Monday, January 24, 2011


திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி, அருள்மிகு அமிர்த நாயகி சமேத நாகநாத சுவாமி திருக்கோயில்.


திட்டமிடல் என்று எதுவும் இல்லாமல் திடீரென்று பழைய நண்பர்களையோ, உறவினர்களையோ பல காலங்கள் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கிற்கு அளவே இல்லை. அது போலவே சிறு வயதில் நாம் சென்று வந்த இடங்களுக்கு, பல வருடங்கள் கழித்து மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் அமையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். அவ்வாறு செல்ல நேரும்போது பழைய நினைவுகள் நம் கண் முன்னே வந்து நிழலாடும். இது போன்றதொரு உணர்வு பாமணி கோயிலுக்கு சென்று வருகையில் எனக்கு ஏற்பட்டது. இன்றைய நாட்களில் மகிழ்வுந்தில் மகிழ்ச்சியான பயணம் மேற்கொண்டாலும், அன்றைய மாட்டுவண்டிப் பயணத்தில் கிடைத்த மனநிறைவிற்கு ஈடாகாது.

சிறு வயதில், மாட்டு வண்டியில் ஏறி வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் தொடங்கும். மன்னார்குடி ஒத்தைத் தெருவில் இருந்து, என் கண்முன்னே மாட்டு வண்டிக்குள் இருந்து பரந்த உலகம் விரியும். கணபதி விலாஸ், ஆனந்த விநாயகர் ஆலயம், தேசிய மேல்நிலைப் பள்ளி, பந்தலடி, யானைக் கால் மண்டபம், பாமணி ஆறு, பச்சை பசேல் வயல் வெளிகள் தாண்டி, கோயிலைச் சென்றடைவோம்.

திருக்கோயில் அமைவிடம்:
இந்த சிறப்பு மிக்க நாகநாத சுவாமி திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து 2 km தொலைவில் அமைந்துள்ள பாமணி என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து இந்த திருக்கோயிலுக்கு செல்லும் பயணமே சுவாரஸ்யமான பயணம்தான். பாமணி ஆற்றின் வடப்புறமாக அமைந்துள்ளது இத்திருக்கோயில்.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நாகநாதஸ்வாமி (சர்ப்பபுரீஸ்வரர், பாம்பணிநாதர், திருப்பாதாளேச்வரர், ஸ்ரீ பூதி விண்ணகர ஆழ்வார்)
தல இறைவி : அமிர்த நாயகி
தல விருட்சம் : மாமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம்


திருத்தல அமைப்பு:
நாகநாதசுவாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமிக்கு சற்று தள்ளி வலப்புறமாக மனித முகமும், பாம்பின் உடலும் ஒருங்கே அமைந்த வடிவத்தில் இறைவனை வழிபட்ட ஆதிசேஷன், சுவாமி சன்னதியைச் சுற்றி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் வடிவில் அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, ஆக்ஞா கணபதி, நாகலிங்கம், காளிங்க நர்த்தனத்துடன் கூடிய மும்மூர்த்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி, துர்காதேவி, கஜலெட்சுமி, ஞானசரஸ்வதி, சனேஸ்வரர், பைரவர் என வரிசையாக இவர்களது தரிசனம். பின்னர், நவக்ரஹ தரிசனம், நால்வர் தரிசனம். சுவாமி சன்னதியின் இடப்புறமாக அம்மன் சன்னதி. திருக்கோயிலை சுற்றி வரும்போது சுவாமி சன்னதியை சுற்றியபின் நவக்ரஹங்களை சுற்றி முடித்தால் ஓம் என்னும் வடிவத்தில் முடியும் என்ற தகவல் அக்கோயில் சிவாச்சாரியார் சொன்னது.


திருநாவுக்கரசர் திருக்ஷேத்திரக் கோவை:
வீழிமிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கைவியலூ
ராழியகத்தியான் பள்ளியண்ணா
மலைபாலங்காடு மரதைப் பெரும்
பாடி பழனம் பனந் தாள் பாதாளம்
பராயத்துறை பைந்நீலி பனங்காட்டூர் தன்
காழி கடனாகைக் காரோணத்துங்
கயிலாய நாதனையே காணலாமே!!

திருத்தல வரலாறு:
ஒரு சமயம் சுகல முனிவர் தனது தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைக்க, ஒரு மகன் தாய்க்குச் செய்ய வேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்காக, காசியை நோக்கித் தன் சீடனுடன் சென்று கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதனால், தன் சீடனிடம் அஸ்தி மூட்டையை கொடுத்துவிட்டு, சுகல முனிவர் சந்தியாவந்தனம் செய்யச் சென்றார். அந்த வேளையில், சீடன் அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்க்க கலசத்தினுள் தங்கமாக ஜொலித்தது. இதனைக் கண்ட சீடன் பயந்து, மூட்டையை திரும்ப மூடிவிட்டான். அவர்களது காசியை நோக்கிய பயணம் தொடர்ந்தது. காசிக்குச் சென்றதும், அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்த்தால் சாம்பலே இருந்தது. இந்த நிகழ்வை சுகல முனிவரிடம் எடுத்துக் கூறினான் சீடன். உடன் முனிவர், அஸ்தி பொன்னைப்போல பிரகாசித்த அந்த இடமே காசியை விட புனிதமான இடம், எனக் கூறி, மீண்டும் அந்த இடத்திற்கே வந்து, முன்பு வெட்டுக் குளம் எனவும், தற்போது ருத்ர தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகின்ற குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் கட்டி அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியினை கரைத்து அங்கேயே தங்கியும் விட்டார் சுகல முனிவர்.

அங்கு தங்கியிருந்த சுகல முனிவர் ஒரு பசுவினை வளர்த்து வந்தார். அந்த பசு, தினப்படி புல் மேய்ந்து பசியாறச் சென்ற இடத்தில் ஒரு புற்றின் மேல் தினமும் பாலைச் சுரந்தது. இதனால் சுகல முனிவரின் அன்றாடப் பயன்பாட்டிற்கு பால் கிடைக்காமல் போனது. ஒரு நாள் பசு மேய்ச்சலுக்கு செல்லும்போது முனிவரும் அதன் பின்னால் சென்று பார்த்த பொழுது, பசு, புற்றின் மேல் பால் சுரப்பதை கவனித்தார். ஏதோ கோபத்தில்தான் அது இவ்வாறு செய்வதாக சுகல முனிவர் நினைத்துக் கொண்டு, மாட்டின் மேல் ஒரு கம்பை விட்டெறிந்தார். இதனால் சினம் கொண்ட மாடு புற்றினை தன் கொம்பால் இடித்துத் தள்ளியது. அச்சமயம், புற்று மூன்றாகப் பிளந்து உள்ளிருந்து லிங்கம் தோன்றியது. பின்னர் பசுமாடு ஓடிச்சென்று குளத்தில் விழுந்து இறந்தது. உடன் சிவபிரான், ரிஷபாருடர் வடிவத்தில் தோன்றி பசுவினை மீண்டும் உயிர் பெறச் செய்தார். அந்த பசுவின் பாலபிஷேகத்தால் தனது மனம் குளிர்ந்ததாகச் சொன்ன சிவன், பசுவிடம், "உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள்", எனக் கூறினார். அதற்கு அந்த பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டது. அவ்வாறே நடக்கட்டும் என ஈசன் ஆணையிட, அது முதலாக பசுவிடம் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யம் எனப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் போன்றவை சிவனின் அபிஷேகத்திற்கு உரிய பொருள்களாக ஆயின. சுயம்பு நாதனாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டு சுகல முனிவரும், தான் பிறந்த பயனை அடைந்தார்.

அந்த சமயத்தில், அஷ்ட நாகங்கள் ஆகிய வாசுகி, கார்கோடன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் எனப்படும் எட்டு நாகங்களின் தலைவனும், விஷ்ணு பகவான் வீற்றிருக்கக் கூடிய பேறு பெற்றவனும் ஆகிய ஆதிசேஷன், திருப்பாற்கடலில் அமிழ்தம் கடையும் போது, அதனுடன் வந்த விஷத்தை பக்தர்களின் நன்மைக்காக சிவபிரான் உண்டதனால், அந்த தோஷம் தனக்கும் ஏற்பட்டதாகக் கருதிய ஆதிசேஷன், அதற்குப் பரிகாரம் செய்ய எண்ணியபோது, இந்த பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேச்வரரை வழிபட்டால் அவரது தோஷம் நீங்கும் என்ற அசரீரி சொல் கேட்டது. அதன் படி இங்கு வந்த ஆதிசேஷன், சன்னதி செல்லும் வழியெல்லாம் லிங்கங்களாக இருந்த காரணத்தால், தன் பாதம் சுவாமி மேல் படக்கூடாது என்ற எண்ணத்தில், தனஞ்செய முனிவராக மனித முகமும், பாம்பு உடலும் கொண்டு தவழ்ந்து சென்று இத்தல இறைவனை வழபாட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றார். இத்தலத்தில், ஆதிசேஷன், தனஞ்செய முனிவர் வடிவில் வீற்றிருந்து ராகு, கேது நிவர்த்தி பரிகார மூர்த்தியாக விளங்குவது, இத்தலத்தின் சிறப்பு.


ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில், தேவர்கள் தோற்றுவிட, இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி, முகுந்த சக்ரவர்த்தி, அசுரர்களுடன் போரிட்டு வென்றார். அதற்குப் பரிசாக, இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரி எனப்படும் திராட்சையையும், முகுந்த சக்ரவர்த்திக்குப் பரிசாகக் கொடுத்தார். அவர் அந்த லிங்கம், திராட்சை இவற்றுடன், திருவாரூரில் உள்ள தியாகேசர் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில், "திருப்பாதாளேச்சுரத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அங்கு சென்று நிவேதனம் செய்" என அசரீரி கேட்க, இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை வணங்கி திராட்சை நிவேதனம் செய்வித்தார். அன்று முதல் கொடி முந்திரி எனப்படும், பச்சை திராட்சை சிறப்பு நெய்வேத்தியமாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

நீலத்வஜ மகாராஜா, அம்சத்வஜ மகாராஜா என்பவரின் மைந்தன். இக்கோயிலின் மேற்குப் புறமாக நம்பிக்குளம் என்னும் நீலத்வஜ தீர்த்தம் என்னும் குளத்தை வெட்டி அன்னச்சத்திரங்கள் கட்டி, அன்னத்வஜன் என்ற பெயருடன் திகழ்ந்தார்.

பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிப்பலாயன் என்பவருக்கு ஏற்பட்ட சரும நோய் தீராத நோயாக இருந்தது. வில்வாரண்யத்தில் ஆரம்பித்து பல திருக்கோயில்களை தரிசனம் செய்து கடைசியாக, இந்த நாகநாதஸ்வாமி திருக்கோயில் வந்து தீர்த்தங்களில் நீராடியபின் இக்கோயில் பிரசாதம் உண்டபின் தனது சரும நோய் நீங்கப் பெற்றார்.

தல விருட்ச வரலாறு:
திருப்பாற்கடலை கடையும் போது கிடைத்த பல்வேறு பொருட்களுள், பிரம்மனுக்கு நான்கு மாம்பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு பழத்தை கணபதிக்கும், ஒரு பழத்தை ஆறுமுகப் பெருமானுக்கும், மூன்றாவதை காஞ்சியில் நட்டபின், நான்காவதை இத்தலத்திற்கு எடுத்து வந்து அந்த மாம்பழத்தின் சாற்றை நாகநாதசுவாமிக்குப் பிழித்து பின் மாங்கொட்டையை பிரம்மதீர்த்தத்தின் கரையில் நட்டுவைத்தார். இது முதலாக இத்தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. மாம்பழச்சாரும் நாகநாதருக்கு அபிஷேகம் செய்விப்பது இத்தல சிறப்பு.


திருத்தலச் சிறப்பு:
பல்வேறு சிவ திருத்தலங்கள் இருந்தாலும், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் தலங்களுக்கு சற்று கூடுதல் சிறப்பு உண்டு. கைலாச மலையே உலகின் முதல் சுயம்புவாகக் கருதப் படுகிறது. சுயம்பு லிங்கங்களுக்கு, அவை புற்று மண்ணால் ஆனதால் கரைந்து விடாமல் இருக்க வேண்டி, வெள்ளிக் கவசம் சாற்றியே அபிஷேகம் செய்விப்பது வழக்கம். மாறாக நாகநாதசுவாமிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினப்படி இருவேளை எந்தவித கவசமும் சாற்றாமல் நேரடியாகவே அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இது இத்தலத்தின் பல்வேறு சிறப்புக்களுள் ஒன்று.

தல மூர்த்தி, திருத்தலம், தலமரம், தலதீர்த்தம், ஆறு என எல்லா வகையிலும் சிறப்புற விளங்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பாமணி திருத்தலம்.

இத்திருக்கோயிலைப் பற்றி ஆறு கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்பாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற சீர்மிகு சிவனடியார்களாகிய நாயன்மார்கள் இந்தத் திருக்கோயிலில் பாடியுள்ளனர். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இத்திருக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் விசேஷங்கள்:
திருக்கோயில்கள் என்றாலே திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த விழாக்களில் மக்களோடு மக்களாக நாமும் பங்கு கொள்வது சாலச் சிறந்தது. இங்கே, சித்திரை வருடப் பிறப்பு, சித்திராப் பௌர்ணமி விழா, வைகாசி விசாகம், ஆடிபூர விழா, ஆவணி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழா, விநாயகர் சதுர்த்தி விழா, புரட்டாசி மாத நவராத்திரி விழாக்கள், ஐப்பசி மாதம் முதல் தேதி நடைபெறும் விழா, ஐப்பசி பௌர்ணமி அன்று நடைபெறும் அன்னதான விழா, ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை மாத சோமவாரம், கார்த்திகை மாத திருகார்த்திகை விழா, மார்கழி மாத திருவாதிரை, தைப்பூசம், தைப்பொங்கல், மாசிமகம், மாசி மாத சிவராத்திரி பூஜை, பங்குனி மாத உத்திரம் என வருடம் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில் இது.

இத்திருக்கோயிலில் பிரதோஷ மகிமை பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதோஷம் என்பது ஐந்து வகையாக கொண்டாடப் படுகிறது. தினமும் மாலை 4:30 மணி முதல் 7:00 மணிவரையிலான காலம் நித்யப் பிரதோஷம் என கூறப்படுகிறது. வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என வழங்கப் படுகிறது. தேய்பிறையில் வரும் பிரதோஷம் மாதப் பிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் சனிப்பிரதோஷம் எல்லா பிரதோஷங்களையும் விட மிகச் சிறந்தது என்பது ஐதீகம். கடைசியாக உலகம் அழியும் நேரத்தில் வரக்கூடிய பிரதோஷமாக கருதப்படுவது பிரளய பிரதோஷம் எனப்படுவது.


ஆதிசேஷனுக்கு என சிவன் கோயில்களில் தனிச்சன்னதி உள்ளது இந்த திருக்கோயில் மட்டுமே என்பது சிறப்பு. இத்திருக்கோயிலில் குருபகவான் சிம்ம மண்டபத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பு. பொதுவாக மூலஸ்தானமாகிய சுவாமி விமானத்தில் நந்தியும், அம்மனது சன்னதி விமானத்தில் சிம்மமும் காட்சி தருவது வாடிக்கை. இக்கோயிலில் சுவாமியின் விமானத்தில் சிம்மம் காட்சி தருவது இத்திருக்கோயில் சிம்ம தட்சிணா மூர்த்தியின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இத்திருக்கோயில் தரிசனம் முடித்து திரும்ப மன்னார்குடி நோக்கி வரும் போது, அந்த சாலையின் வலப்புறமாக வயல்வெளிகளின் ஊடே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் கோபுர தரிசனம் தெரிவது வெகு சிறப்பு.


*******

இத்திருக்கோயில் 276 பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருஞானசம்பந்தர் பெருமான் அவர்கள் பாடிய திருப்பாதாளேச்வரர் திருப்பதிகம்:
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே !!

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னால்இனியான் உறைகோயில் பாதாளே !!

நாகமும் வான்மதியும் நலமல்கு செஞ்சடை யான்சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்று எரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே !!

அங்கமு நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்று உகளும் செருவில் திகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றுஅலரும் வயல்சூழ்ந்த பாதாளே !!

பேய்பல வும்நிலவப் பெருங்காடு அரங்காகஉன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்அரவும் பொலிகொன்றைச் சடை தன்மேற் சேரப்
பாய்புன லும்உடையான் உறைகோயில் பாதாளே !!

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மேல் நன்று
விண்ணியல் மாமதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே !!

விண்டலர் மத்தமொடு மிளிரும்இள நாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார் சடையான்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்துரை வேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே !!

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலைஎடுத்த அரக்கன்தலை தோள்நெரித்தான்
கொல்லை விடை யுகந்தான் குளிர்திங்கள் சடைக்குஅ ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே !!

தாமரை மேல்அயனும் அரியும்தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பிலர் ஆய் அகன்றார்
பூமரு வும்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வும்குணத்தான் உறைகோயில் பாதாளே !!

காலையில் உண்பவரும் சமண கையரும் கட்டுரை விட்டுஅன்று
ஆல விடநுகர்ந்தான் அவன்றன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுஉண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே !!

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடமல்கு புகலிநகர் மன்னன்
தண்ணொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத்து இருப்பாரே !!

*** திருச்சிற்றம்பலம் ***

Thursday, January 13, 2011


ஜவ்வரிசி பொங்கல்

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி : 100 கிராம்
அச்சு வெல்லம் : 6 அச்சு
பால் : 2 குழி கரண்டி
தேங்காய் : அரைமூடி
முந்திரிபருப்பு : 7
காய்ந்த திராட்சை : 10
ஏலக்காய் : 3
நெய் : 2 தேக்கரண்டி

செய்முறை:
கடையில் இரண்டு விதமான ஜவ்வரிசி கிடைக்கிறது. ஒன்று, நன்கு வெள்ளைவெளேர் என உள்ளது. மற்றொன்று சற்று மங்கலான வெளிர் சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. வெள்ளையாக உள்ள ஜவ்வரிசி சீக்கிரத்தில் வெந்து கூழ் போல ஆகிவிடும். சாம்பல் நிறத்தில் கிடைக்கும் ஜவ்வரிசிதான் இதுபோல பொங்கல், பாயசம் செய்வதற்கு ஏற்ற ஜவ்வரிசி. வெந்த பிறகு ஜவ்வரிசியின் ருசியும், அதன் கூடவே பளிங்கு போன்ற அதன் தோற்றமும் இந்த வகை ஜவ்வரிசியில்தான் கிடைக்கும். ஜவ்வரிசி வற்றல் போட வேண்டுமானால் வெள்ளை நிற ஜவ்வரிசி வாங்கிச் செய்யலாம்.

முதலில் சொன்னது போல், சாம்பல் நிற ஜவ்வரிசியினை இரண்டு மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின், குக்கரில் ஜவ்வரிசி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, மூன்று விசில் வந்ததும், குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

வெல்லத்தை பாகு காய்த்து வடி கட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நெய்யில் காய்ந்த திராட்சை, முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வடி கட்டிய வெல்லப் பாகு கொதி வந்ததும், பால் ஊற்றி அதுவும் சேர்ந்து கொதித்ததும், குக்கரில் வெந்த ஜவ்வரிசியினை சேர்த்து கலக்கவும். இந்தக் கலவை நன்றாக சேர்ந்து வரும்போது, கொஞ்சம் நெய் ஊற்றிக் கிளறவும். பல் பல்லாக நறுக்கிய தேங்காய், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு, திராட்சை, ஏலக்காய் கலந்து நன்றாகக் கிளறி இறக்கினால் ஜவ்வரிசி பொங்கல் தயார்.


இந்த ஜவ்வரிசி பொங்கலை சுடச் சுடச் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். ஆறி விட்டால் இதன் ருசி அந்தளவிற்கு சுவை படாது. இதனாலேயே அளவில் கொஞ்சமாக செய்து கொண்டு செய்த உடனேயே உண்டு மகிழ்வது நன்று.

*******குறிஞ்சியின் பொங்கல் ஃபீஸ்ட் ஈவென்ட்டிற்கு இதை அனுப்புகிறேன்.

*******

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, January 11, 2011


பயணம் (சிறுகதை)

சொந்த மண்ணின் வாசம் விட்டு, சொந்த பந்தங்களின் நேசம் விட்டு, ஒரு கூட்டுப் பறவைகளாய் வாழ்ந்தவர்கள், இடம் பெயர்ந்து வந்து சேரும் வேடந்தாங்கல் சென்னை மாநகரம்.

சென்னை நகரத்துத் தொழிற்பேட்டை. வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி. பொன்னமராவதியில் இருந்து பல வருடங்கள் முன்பு கிளம்பி வந்து, தொழிலாளியாக வேலைப் பழகி முதலாளியாக உயர்ந்தவர் நாகராஜன். இவரது கம்பெனியில் மெஷின் ஓட்டும் வேலை ராமுவுக்கும், சரவணனுக்கும். மூன்று ஷிஃப்ட் வேலை நடக்கும் கம்பெனியில் ராமுவும், சரவணனும் மதிய ஷிஃப்டையும், இரவு ஷிஃப்டையும் வாராவாரம் மாற்றி மாற்றி செய்து கொள்வார்கள். கைகள் ஊறிப் போகும் அளவிற்கு மிகக் கடினமான வேலை. மெஷினில் வடியும் கூலன்ட் வாடை உடம்பிலேயே தங்கிவிடும். இரவு ஷிஃப்டில் தூங்கி வழிந்து மெஷின் கதவில் மோதி கண் விழிப்பது அன்றாடம் நடக்கும் விஷயங்களில் ஒன்று. கொசுத்தொல்லை, அதை ஒழிப்பதற்காக எரிக்கப்படும் வேப்பங்கொட்டையின் நாற்றம், ஒவ்வொரு இரவு ஷிஃப்டும் தண்டனை மாதிரி தான் கழியும். தொழிலாளர்களிடையே அன்பின் பரிமாற்றமும், விட்டுக்கொடுத்தலும் அதிகம் காணப்படுவது இரவு ஷிஃப்டில் தான். நகர வாழ்க்கையின் இன்னொரு பக்கமான நரக வாழ்க்கை நிகழ்வுகள் அரங்கேறும் இடம்தான் இந்த தொழிற்பேட்டை.


ராமு, ஆயிரம் ஜன்னல் வீடுகள் கொண்ட காரைக்குடியில் பிறந்து, கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவன். அப்பா மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். வளர்ந்த மகனையும் மடியில் வைத்து கொஞ்சுபவர். பிள்ளை வளர்ந்தாலும் தம்பி என்றே அழைக்கும் பாசக் கவிதை அம்மா. அக்காவை புதுக்கோட்டையில் கல்யாணம் கட்டிக் கொடுத்தாயிற்று. வீட்டிற்குச் செல்லப் பிள்ளை ராமு. படிப்பில் சுட்டி, குணத்தில் தங்கக் கட்டி. விளையாட்டுத்தனத்தால் +2 தேர்வில் மார்க் குறைந்தது. பொறியியல் படிப்பிற்குத் தேவையான மதிப்பெண் கிட்டாததால், திருச்சியில் பாலிடெக்னிக் ஒன்றில் சேர்ந்தான். இங்கு கிடைத்த நண்பன் தான் சரவணன். ஒரே படிப்பு, கல்லூரி விடுதியில் பக்கத்துப் பக்கத்து அறை என இவர்கள் நட்பு மேலும் வளர்ந்தது.

சரவணன், தகப்பன் சுவாமியின் ஊரான சுவாமிமலைவாசி. அம்மா, அப்பா, அக்கா, தம்பி என அழகிய குடும்பம். அப்பா விவசாயி. விவசாயிகளின் நீண்ட காலச் சொத்து, கடன். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. நன்றாக வாழ்ந்து நொடித்துப் போன குடும்பம். சரவணன் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும், பொருளாதார வண்டியின் அச்சு முறிவினால், பாலிடெக்னிக் படிப்பு சரவணனுக்கு.

சரவணனை ராமுவிற்கு மிகவும் பிடிக்கும். சரவணனின் குடும்ப சூழல் தெரிந்து, கல்லூரி காலத்திலிருந்தே அவனுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்பொழுது செய்வான் ராமு. ராமுவிடம் பண உதவி பெற்றால், எப்பாடுபட்டாவது திரும்பக் கொடுத்துவிடுவது சரவணின் வழக்கம். சரவணனின் இப்பண்பு ராமுவை மேலும் ஈர்த்தது.

*******

செவ்வாய்க்கிழமை மதிய ஷிஃப்ட் முடிந்து கிளம்பத் தயாராய் ராமு. இரவு ஷிஃப்ட் வேலைக்கு வந்த சரவணன், ராமுவுக்கும் சேர்த்தே சாப்பாடு வாங்கி வந்திருந்தான். வெள்ளிக்கிழமை பொங்கல். இவ்வருட பொங்கலை இருவரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். இருவருக்கும் புதன்கிழமை மதியமே ஊருக்குக் கிளம்பும் எண்ணம். லீவ் கிடைத்துவிட்டது போலவும், பொங்கலுக்கு தான் "இதச்செய்யப்போறேன், அதப்பண்ணப்போறேன்" என்று அளந்து கொண்டிருந்தான் ராமு.
"டேய் ராமு, இந்த கதையெல்லாம் அப்புறம் நிதானமா உக்காந்து பேசிக்கலாம். முதல்ல சார்கிட்ட லீவக் கேப்போம் வா."
"சரிடா மச்சான். ரெண்டு பேருமே சேர்ந்தே போயி கேப்போம்."

வீட்டிற்கு கிளம்பத் தயாரான நாகராஜனின் முன் இருவரும் ஆஜர்.
"சார், பொங்கலுக்கு ஊருக்கு போகணும், ஒரு நாள் முன்னாடியே லீவு வேணும்", சரவணன் கேட்க, ஒன்றும் சொல்லாமல் நாகராஜன் ராமுவைப் பார்க்க, "எனக்கும் தான் சார்", என்றான் ராமு.

"அட என்னப்பா நீங்க, நான் முன்னாடி வேலைப் பார்த்த கம்பெனிலேர்ந்து நெறைய ஆர்டர் வந்துருக்கு. நம்ம வேலையே எக்கச்செக்கமா இருக்கேப்பா. ஒரே மூச்சா இருந்து செஞ்சாத்தான் எல்லாத்தையும் சீக்கிரமா முடிக்கலாம்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். என் முதலாளி என்னைய நம்பி ஆர்டர் குடுத்துருக்காரு. ரெண்டு பேரும் ஒன்னா லீவு கேட்டா எப்படி?"

சரவணன் நடுவில் பேச முயல,

"நான் எப்பவும் சொல்றதுதான். உங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிக்குங்க. யாராவது ஒருத்தர் ஊருக்கு போங்க. ஒருத்தர் இங்க இருந்து வேலைய முடிச்சிட்டு பொங்கலுக்கு மொத நாள் கிளம்புங்க. நான் கிளம்புறேன், காலம்பர பாக்கலாம்."
லீவு கேட்டவர்களையே கோர்த்துவிட்டு கிளம்பினார் நாகராஜன்.

ஓரளவு இந்த பதிலை எதிர்பார்த்திருந்தாலும், இம்முறையாவது எதுவும் சொல்லாமல் லீவு கொடுத்துவிடுவார் என்ற நப்பாசையும் இருந்தது இருவருக்கும்.

"சரிடா சரவணா, நான் ரூமுக்கே போய் சாப்ட்டுக்குறேன், நீ வேலைய முடிச்சிட்டு காலம்பர வா பேசிக்கலாம்", கிளம்பினான் ராமு.
இருவருக்குள்ளும் ஆயிரம் மனப் போராட்டங்கள்.

*******

ஊரில் ராமுவின் பாசக்கார அப்பா, மகன் படித்துவிட்டு பொழுதை சுமந்துகொண்டு இருக்கிறானே என்று, வாய்தவறி சொன்ன சில வார்த்தைகள், ராமுவை ரோஷக்காரனாக்கியது. ரோஷ மிகுதியால், தன் அம்மாவையும் மீறி, கல்லூரி சீனியர் மூலமாக இந்தக் கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேர்ந்தான். கோபம், ரோஷமெல்லாம் அப்பாவிடம் மட்டும்தான். தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே சேமித்துவிட்டு, செலவிற்கு அம்மாவிடம் பணம் வாங்கிக் கொள்வான்.

தானே ஒரு மெஷின் போட்டு கம்பெனி ஆரம்பித்து முதலாளி ஆக வேண்டும் என்பதே ராமுவின் ஆசை. தனது அத்தானிடமும் பணம் கேட்டிருந்தான். உடனே பணம் கொடுக்காத அத்தான், ஒரு லட்சம் ருபாய் சேர்த்துவிட்டு தன்னிடம் வருமாறும், அரசுக்கடனுதவி போக மீதம் தேவைப்படும் பணத்தை, தான் கடனாக தருவதாகவும் கூறியிருந்தார்.

தீபாவளிக்கும் சரவணனை இரண்டு நாள் முன்னரே அனுப்பிவிட்டு கம்பெனி வேலைகளை ராமுவே பார்த்துக் கொண்டான். தீபாவளிக்கு முதல் நாள் இரவு பஸ் ஏறச்சென்ற ராமு, கூட்ட நெரிசலினாலும், நேரம் கடந்து போனதாலும், ஊருக்குச் செல்லும் எண்ணத்தை விடுத்து, ரூமுக்கே திரும்பி வந்துவிட்டான்.

"நம்ம வேலைல ஒரே வித்தியாசம், விசேஷ நாள்ல வீட்ல தூக்கம், மத்த நாள்ல ரூம்ல தூக்கம்", ராமு சரவணனிடம் அடிக்கடி நொந்து கொள்ளும் விஷயம் இது.

லீவ் சம்பந்தமாக நாகராஜன் சொன்னது, ராமுவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. "சரவணனுக்கு போன முறை நாம விட்டுக் கொடுத்ததுனால, இந்த முறை நிச்சயம் ஊருக்குப் போய் அம்மாவோட ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடிக்கலாம்", என்ற நம்பிக்கையுடன் சாப்பிட்டுத் தூங்கப் போனான்.

இங்கு சரவணனுக்கு வேலையே ஓடவில்லை. தன் அப்பாவின் கடன் தீர்க்க, டீச்சர் ட்ரைனிங் முடித்த தன் அக்காவை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க, தன்னால் படிக்க முடியாத பொறியியல் படிப்பை தன் தம்பியை படிக்க வைக்க, பாதியிலேயே நிற்கும் அப்பா கட்டிய வீட்டை முழுசாக முடிக்க, தன் குடும்பத்தை தூக்கி நிறுத்த, என, மளிகை கடை லிஸ்ட் போல நீண்டது சரவணன் வேலைக்கு வந்த காரணம். ராமுவின் மூலமாகத்தான் இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான் சரவணன். விசேஷ நாட்களுக்கு முதல் நாள் வேலை செய்தால், ஒன்றரை நாள் சம்பளம் கிடைக்கும் என்று, அன்றும் வேலை பார்த்து அந்த பணத்தில் ஊருக்குப் போவான் சரவணன்.

வீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க சிங்கப்பூர் செல்லும் முயற்சியில் இருந்தான் சரவணன். இது ராமுவிற்கு தெரியும். சிங்கப்பூர் போக ஏற்பாடும் செய்து விட்டான் சரவணன். அடுத்த பொங்கலுக்கு ஊருக்கு செல்வது உறுதியில்லை. இந்த பொங்கலுக்கு ஒரு நாள் முன்னரே ஊருக்கு செல்ல முடிவெடுத்திருந்தான் சரவணன். இதை எப்படி ராமுவிடம் கேட்பது என்ற குழப்பத்திலேயே இரவு ஷிஃப்ட் வேலையை முடித்தான் சரவணன்.

*******

ஷிஃப்ட் முடிந்து நாகராஜனின் வருகைக்காக காத்திருந்த சரவணன், அவர் வந்ததும் நேரே அவரிடம் சென்றான். தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்த சரவணன்,
"சார், இந்த முறை நான் முதல் நாளே ஊருக்குப் போகலாம்னு இருக்கேன். ஆறு மாசத்துல சிங்கப்பூர் போக ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த பொங்கலுக்கு ஊருக்கு போக முடியுமோ என்னவோ, அதனால இந்த வருஷமே பொங்கலுக்குப் போய் எல்லாரையும் பார்த்துட்டு வந்துடறேன். தீபாவளிக்கே எனக்காக லீவ விட்டுக்குடுத்தான் ராமு. அதனால இந்த தடவையும் என்னால அவன்கிட்ட கேக்க முடியாது, நீங்க தான் ராமுகிட்ட பேசனும்", படபடவென கொட்டிமுடித்தான் சரவணன்.

"என்னப்பா சொல்ற நீ, ராமு என்னடான்னா, அவன் ஆரம்பிக்கப் போற கம்பெனில உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கப் போறதா என்கிட்ட சொல்லிட்டுருக்கான், நீ என்னடான்னா சிங்கப்பூர் போறதா சொல்ற?" என்ற நாகராஜனைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் சரவணன்.
ராமு கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறான் என்பது மட்டுமே சரவணனுக்கு தெரியும். தன்னையும் இணைத்துக்கொள்வான் என்றெல்லாம் எண்ணியதில்லை. தனது எண்ணம் முழு வடிவம் பெரும் வரை, ராமுவும் இதைப்பற்றி கூற விரும்பியதில்லை.

"நம்ம கணேசனோட ஷெட் ஆறு மாசத்துல காலியாகப் போதாம். ராமு கேட்ருந்தான், அவன்ட சொல்லிடு", முடித்தார் நாகராஜன்.

ராமு தன்னை இப்படி ஒரு நல்ல இடத்தில் வைத்திருப்பதை நினைப்பதா, அதற்கு நாகராஜன் செய்யும் உதவியை நினைத்து சந்தோஷப்படுவதா, என திக்குமுக்காடிப் போனான் சரவணன்.

என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றிருந்த சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்த நாகராஜன், இரு விதமான மன நிலையில் இருந்தார். இருவரின் மீதும் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும், நன்றாக வேலை பார்க்கும் இருவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு சென்று விடுவார்களே என்ற வருத்தமும் சில நாட்களாக அவருக்கு உண்டு. இதேபோல் தன் முதலாளி நினைத்திருந்தால், தான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றும் தோன்றியது.

"நம்மகிட்ட வேலை பாத்துட்டு வெளில போற யாரும் நம்மள மறந்துட்டா கூட பரவால்ல, நம்மளப் பத்தி நினைச்சாங்கன்னா, நல்லதாத்தான் நினைக்கணும்", தான் வெளியில் வரும்போது தன் முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது நாகராஜனுக்கு.

மெதுவாக வெளியே சென்றுகொண்டிருந்தான் சரவணன்.
"தம்பி சரவணா, எங்க கிளம்பிட்ட, இங்க வாய்யா."
"என்ன சார்?", வேகமாக உள்ளே வந்தான் சரவணன்.
"நீங்க ரெண்டு பேருமே இன்னைக்கு மதியம் ஊருக்குப் கிளம்புங்க, ராமுகிட்ட நீயே சொல்லிடு."
"நம்ம காதுக்கு பொங்கல் போனஸ் மேல போனஸா குடுக்குறாரே சார்" என்று இன்ப அதிர்ச்சி அடைந்தான் ராமு.
"அப்போ எக்ஸ்ட்ரா ஆர்டர எப்படி சார் முடிப்பீங்க?"
மூன்று வருடங்களாக மெஷின் ஓட்டுவதையே விட்டிருந்த நாகராஜன், "என் முதலாளிக்காக திரும்பவும் நானே மெஷின் ஓட்டப் போறேன்", என்றார்.

சரவணன் தன்னை மறந்த நிலையில் ரூமிற்குப் போய் சேர்ந்தான். "நம்ம ரெண்டு பேரையுமே சார் ஊருக்குப் போகச் சொல்லிட்டாரு, மதியம் ஒரு மணிக்கு பஸ்ஸ பிடிச்சிருவோம்", ராமுவிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான் சரவணன்.
"என்னடா ஆச்சு அவருக்கு, ரெண்டு பேரையும் கிளம்ப சொல்லிட்டாரு, வேலைய யாரு பாக்குறது?"
"அவரே பாத்துக்குறாராம்," வேறேதும் கூறவில்லை சரவணன்.
"அப்படியா சேதி, நல்ல மனுஷண்டா மச்சான் நம்ம சார்", ராமுவும் கிளம்ப ஆரம்பித்தான்.

சாப்பிட்டுவிட்டு இருவரும் பஸ்ஸ்டான்ட் வந்தனர். ராமுவை பஸ் ஏற்றி விட்ட பிறகு, தான் பஸ் ஏறலாம் என்று எண்ணியிருந்தான் சரவணன். காரைக்குடி பஸ்ஸுக்காக காத்திருந்த இருவருக்குள்ளும் இனம்புரியாத சந்தோஷ நினைவுகள். பஸ்ஸுக்கு காத்திருந்த பிற பயணிகளின் முகங்களிலும் படர்ந்திருந்தது மகிழ்ச்சியும், ஊருக்குச் செல்லும் ஆர்வமும்.

சரவணன் ராமுவிடம் என்னென்னவோ பேச நினைத்து, எதில் ஆரம்பிப்பது என்ற தவிப்பில் நின்று கொண்டிருந்தான். காரைக்குடி பஸ்ஸும் வந்தது.
"பொங்கல் வாழ்த்துக்கள்டா மச்சான், ஊர்ல எல்லாரையும் கேட்டதா சொல்லு", பஸ் ஏறி அமர்ந்தான் ராமு. பதிலேதும் கூறாமல் தலையசைத்தான் சரவணன். கூட்டம் நிரம்பி பஸ்ஸும் கிளம்ப, வெளியே நின்று கையசைத்துகொண்டிருந்த சரவணன், திடீரென்று ஓடிச் சென்று அதே பஸ்ஸில் ஏறினான். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னடா, உங்க ஊருக்கு போகாம இந்த பஸ்ஸுல ஏறுற?"
"திருச்சி வரைக்கும் உன் கூட வரேண்டா மாப்ள."

*******

ஜனவரி மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் இச்சிறுகதை வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Sunday, January 9, 2011


கொள்ளையழகு கொல்லிமலை

சங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவேண்டுமானால் நம் நினைவில் முதலில் வந்து நிழலாடுவது குறிஞ்சிப் பகுதிகளான மலை வாசஸ்தலங்கள் தான். மலைகள் என்றவுடன் கொடைக்கானல், உதகமண்டலம் என இது போன்ற இடங்கள் தான் செல்லவேண்டும் என்று இல்லை. மதுரைப் பக்கம், கோவைப் பக்கம் செல்லும் பாதையை, நாமக்கல், சேலம் பக்கம் பாதையை சற்றே மாற்றி கொல்லிமலை நோக்கிச் செல்லலாம்.


மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டும் வெண் மேகங்கள் உரசிச் செல்லவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையையும் கிட்ட வந்து தொட்டுப் பார்க்கிறது இயற்கை எழில். நாமக்கல்லில் இருந்து 55 km தொலைவில் அமைந்துள்ளது இந்த மூலிகை மலையான கொல்லிமலை. பூமிப்பந்தின் இயற்கைச் சங்கிலியை தன் விருப்பம் போல் இழுத்து வளைக்கும் மனிதனின் மாசுக்கள் அதிகம் தீண்டாத மருந்து மலையாகவே இன்று வரை திகழ்கிறது கொல்லிமலை.

எப்பொழுதுமே மலையை நோக்கிய பயணத்தில் நம் எல்லோருக்குமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று ஏற்படும். அவ்வாறே, கொல்லிமலையின் மலைப் பாதையை அடைவதற்கு ஒரு 15 km முன்பாகவே மலையின் முழு வடிவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. எனக்கு அந்த மலையின் முழு வடிவத்தைக் காணும் போது ஒரு மனிதன் நேராகப் படுத்திருந்தது போன்ற தோற்றம். ஒரு மனிதனின் முகம் முழுமையாகத் தெரிந்தது. கற்பனைக்குக் கால் கட்டு போடமுடியாதல்லவா.


கொல்லிமலையின் அடிவாரம், காரவல்லி என்ற ஊரில் தொடங்குகிறது அருமையான மலைப் பயணம். தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களை சென்றடைவதை விட சற்று கடினமானது வால்பறையும், கொல்லிமலையும். சுமார் 26 km தூர மலைப் பாதையை 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கொல்லிமலையை அடையலாம். அதன் பிறகு, திருப்பதி போல ஒரு அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஊர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சைமலை, கல்ராயன்மலை என இவற்றின் வரிசையில் அமைந்துள்ளது கொல்லிமலை. மனிதர்களின் அடர்த்தி அதிகம் இல்லாத மலையாக உள்ளது இந்த எழில்மிகு கொல்லிமலை. சித்தர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது கொல்லிமலை. இங்கே வாழ்ந்த சித்தராகக் கருதப்படுபவர், கோரக்கர் சித்தர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம், சிவபிரான், கடற்கரையோரம் பார்வதி தேவிக்கு தாரக மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த வேளையில், உமாதேவி சற்றே கண்ணயர்ந்தார். அதே நேரத்தில் சிவன் ஓதிய மந்திரத்தை ஒரு மீன்குஞ்சு கேட்டதன் பலனாக மனித வடிவம் பெற்றது. முக்கண்ணன் அதற்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்டார். அந்த மச்சேந்திரனை சிறந்த சித்தராக மாறி உலகம் முழுதும் ஞானத்தைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மிகக் கடுமையாக தவம் புரிந்து மேன்மையான சித்தரானார். பிறரிடமிருந்து தானம் பெற்று உணவு உண்பதே சித்தர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள், இவருக்கு அன்ன தானம் அளித்த ஒரு பெண்ணின் மனத்துயர் துடைக்க நினைத்தார் மச்சேந்திரர். தனக்குக் குழந்தை இல்லாத குறையை அந்தப் பெண்மணி இவரிடம் கூற, மச்சேந்திரர் கொஞ்சம் திருநீறு கொடுத்து, "இதனை நீ உட்கொள்ள குழந்தைபேறு அடைவாய்" எனக் கூறிச் சென்றார்.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயன் திருநீறே

என்ற திருஞானசம்பந்தரின் பாடலில் உள்ளது போல, திருநீற்றின் பெருமையையும் அறியாமல், மேலும் மச்சேந்திரரையும் நம்பாத அப்பெண்மணி அவர் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் சென்ற பிறகு அதே இல்லத்திற்கு வந்த மச்சேந்திரர், அந்த பெண்மணியிடம், அவரது மகனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். முன்பு தான் செய்த காரியத்தின் முழு விவரத்தையும் அப்பெண்மணி கூற அந்த அடுப்பின் அருகில் தன்னை அழைத்துச் செல்லுமாறு மச்சேந்திரர் கூறினார். அந்த பெருஞ்சித்தர் அடுப்பின் பக்கம் சென்று கோரக்கா என உரக்கக் கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதற்கொண்டு இருக்க வேண்டிய வளர்ச்சியோடு எழுந்து வந்தது. அந்த கோதார அடுப்பு சாம்பலில் இருந்து வெளிப் பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சேந்திரர்.

இவ்வாறு கொல்லிமலையைப் பற்றி பேசும்போது கோரக்கச் சித்தரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

கோரக்கர் இயற்றிய நூல்களாக தற்காலத்தில் கிடைப்பவை,
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத்திறவுகோல்
கோரக்கர் ரக்ஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர்மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்


சித்தர்கள் மனிதனுக்கும், கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப் படுபவர்கள். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு, தங்களது சக்திகளின் மூலம், பல்வேறு நோய்களை இவர்களால் குணப் படுத்த முடிந்திருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கோரக்கர் சித்தர் தியான மந்திரம்:
சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே !!


இந்த கொல்லிமலையோடு சேர்ந்த சித்தர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பல வளைவுகளைத் தாண்டிய பயணத்திற்குப் பிறகு கொல்லிமலையை அடைந்த நமக்கு, அங்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. சமதள பூமியில் பயிரிடப் படுவதைப் போலவே இந்த மலை பூமியில் அமைந்துள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது.


மேலும், இங்கே காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசிப் பழம், மலை வாழை, கொய்யா, ஏலக்காய், தேன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு என பலதரப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த கொல்லிமலைக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு காணவேண்டிய முக்கியமான இடங்கள்:

சுமார் 300 அடி உயரம் கொண்ட, 1000 படிகளை உடைய, 1 1/2 km தூரம் கீழே இறங்கிச் சென்று காணவேண்டிய ஆகாயகங்கை அருவி. இதன் கடைசி படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காணமுடியும் என்பது, கொல்லிமலை வாசி ஒருவரின் கருத்து. இங்கு ஐந்து ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து கொட்டுகிறது.


சித்தர்கள் வாழும் குகை. இன்றும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிளிரும் இடம்.

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி. ஆகாய கங்கையைப் போல் அல்லாது இந்த மாசிலா அருவியை சென்றடைவது சற்று சுலபமாக உள்ளது.

276 பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் அறபளீஸ்வரர் ஆலயம்.


நம் வாழ்வில், நமக்கு ஏற்படும் தீராத துயரங்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை நிறைந்த எட்டுகை அம்மன் அருள் புரியும் எட்டுகை அம்மன் ஆலயம்.

மேலும் காண வேண்டிய இடங்கள், மாசி பெரிய சாமி கோயில், மேகங்கள் சூழ்ந்த மலைத் தொடர்கள், மலை அடிவாரத்தில் உள்ள ஊர்கள், இவற்றை பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் வியூ பாயிண்ட், படகு வீடு, மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, சீக்குப்பார்வை வியூ பாயிண்ட், சந்தனப் பாறை, தொலைநோக்கி நிலையம் என இன்னும் நிறைய உள்ளன இந்த கொல்லிமலையில்.

இந்த மலை கிராமத்தை முழுதாக சுற்றிப் பார்க்க, இரண்டு நாட்கள் தேவைப்படும். எல்லா விதமான கட்டணத்திலும் இங்கே தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே வீசும் சுத்தமான காற்று, இங்கே நிலவும் மிதமான தட்பவெப்பம், விடுமுறைக் காலங்களில் சென்று தங்க மிகவும் பொருத்தமான சுற்றுலாத்தலம்.

கடையேழு வள்ளல்கள் பாரி, எழினி, காரி, நள்ளி, பேகன், மலையன், ஓரி போன்றவர்கள். இந்த கொல்லிமலையை வல்வில் ஓரி என்னும் மன்னரே ஆண்டதாகச் சொல்லப் படுகிறது. வள்ளல்களில் ஒருவர் ஆண்ட கொல்லி மலையில் நம் மனம் விரும்பும் ஏகாந்தத்தை நம்மால் உணர முடிகிறது. எங்கும் வேகம், எதிலும் வேகம், நிதானத்திற்கு இடமில்லாத இந்த மனித வாழ்க்கைச் சூழலை கொஞ்ச காலம் மாற்றி அமைத்து, அமைதியான, வாழ்வின் உண்மையான சுவையை அனுபவிக்க இது போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி இளைப்பாறுவது இக்கால கட்டத்தில் நம் அனைவருக்குமே தேவையான ஒன்று. இங்கு வாழும் மக்களுக்கு அநேகமாக எந்த நோயும் அண்டாது என்றே நினைக்கிறேன். மாசு படாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்விற்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது. உலக வெப்பமயமாதல் போன்ற நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே உள்ளது இந்த கொல்லிமலை.

கோடி கொடுத்தாலும் கிடைக்காத, சுத்தமான காற்றையும், தூய்மையான கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளா பசுமையையும், மூலிகை சுவாசத்தையும், கற்பனை வளத்தையும், தாய்ப்பால் போன்ற சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டுமகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.

Thursday, January 6, 2011


டைரி - புத்தாண்டு தொடர்பதிவு

2010 - 2011 வருட நினைவுகளை தொடர் பதிவெழுத அன்பு ஆசியா உமர் அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அதற்கு முதலில் நன்றி ஆசியாம்மாவிற்கு. நான் வருட டைரிக் குறிப்பு போல் அல்லாது பொதுவான விஷயங்களைப் பற்றி தொடர் பதிவிட்டுள்ளேன்.

*******

பிடித்த நல்ல விஷயங்கள்:
எஸ்.பி.பி., வாணி ஜெயராம் பாடின சினிமா பாடல்கள், நித்யஸ்ரீ மற்றும் அவங்க பாட்டி டீ.கே.பட்டம்மாள் பாடின கர்னாடக சங்கீத பாடல்களும் ரொம்ப பிடிக்கும். மத்தபடி பிடிச்ச நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு. அதுக்கு இந்த பதிவு போதாது. வழக்கமான விஷயந்தான் என்றாலும் நான் கட்டாயம் சொல்லித்தான் ஆகணும். எங்க அம்மா, அப்பாவை நான் உயிரா மதிக்கிறேன். ஏழ்மையிலும் நேர்மையோட இருக்குறவங்களை பாக்கறப்போ ஆச்சர்யத்தோட கூட அவங்க மேல ஒரு அபிமானமும் வந்துடும். நாம இருக்கற இடத்த சுத்தமா வெச்சிக்கிறது ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயத்துல ஒண்ணு. பாரதியாரை ரொம்ப பிடிக்கும். ரஜினி ஆரம்ப காலத்தில நடிச்ச படங்கள் பிடிக்கும். இப்படி பிடிச்ச விஷயங்களைப் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்.

மறக்க முடியாத சம்பவம்:
என்னோட வாழ்க்கையில எந்த விஷயம் எனக்கு சந்தோஷத்த குடுத்துச்சோ, அதுவே எனக்கு கஷ்டத்தையும் கொடுத்துருக்கு. படிச்சு முடிச்ச உடனேயே வேலை கிடைச்சுது. அந்த தருணம் மகிழ்ச்சிய குடுத்துச்சு. ஆனா குடும்ப சூழ்நிலையால அதை விட வேண்டி வந்தப்ப அதுவே எனக்கு ரொம்ப வருத்தமான விஷயமா மாறிடுச்சு. இது போல நிறைய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் என்னை பக்குவப்பட வைத்தது. "இதுவும் கடந்து போகும்", "நடப்பவை எல்லாம் நன்மைக்கே", என இது போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை அனுபவ பாடமாக ஆக்கியது இது போன்ற சம்பவங்கள். வாழ்க்கைய அதன் போக்குல வாழக் கத்துக்க வச்சுது.

மகிழ்ச்சி தந்த பிடித்த பொழுதுபோக்கு:
உண்மைய சொல்லனும்னா கோயிலுக்கு போறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு. நடு ராத்திரி எழுப்பிவிட்டு கோயிலுக்கு கிளம்ப சொன்னாகூட எழுந்து கிளம்பி விடுவேன். இளையராஜா பாட்டு கேட்டுகிட்டே வீட்டு வேலை செய்யிறது ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு.

அன்பு அல்லது பரிசுகள்:
எனக்குக் கிடைச்ச அனுபவங்கள் மூலமா, நமக்குக் கிடைச்ச இந்த வாழ்க்கையே அன்பான பரிசுதான்.

குழந்தைகளின் மகிழ்ச்சியான விஷயம்:
என்னோட மூத்த பையன், இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தின் 50-வது வருட பொன் விழா ஆண்டில் ஆகஸ்ட் 15-ல் பிறந்தது என்னைப் பொறுத்த வரை நான் ரொம்ப பெருமையா நினைக்கிற விஷயம். என்னோட ரெண்டு பிள்ளைகளையும் படிப்பு போன்ற விஷயங்களைத் தாண்டி, நல்ல மனிதர்களா வளர்ந்து நிக்கணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. குழந்தைகள் அப்படின்னு சொல்லும்போது என்னோட தம்பி பையன், எங்க அப்பா பிறந்த அதே தினத்தில் பிறந்தது (தாத்தாவும் பேரனும்) நான் நினைச்சு நினைச்சு சந்தோஷப் படர விஷயம்.

பிடித்த நல்ல மனிதர்கள்:
சாதாரண குடும்பத்துல பிறந்து கஷ்டப்பட்டு படிச்சு தன்னோட உழைப்பால இன்னைக்கு ஒரு மேன்மையான இடத்துக்கு வந்திருக்குற என்னோட கணவர் எனக்குப் பிடித்த மனிதர். அதே நேரத்துல யாரிடமும் பயம் என்பது துளியும் இல்லாமல், தன்னுடைய நேர்மையான கருத்துக்களை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தெளிவாக எடுத்து வைக்கும் திரு.சோ.இராமசாமி அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரணமா எல்லா பெண்களையும் போல அன்றாட வேலைகளை செய்து கொண்டு அப்படியே போய்க்கொண்டிருந்த என்னை, பதிவுலகம் அப்படின்னு தனியா ஒரு உலகம் இருக்கு, அப்படின்னு எனக்கு அறிமுகப் படுத்திய என் சகோதரன், எனக்குப் பிடித்த மனிதர்களுள் ஒருவன். நான் தனி ஆள் இல்லை, எனக்குப் பின்னாடி என் தம்பி இருக்கான் என என்னை தைரியம் கொள்ளச் செய்தவன்.

பிடித்த உணவுகள் புதியதாய் செய்து பார்த்தது:
உண்மைய சொல்லனும்னா கோயில்ல கொடுக்கற புளியோதரைதான் எனக்குப் பிடிச்ச உணவு. எங்க அம்மா செய்து கொடுக்குற எல்லா உணவுமே எனக்குப் பிடித்த உணவுதான். நிறைய புதிய உணவுகளை செய்து பார்த்திருக்கிறேன். அதற்கு என் கணவரைதான் முதல் பலி கடா ஆக்கியிருக்கிறேன்.

பிடித்த அல்லது மறக்க முடியாத இடங்கள்:
வழக்கமா சொல்லுவதுதான். பிறந்த ஊரான மன்னார்குடி பிடிக்கும். கல்யாணமாகி வந்த மாயவரம் அதைவிட அதிகமா பிடிக்கும். என்னதான் பிறந்த வீடு பிடிக்கும்னாலும் புகுந்த வீட்டை விட்டுக் கொடுக்க முடியுமா. பெண்கள் அதிக காலம் வாழ்வது புகுந்த வீட்டு மக்களோடதான. அதனால அந்த சொந்தமும் இயல்பாகவே நமக்குப் பிடித்துவிடும். இதையெல்லாம் தாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் திருவண்ணாமலையும், வேலூரும் தான்.

வாழ்க்கையில் இந்த வருடத்தில் நடந்த மனதைத் தொடுகிற சம்பவங்கள்:
மனதைத் தொடுற சம்பவங்கள் அப்படீன்னு சொல்றதைவிட ரொம்ப நாளா மனதை வருத்தப் பட வைக்கிற விஷயங்கள்னு வேணா சொல்லலாம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம்ம நாடு, அந்த மக்கள் சக்திய நல்ல விதத்தில் பயன் படுத்தாம, நிறைய பேர் போதையின் பின்னால் சென்று வாழ்க்கையை அழித்திக் கொள்வது, ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப் படுபவர்கள் இருக்கும் நாட்டில்தான், பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பவர்களும் வாழும் முரண்பாடான நாடு, இத்தனை கோடி மக்கள் நிறைந்த நம் இந்தியாவை வழி நடத்த ஒரு இந்தியன் இல்லாமல் போன விஷயம், எத்தனை ஊழல் நடந்தாலும் இப்பவும் துளி கூட நேர்மை மாறாமல் வாழும் மனிதர்களும் இருக்கும் பெருமிதம் என பல விஷயங்கள் மனதை அரித்துக் கொண்டுள்ளவை.

*******

2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்:
நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதுவது. என்னால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பிறர்க்கு முடிந்த வரை கெடுதல் செய்யாமல் இருப்பதே, நல்லது செய்வதற்கு சமம் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.

இந்த ஆண்டு எல்லோருக்குமே நன்மைகளை மட்டுமே தரவேண்டும் என இறைவனை வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

2010-ம் ஆண்டு டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும், 2011-ம் ஆண்டு ஜனவரி மாத பொங்கல் சிறப்பிதழ் லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும், எனது இரண்டு கதைகளும் ஒரு கவிதையும் வெளி வந்தது நான் எதிர்பாராமல் நடந்த இனிய நிகழ்வுகள்.

லேடீஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் என்னுடைய படைப்புக்கள் வர முக்கிய காரணமாக இருந்த அன்பு அக்கா தேனம்மை அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*******

நான் இதனை தொடர அழைப்பது:
கோமதி அரசு
ஆதிரா
காயத்ரி
அப்பாதுரை
தமிழ் உதயம் ரமேஷ்
ஆர்.வி.எஸ்.
கோபி ராமமூர்த்தி
மாதவன் ஸ்ரீநிவாசகோபாலன்
மாணிக்கம்
வழிப்போக்கன் யோகேஷ்

நேரம் கிடைக்கும்பொழுது தொடர வேண்டுகிறேன்.

Wednesday, January 5, 2011


சமையல் தொடர்பதிவு

Gourmet's Kitchenette சுஜாதா அவர்கள் எட்டு கேள்விகளுடனான இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அந்த எட்டு கேள்விகளும் அவற்றிற்கான விடைகள் இதோ:

*******

இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
பொதுவாக சமைக்காமல் காய், கனிகளை அப்படியே அதன் இயல்பு மாறாமல் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது என்றுதான் சொல்கிறார்கள். சாலட் என்னும் முறையில், காய் கனிகளுடன், எலுமிச்சம் சாறு, உப்பு, தேன் கலந்து சாப்பிடும்போது, தற்காலத்தில் பயன்படுத்தப் படும் அளவிற்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் இவற்றினால் ஏற்படும் தீங்கில் இருந்து கூட தப்பிக்கலாம். எலுமிச்சம் சாரும், உப்பும் நச்சுத் தன்மையை எடுத்து விடுவதால், பச்சையாக கறிகாய், கனிவகைகளை சாப்பிடுவதில் எந்த அச்சமும் தேவையில்லை. அவல், தேங்காய், சர்க்கரை இவற்றை கூட ஒன்றாகக் கலந்து சமைக்காமல் சாப்பிடலாம். இது போல வாரத்திற்கு இரு முறை அடுப்பில் ஏற்றாமல் இயற்கையான முறையில் உணவு பழக்கம் நமக்கு நன்மையே.

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
நேரத்திற்கு சாப்பிடுவதெல்லாம் திருமணத்திற்கு முன்புதான். இப்போதெல்லாம், பசிக்குத்தான் உணவு, ருசிக்கு அல்ல.

வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?
பொதுவான விஷயங்களை எடுத்து பதிவெழுத ஆரம்பித்த வேளையில், மேனகா சத்யா அவர்களின் சமையல் பதிவுதான் என்னை, எனது பதிவில் சமையல் பற்றியும் எழுதத் தூண்டியது. அந்த வகையில் மேனகா அவர்களுக்கு என் நன்றிகள்.

புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
நான் ஒரு முறை புது விதமான வடை செய்யப் போய் அரைக்கும்போது சற்று தண்ணீர் அதிகமாகிவிட்டதால், அதிலேயே துளி அரிசி மாவு சேர்த்து, அதையே பகோடாவாக செய்து விட்டேன். இப்படி பல முறை ஆகி உள்ளது. ஆனாலும் பதார்த்தத்தை வீணாக்காமல், வேறு வடிவம் கொடுத்து விட வேண்டியதுதான். (சாப்பிடறவங்க பாடுதான் திண்டாட்டம்).

உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?
நான் அன்றாட சமையலில் கரம் மசாலா, சோடா உப்பு, அஜினோமோடோ இவற்றை சேர்ப்பதே இல்லை. சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் கூட சேர்ப்பதில்லை. இவை இல்லாமலேயே ருசியாக சமைக்க முடியும்.

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
சமையலில் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்து செய்வது வழக்கம்.

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
சேர்ந்து சாப்பிடுவதால் மற்றவருக்கு என்ன உணவு பிடிக்கும், என்பதை பிறர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. சேர்ந்து இருக்கும் வாய்ப்பு குறைந்து விட்ட இந்த காலத்தில் குறைந்த பட்சம், சாப்பிடும் நேரத்திலாவது கலந்து பேசி, சிரித்து மகிழ்வது நன்மைதானே.

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பிடித்த உணவகம் என்று எதுவும் இல்லை. முடிந்த வரை வெளியில் சாப்பிடுவது இல்லை. அப்படி சாப்பிட்டாலும் வயிற்றுக்குக் கெடுதி இல்லாத இட்லி வாங்கி சாப்பிட்டு விடுவது வழக்கம்.

*******

நான் இதனை தொடர அழைப்பது:
மேனகா
ஆசியா உமர்
விக்கி

Monday, January 3, 2011


ஐயப்ப தரிசனம்

மத இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்று சேரும் ஒரு இடமாக திருச்சிராப்பள்ளியில் ஒரு இடம் திகழ்கிறது. எல்லா மதத்தினரும் வந்து வழிபடும் வண்ணம், திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த அருள்மிகு ஐயப்பன் கோயில் திருச்சி பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.


இத்திருக்கோயிலில் சுத்தம் என்னும் சுபிட்ச மொழியும், மௌனம் என்னும் தெய்வீக மொழியும் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கோயிலில் ஐயப்பன் சன்னதியைச் சுற்றி பல கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் எழுதப்பட்டுள்ளன.

"ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்."

"ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்."

"பள்ளிக்கூடம் ஒரு கோயிலைப் போல இருக்க வேண்டும்,
கோயில் ஒரு பள்ளிக் கூடமாகத் திகழ வேண்டும்."

"நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."


இது போல நூற்றுக் கணக்கான பொன் மொழிகள் கோயிலைச் சுற்றி. இங்கே நான் குறிப்பிட்டது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு.

பொதுவாக ஐயப்பன் பாடல்களும், E.M.ஹனிபா அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள், K.J.ஜேசுதாஸ் அவர்கள் பாடிய கிருஸ்துவ பாடல்கள் என இவை அனைத்தும் மத வேறுபாடின்றி அனைவருமே விரும்பிக் கேட்கும் பாடல்கள். இந்த மார்கழி மாதத்தில் சபரி மலை யாத்திரை நிகழும் நேரம். இந்நேரத்தில் இருமுடி தாங்கி செல்லும் ஐயப்ப பக்தர்களுடன் நாமும் சேர்ந்து ஐயப்பன் கானங்கள் சிலவற்றை கேட்டு இந்த ஆண்டினை இனிமையுடனும், பக்தியுடனும் தொடங்குவோம்.

ஹரிவராசனம்... (K.J.ஜேசுதாஸ்)


பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... (K.வீரமணி)


பொய் இன்றி மெய்யோடு... (K.J.ஜேசுதாஸ்)


பகவான் சரணம் பகவதி சரணம்... (K.வீரமணி)


மாமலை சபரியிலே... (K.வீரமணி)


ஓம்கார ரூபன்...


பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... (மது பாலகிருஷ்ணன்)


மணிகண்டன் சர்வேஷ்வரன்... (மது பாலகிருஷ்ணன்)


சுவாமி பொன்னையப்பா... (K.வீரமணி)


வில்லாளி வீரனே வீர மணிகண்டனே... (K.வீரமணி)


நெய் அபிஷேகம்... (உன்னிகிருஷ்ணன்)


Related Posts with Thumbnails