரஜினி அவரது ஆரம்பகால சினிமாவில் பல நல்ல இயக்குனர்களின் படங்களில் தன் நடிப்புத்திறமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ரஜினியின் நடிப்பை நவரசங்களோடு ஒப்பிடும் அளவிற்கு தன் படங்களில் அவர் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.


எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, இளமை ஊஞ்சலாடுகிறது, புவனா ஒரு கேள்விக்குறி, தில்லுமுல்லு, மூன்று முகம், பதினாறு வயதினிலே, அவர்கள், ஜானி போன்ற படங்கள் ரஜினி தன் நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளவைகளில் குறிப்பிடத்தக்கவை.

அப்பாவியான வேடங்களில் நடிப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே தான். ராஜாதி ராஜா, தம்பிக்கு எந்த ஊரு, தர்மதுரை, தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் அவரது அப்பாவி நடிப்பில் சிறு நூல் அதிகம் நடித்திருந்தால் கூட அது அதிகப்படியான நடிப்பாகியிருக்கும். ஆனால் அந்த அப்பாவி நடிப்பின் நேர்த்தியினை இப்படங்களில் ரஜினியால் அழகாக வெளிக்கொணர முடிந்துள்ளது.

முள்ளும் மலரும் படத்தில், கையிழந்து வேலையையும் இழந்து, பேச்சில் நம்பிக்கையையும், இயலாமையை மனதிற்குள்ளும் தாங்கி நிற்கும் இடத்தில் ரஜினியின் அற்புதமான நடிப்புத்திறமை பளிச்சிடும்.மூன்று முகம் படத்தில், வில்லன்களை சிறையில் அடைக்கச்சொல்லி வசனம் பேசிக்கொண்டிராமல் தன் ஸ்டைலான சைகையாலே அழகாக கூறும் நடிப்பு அந்த காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கிறது.கதாநாயகனாக ரஜினி எத்தனையோ ஸ்டைல்களைச் செய்திருந்தாலும், பதினாறு வயதினிலே படத்தில் வில்லத்தனமாக அவர் செய்யும் ஸ்டைல் தனி அழகு தான்.ஜானி படத்தில் ஸ்ரீதேவியிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் இடத்திலும் அவருடைய நடிப்பு மிக இயல்பாக இருக்கும். ஸ்ரீதேவியின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்.இதைப்போல் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், எனக்குப்பிடித்த சில காட்சிகளை இங்கே தொகுத்துள்ளேன்.


வசூல் சாதனைகள், சூப்பர்ஸ்டார் போன்ற அளவுகோல்களை மட்டுமே வைத்து ரஜினியை நோக்குபவர்கள், பல படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்புதிறனைக் கண்டால், தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

Monday, September 27, 2010


கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகிய அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தை தரிசனம் செய்வோம்.


தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

"ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர"

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

இவ்வாறாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி திருத்தலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.

திருத்தலம் அமைவிடம்:
ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம் : சூரிய ஸ்தலம்


தலவரலாறு:
கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத நூல்களை அபகரித்துச் சென்றான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பிரம்மா மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்தார். இதனைக் கண்ட பெருமாள், பிரம்மனுக்கு காட்சி தந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கோமுகாசுரனை அழித்து வேத சாஸ்திரங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுகோளின்படி இங்கேயே வைகுண்டநாதர் என்ற பெயருடன் எழுந்தருளினார். பிரம்மனும் தாமிரபரணி தீர்த்தத்தினை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வித்த காரணத்தாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவியதாலும் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.


பல வருடங்களுக்கு முன்பு இக்கோயில் வழிபாடுகளின்றி, பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் மறைந்திருந்தது. இச்சமயத்தில், அரண்மனை மாடு, மேய்ச்சலுக்கு செல்லும் போது தினமும், அங்குள்ள ஒரு புற்றின்மேல் பாலை சுரந்துகொண்டு இருந்தது. இதனை அறிந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்தார். அங்கே சுவாமி சிலை இருப்பதைக் கண்டு, புதையுண்டு கிடந்த திருக்கோயிலையும் புனர் நிர்மாணம் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தார். பாண்டிய மன்னர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தமையால் பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயரும் உண்டானது.

தல பெருமை:
நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கையில் தண்டத்துடனும், ஆதி சேஷனைக் குடையாகவும் கொண்டு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, கோயிலின் கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தி இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

தலச்சிறப்பு:
வைகுண்டநாதப் பெருமாளின் பக்தர் காலதூஷகன் என்ற திருடன். இந்த காலதூஷகன் பல இடங்களில் திருடியவற்றில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை மக்கள் சேவைக்கும் செலவிட்டான். ஒருமுறை மணப்படை என்ற ஊரில் அரண்மனைப் பொருள்களை திருடச்சென்ற போது காலதூஷகனின் ஆட்கள் அரண்மனை காவலர்களிடம் பிடிபட்டார்கள். அவர்கள் மூலம் காலதூஷகனின் இருப்பிடம் அறிந்த காவலர்கள், அவனை சிறை எடுக்கச் சென்றனர். அப்போது தானே திருடன் வடிவில் வைகுந்தப் பெருமாள் அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை விசாரித்த அரசரிடம், வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன் எனவும், நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, அந்நாட்டை ஆளும் மன்னன் சரியான விதத்தில் அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே தான் திருடியதற்கு மன்னனே காரணம் என்று தைரியமாக கூறினார். இந்தப் புராணத்தைக் கேட்கும்போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியின் வீர முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு தன் முன் நின்று ஒரு திருடனால் தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த மன்னன், வந்திருப்பது பெருமாளே என அறிந்தார். தான் செய்த தவறையும் உணர்ந்தார். பெருமாள் திருடனது வடிவில் வந்தாலும் அனைவரையும் மயக்கும் அழகிய தோற்றத்தில் இருந்த படியால் அன்று முதல் கள்ளபிரான் என்று அழைக்கப்பட்டார்.


தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர். 108 திவ்ய தேசங்களிலும் உள்ள அனைத்துப் பெருமாளும் இந்த தினத்தில் கள்ளபிரானாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம்.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் திருக்கோயில்களின் சிறப்பம்சமே உலகமே வியக்கும் சிற்ப வேலைப்பாடுகள்தான். இந்த ஸ்ரீ கள்ளபிரான் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல. இக்கோயில் சிற்பங்களும் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள்.


தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையில
னேருடுத்த சிந்தை நிலையறி அயன் - போருடுத்த
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய் நாடுஞ்
சீவைகுந்தம் பாடும் தெளிந்து
- (108 திருப்பதி அந்தாதி)

Sunday, September 26, 2010


விநாயகர் அகவல்

ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான்எழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில்புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் றன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலம்ஒரு நான்கும் தந்து எனக் கருளி
மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின்நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்துஅறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாகஇனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லாமனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டிச்

அணுவிற் கணுவாய்க் அப்பாலுங் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்பு
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே !!!

Friday, September 24, 2010


நிலக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்:
நிலக்கடலை : 1/4 படி
கடுகு : 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 2
பச்சை மிளகாய் : 1
பெருங்காயத்தூள் : 1 சிட்டிகை
தேங்காய் : 1/4 மூடி
மிளகாய்த்தூள் : 2 சிட்டிகை
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தழை : சிறிதளவு

செய்முறை:
நிலக்கடலையை நன்கு களைந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் நிலக்கடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் சிறிது பெருங்காயம் கலந்து நன்கு வேக வைக்கவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மிளகாய்தூள், தேவையான அளவு உப்பு இவற்றைப் போட்டு தாளித்து அதன்மேல் வெந்த நிலக்கடலையைப் போட்டு கலக்கவும். ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய தேங்காய் தூவி கலந்தால் நிலக்கடலை சுண்டல் தயார்.


மிகச் சுலபமாகத் தயார் செய்யக் கூடிய உணவு இது. ஆனால் இதனால் கிடைக்கும் சத்தோ மிக அதிகம். பொதுவாக நிலக் கடலையை அவித்து சாப்பிடுவோம். இப்போது உரித்த பச்சைக் கடலை பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அவற்றை சிறிது நேரம் ஊற வைத்து இவ்வாறு சுண்டல் போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.

Wednesday, September 22, 2010


மீண்டும் ஜென்சி

இவ்வுலக வாழ்க்கையே ஒரு வினோதம்தான். எல்லோருமே வாழ்க்கையை அனுபவிக்கிறோம். ஆனால் துன்பத்தையா, இன்பத்தையா என்பது தான் வித்தியாசம். உலகில் பிறந்த அனைவருக்குமே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள எல்லோராலும் முடிவதில்லை. அப்படி திரையுலகில் வாய்ப்பு கிடைத்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களுள் ஜென்சியும் ஒருவர்.


பெண்கள் பொதுவாக குடும்பமா வேலையா என்று வரும்போது குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில்தான் அவர் பாடுவதை நிறுத்திவிட்டார். ஜென்சியின் குரல் தனித்துவம் வாய்ந்தது. அவர் குறைந்த அளவு பாடல்களே பாடியிருந்தாலும் அத்தனையும் முத்துக்கள். அப்போது உள்ள சூழ்நிலையில் அவர் பாடுவதை நிறுத்தினாலும், எதிர் காலத்தில் ஜென்சி நிறைய பாட வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் விருப்பம். இந்த நம்பிக்கையோடு அவர் பாடிய முத்தான பாடல்கள் சிலவற்றைக் கேட்போம்.

என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி)


ஒரு இனிய மனது (ஜானி)


இரு பறவைகள் மலை முழுவதும் (நிறம் மாறாத பூக்கள்)


இதயம் போகுதே (புதிய வார்ப்புகள்)


காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)


மயிலே மயிலே (கடவுள் அமைத்த மேடை)


மீன்கொடி தேரில் (கரும்பு வில்)


ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள்)


தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் (உல்லாசப் பறவைகள்)


அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் (முள்ளும் மலரும்)


தீர்த்தக் கரை தனிலே (தைப்பொங்கல்)


கீதா சங்கீதா (அன்பே சங்கீதா)


பனியும் நானே மலரும் நீயே (பனிமலர்)


பூ மலர்ந்திட (டிக் டிக் டிக்)


என்னுயிர் நீதானே (பிரியா)


ரஜினியின் நடிப்புத் திறமையை அழகாக வெளிக் கொண்டு வந்தவர்களுள் இயக்குனர் மகேந்திரனும் ஒருவர். அவர் இயக்கிய ஜானி, முள்ளும் மலரும் படங்களில் பாடியுள்ளார் ஜென்சி. மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி, ஸ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்தின் மூலம் மீண்டும் பாட வந்துள்ளார் ஜென்சி. வாய்ப்பு மீண்டும் அவரது வாசல் படி வந்துள்ளது. அவரது இனிய குரலைக் கேட்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இசைத்துறையில் அவரது மறுபிரவேசம், எந்தவித தடங்கல்கள் இல்லாத இனிய பயணமாகத் தொடர இசைப் பிரியர்களின் வாழ்த்துக்கள்.

Monday, September 20, 2010


பாகற்காய் பிட்லே

தேவையான பொருட்கள்:
பாகற்காய் : 1/4 கிலோ
புளி : சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார்பொடி : 2 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 சிட்டிகை
மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் : 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1/4 படி
தேங்காய் : 1/4 மூடிசின்ன
வெங்காயம் : 5
சீரகம் : 1 தேக்கரண்டி
அரிசி : 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1/2 தேக்கரண்டி
கடுகு : 1/4 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தழை : சிறிதளவு

செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து புளி கரைசலை தயார் செய்துவைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம்ஊறவைக்கவும். பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளி கரைசலை அடுப்பில் வைத்து அதனுடன் சாம்பார்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு, அதில் பாகற்காயைப்போட்டு அரைவேக்காடு வேக வைத்து, பாகற்காயை வடிகட்டி தனியேவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்புபோட்டு, அரைவேக்காடு வெந்த பாகற்காயை போட்டு நன்றாக வேகவிடவும்.

இதனிடையே
, மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், அரிசி, சீரகம்இவற்றை கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பாகற்காய் நன்குவெந்ததும், அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் கலந்து நன்கு கொதிக்கவிடவும். மசாலா பாகற்காயுடன் கலக்கும் வரை கொதிக்க விடவும். இந்தகலவை தயாராகிக் கொண்டிருக்கும்போதே, ஊற வைத்த கடலைப் பருப்புடன்சிறிதளவு பெருங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு மிக்ஸியில்பகோடாவிற்கு அரைப்பதுபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில்எண்ணெய் வைத்து சின்ன சின்ன உருண்டைகளாக பகோடாபோல் பொரித்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாகற்காய்
கலவை தயாரானதும் செய்து வைத்துள்ள பகோடாவில் பாதியை அதில்போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி விடவும். அந்த சூட்டிலேயே பகோடா நன்றாக ஊறி பாகற்காயுடன் கலந்து விடும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்துக் கொட்டவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவவும். பாகற்காய் பிட்லே தயார்.


இந்த பாகற்காய் பிட்லே செய்யும் போது நமக்கு ஒரு வசதி. தனியாக தொட்டுக்
கொள்ள எதுவும் செய்யவேண்டியதில்லை. அதனுள் ஊறிய பகோடாவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். மீதி எடுத்து வைத்துள்ள பகோடவும் தொட்டுக்கொள்ளலாம். அல்லது அப்பளம் பொரித்து தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். விருப்பப் பட்டால், வீணாக்கக் கூடாது என்று நினைத்தால் பாகற்காய் வடிகட்டிய தண்ணீரில் வேறு ஏதாவது சாம்பார் செய்து கொள்ளலாம்.

Sunday, September 19, 2010


ஃபைவ் ஸ்டார் மேரி

பிரிட்ஜ்டவுனில் நேற்றுடன் முடிவடைந்த பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டிகளில் 48 kg பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதைத்தவிர 2001-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இதுவரை பெண்களுக்கான குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆறுமுறை மட்டுமே நடைபெற்றுள்ளன. ஆறுமுறையும் பதக்கம் வென்றுள்ள ஒரே வீராங்கனை மேரி கோம் மட்டுமே. 2008-ல் உலக குத்துச்சண்டை சம்மேளனம் (AIBA) மேரி கோமை Magnificent Mary என்றழைத்து கௌரவித்தது.


எந்த ஒரு விளையாட்டிலும் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தை பெறுவது கடினம். அதிலும் ஐந்து முறை தொடர்ந்து முதலிடம் பெறுவதென்பது மிக அரிது. எதுஎதையோ இமாலயச் சாதனை என்கிறார்கள். மேரி கோமின் சாதனை தான் உண்மையான இமாலயச் சாதனை.

மணிப்பூரில் பிறந்த மேரி கோம், ஆரம்பத்தில் தடகள விளையாட்டில் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 54 kg பிரிவில் தங்கம் வென்ற டிங்கோ சிங் மணிப்பூரைச் சேர்ந்தவராவார். சக மணிப்பூர் வீரரின் சாதனையால் ஈர்க்கப்பட்ட மேரி கோம், 2000-ம் ஆண்டு முதல் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். கடும் பயிற்சியினால் ஒரே ஆண்டில் உலக அளவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். உலக அளவில் 17 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், தேசிய அளவில் 11 தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளார். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். விளையாட்டு உலகின் ஆஸ்கார் என்றழைக்கப்படும் லாரியஸ் விருதையும் (Laureus World Sports Award) மேரி கோம் மிக விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் அனுமதிக்கப்படவுள்ளன. லண்டன் போட்டிகளில் தங்கம் வெல்வதே தனது முக்கிய குறிக்கோள் என மேரி கோம் தெரிவித்துள்ளார். இவரைத்தவிர, நடந்து முடிந்த பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டிகளில் 81 kg பிரிவில் வெண்கலம் வென்ற கவிதா, லட்சுமி (81 kg), சரிதா தேவி (54 kg), ஆண்கள் பிரிவில் விஜேந்தர் சிங், தொக்சோம் சிங், சுரன்ஜோய் சிங், ஷிவா தாபா ஆகியோர்க்கு லண்டனில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. கியூபா போல் இந்தியா குத்துச்சண்டையில் பிரகாசிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

இந்திய விளையாட்டு வீரர்களில் பலர் உலக தரத்தில் இருப்பதில்லை என்கிற கருத்தை முறியடிக்கும் வகையில் கடந்த சில மாதங்களில் மட்டுமே நான்கு பேர் உலக சாம்பியன்களாகி உள்ளனர். மே மாதத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார் (ஆனந்த் மயிலாடுதுறையில் பிறந்தவர்). ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேஜஸ்வினி சாவந்த் உலக சாதனையை சமன் செய்து தங்கம் வென்றார். இம்மாத ஆரம்பத்தில் மாஸ்கோவில் முடிவடைந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 66 kg பிரிவில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார். இவர்களையடுத்து மேரி கோம்.


மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் மட்டுமல்லாது ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், வில்வித்தை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உருவாகி வருகின்றனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கணிசமான பதக்கங்களை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.


ஆரம்ப காலங்களில் ஸ்பான்சர்கள் ஆதரவின்றி சிரமப்பட்ட மேரி கோமிற்கு இப்பொழுது ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளனர். இதே போன்று திறமையிருந்தும் ஆதரவின்றி தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவ Olympic Gold Quest (OGQ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் கீத் சேத்தியும், முன்னாள் 'ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்' பிரகாஷ் படுகோனும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்பொழுது மேலும் சில முக்கிய வீரர்கள் இணைந்துள்ளனர். திறமை உள்ளவர்களையும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவர்களையும் கண்டறிந்து, அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் உதவியுடன் பயிற்சி கொடுத்து, அவர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாய் மாற்றுவதே இவ்வமைப்பின் குறிக்கோள். துப்பாக்கி சுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், வில்வித்தை ஆகிய ஆறு பிரிவுகளில் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கிறது OGQ. மேரி கோமும் OGQ ஆதரவு பெற்றவர்களில் ஒருவர்.

இந்த OGQ என்ற அமைப்பு "குடத்தில் இட்ட விளக்காய் இருப்பவர்களை குன்றில் இட்ட விளக்காய்" உருவாக்கிக் கொண்டுள்ளது. காலத்துடனும், நேரத்துடனும் செய்யாத எந்த உதவியும் உரியவரைப் போய்ச் சேராது என்பதை அரசாங்கமும் புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்ய முற்படவேண்டும்.

அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் முழு ஆதரவில்லாமலயே உலகத்தரம் வாய்ந்த பல வீரர்களையும், பதக்கங்களையும் இந்தியா பெற்றுவருகிறது. முழு ஆதரவு கிடைத்தால்.... வானமே எல்லை.

Saturday, September 18, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 7

புரட்டாசி மாதம் திருமாலுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் பெருமாளை நினைத்து நமது இல்லங்களில் தளியல் போடுவது வழக்கம். அன்று சுவாமிக்கு வடை, பாயசம் செய்து, பெருமாளுக்கு வடை மாலை சாற்றி, அதோடு மட்டுமல்லாது முருங்கைக் கீரையில் துவட்டல் செய்து பெருமாளுக்குப் படைப்பது மிக விசேஷம்.


திருமால் துதி
:
வந்தாய் போலே வாராதாய் !
வாராதாய் போல் வருவானே !
செந்தா மரைக்கண் செங்கனிவாய் !
நால்தோள் அமுதே ! என்னுயிரே !
சிந்தா மணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங் கடத்தானே
அந்தோ ! அடியேன் உன் பாதம்
அகல கில்லேன் இறையுமே !
அகல கில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்று
உடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிகணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே !
நெடியானே ! வேங்கடவா !
நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே !
வந்தாய்; என் மனம் புகுந்தாய்; மன்னி நின்றாய்
நந்நாத கொழுஞ்சுடரே ! எங்கள் நம்பீ !
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் ! இனி யான் உனை என்றும் விடேனே
தெரியேன் பாலகனாய் பல
தீமைகள் செய்துவிட்டேன்
பெரியேன் ஆயினபின்
பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ்
கனமா மலை வேங்கடவா !
அரியே ! வந்தடைந்தேன்
அடியேனை ஆட்கொண்டருளே !

பச்சை மாமலை போல் மேனி..


Friday, September 17, 2010


கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோயில்

இன்றைய திருகோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்.


திருக்கோயில் அமைவிடம்:
இந்த அழகிய வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் உள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து 18 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : வெங்கடாசலபதி (ஸ்ரீநிவாச பெருமாள்)
தல இறைவி : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : புளியமரம்


தல வரலாறு:
சுபகண்டன் என்னும் அரசனுக்கு தீராத நோய் ஏற்பட்டு, அந்நோயின் காரணமாக உடல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். அதன் காரணமாக திருப்பதி சென்று ஏழுமலையானிடம் தனது உடல் உபாதையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மனமுருக வேண்டிக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற திருப்பதி வேங்கடவன், சந்தன மரத்தால் ஆன தேர் ஒன்றை செய்யும்படியும், அவ்வாறு தேர் செய்யும்போது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும் எனவும், அந்த சந்தனக் கட்டைகளை, தென்பாண்டி நாட்டிற்கு எடுத்துச் சென்று, கருங்குளத்தில் உள்ள வகுளகிரிமலையில் பிரதிஷ்டை செய்தால் அங்கு வாழும் எல்லா மக்களும் நல வாழ்வு பெறுவர் எனவும், அவ்வாறு செய்தால் மன்னரின் உடல் உபாதை சரியாகும் எனவும், திருமலையின் நாயகன், மன்னரின் கனவில் வந்து கூறினார்.

இறைவனின் அருள்வாக்கின்படியே மன்னர் தேர் செய்து மீதமான இரண்டு சந்தனக் கட்டைகளை கருங்குளத்தில் பிரதிஷ்டை செய்தார். அவரது வேதனையும் தீர்ந்தது.


திருத்தலப் பெருமை:
பொதுவாக எல்லா கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோயில் கற்பக்ரஹ சுவாமி சந்தனக் கட்டையால் ஆனவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியே நவதிருப்பதி கோயில்கள் உள்ளன. இந்த நவதிருப்பதி கோயில்களுக்கும், இந்த கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. எவ்வாறென்றால், நாம் நவதிருப்பதி கோயில்களை தரிசனம் செய்வதற்கு முன்னால் இந்த வெங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், எல்லா நவதிருப்பதி கோயில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைப் போலவே முதலில் வேங்கடவனை தரிசித்து பின் நவதிருப்பதி காணச் சென்ற எங்களுக்கு அத்தனை கோயில்களின் தரிசனமும் முழுமையாகக் கிடைத்தது. வேங்கடவனுக்கு நன்றி!!!


தலச் சிறப்பு:
இக்கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோயில். இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மிக அழகிய கோயில். இக்கோயில் அமைந்துள்ள இடம் நம் நகரங்களில் பார்த்திட முடியாத, இயற்கை அழகு நிறைந்த, சுத்தமான காற்று வீசும் பகுதியில் அமைந்துள்ளது. வெங்கடாசலபதிக்கு தினமும் திருமஞ்சனம் என்பது சிறப்பு. விஷ்ணு தாரு ரூபமாக காட்சி தரும் ஸ்தலமாக விளங்குகிறது.


இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது திருப்பதி திருமலைக்குச் சென்று வருவதற்குச் சமம் என்று சொல்கிறார்கள். இக்கோயில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை. அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இக்கோயில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன.

வகுளகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் வகுளகிரி க்ஷேத்திரம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வேண்டிக் கொண்டு சித்திரான்னங்களாகிய தேங்காய் சாதம், புளியஞ் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்ற இவற்றை சுவாமிக்கு படையல் போட்டு அனைவருக்கும் பிரசாதமாகத் தருவர். இங்கிருக்கும் வெங்கடாசலபதி மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர். அதனாலேயே பல இருதய நோய் சிகிச்சை நிபுணர்கள் இங்கு வந்து தாங்கள் செய்யும் மருத்துவம் எல்லோரது நோய்களையும் சரிபடுத்த வேண்டும் என்றுவேண்டிச் செல்வர்.

சித்திராப் பௌர்ணமி விழா இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுகிறது. பவித்ரோத்சவம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாசிமகமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


வகுளாசல வாஸாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே
தாருரூபாய ஸத்யாய நமஸ்தே பரமாத்மனே !!

Thursday, September 16, 2010


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

இன்றைய பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:

தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்திய தேசத்திற்கே பெருமை சேர்ப்பது நம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடும், பேரழகும், வண்ணங்களின் விளையாட்டும், இத்திருக்கோயிலை நோக்கி உலகையே ஈர்க்கிறது. இக்கோயிலின் பெருமைகளைப் பற்றிப் பேச ஒரு பதிவு போதாது. அதனால் எனக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 km தொலைவிலும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 4 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்)
தல நாயகி : மீனாட்சி (அங்கயற்கண்ணி, பச்சைதேவி, மரகதவல்லி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், மாணிக்கவல்லி)
தலவிருட்சம் : கடம்பமரம், வில்வமரம்
தலதீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம்தலவரலாறு:
மலயத்துவச பாண்டிய மன்னரும், அவரது மனைவி காஞ்சனமாலையும், தங்களுக்கு குழந்தை பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்கள். அதன் பலனாக, மூன்று தனங்களையுடைய பெண் குழந்தையாக உமாதேவி வேள்விகுண்டத்தில் இருந்து தோன்றினாள். அக்குழந்தையின் தோற்றம் கண்ட அரசரும், அரசியும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, "இக்குழந்தையின் தோற்றம் கண்டு வருத்தப்பட வேண்டாம், அப்பெண்ணிற்கு கணவன் வரும்போது தனம் தானாக மறையும்" என்று அசரீரி கேட்டது. இறைவனது ஆணைப்படி தடாகை என அப்பெண் குழந்தைக்குப் பெயரிட்டனர்.

தடாகை பல கலைகளிலும் மிகச்சிறந்து விளங்கினாள். மிகுந்த வீரத்துடனும் வளர்க்கப்பட்டாள். அதன் காரணமாகவே, தனது தந்தை மலயத்துவச பாண்டிய மன்னர் காலமான பிறகு, மதுரையம்பதியை வெகு சிறப்பாக ஆட்சி செய்தார் தடாகை. கன்னிப் பெண் மதுரையை ஆண்டதால் அவ்வூர் கன்னி நாடு எனப் பெயர் பெற்றது.

தடாகை திருமண வயதை அடைந்தார். அவர் தனது நாட்டுப்படைகளுடன் நீண்ட பயணம் மேற்கொண்டார். சிவகணங்களுடன் திருக் கைலாயம் சென்றடைந்தார். அங்கே சிவபிரானைக் கண்டவுடன் தனங்களில் ஒன்று மறைந்தது. இந்நிகழ்வினால் சிவனே தனது கணவன் என்பதை தடாகை உணர்ந்து கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. திருமணத்திற்கு திருமால், தேவர்கள், முனிவர்கள் வருகை தந்தனர். திருமணக் காட்சி கண்கொள்ளாக்க் காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் திருமணத்தை உடனிருந்து நடத்திவைத்தார். பங்குனி உத்திர நன்னாளில் தடாகை, சொக்கநாதர் திருமணம் இனிதே நடந்தேறியது.

தலப்பெருமை:
உலகப் புகழ் பெற்ற சிவாலயம். பாண்டியநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் புலவர்களுடன் ஒருவராய் இருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த சிறப்புத் திருத்தலம். மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்த திருத்தலம். மந்திரமாவது நீறு எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப் பெற்ற திருநீற்றுப் பதிகம் இயற்றப் பட்ட திருத்தலம். இந்த திருநீற்றுப் பதிகம் பாடியே கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்த்தார் திருஞானசம்பந்தர்.

கபிலர், பரணர், நக்கீரர், போன்ற சான்றோர்கள் வாழ்ந்த பெருமைமிகு ஊர். ஐந்து சபைகளுள் மதுரையில் வெள்ளி சபை அமைந்துள்ளது. மூர்த்தி நாயனார் வாழ்ந்த பதி. அனல் வாதம், புனல் வாதம் நிகழ்த்தி திருஞானசம்பந்தர் சைவத்தை தழைக்கச் செய்த இடம். பாணபத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்கு திருமுகப்பாசுரம் தந்தருளியவர். வரகுண பாண்டியனின் கோரிக்கையை ஏற்று சிவபிரான் கால் மாற்றி ஆடிய தலம். சங்க கால தங்கப் பதியாக விளங்கியது. குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடிய இடம். திருஞானசம்பந்தர் அமைத்த பழைய மடம் உள்ளது.


பாண்டிய மன்னனுக்கு அம்பிகை மகளாகப் பிறந்து நல்லாட்சி செய்த ஊர் மதுரை. சிவன் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய இடம். சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியுள்ள அதி அற்புதமான திருத்தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் கூறப்படும் சுலோகம் உருவாகக் காரணமாக இருந்த தலம்.

இந்திரன், வருண பகவான் வழிபட்ட தலம். இத்தலம் சிவஸ்தலம் என்றாலும் 64 சக்தி பீடங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹத் தலங்களுள் புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் 14 கோபுரங்களுடனும், 5 வாயிலுடனும் அமைந்துள்ளது. கலையழகு, சிலையழகு, சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் மிக உயரமானது.

பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை, சிவன் அமிர்தமாகிய மதுவை தெளித்து நீக்கி புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயரும், சிவனுக்கு அணிகலனாயிருந்த பாம்பு வட்டமாய்ச் சுற்றி வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயரும், கடம்ப மரங்கள் நிறைந்து காணப் பட்டதால் கடம்பவனம் என்ற பெயரும், மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் விதமாக பெருமான் தன் சடையிலிருந்து அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி இருந்து காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.

தலச் சிறப்பு:
அம்மனின் சக்தி பீடங்களுள் முதன்மையானது. ராஜ மாதங்கி சியாமள பீடம் எனப் பெயர் பெற்ற பீடம். மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. பூலோகக் கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெயர் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாம் பொதுவாக சிற்பங்களின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்தக் கோயிலிலோ மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம். இவற்றைக் காண எத்தனைக் கோடி கண்கள் வேண்டுமோ.


சிவபிரான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன் சாபம் தீர்த்த படலம். இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல இடங்களுக்குச் சென்றார். கடைசியாக மதுரையில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு அதனை பூஜித்தார். அவரது தோஷம் நீங்கப் பெற்றது. அங்கேயே இந்திர விமானத்துடன் கூடிய கோயிலைக் கட்டினார்.

திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்ட போது தெப்பக்குளம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அவ்வாறு நோய் சரியானதும் தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்ட விநாயகர் சிலை கிடைத்தது. சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கி முக்குறுணி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை வைத்து விநாயகருக்கு படையல் நடைபெறும்.

திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் நடைபெறும். வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வசந்த விழா, திருஞானசம்பந்தர் விழா, ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா, ஆவணி மாதத்தில் 12 நாட்கள் மூலப் பெருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கோலாட்ட உற்சவம், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத் திருவிழா, 1008 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் 4 நாட்கள் எண்ணைக் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தி விழா, தைப் பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்தில் சுந்தரேஸ்வரர், தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா, மாசி மகா சிவராத்திரி சகஸ்ர சங்காபிஷேகம், பங்குனி மாதத்தில், மீனாட்சி அம்மனும், சுந்தரரும், செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளல் என வருடம் முழுவதும் இக்கோயிலில் திருவிழாக் கோலம் தான்.

பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், ஆறுகால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், புது மண்டபம், 5 இசைத் தூண்கள் போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்கள். இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். சிவபிரான் நடனம் ஆடிய பஞ்சசபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.

இத்தலம் குறித்த பதிகங்கள்:
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர் - திருப்புகழ்
பாணபத்திரர் - திருமுகப்பாசுரம்
பரஞ்ஜோதிமுனிவர் - திருவிளையாடல் புராணம்
குமரகுருபரர் - மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்

திருநாவுக்கரசர் - தேவாரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் இந்த மதுரை திருத்தலத்தில் பாடி அருளிச் செய்த தேவாரப் பாடல்:
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!


நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று
ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில்
அப்பனே அருசெ யாயே !!


ஒரு மருந்தாகி யுள்ளாய்
உம்பரோடு உலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமுது இன்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!


செய்யநின் கமல பாதம்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானம்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வெண்டலை கையில் ஏந்தி
மிகவும் ஊர் பலிகொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

எஞ்சலில் புகலி தென்றென்று
ஏத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வழுவிலாது உன்னை வாழ்த்தி
வழிபடும் தொண்ட னேனும்
செழுமலர்ப் பாதம்காணத்
தெண்டிரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நறுமலர் நீரும் கொண்டு
நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நலந் திகழ் வாயில் நூலால்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்கள் என்றும்
பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பன்என்று இலங்கைக் கோன்வந்து
எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

Tuesday, September 14, 2010


ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் / வேலூர் கோட்டை

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்.


திருக்கோயில் அமைவிடம்:
ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர், சென்னையிலிருந்து 150 km தொலைவிலும், கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து 65 km தொலைவிலும், மலையே சிவனாகக் காட்சி தரும் திருவண்ணாமலையிலிருந்து 80 km தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பொதுவாக, நாம் திருப்பதியையும், திருவண்ணாமலையையும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்த்து விட வேண்டும் என்று நினைப்போம். வேலூரில் இருப்பவர்களுக்கு இந்த ஆசை சுலபமாக நிறைவேறும். ஏனென்றால், வேலூரின் வடக்கே திருமலை திருப்பதி 110 km தொலைவிலும், வேலூரின் தெற்கே, திருவண்ணாமலை 80 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தலமூர்த்தி : ஜலகண்டேஸ்வரர்
தலநாயகி : அகிலாண்டேஸ்வரி
தலவிருட்சம் : வன்னி
தலதீர்த்தம் : கங்கா பாலாறு, தாமரை புஷ்கரணி

திருத்தல வரலாறு:
சப்த ரிஷிகளுள் ஒருவர் அத்திரி. இவர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடி விட்டது. அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த பொம்மி என்னும் சிற்றரசர் கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட லிங்கத்தை சுட்டிக்காட்டி திருக்கோயில் எழுப்பும்படி கூறினார். இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனாலேயே ஜலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

அன்னியர் படையெடுப்பின் போது இந்த லிங்கத்தின் பாதுகாப்பு கருதி, லிங்கத்தை அருகில் உள்ள சத்துவாச்சாரி என்னும் ஊருக்கு எடுத்துச் சென்றனர். நெடுங்காலத்திற்கு இக்கோயில் தெய்வம் இல்லாத கோயிலாகவே இருந்தது. பின்னர் 1981-ம் வருடத்தில் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியரின் பெரும் முயற்சியினால், லிங்கம் மீண்டும் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சன்னதிகள்:
இக்கோயிலில், பிள்ளையார், பெருமாள், முருகன் வள்ளி தெய்வானை, அகிலாண்டேஸ்வரி, சரஸ்வதி, லெட்சுமி, சிவன், பிரம்மா, நவக்கிரகம், ஆதி சங்கரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

தலச் சிறப்பு:
வேலங்காடு என்ற புராணப் பெயர்கொண்ட வேலூரில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும், ஒருசேர அருள் பாலிக்கும் தலம் இது. இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின் புறம், திருப்பதி வெங்கடாசலபதி அமைப்பிலேயே பெருமாள் காட்சி தருகிறார். சூரியன், சந்திரனை விழுங்கும், ராகு, கேது மற்றும், தங்க, வெள்ளிப் பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆதி சங்கரர் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது.

திருத்தலபெருமை:
சித்திரை மாதம் நடைபெறும் இக்கோயில் ப்ரம்மோற்ஸவத்தின் போது 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம், 63 நாயன்மார்களும் வீதி உலா எடுத்துச் செல்லப்படுவர். ஒரே நேரத்தில் 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சியைக் காண கண் கோடி வேண்டும். செந்தமிழை, தெய்வீகத் தமிழை பாடல்கள் மூலமாக வளர்த்தவர்கள் அல்லவா இவர்கள். மொழியை வளர்க்க வரம் வாங்கி வந்தவர்கள் அல்லவா இவர்கள்.

சிவன் யானை வாகனத்தின் மேல் வலம் வருவார். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி விழாக்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் பெயர் செல்வ விநாயகர்.

கார்த்திகை தீபத்தன்று பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மாலை ராஜ கோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற்று, பின்பு வீதி உலா எடுத்துச் செல்வர். கார்த்திகை கடைசி சோமாவரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

இக்கோயில் சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி கொடுப்பதால் நோய் நீக்குபவராக ஜுரகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். திருக்கடையூரைப் போல இக்கோயிலிலும் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்றவை சிறப்பாக நடத்தி வைக்கப் படுகின்றன.

பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் காட்சி தருகிறது. இதற்கு அருகில் உள்ள சிவன் கங்கா பாலாறு ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த லிங்கம் லேசாக கூம்பு வடிவில் காணப்படுகிறது. இவரின் பின்புறம், பைரவர் காணப் படுகிறார். இவ்வாறு ஒரே இடத்தில் கங்கை, சிவன், பைரவரை காணும் பாக்கியம் கிட்டுகிறது. இவர்களை ஒரே இடத்தில் வழிபட காசி விஸ்வநாதரை வழி பட்ட புண்ணியம் கிடைக்குமாம்.

இக்கோயிலின் முன்புறத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப் பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெண்ணைப்பானையுடன் கிருஷ்ணர், பைரவர், கண்ணப்பர் வரலாறு, நடராஜர், சரபேஸ்வரர், கருடாழ்வார் வணங்கும் நரசிம்மர், மத்தளம் வாசிக்கும் பெருமாள், ஆஞ்சநேயர், மேற்கூரையைத் தாங்கும் கிளிகள் என அங்குள்ள சிற்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

****************

வேலூர் கோட்டை:
வேலூர் கோட்டை 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி நீர் நிரப்பப்பட்ட அகழி ஒன்று அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இங்கு படகு சவாரி நடத்தப் படுகிறது. வேலூர் மக்களுக்கு இந்த படகு சவாரி நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில் மட்டுமல்ல, ஒரு கிருஸ்தவ தேவாலயமும், இஸ்லாமிய தர்காவும் அமைந்துள்ளது. உள்ளே காவலர் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது.


இந்தியாவிலேயே தரையில் கட்டப்பட்ட கோட்டையில் மிகச் சிறந்த கோட்டையாக, இந்திய அளவில் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக இந்த வேலூர் கோட்டை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கோட்டையினைப் பற்றிய சிறப்புகள் அங்கங்கு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்டைக்குள்ளே, ASI அருங்காட்சியகமும், இந்திய அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கே பழங்காலத்து சிற்பங்களைப் பற்றியும், ஓவியங்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், அக்கால ரூபாய்கள், காசுகள் பற்றியும் பெரும்பாலான விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகள் இவற்றைப் பார்க்கும் போது தமிழன் பழங்காலத்தில் இருந்தே அயல் நாட்டினருடன், வணிக வியாபாரங்களில், திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க வாழ்ந்துள்ளான் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அருங்காட்சியகங்கள் வாரத்தில் வெள்ளிக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும்.


விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட காலத்தில் திப்புசுல்தான் அவரது குடும்பத்தினருடன் இந்த கோட்டையில் வந்து தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட வேலூர் புரட்சி 1806 ம் ஆண்டு இந்த வேலூர் கோட்டையில்தான் தொடங்கியது.

வேலூரை பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்திலிருந்தே வேலூர் போர் பூமியாகத்தான் திகழ்ந்துள்ளது. 1606 முதல் 1672 வரை விஜயநகரப் பேரரசின் தலை நகரமாக வேலூர் விளங்கியுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள், பீஜப்பூர் சுல்தான்கள் என பல்வேறு அரசர்கள் ஆண்ட வரலாற்று சிறப்புமிக்க ஊர் வேலூர். வேலூரில் முத்துமண்டபம் என்ற இடத்தில் இலங்கையை ஆண்ட கடைசி சிங்கள மன்னனின் கல்லறை அமைந்துள்ளது.


இவ்வாறாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட வேலூரை நமது குழந்தைகளுக்கு காட்டும்போது நமது முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Related Posts with Thumbnails