Showing posts with label மந்திரம். Show all posts
Showing posts with label மந்திரம். Show all posts

Monday, December 20, 2010


திருவெம்பாவை

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்:


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!

(1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆர்ஏ லோர் எம்பாவாய் !!

(2)

முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏலோர் எம்பாவாய் !!

(3)

ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !!

(4)

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !!

(5)

மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்பவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய் !!

(6)

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய் !!

(7)

கோழிசிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை
கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடலோர் எம்பாவாய் !!

(8)

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியாற் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் !!

(9)

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏதுஅவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய் !!

(10)

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழிஅடியோம் உயர்ந்தோம்காண் ஆர் அழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய்எமை ஏலோர் எம்பாவாய் !!

(11)

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற் றம்பலத்தே தீஆடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேல்ஓர் எம்பாவாய் !!

(12)

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்து
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் போங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(13)

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதிதிறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் !!

(14)

ஓர்ஒருகால் எம்பெருமான் என்று என்றேம் நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர்உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(15)

முன்இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிவேல்
பொன்அம் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவுஇலா எம்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவள் நமக்கும் முன்சுரக்கும் இன்அருளே
என்னப் பொழிவாய் மழை ஏலோர் எம்பாவாய் !!

(16)

செங்கண் அவன்பால் திசைமுகன் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதா
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(17)

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார்இரவி கதிர்வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(18)

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய் !!

(19)

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடுஏலோர் எம்பாவாய் !!

(20)

*******

ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறை தலத்தில் பாடி அருளிய திருப்பள்ளி எழுச்சி:

போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ்க் கமலக்கண் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுஉயர் கொடியுடையாய் எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!

(1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவை யோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலை கடலே பள்ளி எழுந்தருளாயே !!

(2)

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்போடு நமக்குத்
தேவ நற் செறிகழல் தாள்இணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!

(3)

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(4)

பூதங்கள் தோறும் நின் றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்அறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய் எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(5)

பப்பற வீட்டி ருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்துறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கண் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!

(6)

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(7)

முந்திய முதல்நடு இறுதியும் ஆணாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்தனை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருபெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவண்டு ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே !!

(8)

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப் பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே
வண் திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயிரானாய்
எம் பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!

(9)

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்
போக்குகின் றோம்அவ மே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் திருமாலாம்
அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !!

(10)

*******

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்க இங்கே செல்லவும்.

Thursday, December 16, 2010


ஆண்டாள் திருப்பாவை

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை:
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆண்டாள், பெருமாளை நினைத்து நாவிற்கினிய, மனதிற்கினிய தேன் தமிழில் இயற்றிய திருப்பாவை படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையான பாடல்களை உடையது. பெரியாழ்வார் பெருமானின் மகளே ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரழகுப் பெருமாளுடன் வீற்றிருக்கும் ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்தகண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழ்ப் படிந்தேலோரெம்பாவாய் !!

(1)

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யு மாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய் !!

(2)

ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் !!

(3)

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழவுலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(4)

மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக்குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் !!

(5)

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(6)

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழலாய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத்தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோரெம்பாவாய் !!

(7)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்தருளேலோ ரெம்பாவாய் !!

(8)

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய் !!

(9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்றலனந்தலுடையாய் அருங்கலமே
தோற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய் !!

(10)

கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமாரெல்லாரும் வந்து நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய் !!

(11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீவாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்னப்பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய் !!

(12)

புள்ளின்வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீநன்னாளால்
கள்ளம்தவிர்த்து கலந்தேலோரெம்பாவாய் !!

(13)

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல்தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் !!

(14)

எல்லே இளங்கிளியே இன்னமுறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைகொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய் !!

(15)

நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னமுன்னம் மாற்றாதேயம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய் !!

(16)

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச்செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் !!

(17)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும்குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய் !!

(19)

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் !!

(20)

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் !!

(21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்க மிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய் !!

(22)

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தருளேலோரெம்பாவாய் !!

(23)

அன்றிவ் வுலகமளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்றுகுடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைக்கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய் !!

(24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(25)

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்னவண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய் !!

(26)

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனையப் பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(27)

கறவைகள் பின்சென்று கானம்சேர்த்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீதாராய் பரையேலோரெம்பாவாய் !!

(28)

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் !!

(29)

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய் !!

(30)

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம் !!

*******

ஆண்டாள் திருப்பாவை (நித்யஸ்ரீ மகாதேவன்)

(1 - 4)


(5 - 8)


(9 - 13)


(14 - 18)


(19 - 22)


(23 - 26)


(27 - 30)


*******

Sunday, October 17, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 8

விஜய தசமி விழா:
நவராத்திரி கொண்டாட்டத்தின் நிறைவு நாளில் பத்தாம் நாளில் கொண்டாடப்படும் விழா விஜதசாமி விழா. விநாயகருக்கு சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது போல ஆதி பராசக்திக்கு விஜதசாமி விழா கொண்டாடப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடமும், அக்னிதேவரிடமும் வரங்களைப் பெற்றவன் எருமைத் தலையுடன் கூடிய மகிஷன் என்கிற அசுரன். பெண்களால் தனக்கு அழிவு வராது என்ற எண்ணத்தில், தனக்கு பெண்களால் தான் முடிவு வரவேண்டும் என வரம் பெற்றான். மகிஷாசுரனது ஆணவத்தை அடக்க முடிவு செய்து மும்மூர்த்திகளும் தங்கள் மனைவிகளாகிய பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சக்திகளை ஒன்றாக இணைத்து, துர்க்கை என்னும் மாபெரும் சக்தியை உருவாக்கினர்.

துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்தாள். ஆதிபராசக்தி துர்க்கை வடிவம் கொண்டு மகிஷாசுரனை வெற்றி கொண்ட தினமே விஜய தசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ துர்கா அஷ்டகம்:

வாழ் வுமானவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் துர்க்கா இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உலகையீன்றவள் துர்க்கை உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைகாப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்தையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

செம்மையானவள் துர்க்கா ஜெகமுமானவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பதிந்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்பதீபமே
திருவுமானவள் துர்கா திரிசூலிமாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ஆதி பராசக்தியே சரணம் !!

****************

அனைவரும் வாழ்வில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற விஜயதசமி விழா நல்வாழ்த்துக்கள்.

Sunday, September 26, 2010


விநாயகர் அகவல்

ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான்எழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில்புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் றன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலம்ஒரு நான்கும் தந்து எனக் கருளி
மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின்நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்துஅறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாகஇனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லாமனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டிச்

அணுவிற் கணுவாய்க் அப்பாலுங் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்பு
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே !!!

Saturday, September 18, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 7

புரட்டாசி மாதம் திருமாலுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் பெருமாளை நினைத்து நமது இல்லங்களில் தளியல் போடுவது வழக்கம். அன்று சுவாமிக்கு வடை, பாயசம் செய்து, பெருமாளுக்கு வடை மாலை சாற்றி, அதோடு மட்டுமல்லாது முருங்கைக் கீரையில் துவட்டல் செய்து பெருமாளுக்குப் படைப்பது மிக விசேஷம்.


திருமால் துதி
:
வந்தாய் போலே வாராதாய் !
வாராதாய் போல் வருவானே !
செந்தா மரைக்கண் செங்கனிவாய் !
நால்தோள் அமுதே ! என்னுயிரே !
சிந்தா மணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங் கடத்தானே
அந்தோ ! அடியேன் உன் பாதம்
அகல கில்லேன் இறையுமே !
அகல கில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்று
உடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிகணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே !
நெடியானே ! வேங்கடவா !
நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே !
வந்தாய்; என் மனம் புகுந்தாய்; மன்னி நின்றாய்
நந்நாத கொழுஞ்சுடரே ! எங்கள் நம்பீ !
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் ! இனி யான் உனை என்றும் விடேனே
தெரியேன் பாலகனாய் பல
தீமைகள் செய்துவிட்டேன்
பெரியேன் ஆயினபின்
பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ்
கனமா மலை வேங்கடவா !
அரியே ! வந்தடைந்தேன்
அடியேனை ஆட்கொண்டருளே !

பச்சை மாமலை போல் மேனி..


Friday, September 10, 2010


விநாயகர் கவசம்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்

****************

காசிப
முனிவர் அருளிய விநாயகர் கவசம்



தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும் விளங்கிய
காசிபர்காக்க புருவந் தம்மைத்
தளர்வில் மாகோ தரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க:
கவின்வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைகார் காக்க
நனிவாக்கைவிநா யகபுதாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி காக்க
தவிர்தலுரு திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு
காக்க:
காமருபூ முகந்தன்னைக் குணேசர்
நனி காக்ககளக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க:
பக்கம் இரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங் களமூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்
காக்க:
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள்விநா யகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க:
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசைகாக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந்
திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க:
ஏகதந்தர் பகர்முழுதும் காக்க
இர வினும்சுந்தி இரண்டன் மாட்டும்
சையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க:
மதிஞானம் தவந்தரன ம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சசரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!


படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்:
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங் கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும் !!

Tuesday, August 31, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 6

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!!
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞான னந்தா சரணம் சரணம்


காப்பு
ஆக்கும் தொழில் ஐங்கரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

முத்து
முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே சரணம்
தந்தே யறிநான் தனயன் தாய்நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னம் நடை செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழி யாரோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணு வர்க்கருள் எண்ண மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலி வானவளே
புனையக் கிடையாப் புதுமையானவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழம
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகலி சாஸவி யாமினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேஸ ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற்றது பூதி பெரும்
அடியாற் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !

நூற் பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி யெல்லாம்
சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே !!!!

Related Posts with Thumbnails