Thursday, December 29, 2011


கோபுர தரிசனம் - 3

தென்னகத்து திருக்கோயில்களின் பிரதான அடையாளமே, திருக்கோயில் கோபுரங்கள்தான். ஒவ்வொரு திருக்கோயிலின் வாசலில் மட்டுமல்லாது திருக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ள எல்லா சுவாமி சன்னதிகளுக்கும், சிறியது முதலாக பெரியது வரை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயிலின் பிரதான ராஜ கோபுரத்தில் எல்லா விதமான சிலைகளும் வடிக்கப் பட்டிருக்கும். எல்லா கடவுள்களின் அவதாரம் முதல் அன்று வாழ்ந்த மனிதர்களின் அடையாளம் வரை கோயில் கோபுரத்தில் வடிக்கப்பட்டிருக்கும்.

ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
மன்னார்குடி
மார்க்கசகாய சுவாமி திருக்கோயில்
மூவலூர்


வானமாமலை திருக்கோயில்
நாங்குநேரி
சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
தாடிக்கொம்பு


ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு
பிரகதீஸ்வரர் திருக்கோயில்
தஞ்சாவூர்


மங்களாம்பிகை திருக்கோயில்
திருமங்கலக்குடி
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
குணசீலம்


ஆமருவியப்பன் திருக்கோயில்
தேரழந்தூர்
சிவன் திருக்கோயில்
தேரழந்தூர்


முல்லைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி


சத்யகிரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்யம்
பாலைவனநாதர் திருக்கோயில்
பாபநாசம்


தாமரைக்கண்ணன் திருக்கோயில்
திருவெள்ளறை
கோபுர தரிசனத்தில் இன்னொரு வசதியும் உண்டு. திருக்கோயிலின் உள்ளே செல்லாமலேயே கோபுரத்தை பார்த்தாலே தெரிந்துகொள்ளும் வண்ணம் அக்கோயில் மூலவரின் சிற்பம் கோபுரத்தின் வாயிலின் நேர் மேலாக செதுக்கப் பட்டிருக்கும். நாம் எந்த கோயில் சென்றாலும் கோபுரத்தின் அழகை கீழிருந்து மட்டுமல்லாது, திருக்கோயில் கோபுரத்தின் உள் பக்கமாகவோ, அல்லது வெளிப் புறமாவோ கோபுரத்தின் மேலே சென்று பார்க்க வசதியாக படிகள் அமைக்கப் பட்டிருக்கும். திருக்கோயில் பணியாளர்களைக் கேட்டால் அதன் விவரம் சொல்வார்கள். படிகள் ஏறி மேலே சென்று கோபுர அழகை காணும் போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

உதாரணமாக தஞ்சை பெரியகோவிலில், பிரதான கோபுரத்தின் உள் புறமாக படி ஏறிச் சென்று அதன் உள் கூட்டின் அமைப்பை தரிசித்து மகிழலாம். ஆச்சர்யத்தில் உறையலாம். நம் தமிழ் மக்களின், மன்னர்களின் அறிவுத் திறனுக்கும், கலை நயத்திற்கும், இந்த கோயில் கோபுரங்கள் ஒன்றே சாட்சியாகும். கோபுரத்தின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் கலசங்களின் மேல் படும் சூரிய ஒளி பல வேதியியல் மாற்றங்களை உண்டாக்கி நமக்கு நன்மை பயப்பதாக சொல்கிறார்கள் முன்னோர்கள். இது போன்ற கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்களை பேணிப் பாதுகாப்பதே நம் இளைய தலைமுறையினரின் தலையாய கடமை எனலாம்.

கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

Monday, December 26, 2011


ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

உயர்ந்த கோபுரங்கள் நிறைந்த கோவில்கள் மட்டுமல்ல, உயர்ந்த உள்ளங்கள் நிறைந்த மக்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. காலமும் கடவுளும் நம் தமிழ் மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கட்டும்.


கோவில் கோபுரங்களை மெதுவாக அண்ணாந்து பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்பு வார்த்தைகளில் வடிக்கக் கூடிய விஷயம் அல்ல. கோபுரங்களை பார்க்கையில் தலை தானாய் உயரும். நம்முள் தோன்றும் ஆணவம், அகங்காரம் தானாய் மண்ணில் புதையும், கரைந்து காணாமல் பொடிப்பொடியாய் போகும். எத்தனை கால மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கட்டிடக் கலையில் புதிய நுணுக்கங்களைப் புகுத்தினாலும், கோபுரங்களின் பேரழகையும், கோபுரங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் கலவை நுணுக்கங்களையும், எவற்றாலும் ஈடு செய்ய முடியாது.


திருவரங்கம் திருக்கோயிலைப் பற்றிய விவரங்கள் உலகம் அறிந்த ஒன்றே. இக்கோயிலைப் பற்றி புதியதாய் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. வழக்கம் போல் இக்கோயிலிலும் கோபுரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. இத்திருக்கோவிலில் எல்லா கோபுரங்களையும் சேர்த்து மொத்தம் 21 கோபுரங்கள் அமைந்துள்ளன.

திருவெண்ணாழி பிரகாரம், ராஜமகேந்திரன் பிரகாரம், குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடன் திருச்சுற்று, அகலங்கன் திருவீதி, திருவிக்ரமன் திருவீதி(உத்திரவீதி), கலியுகராமன் திருவீதி(சித்திரை வீதி) என மொத்தம் 7 பிரகாரங்கள் அமைந்துள்ளன.


சந்திரபுஷ்கரணி, வில்வதீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், விருட்சி தீர்த்தம் என மொத்தம் 9 தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளன.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக நாயக்க மன்னர்களால் கட்ட ஆரம்பித்து முடிக்கப் பெறாமல் இருந்த தெற்கு ராஜகோபுரம் பிற்காலத்தில், ஆசியாவிலேயே உயரமான 236 அடி உயரம் கொண்ட கோபுரமாக கட்டி முடிக்கப் பெற்றது. 13 கலசங்களுடனும், 13 நிலைகளுடனும், 236 அடி உயரத்தில் மிக உயர்ந்து நிற்கிறது திருவரங்கம் கோபுரம்.


ஏழாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரங்கள் இராமகோபுரம் என அழைக்கப்படுகிறது. ஆறாவது பிரகாரம் நான்கு கோபுரங்களை கொண்டு அமைந்துள்ளது. கிழக்கு கோபுரமாகிய கலியுகராமன் கோபுரம் பிற கோபுரங்களைக் காட்டிலும் உயரமானதாக உள்ளது. ஐந்தாம் பிரகாரம் குடியிருப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரம் ரங்கவாசல் அல்லது நான்முகன் கோபுரம் என விளிக்கப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது கார்த்திகை கோபுரம் எனப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் பல சந்நதிகளையும் மண்டபங்களையும் கொண்டதாக உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் ஆரியபட்டாள் கோபுரம் அமையப்பெற்றுள்ளது. முதற் பிரகாரத்தில் நாழி கேட்டான் கோபுரம் அமைந்துள்ளது.


இத்திருக்கோயிலின் பழமையை உணர்த்தும் வண்ணம் பல்வேறு இலக்கியங்களில் திருவரங்கம் பற்றிப்பாடப்பட்டுள்ளது.

குடதிசை முடிய வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருமாலோ என்செய்கேனுலகத்தீரே !!!!
-- ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதாவ மரரேறே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிரயான் போய் இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !!!!
-- ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்

பொங்கேதம்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ்சோராமே ஆள்கின்றவெம் பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல்வளையால் இடர்தீர்வராகாதே !!!!
-- ஸ்ரீ ஆண்டாள்

ஒன்று மறந்தறியேன் ஒதநீர்வண்ணனை நான்
இன்று மறப்பனோவேழைகாள்
அன்று கருவரங்கத்துட்கிடந்த கைதொழு தேன்கண்டேன்
திருவரங்கமே யான்திசை !!!!
-- ஸ்ரீ பொய்கையாழ்வார்

என இவ்வாறு பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


கோபுர தரிசனத்தின் போது நாம் நம் மனதார, இக்கோபுரங்களைக் கட்ட உழைத்துப் பாடுபட்ட அத்தனை மக்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம்.

கோபுர தரிசனம் - 1

கோபுர தரிசனம் - 3

Related Posts with Thumbnails