Showing posts with label சுற்றுலாத்தலம். Show all posts
Showing posts with label சுற்றுலாத்தலம். Show all posts

Tuesday, January 26, 2016

Tuesday, March 17, 2015


மன்னார்குடி ரயில்கள் - ஆன்ட்ராய்ட் மென்பொருள்

மன்னார்குடியிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் மன்னார்குடிக்கு வரும் ரயில்களைப் பற்றிய விவரங்களைச் சுமக்கும் இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் MANNARGUDI TRAINS என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம்.


மன்னார்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் கால அட்டவணை, இருக்கை நிலை மற்றும் கட்டண விவரங்களை இணைப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பி.என்.ஆர் நிலையை அறியும் வசதியும் உள்ளது.

இந்த மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

MANNARGUDI TRAINS

Sunday, January 9, 2011


கொள்ளையழகு கொல்லிமலை

சங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவேண்டுமானால் நம் நினைவில் முதலில் வந்து நிழலாடுவது குறிஞ்சிப் பகுதிகளான மலை வாசஸ்தலங்கள் தான். மலைகள் என்றவுடன் கொடைக்கானல், உதகமண்டலம் என இது போன்ற இடங்கள் தான் செல்லவேண்டும் என்று இல்லை. மதுரைப் பக்கம், கோவைப் பக்கம் செல்லும் பாதையை, நாமக்கல், சேலம் பக்கம் பாதையை சற்றே மாற்றி கொல்லிமலை நோக்கிச் செல்லலாம்.


மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டும் வெண் மேகங்கள் உரசிச் செல்லவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையையும் கிட்ட வந்து தொட்டுப் பார்க்கிறது இயற்கை எழில். நாமக்கல்லில் இருந்து 55 km தொலைவில் அமைந்துள்ளது இந்த மூலிகை மலையான கொல்லிமலை. பூமிப்பந்தின் இயற்கைச் சங்கிலியை தன் விருப்பம் போல் இழுத்து வளைக்கும் மனிதனின் மாசுக்கள் அதிகம் தீண்டாத மருந்து மலையாகவே இன்று வரை திகழ்கிறது கொல்லிமலை.

எப்பொழுதுமே மலையை நோக்கிய பயணத்தில் நம் எல்லோருக்குமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று ஏற்படும். அவ்வாறே, கொல்லிமலையின் மலைப் பாதையை அடைவதற்கு ஒரு 15 km முன்பாகவே மலையின் முழு வடிவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. எனக்கு அந்த மலையின் முழு வடிவத்தைக் காணும் போது ஒரு மனிதன் நேராகப் படுத்திருந்தது போன்ற தோற்றம். ஒரு மனிதனின் முகம் முழுமையாகத் தெரிந்தது. கற்பனைக்குக் கால் கட்டு போடமுடியாதல்லவா.


கொல்லிமலையின் அடிவாரம், காரவல்லி என்ற ஊரில் தொடங்குகிறது அருமையான மலைப் பயணம். தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களை சென்றடைவதை விட சற்று கடினமானது வால்பறையும், கொல்லிமலையும். சுமார் 26 km தூர மலைப் பாதையை 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கொல்லிமலையை அடையலாம். அதன் பிறகு, திருப்பதி போல ஒரு அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஊர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சைமலை, கல்ராயன்மலை என இவற்றின் வரிசையில் அமைந்துள்ளது கொல்லிமலை. மனிதர்களின் அடர்த்தி அதிகம் இல்லாத மலையாக உள்ளது இந்த எழில்மிகு கொல்லிமலை. சித்தர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது கொல்லிமலை. இங்கே வாழ்ந்த சித்தராகக் கருதப்படுபவர், கோரக்கர் சித்தர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம், சிவபிரான், கடற்கரையோரம் பார்வதி தேவிக்கு தாரக மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த வேளையில், உமாதேவி சற்றே கண்ணயர்ந்தார். அதே நேரத்தில் சிவன் ஓதிய மந்திரத்தை ஒரு மீன்குஞ்சு கேட்டதன் பலனாக மனித வடிவம் பெற்றது. முக்கண்ணன் அதற்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்டார். அந்த மச்சேந்திரனை சிறந்த சித்தராக மாறி உலகம் முழுதும் ஞானத்தைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மிகக் கடுமையாக தவம் புரிந்து மேன்மையான சித்தரானார். பிறரிடமிருந்து தானம் பெற்று உணவு உண்பதே சித்தர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள், இவருக்கு அன்ன தானம் அளித்த ஒரு பெண்ணின் மனத்துயர் துடைக்க நினைத்தார் மச்சேந்திரர். தனக்குக் குழந்தை இல்லாத குறையை அந்தப் பெண்மணி இவரிடம் கூற, மச்சேந்திரர் கொஞ்சம் திருநீறு கொடுத்து, "இதனை நீ உட்கொள்ள குழந்தைபேறு அடைவாய்" எனக் கூறிச் சென்றார்.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயன் திருநீறே

என்ற திருஞானசம்பந்தரின் பாடலில் உள்ளது போல, திருநீற்றின் பெருமையையும் அறியாமல், மேலும் மச்சேந்திரரையும் நம்பாத அப்பெண்மணி அவர் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் சென்ற பிறகு அதே இல்லத்திற்கு வந்த மச்சேந்திரர், அந்த பெண்மணியிடம், அவரது மகனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். முன்பு தான் செய்த காரியத்தின் முழு விவரத்தையும் அப்பெண்மணி கூற அந்த அடுப்பின் அருகில் தன்னை அழைத்துச் செல்லுமாறு மச்சேந்திரர் கூறினார். அந்த பெருஞ்சித்தர் அடுப்பின் பக்கம் சென்று கோரக்கா என உரக்கக் கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதற்கொண்டு இருக்க வேண்டிய வளர்ச்சியோடு எழுந்து வந்தது. அந்த கோதார அடுப்பு சாம்பலில் இருந்து வெளிப் பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சேந்திரர்.

இவ்வாறு கொல்லிமலையைப் பற்றி பேசும்போது கோரக்கச் சித்தரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

கோரக்கர் இயற்றிய நூல்களாக தற்காலத்தில் கிடைப்பவை,
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத்திறவுகோல்
கோரக்கர் ரக்ஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர்மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்


சித்தர்கள் மனிதனுக்கும், கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப் படுபவர்கள். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு, தங்களது சக்திகளின் மூலம், பல்வேறு நோய்களை இவர்களால் குணப் படுத்த முடிந்திருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கோரக்கர் சித்தர் தியான மந்திரம்:
சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே !!


இந்த கொல்லிமலையோடு சேர்ந்த சித்தர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பல வளைவுகளைத் தாண்டிய பயணத்திற்குப் பிறகு கொல்லிமலையை அடைந்த நமக்கு, அங்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. சமதள பூமியில் பயிரிடப் படுவதைப் போலவே இந்த மலை பூமியில் அமைந்துள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது.


மேலும், இங்கே காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசிப் பழம், மலை வாழை, கொய்யா, ஏலக்காய், தேன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு என பலதரப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த கொல்லிமலைக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு காணவேண்டிய முக்கியமான இடங்கள்:

சுமார் 300 அடி உயரம் கொண்ட, 1000 படிகளை உடைய, 1 1/2 km தூரம் கீழே இறங்கிச் சென்று காணவேண்டிய ஆகாயகங்கை அருவி. இதன் கடைசி படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காணமுடியும் என்பது, கொல்லிமலை வாசி ஒருவரின் கருத்து. இங்கு ஐந்து ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து கொட்டுகிறது.


சித்தர்கள் வாழும் குகை. இன்றும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிளிரும் இடம்.

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி. ஆகாய கங்கையைப் போல் அல்லாது இந்த மாசிலா அருவியை சென்றடைவது சற்று சுலபமாக உள்ளது.

276 பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் அறபளீஸ்வரர் ஆலயம்.


நம் வாழ்வில், நமக்கு ஏற்படும் தீராத துயரங்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை நிறைந்த எட்டுகை அம்மன் அருள் புரியும் எட்டுகை அம்மன் ஆலயம்.

மேலும் காண வேண்டிய இடங்கள், மாசி பெரிய சாமி கோயில், மேகங்கள் சூழ்ந்த மலைத் தொடர்கள், மலை அடிவாரத்தில் உள்ள ஊர்கள், இவற்றை பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் வியூ பாயிண்ட், படகு வீடு, மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, சீக்குப்பார்வை வியூ பாயிண்ட், சந்தனப் பாறை, தொலைநோக்கி நிலையம் என இன்னும் நிறைய உள்ளன இந்த கொல்லிமலையில்.

இந்த மலை கிராமத்தை முழுதாக சுற்றிப் பார்க்க, இரண்டு நாட்கள் தேவைப்படும். எல்லா விதமான கட்டணத்திலும் இங்கே தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே வீசும் சுத்தமான காற்று, இங்கே நிலவும் மிதமான தட்பவெப்பம், விடுமுறைக் காலங்களில் சென்று தங்க மிகவும் பொருத்தமான சுற்றுலாத்தலம்.

கடையேழு வள்ளல்கள் பாரி, எழினி, காரி, நள்ளி, பேகன், மலையன், ஓரி போன்றவர்கள். இந்த கொல்லிமலையை வல்வில் ஓரி என்னும் மன்னரே ஆண்டதாகச் சொல்லப் படுகிறது. வள்ளல்களில் ஒருவர் ஆண்ட கொல்லி மலையில் நம் மனம் விரும்பும் ஏகாந்தத்தை நம்மால் உணர முடிகிறது. எங்கும் வேகம், எதிலும் வேகம், நிதானத்திற்கு இடமில்லாத இந்த மனித வாழ்க்கைச் சூழலை கொஞ்ச காலம் மாற்றி அமைத்து, அமைதியான, வாழ்வின் உண்மையான சுவையை அனுபவிக்க இது போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி இளைப்பாறுவது இக்கால கட்டத்தில் நம் அனைவருக்குமே தேவையான ஒன்று. இங்கு வாழும் மக்களுக்கு அநேகமாக எந்த நோயும் அண்டாது என்றே நினைக்கிறேன். மாசு படாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்விற்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது. உலக வெப்பமயமாதல் போன்ற நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே உள்ளது இந்த கொல்லிமலை.

கோடி கொடுத்தாலும் கிடைக்காத, சுத்தமான காற்றையும், தூய்மையான கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளா பசுமையையும், மூலிகை சுவாசத்தையும், கற்பனை வளத்தையும், தாய்ப்பால் போன்ற சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டுமகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.

Tuesday, September 14, 2010


ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் / வேலூர் கோட்டை

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்.


திருக்கோயில் அமைவிடம்:
ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர், சென்னையிலிருந்து 150 km தொலைவிலும், கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து 65 km தொலைவிலும், மலையே சிவனாகக் காட்சி தரும் திருவண்ணாமலையிலிருந்து 80 km தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பொதுவாக, நாம் திருப்பதியையும், திருவண்ணாமலையையும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்த்து விட வேண்டும் என்று நினைப்போம். வேலூரில் இருப்பவர்களுக்கு இந்த ஆசை சுலபமாக நிறைவேறும். ஏனென்றால், வேலூரின் வடக்கே திருமலை திருப்பதி 110 km தொலைவிலும், வேலூரின் தெற்கே, திருவண்ணாமலை 80 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தலமூர்த்தி : ஜலகண்டேஸ்வரர்
தலநாயகி : அகிலாண்டேஸ்வரி
தலவிருட்சம் : வன்னி
தலதீர்த்தம் : கங்கா பாலாறு, தாமரை புஷ்கரணி

திருத்தல வரலாறு:
சப்த ரிஷிகளுள் ஒருவர் அத்திரி. இவர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடி விட்டது. அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த பொம்மி என்னும் சிற்றரசர் கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட லிங்கத்தை சுட்டிக்காட்டி திருக்கோயில் எழுப்பும்படி கூறினார். இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனாலேயே ஜலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

அன்னியர் படையெடுப்பின் போது இந்த லிங்கத்தின் பாதுகாப்பு கருதி, லிங்கத்தை அருகில் உள்ள சத்துவாச்சாரி என்னும் ஊருக்கு எடுத்துச் சென்றனர். நெடுங்காலத்திற்கு இக்கோயில் தெய்வம் இல்லாத கோயிலாகவே இருந்தது. பின்னர் 1981-ம் வருடத்தில் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியரின் பெரும் முயற்சியினால், லிங்கம் மீண்டும் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சன்னதிகள்:
இக்கோயிலில், பிள்ளையார், பெருமாள், முருகன் வள்ளி தெய்வானை, அகிலாண்டேஸ்வரி, சரஸ்வதி, லெட்சுமி, சிவன், பிரம்மா, நவக்கிரகம், ஆதி சங்கரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

தலச் சிறப்பு:
வேலங்காடு என்ற புராணப் பெயர்கொண்ட வேலூரில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும், ஒருசேர அருள் பாலிக்கும் தலம் இது. இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின் புறம், திருப்பதி வெங்கடாசலபதி அமைப்பிலேயே பெருமாள் காட்சி தருகிறார். சூரியன், சந்திரனை விழுங்கும், ராகு, கேது மற்றும், தங்க, வெள்ளிப் பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆதி சங்கரர் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது.

திருத்தலபெருமை:
சித்திரை மாதம் நடைபெறும் இக்கோயில் ப்ரம்மோற்ஸவத்தின் போது 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம், 63 நாயன்மார்களும் வீதி உலா எடுத்துச் செல்லப்படுவர். ஒரே நேரத்தில் 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சியைக் காண கண் கோடி வேண்டும். செந்தமிழை, தெய்வீகத் தமிழை பாடல்கள் மூலமாக வளர்த்தவர்கள் அல்லவா இவர்கள். மொழியை வளர்க்க வரம் வாங்கி வந்தவர்கள் அல்லவா இவர்கள்.

சிவன் யானை வாகனத்தின் மேல் வலம் வருவார். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி விழாக்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் பெயர் செல்வ விநாயகர்.

கார்த்திகை தீபத்தன்று பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மாலை ராஜ கோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற்று, பின்பு வீதி உலா எடுத்துச் செல்வர். கார்த்திகை கடைசி சோமாவரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

இக்கோயில் சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி கொடுப்பதால் நோய் நீக்குபவராக ஜுரகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். திருக்கடையூரைப் போல இக்கோயிலிலும் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்றவை சிறப்பாக நடத்தி வைக்கப் படுகின்றன.

பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் காட்சி தருகிறது. இதற்கு அருகில் உள்ள சிவன் கங்கா பாலாறு ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த லிங்கம் லேசாக கூம்பு வடிவில் காணப்படுகிறது. இவரின் பின்புறம், பைரவர் காணப் படுகிறார். இவ்வாறு ஒரே இடத்தில் கங்கை, சிவன், பைரவரை காணும் பாக்கியம் கிட்டுகிறது. இவர்களை ஒரே இடத்தில் வழிபட காசி விஸ்வநாதரை வழி பட்ட புண்ணியம் கிடைக்குமாம்.

இக்கோயிலின் முன்புறத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப் பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெண்ணைப்பானையுடன் கிருஷ்ணர், பைரவர், கண்ணப்பர் வரலாறு, நடராஜர், சரபேஸ்வரர், கருடாழ்வார் வணங்கும் நரசிம்மர், மத்தளம் வாசிக்கும் பெருமாள், ஆஞ்சநேயர், மேற்கூரையைத் தாங்கும் கிளிகள் என அங்குள்ள சிற்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

****************

வேலூர் கோட்டை:
வேலூர் கோட்டை 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி நீர் நிரப்பப்பட்ட அகழி ஒன்று அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இங்கு படகு சவாரி நடத்தப் படுகிறது. வேலூர் மக்களுக்கு இந்த படகு சவாரி நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில் மட்டுமல்ல, ஒரு கிருஸ்தவ தேவாலயமும், இஸ்லாமிய தர்காவும் அமைந்துள்ளது. உள்ளே காவலர் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது.


இந்தியாவிலேயே தரையில் கட்டப்பட்ட கோட்டையில் மிகச் சிறந்த கோட்டையாக, இந்திய அளவில் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக இந்த வேலூர் கோட்டை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கோட்டையினைப் பற்றிய சிறப்புகள் அங்கங்கு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்டைக்குள்ளே, ASI அருங்காட்சியகமும், இந்திய அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கே பழங்காலத்து சிற்பங்களைப் பற்றியும், ஓவியங்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், அக்கால ரூபாய்கள், காசுகள் பற்றியும் பெரும்பாலான விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகள் இவற்றைப் பார்க்கும் போது தமிழன் பழங்காலத்தில் இருந்தே அயல் நாட்டினருடன், வணிக வியாபாரங்களில், திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க வாழ்ந்துள்ளான் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அருங்காட்சியகங்கள் வாரத்தில் வெள்ளிக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும்.


விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட காலத்தில் திப்புசுல்தான் அவரது குடும்பத்தினருடன் இந்த கோட்டையில் வந்து தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட வேலூர் புரட்சி 1806 ம் ஆண்டு இந்த வேலூர் கோட்டையில்தான் தொடங்கியது.

வேலூரை பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்திலிருந்தே வேலூர் போர் பூமியாகத்தான் திகழ்ந்துள்ளது. 1606 முதல் 1672 வரை விஜயநகரப் பேரரசின் தலை நகரமாக வேலூர் விளங்கியுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள், பீஜப்பூர் சுல்தான்கள் என பல்வேறு அரசர்கள் ஆண்ட வரலாற்று சிறப்புமிக்க ஊர் வேலூர். வேலூரில் முத்துமண்டபம் என்ற இடத்தில் இலங்கையை ஆண்ட கடைசி சிங்கள மன்னனின் கல்லறை அமைந்துள்ளது.


இவ்வாறாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட வேலூரை நமது குழந்தைகளுக்கு காட்டும்போது நமது முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Thursday, September 9, 2010


சிருங்கேரி வித்யாசங்கரா கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் உள்ள வித்யாசங்கரா ஆலயம்.


கோயில் அமைவிடம்:
இக்கோயில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த அழகிய திருக்கோயில். ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் அமைக்கப்பட்ட நான்கு மடங்களுள் இங்கு சிருங்கேரியில் அமைக்கப்பட்ட சாரதா தேவி பீடம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

சிருங்கேரி பெங்களூருவிலிருந்து 336 km தொலைவில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம். ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

கோயில் வரலாறு:
சிருங்கேரியில் அமைந்துள்ள வித்யாசங்கரா ஆலயம், ஆதி குரு வித்யாசங்கரா அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது. 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசர்கள் இக்கோயிலைக் கட்டுவதற்கு நிறைய உதவி புரிந்துள்ளனர். இக்கோயிலுக்கு விஜயநகரப் பேரரசர்களால் அளிக்கப்பட்ட பல்வேறு கொடைகளைப் பற்றிய விபரங்களை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


கோயில் சிறப்புகள்:
இக்கோயில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள தளத்தின் மேல் அமைந்துள்ளது. இக்கோயிலின் உள்ளே செல்வதற்கு ஆறு வாயிற்கதவுகள் உள்ளன. இக்கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள 12 தூண்கள், ராசித் தூண்கள் என பெயரிடப்பட்டுள்ளன. அந்த 12 தூண்களிலும் சூரியனின் கதிர்கள், சூரிய ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூணின் மேல் படும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.


இங்கே அமைக்கப்பட்டுள்ள கர்ஜிக்கும் சிங்கத்தின் சிற்பத்தின் வாயில் கல்லால் ஆன பந்து ஒன்று உருண்டு கொண்டு இருப்பது பார்க்கும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. சுற்றுப் பிரகாரத்தில் 61 விதமான சிற்பங்கள், புராணங்களில் உள்ள காட்சிகளை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்டுள்ளன. துங்கபத்ரா நதியின் மற்றொரு கரையிலிருந்து காணும்போது, இக்கோயில், ஒரு பிரம்மாண்ட அன்னப் பறவையை காண்பது போல் உள்ளது.

மைசூர் மகாராஜா திப்பு சுல்தான் அவர்கள், அவரது காலத்தில் இக்கோயிலில், நாட்டு மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்ட, சஹஸ்ர சண்டி யாகத்திற்காக, பரிசுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள ஸ்படிகலிங்கம் மிகப் பழமை வாய்ந்தது. சிவபெருமானால் ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு அளிக்கப் பட்ட லிங்கமாகக் கருதப்படுகிறது. புத்தர் பிரான் இங்கு விஷ்ணுவாக வழிபடப்படுகிறார்.

இங்கே பாயும் துங்கபத்ரா நதியில் வாழும் மீன்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் பொரி உணவைப் போடும்போது அந்த மீன்கள் கூட்டமாக வந்து சாப்பிடும் அழகே அழகு.



சன்னதிகள்:
இக்கோயிலின் அன்னை சாரதாதேவி கையில் ஜபமாலையுடனும், கிளியுடனும் கருணையே வடிவமாக காட்சி தருகிறார். ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் அமைக்கப்பட்ட சாரதாதேவி சிலை, சந்தன மரத்தால் செய்யப்பட்டது எனக் கூறுகிறார்கள். பிற்காலத்தில் அதனை மாற்றி தங்கத்தினால் செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இக்கோயிலில் சக்தி கணபதி, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, ஆதி சங்கராச்சாரியார் போன்ற தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. நவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

SIRIMANE FALLS:
சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 km தொலைவிலும், kigga என்ற இடத்திலிருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ள sirimane நீர் வீழ்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சி.


கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் சிறியதாக இருந்தா
லும் மிக அழகியது. வருடம் முழுவதும் நீர் வரத்து உள்ள நீர் வீழ்ச்சி. துங்கபத்ரா நதியில் இருந்து இங்கு தண்ணீர் வருவதாக சொல்கிறார்கள். அடர்ந்த பசுமையான மரங்கள் நிறைந்த பாதை வழியாக இந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்வதே மிக சுகமான அனுபவம்.

Saturday, August 28, 2010


முருதேஷ்வர் கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் முருதேஷ்வர் திருக்கோயில், கர்நாடகம்.


திருக்கோயில் இருப்பிடம்:
நமது
அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிறைய புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. கொல்லூர், உடுப்பி, தர்மஸ்தாலா போன்ற நூற்றுக் கணக்கான தெய்வீகத் திருத்தலங்கள் உள்ளன. அவ்வாறான திருத்தலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில், பட்கல் மாவட்டத்தில் உள்ள முருதேஷ்வர் ஆலயத்தைப் பற்றிப் பார்ப்போம்.


இந்தக் கோயிலுக்கு நாங்கள் பெங்களுருவில் இருந்து சென்று வந்தோம். பெங்களுருவில் இருந்து ஷரவனபெலஹோலா, ஹசன், மங்களூர், உடுப்பி, கொல்லூர், ஆகிய திருத்தலங்கள் கொண்ட ஊர்கள் வழியாகச் சென்றோம். முருதேஷ்வர் ஆலயம் பெங்களூருவில் இருந்து 455 km தொலைவிலும், மங்களூரில் இருந்து 165 km தொலைவிலும் உள்ளது.

தல வரலாறு:
முருதேஷ்வர் ஆலயம் மூன்று புறமும் அரபிக் கடலால் சூழப் பட்டும், கண்டுககிரி என்ற மலையின் மீதும் அமைந்துள்ளது. முருதேஷ்வர் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயராகும். த்ரேதா யுகத்தில், இராமாயண காலத்தில், இராவணன், ஆத்ம லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச்செல்ல கடும் தவம் புரிந்தான். அந்த ஆத்ம லிங்கம் தனக்குக் கிடைக்காத காரணத்தினால் கோபம் கொண்ட இராவணன் அதனை அழிக்க முயன்றான். அப்போது ஆத்ம லிங்கம் பல பாகங்களாக உடைந்தது.


அவ்வாறு
உடைந்த பாகங்களில் ஒரு பகுதிதான் இங்குள்ள முருதேஷ்வர் என்று அழைக்கப்படும் இக்கோயில் கற்ப கிரஹ லிங்கம். இந்த இராவண வரலாறு, பூலோக கைலாசம் என்ற பெயரில் இந்த கோயிலின் அருகிலேயே, இந்தப் புராணத்தை அப்படியே சிலை வடிவில், நம் கண் முன்னே நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூலோக கைலாச குகை பற்றி நாம் மற்றொரு பதிவில் காண்போம்.


இங்குள்ள
சிவபெருமான் சிலை உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலையாக கருதப்படுகிறது. உலகிலேயே முதலாவது மிகப் பெரிய சிவன் சிலை நேபாளத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த சிவன் சிலையை கட்டி முடிக்க 2 வருடங்கள் ஆகி உள்ளது. இச்சிலையின் உயரம் 123 அடி (37 மீ). இச்சிவன் சிலை சூரிய ஒளி நேரடியாகப் படும் படி கட்டப்பட்டுள்ளதால் நாம் காணும்போது ஜொலிக்கிறது.


சிவன்
சிலைக்கு முன்னால் இராவணன்,
சிறுவன் வடிவில் இருக்கும் பிள்ளையாரிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக் கொள்வது போல ஒரு சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலின் வாயிலில் நிஜ யானை நிற்கிறதோ என்று நினைக்கும் வண்ணம், அளவிலும், அமைப்பிலும், நிஜ யானையின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.


முருதேஷ்வர் ராஜ கோபுரம்:
இக்கோயில்
ராஜ கோபுரம் கண்டுககிரி மலையின் மேல் அரபிக்கடல் சூழ அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரம் 20 அடுக்குகள் கொண்டு அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் உயரம் 249 அடி. இக்கோபுரம் தான் உலகிலேயே உயரமான கோயில் கோபுரமாகக் கருதப்படுகிறது. கோயில் கற்ப கிரஹத்தில் உள்ள ஆத்மலிங்கம், தரை மட்டத்தில் இருந்து 2 அடி கீழே உள்ளது.


கலைக்கு என்றுமே ஊர், பேர், ஜாதி, இன, மொழி, மத பேதமில்லை என்பார்கள். அதுபோல இக்கோயில் கோபுரத்தை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த, காரைக்குடி ஸ்ரீ எஸ்.கே.ஆச்சாரி என்பவரின் தலைமையிலேயே கட்டியுள்ளார்கள்.


ஸ்ரீ
எஸ்.கே.ஆச்சாரி, (தலைமைப் பொறியாளர், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
) மற்றும் அவரது மைந்தர்கள் திரு கே.சுவாமிநாத ஸ்தபதி, திரு கே.தட்சிணாமூர்த்தி ஸ்தபதி, செக்காலை, காரைக்குடி என்று அங்குள்ள கோயில் கல்வெட்டில் இவர்களது பெயர் பொறிக்கப் பட்டு, அவற்றை காணும்போது, நம் தமிழகத்திலிருந்து சென்று, உலகிலேயே உயர்ந்த கோயில் கோபுரத்தைக் கட்டி உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இக்கோயில் கோபுரத்தை 12-04-2008 அன்று திறந்து வைத்துள்ளனர்.

சுற்றுலா:
முருதேஷ்வர் மிக அழகிய சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அதற்கு ஒரு உதாரணம். இங்கிருந்து 16 km தொலைவில் பட்கல் என்ற பழமையான துறைமுக நகரம் உள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் இந்த ஊர் முக்கியமான துறைமுக நகரமாக விளங்கியது. இங்கே 42 மசூதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.


இது
போன்று கோயில்களுக்கு செல்லும்போது நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியும், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பண்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்களைப் பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

Tuesday, August 3, 2010


ஆடி வரும் காவிரி

உலகின் எந்த நாகரிகமாக இருந்தாலும் அது ஆற்றுப் படுகையில்தான் செழித்து வளர்ந்துள்ளது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, இவற்றில் தண்ணீருக்கே மிக உயர்ந்த இடம். நமது பூமியை முக்கால் பாகம் நீர் தான் சூழ்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் தற்போது நிலவில் கூட தண்ணீர் இருப்பதாக நம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


பொங்கி வரும் தண்ணீரைக் கண்டால் நம் எல்லோருக்குமே சந்தோஷம்தான். அதுவும் பொங்கி வரும் காவிரியைக் கண்டால் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டு, மேட்டூரில் இருந்து அன்ன நடை நடந்து வந்த காவேரி, கல்லணைக் கதவுகள் திறந்ததும் ஆனந்த நடனமாடிய காட்சி கண்கொள்ளாக் காட்சி.


தீர்க்கதரிசி கரிகாலச் சோழனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த கல்லணை. உலகிலேயே மிகப் பழமையான இன்னமும் நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம் நமது கல்லணை என்பதில் நாம் பெருமை கொள்வோம். காவேரி நமது தமிழகத்தில் சேலம், ஈரோடு இடையே ஆரம்பித்து தஞ்சை, திருச்சி என்று பல ஊர்களைத் தாண்டி நாகை மாவட்டத்தில் பூம்புகார் என்னும் ஊரில் கடலில் கலக்கிறது. இந்த காவிரியின் நடுவில் தான் கல்லணை கட்டப் பட்டுள்ளது. சுமார் 1000 அடி நீளம் உள்ளது இந்த கல்லணை.

கரிகாலச் சோழன் சிலை

கல்லணை, திருச்சியில் இருந்து சுமார் 25 km தொலைவில் உள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கிணங்க, கல்லணையில் திறந்து விடப் படும் தண்ணீர் நமது விவசாயிகளுக்கு இந்த வருடம் அமோக பயிர் விளைச்சலைத் தர கடவுள் அருள வேண்டும். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற ரபீந்தரநாத் தாகூரின் வார்த்தைகளுக்கு ஏற்ப விவசாயி செழித்தால்தான் நம் அனைவரின் வாழ்வும் செழிக்கும்.


காவிரிக் கரையோரம் உள்ள ஊர்களில் முக்கியமாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள ஊர்களில் ஆடிப்பெருக்கு மிகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப் படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விழாவாகவே ஆடிப்பெருக்கு நடைபெறுகிறது. ஆடி 18-ம் நாள், ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த வருடம் ஆடிப் பெருக்கு கொண்டாடப் படுகிறது.


ஆற்றங்கரையோரம் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி காப்பரிசி கிளறி, பல்வேறு வகையான சாதம் கிளறி எடுத்துக் கொண்டு வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பழங்கள் வைத்து, காவிரி
த் தாய்க்குப் படைத்து மஞ்சள் கயிற்றினை, நமக்குத் தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு நாம் கட்டி விட, அவர்கள் நமக்கு கட்டிவிட, அங்கே அனைவரது பாசமும், ஒற்றுமையும் வெளிப்படும். ஆடிப்பெருக்கு அன்று புது மணப் பெண்ணிற்கு தாலி பெருக்கிப் போடுவார்கள். காதோளக் கருகமணி, எலும்பிச்சம்பழம் இவற்றை அம்மா காவிரித் தாயே, எங்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களையும், நலன்களையும் தா என்று வேண்டிக்கொண்டு தண்ணீரில் விடுவார்கள்.


இந்த
ஆண்டு நல்ல மழையும் பெய்து விவசாயமும் செழிக்க நாம் இறைவனை வேண்டுவோம். அனைவருக்கும் நலன்கள் பெருக, சுகங்கள் பெருக, அனைத்து செல்வங்களும் பெருக, ஆடிப்பெருக்கை கொண்டாடுவோம்.


Related Posts with Thumbnails