Monday, April 30, 2012


திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதி திருத்தலங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் திருக்குளந்தை (பெருங்குளம்), தூத்துக்குடி மாவட்டம்.


தனக்குடலம் வேறான தண்மையுணரான்
மனக்கவலை தீர்த்துய்ய மாட்டானி னைக்கிற்
றிருக்குளந்தையாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தையாமலிருந்தால்!!

திருத்தல அமைவிடம்:
இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்


திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் துலைவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிலே தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் வேதஸாரன் என்ற அந்தணர், தனது மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு கமலாதேவி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வளர்ந்து வந்த கமலாதேவி, பெருமாள் மேல் உள்ள பெரும் பக்தியின் காரணமாக, இறைவனையே கணவனாக அடைய விரும்பினாள். பெற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என யார் சொல்லியும் கேளாமல், திருமாலை எண்ணி தவம் இயற்றினாள். இவ்விளம் பெண்ணின் கடும் தவத்தினை கண்ட விஷ்ணுபிரான், கமலாதேவி முன் தோன்றி, "நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் நோக்கம் என்ன" எனக் கேட்டார். அதற்கு கமலாதேவி, ஸ்ரீமந் நாராயணனையே மணம் புரிந்து வாழ விரும்புவதாகக் கூறினாள். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமாலும் கமலாதேவியை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறாக கமலாதேவி என்னும் பாலிகை தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற பெயர் உண்டானது. வேதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் பெருமாளே, தன் மகளை தன் இதயத்தில் இருத்தி உள்ளதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் பெருமாளை மனதார நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூஜை செய்து வந்தார்.


பெருமான் மாயக் கூத்தாடிய வரலாறு:
ஒரு நாள் வேதஸாரனின் மனைவி குமுதவல்லி ஆற்றங்கரையில் நீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில், அம்சநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமயமலைச் சாரலில் சிறை வைத்தான். தனது அன்பு மனைவியை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றதை பெருமாளிடம் கூறி, தன் மனைவியை மீட்டுத் தர மன்றாடினான் வேதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமயமலை சென்று அம்சநாரனிடம் இருந்து குமுதவல்லியை மீட்டு வந்தார் திருமால்.

பாலிகாவனத்தில் திருமால் குடிகொண்டிருப்பதை அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து பெருமானுடன் போரிட்டான். திருமால், அந்த அரக்கனை போரில் வென்று வதம் செய்து அரக்கனது தலை மேல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இறைவனுக்கு தேவர்கள் அனைவரும் கங்கை நீரால் திருமஞ்சனம் செய்வித்தனர். நடனமாடிய காரணத்தினாலேயே இத்தல இறைவனுக்கு சோரநாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற கருடாழ்வார் பெருமானுக்கு உதவிய காரணத்தினால் இன்றும் இத்தல உற்சவ மூர்த்தியுடனும், தாயாருடனும் கருடாழ்வாருக்கு ஒரே ஆசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் பேரழகு கண்ணைக் கவர்கிறது மனதையும் சேர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர் தொட்டியான் என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.

திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.


கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
நம்மாழ்வார்

Friday, April 27, 2012


தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.


வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே!!
நம்மாழ்வார்

திருக்கோயில் அமைவிடம்:
இந்த தென்திருப்பேரை திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.


வருணன் பாசம் பெற்ற வரலாறு:
ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.


இத்திருக்கோயிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108 அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.

மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வது அந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வழக்கில் உள்ள கூற்று. இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.


அதைசாகி வையமுழுதாண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசாரும்
தென் திருப்பேரைப் பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப் பேரைப்பதியாதார்!!
108 திருப்பதி அந்தாதி

Thursday, April 26, 2012


ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.


திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள பெருமாள் ஆலயங்கள், நவதிருப்பதி ஸ்தலங்கலாகவும், அவற்றினை நவகிரகங்கள் உடன் தொடர்பு கொண்ட திருக்கோயில்களாகவும் வரிசைபடுத்தி நவதிருப்பதி என ஒன்பது பெருமாள் ஆலயங்களை வரிசைபடுத்தி ஆலய தரிசனம் செய்யலாம். இந்த நவதிருப்பதிகளின் வரிசையில், ஏற்கனவே நாம் சூரிய ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தையும், சந்திரன் ஸ்தலமான ஸ்ரீவரகுணமங்கை திருத்தலத்தையும், செவ்வாய் ஸ்தலமான திருக்கோளூர் திருத்தலத்தையும், புதன் ஸ்தலமான திருப்புளியங்குடி திருத்தலத்தையும் தரிசனம் செய்துள்ளோம். இப்போது, நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமான, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தை தரிசிப்போம் வாருங்கள்.

நவ திருப்பதி ஆலயங்களை ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி


திருத்தல வரலாறு:
இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.

குருகாசேத்திர மகிமை:
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.

அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.

யானையும் வேடனும் முக்தி அடைந்த வரலாறு:
முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல பெருமையினை மேலும் கூறலானார்.


தாந்தன் முக்தி பெற்ற வரலாறு:
பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் வேதம் கற்க ஆசைப்பட்டு வேத பாட சாலையில் சேர்ந்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட விதத்தில் அவனால் வேதங்களை மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு, மந்தனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்கோயில்களில் வேலை செய்து தன் காலத்தைக் கழித்து பின் உயிரிழந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காத சூழ்நிலையில், அவனை அனைவரும் ஒதுக்கிய சூழ்நிலையில், குருகூர் தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு அங்கேயே தனது வாழ்வை தொடர்ந்தான். இந்நிலையில் தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு திடீரென கண் பார்வை இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் திருமாலைச் சரணடைந்தனர். நீங்கள் எல்லோரும் தாந்தனை ஒதுக்கிய காரணத்தினால் தான் உங்களுக்கு கண் தெரியாமல் போனது, நீங்கள் அனைவரும் தாந்தனிடம் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என திருமால் அசரீரியாய்க் கூறினார். அவ்வாறே நடந்தபின் திருமாலும் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிகொடுத்து தாந்தனை முக்தி அடையச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தசேத்திரம் எனவும் பெயர் பெற்றது.

சங்கமுனிக்கு அருள் கிடைத்த வரலாறு:
பின்னொரு சமயம் தாந்தன் தங்கிய ஆலமரத்தின் கீழ் வேடன் ஒருவன் தங்கிய காரணத்தினாலேயே அவனது அடுத்த பிறவியில் சங்கன் என்னும் முனிவராக பிறந்து இறைவனடி சேர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் வேளையில், சங்கு முனிவரை நாரத முனிவர் சந்தித்து, சங்கன் தவம் புரியும் காரணம் கேட்க, முக்தி அடையும் பொருட்டே தவமிருப்பதாக அவர் கூற, "நீ குருகூர் சென்று பெருமாளை வேண்ட முக்தி கிடைக்கும்" என நாரதர் கூறினார். அவ்வாறே சங்கனும், சங்காக மாறி குருகூர் சென்று திருமாலை வழிபட்டு முக்தி அடைந்தார். அந்த இடம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என அழைக்கப்படுகிறது.

பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம்:
ஆதி சேத்திரம்:
பூலோகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி சேத்திரம் எனவும், இத்த இறைவனுக்கு ஆதிநாதன் எனவும் பெயர் வந்தது.

வராக சேத்திரம்:
பெரும் வெள்ளத்தில் அழிய இருந்த பூமியை, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய ஸ்தலம் என்பதாலும், பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்வித்த ஞானபிரான் குடிகொண்ட ஸ்தலம் என்பதாலும், வராக சேத்திரம் என்ற பெயர் வந்தது. இந்த ஞானபிரான் சன்னதி திருக்கோயிலின் உள்ளே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

சேச சேத்திரம்:
ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிலேயே நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் சேச சேத்திரம் என வழங்கப்படுகிறது.

தீர்த்த சேத்திரம்:
தாமிரபரணி ஆறும், அதில் உள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்த்த சேத்திரம் என அழைக்கப்படுகிறது.

தாந்த சேத்திரம்:
தாந்தன் என்னும் மானிடனை திருமாலின் அருளினால் தேவர்களும் வணங்கும் வண்ணம் உயர்த்திய ஊர் என்பதால் தாந்த சேத்திரம் என பெயர் வந்தது.

நம்மாழ்வார் வரலாறு:
பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.


இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.


ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய்மொழி, திராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.

நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு:
மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை. பிற்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின. நாதமுனிகளின் தமிழ் தொண்டு போற்றுதற்குரியது.

திருப்புளிய மர வரலாறு:
ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.

திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.


பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.


இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இத்திருக்கோயில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

கொண்டாடப்படும் உற்சவங்கள்:
ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம் திருப்பவுத்திர உற்சவமும், உறியடி உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், பெருமாள், ஆழ்வார், ஸ்ரீ வைகுண்டம் செல்லுதல் திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும், சித்திராப் பௌர்ணமி திருவிழாவும், வைகாசிப் பெருவிழாவும், கருட சேவையும், மாசி உற்சவமும், பங்குனி உற்சவமும், வைகுண்ட ஏகாதசி விழாவும் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

எதிர்காலத் தலைமுறையினருக்கு திருக்கோயில்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் சமுதாய நலனுக்கு எந்த விதத்தில் கோயில்கள் நலம் பயக்கின்றன என்பன பற்றி எடுத்துரைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும்.

Monday, April 23, 2012


திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம்.


தெளியும் பசும்பொன் சிறைகாற்று வீச
விளியுந் துயர் போய் விடுமே யெளியேற்
கருளப் புளிங்குடி வாழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்கு வந்தக்கால்!!
(108 திருப்பதி அந்தாதி)

பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீயத்துப்பல் படிகால் குடி குடி வந்து
ஆட்செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தென்டீரைப் பொருநல் தன்பணை சூழ்ந்தனை திருப்புளியங்குடி கிடந்தானே!!

திருக்கோயில் அமைவிடம்:
நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் இந்த திருப்புளியங்குடி, திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
ஒரு சமயம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் திருமால், கருடன் மேலேறி இப்பூவுலகைச் சுற்றி வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் அழகிய மணற்பரப்பைக் கண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி விட்டார். பூலோகம் வந்தும் தன்னை கவனிக்கவில்லையே என்று மனம் வருந்திய பூமாதேவி, லக்ஷ்மி தேவி மீது பொறாமைக் கொண்ட பூமாதேவி, கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள். இதனால் உலகம் தன் நிலை மாறி வறட்சி அடைந்தது. அனைத்து ஜீவராசிகளும் துன்புற்றனர். இதனைக்கண்ட தேவர்கள் திருமாலிடம் வந்து முறையிட்டனர்.

தன்னை வந்து சந்தித்த தேவர்களை சமாதானம் செய்துவிட்டு பின் லக்ஷ்மி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை தேற்றி, பூமாதேவியின் மன வருத்தத்தைப் போக்கி மீண்டும் பூலோகம் அழைத்து வந்தனர். இவ்வாறாக பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். திருப்புளியங்குடியில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் பூமிபாலகராய் இங்கு எழுந்தருளியுள்ளார்.


இந்திரனுக்கு சாபம் நீங்கிய வரலாறு:
இமயமமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மானுருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்திரன், மானுருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வணங்கி வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றான். அது முதல் இத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் என பெயர் கொண்டது. தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனைக் கொன்றார்.

அதன்பிறகு அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க "நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக் கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்" எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருபெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த சதிபதிவேள்வியினை சிறப்புடன் செய்து முடித்தான்.

இங்கே திருமால் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய சாளரம் வழியாக தரிசிக்கலாம். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது. லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக்கொடி சுவற்றில் பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமைரையுடன் சேரும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது.


புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வாராயே!!

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனைக் காலம் கிடத்தியுள் திருஉடம்பு அசைய
தொடர்ந்து குற்றவேல் செய்து கொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி
தடங் கொள்தாமரைக் கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழவிருந்த தருள்வாய் திருப்புளியங்குடி கிடந்தானே!!

Wednesday, April 18, 2012


திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில், நவதிருப்பதிகளில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் திருக்கோளூர் திருத்தலமாகும்.


பிறப்பற்று மூப்புப் பிணியற்றுநாளு
மிறப்பற்று வாழவிருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோ ளுராவிற்றாமோதரன் பள்ளி
கொள்ளுங் கோளூர் மருஷங்கோள்!!
(108 திருப்பதி அந்தாதி 58)

திருக்கோயில் அமைவிடம்:
நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
பல கோடி வருடங்களுக்கு முன்பாக செல்வத்திற்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். குபேரன் மிகுந்த சிவ பக்தனும் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒருசேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கியதாக பார்வதி தேவி குபேரன் மீது கடும் கோபம் கொண்டார்.

அந்த கோபத்தின் உக்கிரத்தில் குபேரனுக்கு சாபமிட்டாள் பார்வதி தேவி. "குபேரனது உருவம் விகாரம் அடையவும், அவனிடம் உள்ள செல்வங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு அகலட்டும் என்றும், குபேரனுக்கு ஒரு கண் பார்வை அற்றுப் போகட்டும்" என்றும் சாபமிட்டாள். குபேரனும் தனது தவறினை உணர்ந்து சிவனிடம் சென்று முறையிட, அவரும் அன்னை பார்வதியிடம் சென்று மன்னிப்புக் கோரச் சொன்னார். அவ்வாறே பார்வதியிடம் அடிபணிந்து மன்னிப்புக் கோரினார் குபேரன். அந்நிலையில் பார்வதி தாயார், குபேரனிடம், இனி உனக்கு கண் பார்வை வராது, உன் உடல் விகாரம் குறையாது, ஆனால் இழந்த நிதிகளை, அவை சென்று அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பெற்றுக்கொள் எனக் கூறி அனுப்பினாள்.

குபேரனும் அதுபோலவே வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பாதி நிதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் லக்ஷ்மி தேவியிடம் கொடுத்தான்.

தொடர்ந்து ஒரே நபரிடம் கொட்டிக் கிடக்கும் செல்வம் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்காது என்பதும், அங்கே அதர்மம் ஆள ஆரம்பித்துவிடும் என்பதும், அதனாலேயே செல்வம் ஒருவரிடத்தில் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் அனுகிரகம். தர்மதேவன் நிலையாக இங்கேயே தங்கி இத்திருக்கோயில் பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

இவ்வாறாக தர்மம் அதர்மத்தை வென்று இத்தலத்திலேயே தங்கி விட்டதால், மற்ற இடங்களில் அதர்மத்திற்கு கொண்டாட்டமாகிவிட்டது. அதனால் அச்சம் கொண்ட தேவர்கள் தர்மத்தைத் தேடி நிதிவனத்திற்கு வந்தனர். இங்கும் தன்னைத் தேடி வந்த அதர்மத்தை, தர்மம் வென்றதனால், இத்தலத்திற்கு அதர்மபிசுனம் என்ற பெயர் உண்டானது.


இதற்கு முன்பாக, சுவர்த்தனன் என்பவரது பிள்ளையான தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் பெற்று அதன் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆட்பட்டான். தனது ஏழ்மை நிலையினை போக்கும் நோக்கத்தில் நர்மதா நதிக் கரையில் வாழ்ந்து வந்த பரத்வாஜ முனிவரை வேண்டி நின்றான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய். தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார்.

தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.

இவ்வாறு தான் இழந்த செல்வத்தை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.


மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போது, குரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவி, தமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகி, அவரை மட்டுமே பாடியவர், பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லை. தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார். குருவின் மூலமாகவே, ஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்தது. இந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல், நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.

உண்ணும் சோறும் பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மகிக் அவனூர் வினவி
தண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!!
- நம்மாழ்வார்

Friday, April 13, 2012


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.


திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

திருக்கோயில் அமைவிடம்:
பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், சாலியமங்கலத்தில் இருந்து 10 km தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.

திருக்கோயில் குறிப்பு:
தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)
தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)
தல விருட்சம்: முல்லைக்கொடி
தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)


இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். திருநாவுக்கரசர் மேலும் இவ்விறைவனை தனது அன்பின் பக்தியின் மிகுதியால் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி, எட்டுருவ மூர்த்தி என்றும் தனது பாடல்கள் மூலம் போற்றிப் புகழ்கிறார்.

திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.

கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.


இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.

பழைய தலவரலாறு:
பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.


திருக்கோயில் அமைப்பு:
திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:
1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.
2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.
3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.
4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.
5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.

திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,
தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்

இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


இராசகோபுரத்தினை வணங்கி உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது நடவான மண்டபமும், வசந்த மண்டபமும்தான். அதன் பின் உட்கோபுரம் இரண்டாம் கோபுரத்தினை அடைந்து உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரத்தில் சுவாமி சன்னதியும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் அமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும், ஒரு மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:
சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:
இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!!


திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்:
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

Related Posts with Thumbnails