Thursday, December 23, 2010


அவல் பர்ஃபி

தேவையான பொருட்கள்:
அவல் : 250 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
முந்திரி பருப்பு : 7
நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி
நெய் : 100 கிராம்

செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும்.

அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் கலந்து சேர்த்துக் கிளறவும். இவ்வாறு கிளறும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் கிளறிக்கொண்டே இருக்கவும். இந்தக் கலவை முக்கால் பதம் வெந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி, அவல் கலவையை எடுத்துக் கொட்டவும்.

ஒரு கரண்டியால் மேல் புரத்தை சமன் படுத்தி, கத்தியில் நெய் தடவி அழகிய சிறுசிறு துண்டங்களாக வெட்டினால் அவல் பர்ஃபி தயார்.


அவலின் நலன்கள்:
பொதுவாக அவலை சமைத்துதான் உண்ணவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவலுடன் வெல்லம், பொட்டுக் கடலை சேர்த்து சமைக்காமலேயே உண்ணலாம். அவல் சீக்கிரத்தில் செரிக்கும் தன்மையுடைய உணவு. அரிசியில் இருந்து செய்யப் படும் உணவுப்பொருள் என்பதால் அரிசியின் நன்மைகள் இதிலும் கிடைக்கின்றன. உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் அவலை அடிக்கடி சேர்த்துக் கொள்வதனால் எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் எடை சீராகக் குறைகிறது. பச்சரிசி அவலை விட புழுங்கல் அரிசி அவல் உடலுக்கு மிகவும் நல்லது.

Tuesday, December 21, 2010


என்றும் இனியவை - A.M.ராஜா

மனித வாழ்க்கை, பிறந்த நொடியிலிருந்து இறப்பை நோக்கிய பயணமாகவே தொடர்கிறது. நேரான சாலையில் சிரமமின்றி செல்வது போல, ப்ரேக் அதிகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சிலரது வாழ்க்கை சுகமாக அமைந்து விடுகிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளைப் போல் பலரது வாழக்கை பல கஷ்ட நஷ்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறது. பிறப்பில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை சுவாரஸ்யமாக்குவது இசை மட்டுமே.

அது போகிற போக்கில் வாழ்பவர்கள்தான் பலபேர். ஆனால், தான் மறைந்த பிறகும் தன்னை எல்லோர் மனத்திலும் குடிவைத்துச் செல்ல வேண்டும் என்று தன் வாழக்கையைப் பாடமாக வாழ்ந்து செல்பவர்கள் சிலர் இருந்தார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள். என்னடா இது ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எல்லாம் A.M.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டதின் பலன் தான்.


சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. இரவின் மடியில் இனிமை சேர்க்கும் பாடல்கள் இவருடையது.

தென்னிந்திய இசை வானில் துருவ நட்சத்திரமாக விளங்கிய A.M.ராஜா, வட இந்தியத் திரையுலகிலும் தன் இசைத் திறமையை நிலைநாட்டியிருக்கிறார். ஹிந்தி சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான ராஜ்கபூரினால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் நிரம்ப பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் இவர் பிரபலம். நிறைய பாடகர்கள் பல மொழிகளில் பாடி இருந்தாலும், தான் பாடிய அத்தனை மொழிகளிலும் பிரபலமான சில பாடகர்களுள் இவரும் ஒருவர்.

*******

A.M.ராஜாவுக்கும், அதே காலகட்டத்தில் பிரபல பாடகியாக இருந்த ஜிக்கி அவர்களும் காதலித்து, இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் சமயத்தில், பிரபல பத்திரிக்கையில் வந்த செய்திதான் பலரை புருவம் உயர்த்தச் செய்ததாம். ராஜா, ஜிக்கி கல்யாணம் என்று செய்தி வெளியிடுவதற்கு பதிலாக, ராஜாஜிக்கி கல்யாணம் என்று பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டதாம். ராஜாஜிக்கு கல்யாணமா, என்று மக்கள் மததியில் பரபரப்பு நிலவியதாம்.

*******

களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற அருகில் வந்தாள், உருகி நின்றாள் என்ற பாடல், தன்னை மறந்து விட்ட காதலியை நினைத்து ஜெமினி பாடும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஜெமினி கையில் வைத்துப் பார்க்கும் சீட்டுக் கட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் சாவித்திரியின் முகம் வருவது போல காட்சி இருக்கும். அந்த காலத்திலேயே அழகாக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஜெமினியின் நடிப்பு அருமையாக இருக்கும். இதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் A.M.ராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல், தேனீ பூவிலிருந்து தேனை எடுத்து கூட்டில் சேர்க்காமல் நேராக நம் கையிலேயே கொடுத்தது போன்ற தித்திப்பான உணர்வு.*******

A.M.ராஜா அவர்கள் இசையமைத்து, தமிழ் திரையுலகை முற்றிலுமாக வேறு திசைக்கு இட்டுச் சென்ற பெருமை மிகு இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான தேன் நிலவு படத்தில் வரும் காலையும் நீயே, மாலையும் நீயே பாடல் கரும்புச் சாறு. பாடல் வரிகளை A.M.ராஜா பாட, இன்றும் இளமை கொஞ்சும் குரலழகி ஜானகி அவர்களின், ஹம்மிங், பாடல் நெடுக வந்து கேட்பவர்களை மயக்கும் தேனிசை.*******

ஆடாத மனமும் ஆடுதே என்ற களத்தூர் கண்ணம்மா பாடல் இசையுலகில் A.M.ராஜா, P.சுசீலா சேர்ந்து பாடிய பாடல்களில் சிகரத்தை தொட்ட பாடல். இந்த பாடலில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகம் கூட்டி இருப்பார்கள். A.M.ராஜாவை விட, P.சுசீலாவின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும் இப்பாடலில்.*******

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மிஸியம்மா படப் பாடல். ஜெமினி, சாவித்திரியின் இளமையான தோற்றம், பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களின் கைதேர்ந்த நடிப்பு, A.M.ராஜாவின் குரல், இனிமையான இசை அனைத்து சங்கதிகளும் ஒருங்கே மிளிரும், காலத்தால் அழியாத, இந்தத் தலைமுறை ரசிகர்களும் விரும்பிக் கேட்கும் பாடல்.*******

ஆடிப்பெருக்கு படத்தில் தோன்றும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தத்துவ முத்து. டூயட் பாடலாக இருந்தாலும் அதிலே தத்துவதத்தை நுழைத்தது பாடல் ஆசிரியரின் திறமை. "மலர் இருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை, செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை" என்று நீளும் பாடல் வரிகள், உலக வாழ்க்கைச் சக்கரத் தத்துவத்தை ஒரு எளிய பாடலில் உணர்த்தியுள்ளது.*******

இப்படி எத்தனையோ பாடல்கள். A.M.ராஜா அவர்களின் குரல் இனிமையும், அவரது பாடல்களில் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை அமைப்பாளர்களின் மெட்டு விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து இவர் பாடிய பாடல்கள் உலக உருண்டை சுழலும் வரை எல்லோரது மனதையும் சுற்றி வரும் பாடல்கள்தான் என்பதில் ஐயமில்லை. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் இருந்து சில பாடல்கள் இதோ:

சின்ன சின்ன கண்ணிலே.. (தேன் நிலவு)


கண்களின் வார்த்தைகள் புரியாதோ.. (களத்தூர் கண்ணம்மா)


மைனர் லைஃப் ரொம்ப ஜாலி.. (இல்லறமே நல்லறம்)


வாடிக்கை மறந்ததும் ஏனோ.. (கல்யாணப் பரிசு)


ஓஹோ எந்தன் பேபி.. (தேன் நிலவு)


வாராயோ வெண்ணிலாவே.. (மிஸியம்மா)


போதும் உந்தன் ஜாலமே.. (கடன் வாங்கி கல்யாணம்)


தேன் உண்ணும் வண்டு.. (அமர தீபம்)


தென்றல் உறங்கிய போதும்.. (பெற்ற பிள்ளையை விற்ற அன்னை)


துயிலாத பெண் ஒன்று கண்டேன்.. (மீண்ட சொர்க்கம்)


நிலவும் மலரும் பாடுது.. (தேன் நிலவு)


நினைக்கும்போதே ஆஹா.. (இல்லறமே நல்லறம்)


உன்னைக் கண்டு நான் வாட.. (கல்யாணப் பரிசு)


பாட்டு பாடவா.. (தேன் நிலவு)


காதலிலே தோல்வியுற்றாள்.. (கல்யாணப் பரிசு)


மனமென்னும் வானிலே.. (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)


எந்தன் கண்ணில் கலந்து.. (மல்லிகா)


துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்.. (தலை கொடுத்தான் தம்பி)


மயக்கும் மாலை பொழுதே நீ போ போ.. (குலேபகாவலி)


*******

Monday, December 20, 2010


திருவெம்பாவை

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்:


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!

(1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆர்ஏ லோர் எம்பாவாய் !!

(2)

முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏலோர் எம்பாவாய் !!

(3)

ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !!

(4)

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !!

(5)

மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்பவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய் !!

(6)

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய் !!

(7)

கோழிசிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை
கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடலோர் எம்பாவாய் !!

(8)

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியாற் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் !!

(9)

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏதுஅவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய் !!

(10)

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழிஅடியோம் உயர்ந்தோம்காண் ஆர் அழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய்எமை ஏலோர் எம்பாவாய் !!

(11)

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற் றம்பலத்தே தீஆடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேல்ஓர் எம்பாவாய் !!

(12)

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்து
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் போங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(13)

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதிதிறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் !!

(14)

ஓர்ஒருகால் எம்பெருமான் என்று என்றேம் நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர்உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(15)

முன்இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிவேல்
பொன்அம் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவுஇலா எம்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவள் நமக்கும் முன்சுரக்கும் இன்அருளே
என்னப் பொழிவாய் மழை ஏலோர் எம்பாவாய் !!

(16)

செங்கண் அவன்பால் திசைமுகன் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதா
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(17)

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார்இரவி கதிர்வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!

(18)

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய் !!

(19)

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடுஏலோர் எம்பாவாய் !!

(20)

*******

ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறை தலத்தில் பாடி அருளிய திருப்பள்ளி எழுச்சி:

போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ்க் கமலக்கண் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுஉயர் கொடியுடையாய் எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!

(1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவை யோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலை கடலே பள்ளி எழுந்தருளாயே !!

(2)

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்போடு நமக்குத்
தேவ நற் செறிகழல் தாள்இணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!

(3)

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(4)

பூதங்கள் தோறும் நின் றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்அறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய் எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(5)

பப்பற வீட்டி ருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்துறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கண் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!

(6)

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!

(7)

முந்திய முதல்நடு இறுதியும் ஆணாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்தனை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருபெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவண்டு ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே !!

(8)

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப் பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே
வண் திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயிரானாய்
எம் பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!

(9)

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்
போக்குகின் றோம்அவ மே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் திருமாலாம்
அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !!

(10)

*******

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்க இங்கே செல்லவும்.

Friday, December 17, 2010


திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்

பீடு உடையது, பெருமை உடையது மார்கழி மாதம். உலகமெங்குமே இந்த மார்கழி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு தெய்வம் சார்ந்த பண்டிகை நடந்தேறிக்கொண்டே இருக்கும். மத வேறுபாடின்றி, எல்லா மதத்திலும் மக்களை பக்தி மார்கத்தில் இட்டுச் செல்லும் மாதமாகவே இந்த மார்கழி திகழ்கிறது. மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து கோலம் போடுவதற்கும், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பதற்கும், திருக்கோயில் சென்று வழிபாடு நடத்துவதற்கும், உடல் ஆரோக்கியம் சம்பந்தமான காரணங்களை நமது முன்னோர்கள் முன் வைத்திருந்தார்கள்.

இந்த மார்கழி மாத ஆரம்பத்தில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் ஏகாதசி விரதத்தின் சிறப்பினை பக்தர்களுக்கு உணர்த்திய பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர்.


திருக்கோயில் இருப்பிடம்:
மனித வடிவில் மட்டுமல்ல, மயில் வடிவிலும் இறைவனை வழிபட்ட திருத்தலம் விளங்கும் மயிலாடுதுறையில் உள்ளது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையிலிருந்து சுமார் 260 km தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : பரிமள ரங்கநாதர் (மருவினிய மைந்தன், சுகந்தவனநாதன்)
தல இறைவி : பரிமள ரங்கா நாயகி (சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீகவல்லி)
தல தீர்த்தம் : இந்து புஷ்கரணி(சந்திர புஷ்கரணி)

திருத்தலச் சிறப்பு:
108 திவ்யதேச திருத்தலங்களுள் 22-வது திவ்ய தேசமாக விளங்குகிறது இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். சோழநாட்டுத் திவ்யதேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில். இக்கோயிலின் பழமை இங்குள்ள சிற்பங்களில் தெரிகிறது.

திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். ஸ்ரீ ரங்கநாதர் சிறப்புடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பஞ்சரங்க திருத்தலங்களுள் ஒன்றாகவும் பரிமள ரங்கநாதர் ஆலயம் உள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்)
ஸ்ரீரங்கம்
கோயிலடி என அழைக்கப்படும் ஆதிரங்கம்
கும்பகோணம்
திருஇந்தளூர்

என இவை அனைத்தும் பஞ்சரங்க திருத்தலங்கள்.


இத்திருக்கோயிலில் அருள்மிகு பரிமள ரங்கநாதரின் திருமுகத்தை சந்திர பகவானும், தாமரைப் பாதங்களை சூரிய பகவானும், தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பந்தத்தை உணர்த்தும் நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைப் பக்கத்தில் காவிரிப் பெண்ணும், கால் பக்கத்தில் கங்கைப் பெண்ணும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் ரங்கநாதரின் திருவடிகளை பூஜிக்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதத் தொடக்கம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதத்தில் ஐந்து நாட்கள் கண்ணன் புறப்பாடு, இக்கோயில் தாயாருக்கு புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடத்தில் பாதி நாட்கள் விழாக்கள் மயம்தான்.

ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக விளங்கிய திருத்தலம் இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்து வீர சயன கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேதச் சக்கர விமானம் என அழைக்கப்படுகிறது.

திருத்தல வரலாறு:
விரதங்களில் சிறப்பு வாய்ந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். அம்பரீசன் என்ற அரசன் பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் பல ஆண்டுகளாக ரங்கநாதரை மனதில் இருத்தி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தார். ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று உணவு உண்டு விரதம் முடிப்பார். பல ஆண்டுகள் ஏகாதசி விரதம் இருந்ததின் பயனாக தேவலோகப் பதவி ஒரு மனிதப் பிறவிக்குக் கிடைத்து விட்டால் தேவர்களுக்கு மரியாதை குன்றிவிடும் என கலக்கம் கொண்டு தேவர்கள் அனைவரும் சென்று துர்வாச முனிவரை சந்தித்தனர். அவரும் தேவர்களுக்கு உதவுவதாகக் கூறி அம்பரீசனின் விரதத்தை முடிக்க விடாமல் தடுக்க பூலோகம் நோக்கி வந்தார். முனிவர் பூமி வந்து சேர்வதற்குள் மன்னன் ஏகாதசி விரதம் முடித்திருந்தார். ஆனாலும் துவாதசியன்று உணவு சாப்பிட்டால்தான் விரதம் முழுமையாக முடியும் என்பது ஐதீகம். இதன் காரணாமாக துவாதசியன்று மன்னனிடம் தான் நீராடிவிட்டு வருவதாகவும், வந்தபின் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் எனவும் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றார் துர்வாச முனிவர். தான் நேரம் தாழ்த்திச் சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்பதே முனிவரது திட்டம். இதனிடையே விரதம் முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தன் அரசவை பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டு, மூன்று மடக்கு தீர்த்தத்தை குடித்தாலே விரதம் முடித்ததற்கு சமம் எனக் கூற அவ்வாறே செய்தார் அரசர். விரதத்தை இனிதே முடித்தார் அம்பரீசன்.

தான் இத்தனை திட்டமிட்டும் மன்னர் விரதத்தை நல்ல விதத்தில் முடித்து விட்டாரே என்று ஆத்திரம் கொண்ட துர்வாசர், மன்னர் மீது கோபம் கொண்டு சாபமிட எத்தனித்தார். மன்னர் பெருமாளை சரணடைந்தார். பெருமாள் மன்னரை முனிவரின் கோபத்திலிருந்து காத்து, அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு தேவலோகப் பதவியெல்லாம் வேண்டாம், பெருமாள் இத்தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் தனது தவறை எண்ணி பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார். பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம்.

மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன. சிறப்புடைய நான்கு வேதங்களையும் ராட்சதர்கள் இருவர் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்து விட்டனர். அந்த வேதங்களைக் காப்பதற்காக மீன் வடிவம் கொண்டு ராட்சதர்களை அழித்து வேதங்களை காப்பாற்றி, அவற்றை பழைய வடிவத்திற்கு கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

சந்திரன் வழிபட்ட தலம் இது. தனக்கு ஏற்பட்ட சரும பாதிப்பை போக்கிக்கொள்ள இத்தல இறைவனை வேண்டி, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட தனது பாதிப்பு நீங்கப் பெற்றார் சந்திரபகவான். இதன் காரணமாகவே சந்திர புஷ்கரணி என இத்தல தீர்த்தம் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. கோயில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.


மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன்,
அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.


வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது எத்தனை கேள்விகளை நம் மனத்துள் உண்டாக்கினாலும், தர்மத்தை நிலைநாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும், ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு.

தன்னை சீண்டுவதற்காக தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். ஒவ்வொரு வினைக்கும் செயலுக்கும், எதிர் வினை கட்டாயம் உண்டு. அவை நல்லவையோ, தீயவையோ, என்பதை உணர்த்தும் சிற்பம்.


பிரிதிவிராஜன், சம்யுக்தையை சிறைபிடிப்பது போன்றதொரு சிற்பவடிவம்.

காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம்.

மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி கண்முன்னே.


ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.

நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன்.


சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக, சீதா பிராட்டி தந்த கணையாழியை ராமரிடம் சேர்ப்பிக்கும் அன்பின் விசுவாசி அனுமன்.

உலகை காப்பவன் கண்ணன் என்றாலும், அவனைக் காப்பவள் தாயார் யசோதை தானே. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பல ஆயிரம் மடங்கு பெரிது என்பதை உணர்த்தும் தாய் மகன் உறவு, கண்ணன் யசோதை உறவு. அவர்கள் பாசம் சிற்ப வடிவில்.


தன் புல்லாங்குழல் இசையால் ஆறறிவு மனிதர்களை மட்டுமன்றி, ஐந்தறிவு ஜீவன்களையும் தன்வசப் படுத்திய வேணுகோபாலனின் இன்னிசை நமக்குக் கேட்கிறது அந்த சிற்பத்தை பார்க்கும்போது.

குழந்தை வடிவில் கண்ணன் ஆலிலை மேலே.


இது போன்ற கோயில் தரிசனத்தில், சிற்பங்களை காணும்போது கற்பனை வளமும், ஸ்லோகங்களை சொல்லி பாடும் போது மொழி வளமும், கடவுளைக் காணும்போது மன வளமும், என திருக்கோயில் செல்வதற்கு ஆன்மிகம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கியது திருக்கோயில் தரிசனம்.

Thursday, December 16, 2010


ஆண்டாள் திருப்பாவை

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை:
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆண்டாள், பெருமாளை நினைத்து நாவிற்கினிய, மனதிற்கினிய தேன் தமிழில் இயற்றிய திருப்பாவை படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையான பாடல்களை உடையது. பெரியாழ்வார் பெருமானின் மகளே ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரழகுப் பெருமாளுடன் வீற்றிருக்கும் ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்தகண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழ்ப் படிந்தேலோரெம்பாவாய் !!

(1)

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யு மாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய் !!

(2)

ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் !!

(3)

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழவுலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(4)

மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக்குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் !!

(5)

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(6)

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழலாய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத்தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோரெம்பாவாய் !!

(7)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்தருளேலோ ரெம்பாவாய் !!

(8)

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய் !!

(9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்றலனந்தலுடையாய் அருங்கலமே
தோற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய் !!

(10)

கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமாரெல்லாரும் வந்து நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய் !!

(11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீவாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்னப்பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய் !!

(12)

புள்ளின்வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீநன்னாளால்
கள்ளம்தவிர்த்து கலந்தேலோரெம்பாவாய் !!

(13)

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல்தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் !!

(14)

எல்லே இளங்கிளியே இன்னமுறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைகொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய் !!

(15)

நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னமுன்னம் மாற்றாதேயம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய் !!

(16)

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச்செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் !!

(17)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும்குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய் !!

(19)

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் !!

(20)

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் !!

(21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்க மிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய் !!

(22)

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தருளேலோரெம்பாவாய் !!

(23)

அன்றிவ் வுலகமளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்றுகுடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைக்கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய் !!

(24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(25)

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்னவண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய் !!

(26)

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனையப் பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(27)

கறவைகள் பின்சென்று கானம்சேர்த்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீதாராய் பரையேலோரெம்பாவாய் !!

(28)

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் !!

(29)

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய் !!

(30)

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம் !!

*******

ஆண்டாள் திருப்பாவை (நித்யஸ்ரீ மகாதேவன்)

(1 - 4)


(5 - 8)


(9 - 13)


(14 - 18)


(19 - 22)


(23 - 26)


(27 - 30)


*******

Monday, December 13, 2010


நாடோடிகள்


புதிய ஊர்
புத்தம் புது மனிதர்கள்..
நாட்கள் சென்றபின்
தயக்கம் விலகி
அண்டை அயலாரிடம்
சகஜமாய் பழகி..
அண்ணன் அக்கா என்று
அனைவரும் மாற..

கறிகாய் வண்டிக்காரர்
வேலை செய்யும் பாட்டி
வீதி நாய் முதல்
காகம் வரை..
அவ்வூர் கோயில்
அங்கு வரும் தாத்தா..

போட்டுக் கொள்ளும் சட்டை
பொருத்தமாய் அமைந்த நேரம்..
அன்னியம் விலகி
அருகாமை வந்து
மகனின் ஆசிரியை
எனக்குத் தோழியாக..
பாதை சொல்லும் அளவிற்கு
ஊர் பிடித்துப் பழகி..

இதுவும் என் ஊர்தான்
என நினைத்த வேளையில்......
மாறிவிடு என்றது
மாற்றல் உத்தரவு...!!

*******

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் இக்கவிதை வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Saturday, December 11, 2010


தேனிமலை முருகன் கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில்.


தமிழகத்தின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை. பொக்கிஷங்களாகக் கருதப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒன்று தான் நம்மிடையே வாழ்ந்த, இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்ற சித்தர்கள், அவர்களது வாழ்க்கை முறைகள். சித்தர்களை நம்மால் காண முடியாவிட்டாலும் அவர்களது இருப்பிடங்களாக திகழ்கின்ற மலைகள் நம் கண்முன்னேயே இருந்து நமக்கு பல விதங்களில் நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றன.

பதினெண் சித்தர் வணக்கம்:
நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
கந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி
சிந்தியழகண்ணரகப்பையர் பாம்பாட்டித்
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தித்தே அணியாகச் சேர்ந்து வாழ்வோம்!!


திருத்தலம் அமைவிடம்:
திருச்சியில் இருந்து சுமார் 80 km தொலைவில் அமைந்துள்ளது தேனிமலை முருகன் கோயில். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, அங்கிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் காரையூர் சாலையில் அமைந்துள்ளது தேனிமலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை சென்றும் தேனிமலை செல்லலாம்.

செந்தமிழ் கடவுள் ஆறுமுகன் வேண்டி விரும்பி அருள்பாலிக்கும் மலைத் தலங்களில் வெகு முக்கியமான திருத்தலம் தேனிமலை. பொதுவாக தமிழகத்தில், பாரதத்தில் மலைகளை கடவுளரின் வடிவமாகவே நினைத்து வழிபடுவது நமது மரபு, பழக்கம். திருவண்ணாமலை, திருப்பதி என்று மலையே தெய்வமாக வழிபடுகிறோம். மலைகள் பல்வேறு தெய்வீக சூட்சுமங்களையும், தீர்க்கமுடியாத பல நோய்களை தீர்க்கும் சக்தி படைத்த மூலிகைகளையும் உள்ளடக்கியவைகளாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே சித்தர்கள் விரும்பி வாழும் இடங்களாக மலைகள் உள்ளன. இப்படி ஒவ்வொரு மலைத் தலத்திற்கும், சிறு பாறைகளுக்கும், சிறு குன்றுகளுக்கும், அவை தோன்றியதற்கான தெய்வீகக் காரணங்கள் பல உண்டு.


தேனிமலையின் முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுபவை இங்குள்ள பாறைகளே. அக்காலத்தில் வாழ்ந்த யோகிகள் பலர் தம் தவ பலனால் பெரும் பாறைகளாக உருமாறியதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தேவயானை சமேத ஸ்ரீ முத்துக்குமாரசுவாமியாக வீற்றிருக்கும் தலம் தேனிமலை. சித்தர்கள் நாம் அறியாத வடிவில் தவம் புரியும் அழகிய சிறிய மலைத்தலம். கந்தனின் சக்தி அளவற்று பெருக்கெடுத்து ஓடும் தலம். ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் ஜீவாலயம் அமைந்த அதி அற்புத திருத்தலம்.


இயற்கை சுனைத் தீர்த்தம் தவழ்கின்ற இனிய தலம். பாறையிலிருந்து நீர் கசிந்து பெருக்கோடும் தலம். கங்கை, காவிரி, துங்கபத்ரா போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தேனிமலை தீர்த்தம் நமக்குத் தருகிறது.


இந்த தேனிமலைப் பாறைகள் பவள நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த தேனிமலையில், பலவிதமான பாறைகள் அமைந்துள்ளன.

கொப்புப் பாறை
குடகுப் பாறை
சிரிகிரிப் பாறை
அருணோதயப் பாறை
தேவச் சந்திரப் பாறை

என்ற பெயர்களை உடைய அற்புத மூலிகை சக்திகள் நிறைந்த பாறைகள் காணப்படுகின்றன.

பச்சிலை சாறு பதியும் பாறை தேவ
எச்சிலில் தீரும் சதிகால் நோய்கள்
உச்சிலைப் பேறு விதியும் மாறும்
அச்சிலைதானே ஆறுமுகத் தேனீ!!

என்ற பாடல் மூலமாக தேனிமலை முருகப் பெருமானின் சிறப்பினையும், இங்குள்ள பாறைகளின் சிறப்பினையும் அறிய முடிகிறது.இந்த தேனிமலையில் அமைந்துள்ள ஒவ்வொரு பாறைக்கும் ஆறு விதமான குண நலன்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கொப்புப் பாறை குடம் போன்ற அமைப்புடனும், காற்று, வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து காக்கும் வண்ணம் நிழல் தரும் வகையிலும், உட்கார்ந்து இளைப்பாற நாற்காலி போன்ற அமைப்புடனும், மூலிகைப் நீர் சுரக்கும் பாறையாகவும், எனப் பல சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது. இந்தப் பாறையின் உள்ளே நீரோட்டம் உள்ளதாக சொல்கிறார்கள். நமது உடம்பில் காணப்படும் நரம்புகள் போல இந்தப் பாறையில் பல்வேறு கோடுகள் நரம்புகளைப் போல காணப்படுகின்றன. இவ்வாறாக இந்தப் பாறையில் இருந்து வரும் நீருக்கு பிருகு நீர் எனப் பெயர் உண்டு.


இந்தப் பிருகு நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தப் பாறையில் உள்ள மூலிகை, தண்ணீர், மணல், காற்று, அக்னி, ஒளி என எல்லாவற்றையும் கலந்த தண்ணீராக இது ஓடி வருவதால் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாறையில் வாழும் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. ஏனென்றால் பிருகுத் தண்ணீரை குடித்து வாழும் தேனீக்கள் இவை என்பதால். இந்தத் தேனிமலையில் பூசநாங்கண்ணி என்றொரு மூலிகை உள்ளது. இந்த மூலிகைச் செடியில் பட்டுத் தெளிக்கும் ஒரு துளி தண்ணீரில் கூட மருத்துவ குணங்கள் உள்ளன. அத்தனை சக்தி வாய்ந்த மூலிகை இது.

இங்குள்ள சிரிகிரி பாறை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை பூமியில் வாழும் ஜீவராசிகள் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு மாற்றிக் கொடுக்கும் தன்மை உடைய பாறை. முருகனைக் காண அந்த உச்சி வேளையில் வெறும் காலிலேயே, அந்த கருங்கற் பாறைகளில் ஏறிச் செல்ல எங்களால் முடிந்தது எவ்வாறு என்பது இப்போது புரிகிறது. இத்தகைய சிரிகிரிப் பாறைகளே இமய மலை அடிவாரத்தில் கிடைக்கப்பெறும் சாளக்ராமக் கற்களாக கண்டகி நதிப் படுகையில் கிடைப்பதாகச் சொல்லப் படுகிறது. இது போன்ற சிரிகிரிப் பாறை தரிசனங்களை தேனிமலை தவிர, திருவண்ணாமலை, இமயமலை, பர்வதமலை போன்ற மலைகளிலும் காண முடியும். மேலும், திருக்கழுக்குன்றம், பழனி, சங்கர மலை, திருப்போரூர் பிரணவ மலையிலும் காணலாம்.

திருவண்ணாமலையைப் போலவே தேனிமலையினைச் சுற்றிலும் பல்வேறு விதமான மலைகளின் தரிசனங்களைக் காணலாம். இங்குள்ள அருணோதயப் பாறையில் மலரும் ஒரு விதமான மூலிகையைக் கொண்டு கண் நோய்களை குணப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையை கிரிவலம் வருவது போல இந்த மலையையும் பலர் சுற்றிவந்து நல்ல பலன்களைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாத கார்த்திகை தினம், விசாகம், பரணி, அஸ்வினி போன்ற தினங்களிலும், பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, தினமும் வருகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் என, கிரிவலம் வருவதற்கான நேரங்களில், நாட்களில் சுற்றிவர அளவிடற்கரிய நலன்களைப் பெறமுடியும் என்பது ஐதீகம்.


இந்த மலையை சுற்றிவரும் கிரிவலப் பாதையின் தூரம் ஏறக்குறைய 2 km. இத்திருக்கோயில் முருகனுடைய சக்தி நம்மை கவசம் போல் காத்திடும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் வெளியில் சென்று விட்டு எந்த வித இடையூறும் இல்லாமல் வீடு திரும்ப கந்தனின் மந்திரத்தை 18 முறை சொல்ல வேண்டும் என இக்கோயிலில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் சொன்ன மந்திரம் இதோ:
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!!
சுற்றி வந்து எம்மைக் காக்கும்
சுப்பிரமணிய வேல் வேல்!!!


தேனிமலை ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் இங்கு வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர் பெருமான். இந்தத் தேனிமலையில் காலணிகள் இல்லாமல் மேலே ஏறிச் செல்கையில் இங்குள்ள பாறைகளில் உட்புறம் படர்ந்து காணப்படும் தேவ நீரோட்டம் பாதங்களின் ரேகைகள் வழியாக நம் உடலில் சென்று சேர்கின்றன.

பூமியின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள சூட்சுமங்களை,
தீர்த்தங்கள் (நீர்)
பாறைகள் (நிலம்)
வில்வ மரம், அரச மரம், ஆல மரம் போன்ற வற்றில் உராய்ந்து வரும் (காற்று)
சூரியன் சந்திரன் நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சம் (நெருப்பு)
மலைப் பாறைகளின் உச்சிப் பகுதி (ஆகாயம்)

என பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைத்து ஜீவ ராசிகளுக்குத் தரும் உன்னதப் பணிகளையே சித்தர்கள் செய்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இது போன்ற திருக்கோயில்களுக்குச் செல்லும் போது இது போன்ற அனுபவம் நமக்குக் கிடைக்கும்.


தேனிமலையை கிரிவலம் வந்து மலையேறி ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு பின்னர், ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகளுடைய ஜீவ சமாதியில் அடிப் பிரதட்சணம் செய்து, அவரது ஆசிகளை மனதாரப் பெற வேண்டும். பின்னர் அன்னதானம் செய்வது சிறப்பு. ஒரே நேரத்தில் தெய்வ தரிசனப் புண்ணியம், அன்னதானம் செய்த புண்ணியம் என நம் மனம் நிறையும். அன்னத்தால் பலரது வயிறும் நிறையும்.

*******

முருகனை நினை மனமே... (இளையராஜா)


Thursday, December 9, 2010


நீயாய் இரு (சிறுகதை)

மதியம் 1 மணி. ரம்யா அவசரம் அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தாள். எதைப் பார்த்தாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு. அடிக்கடி வரும் கழுத்து வலி, அதற்குப் போட்டுக் கொள்ளும் மாத்திரை, மிகவும் சோர்வாக இருந்தது ரம்யாவிற்கு. தனியாக புலம்பிக் கொண்டே ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியமானால் பக்கத்து வீட்டுக் குழந்தை, அத்தை என்று கொஞ்சிக்கொண்டு இவள் வீட்டிற்கு வந்து விடுவது வாடிக்கை. ரம்யா ஊட்டிவிட்டால் தான் ஒழுங்காய் சாப்பிடும். பாப்பாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டே தன் சமையல் வேலையை முடித்தாள் ரம்யா. குட்டிப்பாப்பாவும் அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு வேகமாக சென்று ஃபோனை எடுத்தாள். மறுமுனையில் அவளது கணவன் ரவி.ஒரு பெரிய கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருப்பவர்.

"என்ன சாப்பாடு ரெடியா வரலாமா?"
"ரெடியா இருக்குங்க."
"அப்புறம் இன்னக்கி சாயங்காலம் நம்ம வீட்டுக்கு, என் கூட வேலை செய்யற லேடி ஒருத்தவங்களை அழைச்சுட்டு வர்றேன், டெல்லிலேர்ந்து ட்ரெயினிங்காக எங்க ஆபீசுக்கு வந்துருக்காங்க. அவங்க வெரி நைஸ் லேடி. நல்ல கிராண்டா என்ன டிபன் பண்றதுன்னு இப்பவே யோசனை பண்ணி ரெடி பண்ணி வச்சுக்க.'' வார்த்தைகளில் நெய் தடவிய ஆர்டர் போட்டான் ரவி.
"ஆமாங்க, இந்த ஒலகத்துல என்னைத் தவிர மத்த லேடீஸ் எல்லாருமே ஒங்களுக்கு நைஸ் தான்" என்றாள் ரம்யா சற்று கோபமாக. மறு முனையில் ஃபோன் கட்டாகி பல நொடிகள் ஆகியிருந்தது.


ரவி மிகவும் பரோபகாரி. விருந்தோம்பலில் மன்னன். ரம்யாவும் வீட்டிற்கு வருபவர்களிடம் அன்பாக, ஆசையாக நடந்து கொள்பவள் தான். வாராவாரம் வெளியூர்களில் இருந்து தன் கம்பெனி வேலையாக வரும் நண்பர்களை ஒரு வேளை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்து விட வேண்டும் ரவிக்கு. ரம்யாவும் தன் கணவன் விருப்பம் போல் வந்தவர்களுக்கு வித விதமாக சாப்பாடு செய்து போடுவாள். வரும் நண்பர்களில் பலருக்கு ரம்யாவின் சமையலும் விருந்தோம்பலும் மிகவும் பிடித்துப்போய் விடும். ஒரு சிலர் மட்டும் சாப்பிட்டு விட்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, காபியில் உப்பு பத்தவில்லை என்பது போல் வேண்டுமென்றே தனது மேதாவித் தனத்தை காட்டுவார்கள். அந்த ஒரு சிலர் மட்டுமே ரம்யாவின் நினைவுகளில் இப்பொழுது வந்தனர். ஏன்தான் இவர்களெல்லாம் வீட்டிற்கு வருகிறார்கள் என்றிருந்தது ரம்யாவிற்கு. வீட்டு வேலைப் பளுவும், உடல் சோர்வும் சேர்ந்து கொண்டு அவளது இயல்புக்கு நேர்மாறாக சிந்திக்க வைத்தது.

*******

ரவி மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆபீஸ் சென்றதும் பரபரவென்று எல்லாவற்றையும் ஒண்ட ஒதுங்க வைத்து வீட்டை பளிச்சென்று மாற்றினாள். அதற்குள் ஸ்கூலுக்கு சென்ற செல்ல மகன் கோகுல் வீடு வந்தான்.

"தம்பி, யாரோ கெஸ்ட் சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வராங்களாம். ஒழுங்கா இப்பவே ஹோம் ஒர்க்லாம் முடிச்சுடு. அவங்க வந்துருக்கப்ப ஒண்ணுல ரெண்டு போகுமா, நாலுல பத்தொம்போது போகுமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்னா கோவம் தலைக்கேரிடும் எனக்கு."

"ஏம்மா கோவத்த தலைக்கு ஏத்த விடற, கால்ல போட்டு மிதிச்சுடு", புத்தி சொன்னான் ஏழாவது அறிவுடன் பிறந்த சீமந்த புத்திரன்.

மறுபடியும் ஃபோன், அதே கலிகாலக் கர்ணன்தான் ஃபோனில்.
"டிபன் சீக்கிரம் ரெடி பண்ணு."
"சரிங்க."
"ஒன்னு தெரியுமா, அந்த அம்மா டெல்லி, அவங்க வீட்டுக்காரரு தமிழ்."
"இதச் சொல்லத்தான் ஃபோன் பண்ணிங்களா?"
"அதில்ல, அவங்க நார்த்லையே இருக்கறதுனால இங்க கெடைக்கிற மசாலாவெல்லாம் அந்த அம்மாவோட வீட்டுக்காரர் வாங்கிட்டு வரச்சொன்னாராம். நான் அவங்களை கூட்டிகிட்டு கடைக்குபோய் எல்லாம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள, நீ சாப்பாடெல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்", பதில் எதிர்பாராமல் ஃபோன் கட்டானது.

"இந்த மாதர் சங்கத்துல பொதுவா பெண்களைத்தான் தலைவியா செலக்ட் பண்ணுவாங்க. பேசாம இவர எல்லா மாதர்களுக்கும் தலைவரா தேர்ந்தெடுத்துட்டா உலக பெண்கள் எல்லாம் சுபிட்சமா இருப்பாங்க" என்று மனதில் நினைத்துக் கொண்டே ஃபோனை வைத்தாள் ரம்யா.

மணி 4 ஆனது. அரைத்து வைத்திருந்த இட்லி மாவும் சரியாகிவிட்டது. என்ன டிபன் செய்வதென்று யோசித்தாள் ரம்யா. வட நாட்டிலிருந்து வந்திருக்கும் பெண்ணிற்கு காரசாரமாக அடை செஞ்சு கொடுப்போம் என்று முடிவு செய்து அரிசி பருப்பையெல்லாம் ஊற வைத்தாள்.

மகன் கோகுலுக்கு பாடம் சொல்லிக் கொண்டே ஊறிய அரிசி பருப்பை அரைத்து தேங்காய், வெங்காயம் கலந்து ஃபிரிட்ஜில் தூக்கி வைத்தாள். கோகுலுக்கு புது டிரஸ் மாற்றிவிட்டு, தானும் உடை மாற்றி, விருந்தினர் வருகைக்காக இருவரும் காத்திருந்தார்கள்.

*******

சரியாக 7 மணிக்கு கணவன் ரவியும், பெண் தோழியும் வீட்டிற்கு வந்தார்கள். "இவங்கதான் மிஸ்ஸஸ் மேதா ஸ்ரீவத்சன்." அறிமுகம் செய்து வைத்தான் ரவி. கை கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றாள் ரம்யா.
"நமஸ்தே அண்ணி" என்றாள் மேதா. அண்ணி என்று மேதா தன்னை அழைத்தது ரம்யாவை நெகிழச் செய்தது. கோகுலையும் கொஞ்சினாள். ரம்யாவும், மேதாவும் ஹிந்தியில் உரையாடிக் கொண்டார்கள். இருவரும் ரொம்ப நாள் பழகிய தோழிகள் போல பேசிக் கொண்டது ரவிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

"உக்காருங்க, தண்ணி குடிக்கிறீங்களா மேதா?"
"நானே எடுத்துக்கறேன் அண்ணி, நீங்க இங்க என்கூட வந்து உக்காருங்க நாம பேசிட்டு இருக்கலாம்."
"இரும்மா உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வந்து உங்களுடன் பேசிட்டு இருக்கேன்."
"நானும் வரேண்ணி கிச்சனுக்கு."
கூடவே வந்தாள். தன்னுடன் இத்தனை சகஜமாக மேதா பழகுவாள் என்று
ரம்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன் கையால் செய்திருந்த பலகாரம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்கு சாப்பிடக் கொடுத்தாள்.
"ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி. எனக்கு சமைக்கத் தெரியாது. என் வீட்டில் எங்க வீட்டுக்காரர் தான் சமைப்பார். நான் டெல்லி பொண்ணு. என் கணவர் தமிழ்நாடு. படிக்கிற காலத்துல ரெண்டு பேருக்கும் புடிச்சு போயி வீட்டுல பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம். என் கணவருக்கு நல்ல காரசாரமா சாப்பிட ரொம்ப புடிக்கும் அண்ணி. அதனாலதான் சாரோட, கடைக்குப் போய் சவுத் இந்தியன் டேஸ்ட் மிளகாய் தூள், சீரகப் பொடி, இன்னும் நெறையா வாங்கிட்டு வந்தோம். இந்த பொடி எல்லாத்தையும் நானே செய்யனும்னு ஆச தான். என்ன பண்றது, செய்யத் தெரியாதே" என்று வாங்கிய அனைத்தையும் காண்பித்தாள்.

"இப்ப உனக்கு பொடி எப்படி செய்யனும்னு தான தெரியனும்? நானே கத்துத்தர்றேன். அப்படியே சில பொடிகளையும் செஞ்சு தர்றேன்".
"ஐயோ வேண்டாம் அண்ணி, உங்களுக்கு ஏன் சிரமம்?"
"இதுல எனக்கு ஒன்னும் சிரமம் இல்லம்மா. இது எனக்கு கொஞ்ச நேரத்து வேலை" என்று சொல்லிவிட்டு மேதாவிற்கு கற்றுக் கொடுத்துகொண்டே எல்லா பொடிகளையும் வறுத்து அரைத்து டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

தன் அம்மாவுடன் கிச்சனில் அரட்டை அடித்த நாட்களின் நினைவுகள் மேதாவிற்கு வர, கண்களில் நீர் கோர்த்து நின்றது.

"உங்க ஊருக்கு எடுத்துட்டு போய் நல்லா சாப்பிடுங்க." என்றாள் ரம்யா மன நிறைவுடன்.

"அண்ணி, என் கணவர் இப்படி நீங்க செய்து கொடுத்ததையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவார்."
அவர் கூட நீங்க ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசணும் என்றதும் சற்று தயங்கினாள் ரம்யா. பரவாயில்லை அண்ணி என்று தன் கணவருடன் ரம்யாவைப் பேச வைத்தாள்.

மணியாகிவிட்டது, அப்புறம் விமானம் கிளம்பும் நேரம் வந்துவிடும். மேதாவிற்கு சாப்பாடு செய்து கொடு என்று ரவி சொல்ல, தோசைக் கல்லைப் போட்டு நன்றாக மொறு மொறுவென்று நிறைய நெய் ஊற்றி மூவருக்கும் அடை சுட்டுப்போட்டாள் ரம்யா. ரொம்ப நல்லாருக்கு அண்ணி என்று தண்ணீர் குடித்துக் கொண்டே காரமான அடையை ஒரு வெட்டு வெட்டினாள் மேதா.அவள் ஆசையாக சாப்பிடுவதைப் பார்த்ததுமே ரம்யாவிற்கு வயிறு நிரம்பியது. மேதா கேட்ட இன்னொரு காபியைக் கொடுத்துவிட்டு, ஒரு கட்டைப்பையில் அவள் ஊருக்கு எடுத்துப் போக வேண்டிய எல்லா சாமான்களையும் கட்டி வைத்தார்கள் கணவனும் மனைவியும். கோகுலும் உதவி செய்தான்.

"சரி அண்ணி நான் கிளம்பறேன். எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டு போறது போல இருக்கு எனக்கு. கெளம்பவே மனசில்ல. நீங்களும் டெல்லி வந்தால் எங்க வீட்டுல வந்து தங்குங்க அண்ணி" என்றாள் கையைப் பிடித்துக் கொண்டே.
"கட்டாயம் நாங்க வர்றோம். நீ உன் கணவரோட இங்க வந்து ஒரு வாரம் தங்கிட்டு போ" என்றாள் ரம்யா.

"அண்ணி நீங்களும் கோகுலும் கூட ஏர்போர்ட் வரைக்கும் என்கூட வாங்களேன்" என்றாள் மேதா. சரியென்று எல்லோரும் கிளம்பினார்கள். ஃபிரிட்ஜில் இருந்து பூ எடுத்து ஒரு கவரில் போட்டுக் கொண்டாள் ரம்யா. காரின் பின் சீட்டில் மேதாவும், ரம்யாவும் அமர்ந்து கொண்டனர். ஏர்போர்ட் செல்லும் வரை ரம்யாவின் கையை விடவேயில்லை மேதா. ஏர்போர்ட்டும் வந்தது. காரைவிட்டு இறங்கி எல்லா பைகளையும் எடுத்து ட்ராலியில் வைத்து ரம்யாவே தள்ளிக் கொண்டு சென்றாள்.

இரு பெண்களின் மனமும் ஒரே மன நிலையில் இருந்தது. சந்தித்த கொஞ்ச நேரத்திலேயே ஏதோ பல காலம் பழகியது போல, நீண்டநாள் பிரிந்த நண்பர்கள் பிரிவதுபோல இருந்தது இருவருக்கும். வாழ்க்கையில் நண்பர்கள் பிரிவதே மிகவும் கஷ்டமான விஷயம். வெகுநாள் கழித்து பார்த்துவிட்டு மீண்டும் பிரிவது அதைவிட கஷ்டமான விஷயம். இந்த உணர்வுகளெல்லாம் சந்தித்து சிறிது நேரமே ஆகிய இருவருக்கும் ஏற்பட்டது மிகவும் விநோதமாக இருந்தது. உலகில் விநோதங்களுக்கு என்றுமே குறைவில்லை.

டிக்கட் செக் செய்யும் இடம் வரை சென்றதும், "சரி அண்ணி நான் போய்ட்டு வரேன்" என்றாள் மேதா. இருவர் கண்ணிலும் கண்ணீர் வெளியே வர காத்திருந்தது. அண்ணா போய்வர்றேன். கோகுல் குட்டி பாய் என்றாள். உடன் கூட எடுத்து வந்த பூவை மேதா தலையில் ஆசையுடன் வைத்து விட்டாள் ரம்யா. மேதா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அனைவரின் முன்னிலையிலும் ரம்யாவை கட்டி அணைத்துக் கொண்டாள். இருவரது அன்பின் ஆழம் அவர்களுக்குள் மௌன பாஷையிலேயே பேசிக் கொண்டது. ட்ராலியை தள்ளிக் கொண்டே இவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை கை அசைத்துக் கொண்டே சென்றாள் மேதா. ஊருக்கு போய் ஃபோன் பண்ணு என்று ஜாடையிலேயே காண்பித்தாள் ரம்யா.

திரும்ப வந்து காரில் ஏறி உட்கார்ந்தவளின் மனம் முழுக்க பாரமாக இருந்தது. "சாயங்காலம் எத்தனை அலுத்துக் கொண்டே வேலைகள் செய்தோம். நம்மோட இயல்பிலிருந்து மாறி கொஞ்ச நேரம் சலித்துக் கொண்டோமே. என்னோட கஷ்டத்த மறைச்சிக்கிட்டு அந்தப் பொண்ணுகிட்ட ஆசையா நடந்துகிட்டதுனால எப்படி ஒரு உன்னதமான ஒரு சொந்தம் நமக்குக் கிடைச்சுது" என்று எண்ணிக் கொண்டே வந்த ரம்யா, உடல் சோர்வை, மனசோட தெம்பு குறைச்சிடுச்சு. இத்தனைக்கும் காரணமான கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் ரம்யா.

இனி நாம நம்ம இயல்புலேர்ந்து மாறாம எப்போதும் போல இருக்கணும் என்று எண்ணிக்கொண்ட ரம்யா, புது தெம்புடன் காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

*******

இச்சிறுகதை இம்மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாத இதழைப் படிக்க இங்கே செல்லவும்.


ஒவ்வொரு மாதமும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இம்மாத இதழில் எனது சிறுகதையையும் கவிதையையும் வெளியிட்டு எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். என்னை ஊக்குவித்து, எழுதத் தூண்டி, எனது படைப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவர காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கு மிக்க நன்றி. லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

*******

Sunday, December 5, 2010


கதம்ப முறுக்கு

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு : 1 கப்
கோதுமை மாவு : 1 கப்
மைதா மாவு : 1 கப்
சோள மாவு : 1 கப்
பொட்டுக் கடலை மாவு : 1/2 கப்
மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
நெய் : 1/2 குழி கரண்டி
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
எண்ணெய் : பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயப் பொடி, உப்பு, நெய், நல்லெண்ணெய் என இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும். அதன்பின் தண்ணீர் கலந்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

எண்ணெய் சூடாவதற்கு முன்னதாகவே, தயாராக உள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு பின்னர், உருட்டிய மாவை உள்ளங்கையில் வைத்து நீள வாக்கில் உருட்டி இரண்டு முனைகளையும் ஒட்டி ஒரு வளையம் போல செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொறியும் சத்தம் அடங்கும் வரை அடுப்பில் வைத்து எடுத்து விட்டால், மொறு மொறு கதம்ப முறுக்கு தயார்.


இது எண்ணெய் பலகாரமாக இருந்தால் கூட, எல்லா மாவும் கலந்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது. இந்த மழை காலத்திற்கு அந்தி மாலை நேரத்தில் செய்து கொடுக்க பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கை பார்ப்பார்கள் மொறு மொறு முறுக்கை.

Thursday, December 2, 2010


பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)

பயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்லும் உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி, நமது வேலை நிமித்தமான வெளியூர் பயணமாக இருந்தாலும் சரி, பயணம் என்கிற விஷயம் சுவாரஸ்யம் மிகுந்த ஒன்று. நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய முகங்களைத் தவிர, பல ஊர்களைத் தாண்டிச் செல்லும் நெடுந்தூரப் பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பயணத்தில் ஏற்படும் புதிய நட்பு, சில நேரத்தில் வாழ்நாள் முழுக்க தொடரும் நட்பாகக் கூட அமைந்து விடுகிறது. பேருந்தில் ஏறியதும், யாரோ முகம் தெரியாத புதிய நபர் நமக்கு உட்கார இடம் தருவார். உட்கார இடம் கிடைக்கா விட்டாலும் நமது பையின் பாரத்தை யாரோ ஒருவர் மடியில் வாங்கிக் கொள்வார். இந்த இடத்தில் எல்லா மனிதரிடத்திலும் இருக்கும் சின்னச் சின்ன மனிதாபிமானம் எட்டிப் பார்க்கும். பேருந்தை விட்டு இறங்கி நாம் செல்லும் இடத்திற்கு வழி கேட்கும் வேளையில் தானே முன்வந்து வழி சொல்லும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.

சாதாரண பயணத்திற்கே இப்படி என்றால் நம் சொந்த மண்ணை நோக்கிச் செல்லும் பயணம் என்றால் குதூகலத்திற்கு அளவே இல்லைதானே. மழையில் பயணம் அதை விட சுகானுபவம். ஜெயச்சந்திரன் ஒரு பாடலில் பாடியது போல "மழைக் காலமும் பனிக் காலமும் சுகமானது". சூரியனைப் பார்த்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது பெய்யும் மழை பலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு மிகுந்த சிரமத்தையும் கொடுத்துள்ளது. வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தானே. ஒருவருக்கு நல்லதாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்கு கஷ்டத்தைத் தருவது அன்றாடம் நிகழ்வது.

இது போன்றதொரு மழைக் காலத்தில் தொடங்கியது எங்கள் பயணம் கும்பகோணத்தை நோக்கி. திருச்சியிலிருந்து, தஞ்சை வழியாக கும்பகோணம், புகை வண்டிப் பயணம். நகர நெரிசல்களில் இருந்து விடுபட்டு தூய காற்றினை சுவாசித்தபடியே, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே தொடர்ந்தது உல்லாசப் பயணம். வெயில் காலத்திலேயே இவ்வூர் வயல்களின் வனப்பு கண்ணைப் பறிக்கும். இப்போதோ மழையில் நனைந்த வயல்களின் பச்சை வண்ணமோ ஜொலிக்கிறது!!! இயற்கை அழகை விஞ்சியது உலகில் வேறெதுவும் இல்லை.


இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல சோழ வளநாடு. கலை அழகிலும் விஞ்சி நிற்கும் பகுதிதான். சோழர்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உள்ளார்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது மட்டுமல்ல, இது போன்ற பயணங்களின் போதும் நமக்குத் தெரிய வருகிறது. இசை, நாட்டியம், இலக்கியம் தவிர சிற்பக் கலையிலும் மேலோங்கி திகழ்ந்துள்ளனர் என்பது இப்பகுதி கோயில்களைக் காணும்போது நிரூபணமாகிறது. மிகவும் வலிமை வாய்ந்த பேரரசர்களாக விளங்கிய சோழ மன்னர்கள் தங்களது ஆட்சிப் பகுதிகளை கடல் தாண்டியும் விரிவுபடுத்தி இருந்திருக்கிறார்கள்.

சோழர்களது சிற்பக் கலையின் உன்னதம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக, முதலாம் இராஜராஜ சோழனால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், இராஜேந்திர சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம், இரண்டாம் இராஜராஜ சோழனால் 12- ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், என அடுக்கிக்கொண்டே போகலாம் சோழர்கள் சிற்பக் கலையின் மேல் கொண்டிருந்த தீராத காதலை.

இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த சோழநாட்டின் முக்கிய பகுதி கும்பகோணம். குடந்தை, குடமூக்கு, திருக்குடந்தை, பாஸ்கரக்ஷேத்திரம் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆன்மீகத் தலம் இந்த கும்பகோணம். கோயில்களையும், குளங்களையும் அதிகம் கொண்ட ஊர் கும்பகோணம். காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தை சுற்றியும், ஊருக்குள்ளேயும் சுமார் 180 கோயில்களுக்கு மேல் உள்ளதாகச் சொல்கிறார்கள். கும்பகோணம் வெற்றிலை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ள திருபுவனம் பட்டிற்கு பெயர் பெற்ற ஊராகத் திகழ்கிறது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயில், தென்னிந்தியாவிலேயே பித்தளை குத்துவிளக்குகள், பூஜை சாமான்கள், தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. நவக்ரஹ ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்யதேசங்கள், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை என பல்வேறு முக்கியமான ஆன்மீகத் தலங்கள் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. இங்குள்ள அரசு கல்லூரி தென்னிந்தியாவின் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. கணித மேதை ராமானுஜம் இந்தக் கல்லூரியில் பயின்றவர்தான்.

கும்பகோணம் என்றால் காட்டாயம் நம் நினைவில் வந்து நிற்பது மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம், அந்த மகாமகக் குளத்தில் நீராடுவது, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, மகாநதி, நர்மதா, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடிய புண்ணியம் கிட்டும். இந்த கும்பகோணம் நகரம் புராண காலத்தில் இருந்து, பல்வேறு காவியங்களில் இடம்பெற்றுள்ளது. இது போன்றதொரு அமைதியும், அதே நேரத்தில் சகல வசதிகளும், அதிக செலவும் இல்லாத, இயற்கை எழில் கொஞ்சும் கும்பகோணத்தில் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியையாவது வாழ மனம் ஏங்குகிறது.

இப்படி கும்பகோணம் பல்வேறு ஆன்மீகத் தலங்களின் குடியிருப்பாக இருந்தாலும், அவற்றுள் சிற்பக் கலையின் மகோன்னதமாக ஒரு கோயில் திகழ்கிறது. அதுவே கும்பகோணத்தில் இருந்து 3 km தூரத்தில் அருள்மிகு ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள அழகிய கிராமம் தாராசுரம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சிற்றுந்தை(மினி பஸ்) பிடித்து ஏறி அமர்ந்தால் பத்தே நிமிடத்தில் வந்து விடுகிறது தாராசுரம். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக சென்று, அரசலாற்றின் மேலே உள்ள சிறிய பாலத்தின் வழியாக நடந்து, சில தெருக்களைக் கடந்து சென்றால் பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது தாராசுரம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்.


இத்திருக்கோயில் மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழும், மத்திய அரசின் ASI எனப்படும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழும், உலகெங்கும் அமைந்துள்ள கலைப் பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்துவரும் UNESCO அமைப்பின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் நிரம்பி வழியும் சிற்பங்களும், அவற்றின் பேரழகும், நுணுக்கங்களுமே இந்த அனைத்து அமைப்புக்களையும் இந்த கோயிலை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.


இத்திருக்கோயிலின் அமைப்பு அப்படியே தஞ்சை பெரிய கோயிலின் வடிவத்தை போன்றே அமையப் பெற்றுள்ளது. 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜ ராஜ சோழனால் கட்டப் பட்ட சிற்பக் கோயில் இது. மழை பெய்து திருக்கோயிலே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு ஆற்றின் நடுவே அமைக்கப் பட்ட கோயிலைப் போல காட்சி அளித்தது. முதலில் நம்மை வரவேற்பது நந்தி பகவான். அதையடுத்து ஐந்து கலசங்களைத் தாங்கிய அழகிய கோபுர வாசல் வழியாக திருக்கோயில் பிரவேசம். இத்திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்களுடன், திருக்கோயிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது. இந்த மழையில் அவை நீரால் நிரம்பி உள்ளன.

நந்தி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறிய மண்டபத்தின் தூண்கள், படிகள் என அனைத்திலும் சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகள். இக்கோயில் சிறப்புகளில் ஒன்றான இசைப் படிகள் இந்த நந்தி பகவான் அமர்ந்துள்ள மண்டபத்தின் பின் புறம் அமைந்துள்ளது. ஏழு கருங்கற் படிகள் ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.நாம் கோயிலுக்குள் நுழையும்போது உள்ள மண்டபத்திலும் சரி, உள்ளே உள்ள கோபுரங்களிலும் சரி ஒவ்வொரு அடுக்குகளிலும், ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சிற்பக் களஞ்சியமாக விளங்குகிறது. இயற்கை சீற்றம் முதற்கொண்டு பல்வேறு சூழ்நிலைகளைத் தாண்டி இக்கோயிலின் எதிரே காணப்படும் ஒரு வாயிலுடன் கூடிய மண்டபம். உடைந்த நிலையில் கோபுரம் எழும்பாத நிலையில் காணப் படுகிறது.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கோயில் என்பதால் கோயிலைச் சுற்றி அழகிய புல் தரையுடன் கூடிய பூங்கா ஒன்று அமைக்கப் பட்டு அழகாக பராமரிக்கப் பட்டு வருகிறது. இத்திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு கற்களாக கழற்றி எடுத்து அதில் எண்கள் இட்டு, அந்த கற்களை சுத்தம் செய்து மீண்டும் ஒன்று சேர்த்து மிக நல்ல முறையில் கோயில் சிற்பங்கள் பாதுகாக்கப் பட்டுவருகின்றன.


கொடி மரத்தை வணங்கி கோயிலின் உள்ளே சென்றதும் ஏதோ சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தது போன்ற பிரமை நமக்கு. ஏற்கனவே புதுப் பொலிவுடன் விளங்கும் கோயில் மழையில் நனைந்து புளி போட்டு தேய்த்த பித்தளைப் பாத்திரம் போல பளபளவென காட்சி அளித்தது. கோயில் முழுவதும் தூண்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மண்டபங்களின் கீழ் பகுதியில் நடனத் தாரகைகளின் நடன அமைப்புக்கள், குத்துச் சண்டை வீரர்களின் சண்டைக் காட்சி, இரண்டு செம்மறி ஆடுகள் தலையால் முட்டிக் கொண்டு சண்டையிடுவது போன்ற சிற்பக் காட்சி, பூதகணத்தின் பின் செல்லும் காளை மாட்டின் தோற்றம், மனித உருவமும் விலங்கு உருவமும் சேர்ந்து அமைந்துள்ள சிற்பம், யோகாசனம் செய்வது போன்ற தோற்றத்துடன் கூடிய சிற்ப அமைப்பு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சிற்பங்களின் அமைப்பினை.
இத்திருக்கோயிலே ஒரு தேர் போன்ற அமைப்புடனேயே காணப் படுகிறது. தாராசுரம் கோயில் உள்ளே உள்ள கோபுரம் ஒற்றைக் கலசத்துடன் கூம்பிய வடிவில் தோன்றுகிறது. இந்த கூம்பிய விமானத் தோற்றமும் அதற்குக் கீழே இரு புறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய தேர், ரதம் போல காட்சி தருகிறது. இது போன்ற மண்டபத்தின் அமைப்பு வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக வான்வெளி அறிஞர்கள் கூறியதாக தகவல்.


இராமாயணம், மகாபாரதம், ரதி மன்மதன் கதைகள், சிவபுராண கதைகள், மேலும் அதிபத்தர், இயற்பகையார், இசைஞானியார், அமர்நீதியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் உட்பட அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளும் கோயில் முழுதும் ஆங்காங்கே சிற்ப வடிவில் காணப்படுகின்றன. பரதநாட்டிய அடவுச் சிற்பங்கள் அதிகம் காணப் படுகின்றன.

ஒவ்வொரு தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்பங்கள் அழகிய அரிய சிற்பவகைகள். தூண்களில் காணப்படும் சிற்பங்கள், இரண்டு பெண்கள் ஒன்றாக நடனமாடும் தோற்றம், ஓருடல் சிற்பங்கள், நர்த்தன விநாயகரின் வடிவம், போருக்குச் செல்லும் வீரர்கள் கையில் வில், வேல் என போர்கருவிகளுடன் காணப் படுவது, சிவபிரான் நந்தி மேல் அமர்ந்தும் பூதகணங்கள் அவருக்கு பணிவிடை செய்வதும், சிவனும் பார்வதியும் நந்தி தேவர் மேல் பவனி வர பக்தகோடிகள் பின்தொடரும் காட்சி, சிவபிரான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்க, அவரது சீடர்கள் குருவின் போதனைகளை கேட்கும் விதமான தோற்றம், என பலவகையான சிற்ப வடிவங்கள்.


மண்டபங்களின் கீழ்புறம், தூண்களின் நான்குபுறம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மண்டபங்களின் மேற்கூரையிலும் கணக்கிலடங்கா சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. இங்கும் நடன மங்கைகளின் தோற்றம், விநாயகர் தோற்றம் என சிற்ப வேலைப்பாடுகள். கட்டம் கட்டமாக வடிவமைக்கப் பட்டு அந்த கட்டங்களுக்குள்ளே பல நூறு சிற்பங்களா, சிற்ப ஓவியங்களா என ஐயப் பட வைக்கும் தோற்றம்.இத்திருக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.


நீண்ட மண்டபத்துடன் கூடிய கோபுரத்தில் சுவர் முழுக்க சிற்பங்களோடு, கருப்பு வண்ண கருங்கற்களில் அன்னை, அப்பனது பல்வேறு அவதாரங்களின் சிற்ப வடிவம். அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் லிங்கோத்பவரின் சிற்ப வடிவம் கோயில் சுவற்றின் ஒரு பக்கம்.


கோயில் கோபுரத்தின் மேற்புறத்தில் எத்தனை சிற்பங்கள், அவற்றில் ஒன்றாக கலைகளின் தந்தை நடராஜரின் அழகிய சிற்பம்.


வண்ணமயமான ரதத்தினை குதிரை இழுத்துச் செல்வது போன்ற அற்புதத் தோற்றம் தேர் சக்கரத்துடன்.


ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற தோற்றம். அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வடிவமாக இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. என்ன விஷயத்தை உணர்த்த இந்த வடிவத்தை செதுக்கினார்களோ தெரியவில்லை. இந்த சிற்பத்தை பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரு விஷயம், தற்கால மனிதன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விடுத்து, நல்ல குணங்களை தக்க வைத்துக் கொண்டு, இந்த விலங்குகளிடம் உள்ள நல்ல குணங்களைப் பெற்று நல்ல மனிதனாய் வாழ வேண்டும் என்பதை இந்தச் சிற்பம் உணர்த்துவதாகப் பட்டது.


வேணுகோபாலனின் இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் யாருமுண்டோ. இசையில் மயங்கி நிற்கும் இராதை வேணுகோபாலனுடன்.


தானத்தில் சிறந்தது கண்தானம். இதனை அப்போதே நிரூபித்துக் காட்டிய கண்ணப்ப நாயனாரின் அழகிய தோற்றம். கடவுள் முன் கவி பாடுபவனும் ஒன்றுதான், காட்டு வாசியும் ஒன்றுதான். தன் அன்பை மென்மையாக அல்லாமல், மேன்மையாக வெளிப்படுத்தி நாயன்மார்களுள் ஒருவராகிப் போன புண்ணியவானின் உன்னதச் சிற்பம்.

கல்விக்குத் தலைவியான சரஸ்வதி தேவியின் அழகிய சிற்பம்.

இவரிடம் அனுமதி பெற்றே சிவனை காணச் செல்வது கோயில் மரபு. சிவபிரானின் ஆயுட்கால காவலன். அதிகார நந்தியின் அற்புதத் தோற்றம்.

உலகத்துக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணித் தாயாரின் வார்த்தைகளால் வடிக்க முடியாத காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பம். அன்னப் பாத்திரம் ஏந்திய இவரது கை விரல்களின் நகங்கள் கூட தத்ரூபமான வடிவத்துடன் காட்சி அளிக்கிறது. கால் விரல்களும் அவ்வாறே.முனிவரின் தவக்கோலம் நம் கண் முன்னே.

எட்டு கையுடன் தோன்றும் மகிஷாசுரமர்த்தினியின் முழு வடிவம்.

முப்புரம் எரித்த திரிபுராந்தகன் கதை சொல்லும் சிற்பம்.

யானையை வதம் செய்து அதன் தோலைத் தன்மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் கஜசம்ஹாரமூர்த்தியின் கதை மற்றொரு சிற்பம்.இடப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளையின் உருவம், வலப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானையின் வடிவம் தெரிகிறது. இந்தச் சிற்பம் அதிசயத்தின் உச்சம்.


கண்ணப்ப நாயனாரின் காலணிகள் சிற்பவடிவில். காட்டில் அலையும் அவர் அணிந்திருந்த காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அமைப்பு.


இந்திரனின் வெள்ளை யானை, துர்வாச முனிவரின் சாபத்தினால் நிறம் மாறியது. தனது சாபம் நீங்கி சுய உருவம் அடைய வேண்டி இத்திருக்கோயில் குளத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றது. இந்த யானையின் பெயர் ஐராவதம் என்றும், இதன் சாபம் இக்கோயிலில் நீங்கப் பெற்றதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பதும் தல வரலாறு.

மேலும் எமன் ஒரு ரிஷியின் சாபத்தால் தனக்கேற்பட்ட சரும நோய் நீங்க இக்கோயில் குளத்தில் குளிக்க சரும நோய் நீங்கப் பெற்றான் எமதருமன். இதன்காரணமாகவே இக்கோயில் தீர்த்தம் எம தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.


பல நூறு கோயில்களுக்குச் சென்று பல ஆயிரம் சிற்பங்களை, அவற்றைக் காணும் பாக்கியத்தினை ஒரே கோயிலிலேயே காணும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த தராசுரம் திருக்கோயில். மத வேறுபாடுகளின்றி அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இதன் சிற்பக் கலை சிறப்பிற்காகவே நம் அடுத்த தலைமுறையினரும் கட்டாயம் காண வேண்டிய கலைப் பொக்கிஷம்.

பச்சை பூமி - முதல் பாகம்

Related Posts with Thumbnails