Monday, March 21, 2011


என்றும் இனியவை - வாணி ஜெயராம்

வானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயராம். குயிலைப் போன்ற குரல் வளம் கொண்டவர்களைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. இறைவனுக்கு போன ஜென்மத்தில் தேனாபிஷேகம் செய்திருப்பார்களோ என்று. இவரது கம்பீரமான குரலைக் கேட்கும்போது அது உண்மையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கம்பீரம் மட்டுமல்ல, கனிவு, குழைவு, எத்தனையோ உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல் இவருடைய செந்தூரக் குரல். பொதுவாக நடனத்தில், நடன அசைவுகளில் நவரசத்தை வெளிப்படுத்துவார்கள். இவரது வெண்கலக் குரல் எண்ணிலடங்கா ரசங்களை காட்டக் கூடியது.


இவரது குரல்தான் அதிசயக் குரல் என்றால், தமிழில் அட்சர சுத்தமாகப் பேசத் தெரிந்த ஒரு பாடகி, தமிழகத்தில் வேலூரில் பிறந்த ஒரு பாடகி, தமிழ் இசை உலகில் ஒரு நல்ல இடத்தில், நிறைய பாட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும் ஒரு அதிசயம்தான். தமிழகத்தில் பிறந்தாலும், இந்திய இசைத் துறையையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் இந்த குரலழகி, இசையழகி வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, மொத்தம் பதினான்கு மொழிகளில் பாடியிருக்கிறார் இந்த குரலோவியம். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல் தெளிவாக பாடுவதில் வாணி ஜெயராம் வல்லவர்.

*******

உயர்ந்தவர்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவை இரண்டும்
சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட
என்ற பாடலில் ஜேசுதாஸ் அவர்களின் குரலுடன் இணைந்து வரும் வாணிஜெயராம் குரலில் இழையோடும் சோகம், அந்த பாடலில் வரும், உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன், தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா என்ற பாடல் வரிகளின் முழுமையான அர்த்தத்தை வெளிக்கொணரும் வண்ணம் அமைந்த பாடல். பாடலின் அர்த்தம் தெரிந்து பாடுபவர்களால் தான் இத்தனை உணர்ச்சிகரமாகப் பாட முடியும். தங்களது குறைபாடு, தங்கள் குழந்தைக்கும் வந்து விடக் கூடாது என்ற சுஜாதா, கமல் நடிப்பு, தவிப்பு இந்தப் பாடலில் அற்புதமாக வெளிப் பட்டிருக்கும். இந்தப் பாடலைக் கேட்பவர்கள், கண்ணில் கண்ணீர் வடியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.*******

பாலைவனச் சோலை படத்தில் வரும் மேகமே மேகமே என்று தொடங்கும் பாடலில், சங்கர் கணேஷ் அவர்களின் இசை விளையாட்டும், வாணி ஜெயராம் அவர்களின் கூர்மையான குரலமைப்பும், வைரமுத்து அவர்களின் வார்த்தை ஜாலங்களும், உதாரணமாக தினம் கனவு, எனதுணவு, நிலம் புதிது, விதை பழுது, எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும், அது எதற்கோ? என்ற கொக்கியில் முடியும் பாடல் வரிகள், அனைத்தும் ஒன்றிணைந்த இசைச் சித்திரம், இந்த பாடல். வட இந்திய இசையின் சாயலைக் கொண்ட பாடல் இது.*******

அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கும் பாடல் இவரது குரல் வளத்திற்கு தீனி போட்ட பாடல். இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும், என்றும் எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் என்ற வாழ்வியலை நமக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பாடல் வரிகள். வாழ்வின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கு என எல்லா விஷயங்களையும் தன் பாடல்களில் கொண்டு வந்த கருத்துப் பெட்டகம் கண்ணதாசன் இயற்றிய பாடல் அல்லவா இது. அதனால்தான் இறைவன் தன் பக்கத்தில் சீக்கிரமே அழைத்து வைத்துக் கொண்டார் போல. இவற்றையெல்லாம் தாண்டி M.S.V. அவர்களின் இசைமழை, ஸ்ரீ வித்யா அவர்களின், தனது கண்களிலேயே நவரசங்களையும்
கொட்டி நடிக்கும் திறம் பெற்ற அவரது தேர்ந்த நடிப்பு என, இவை அனைத்தும் சேர்ந்த கூட்டணி இந்தப் பாடலை உலகம் உள்ளவரை அழியாமல் வைத்திருக்கும்.*******

வாணிஜெயராம் பாடல்களைக் குறிப்பிடும்போது இந்தப் பாடலைக் கட்டாயம் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும். முள்ளும் மலரும் படத்தில் வரும், நித்தம் நித்தம் நெல்லுச் சோறு என்ற பாட்டைக் கேட்பவர்கள், இந்த பாடல் கேட்கும்போது செவிக்கு உணவிட்டு விட்டு, உடனே வயிற்றுக்கு உணவளித்துதான் ஆக வேண்டும். பழையதுக்குத் தோதா, புளிச்சிருக்கும் மோரு, பொட்டுக் கடலை தேங்காய் சேர்த்து அரச்ச துவையலு, சாம்பாரு வெங்காயம், சலிக்காது தின்னாலும், அதுக்கு இணை உலகத்துல இல்லவே இல்ல என இப்படி பாடலைக் கேட்டு விட்டு யாருக்காவது பசி எடுக்காமல் இருக்குமா. (ஆஹா, பாடல் ஆசிரியருக்குத்தான் எத்தனை தீர்க்க தரிசனம், வெங்காயத்திற்கு இணையா(விலையில்) எதுவும் இல்லை என்று பல வருடங்கள் முன்னரே சொல்லிவிட்டார்).*******

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம். அவரது பாடல்களைக் கேட்டு அந்த சுகானுபவத்தைப் பெறலாம்.

யாரது.. சொல்லாமல் நெஞ்சள்ளி போறது.. (நெஞ்சமெல்லாம் நீயே)


என் கல்யாண வைபோகம்.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)


கேள்வியின் நாயகனே.. (அபூர்வ ராகங்கள்)


ஏ பி சி, நீ வாசி.. (ஒரு கைதியின் டைரி)


அந்த மானைப் பாருங்கள் அழகு.. (அந்தமான் காதலி)


என்னுள்ளில் எங்கோ.. (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)


இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. (வைதேகி காத்திருந்தாள்)


கவிதை கேளுங்கள்.. (புன்னகை மன்னன்)


நானே நானா.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)


நாதமெனும் கோவிலிலே.. (மன்மத லீலை)


ஒரே நாள், உன்னை நான்.. (இளமை ஊஞ்சலாடுகிறது)


ஒரே ஜீவன், ஒன்றே உள்ளம்.. (நீயா)


Related Posts with Thumbnails