Saturday, March 29, 2014


காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், ஊத்துக்காடு

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த, குழலூதும் கண்ணன் வீற்றிருக்கும் ஊத்துக்காடு எனும் சிறிய ஊரில் அமைந்துள்ள காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில்.


காளிங்கன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள் முடியைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிபற தூமணி வண்ணனை பாடிபற!!
-- பெரியாழ்வார் திருமொழி

திருக்கோயில் அமைவிடம்:
இந்த ஊத்துக்காடு காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூரில் இருந்து 30 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 15 km தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக ஊத்துக்காடு திருக்கோயிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், பட்டீஸ்வரம், கோவிந்தகுடி வழியாக இத்திருக்கோயிலை அடையலாம்.

திருத்தல குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வேத நாராயண பெருமாள்
தல இறைவி: ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி
உற்சவர்: ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன்

திருத்தல வரலாறு:
பொதுவாக கண்ணன் கதைகளைக் கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். கிருஷ்ண பகவானின் லீலைகளை கேட்பதில் அப்படி ஒரு ஆனந்தம். சாதாரண மனித ரூபத்தில் அவதாரமெடுத்து, மனிதர்கள் சூழ, சக மனிதன் அனுபவித்த சுக துக்கங்களில் பங்கெடுத்து, தானும் அதே சுக துக்கங்களை அனுபவித்து, நமக்கு ஒரு நண்பனின் சொரூபத்தில் வாழ்ந்த கண்ணனின் மீது நமக்கு அதீத அன்பு ஏற்படுவது இயற்கைதானே.

அதே நேரத்தில், கண்ணன் மீது அளவில்லா அன்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அத்தனைக்கும் உண்டு என்பதை நிரூபிக்கிறது இத்தல இறைவனின் திருத்தல வரலாறு. தன் பக்தர்களுக்காக, பக்தர்களின் அன்பில் குழைந்து, திளைத்து, எதையும் செய்யத் துணியும் கண்ணனின் காருண்யம்தான் இத்தல வரலாறு.

இந்த ஊத்துக்காடு என்னும் இயற்கை அன்னையின் அருள் பெற்று அளவற்ற செழிப்புடன், பசுமை வண்ணத்தால் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும்படி அமைந்துள்ள சிற்றூருக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் சிவன் திருக்கோயில் ஒன்று உள்ளது.

இத்தல இறைவனான ஸ்ரீ கைலாசநாதரின் திருவடி சேவை செய்யும் பொருட்டு, தேவலோக பசுவாகிய ஸ்ரீ காமதேனு தன் குழந்தைகளான நந்தினி, பட்டி என்னும் இரு கன்றுப் பசுக்களையும் இத்தலத்திலேயே விட்டுச் சென்றது.

இவ்வாறாக நந்தினி, பட்டி என்கிற இவ்விரு பசுக்களும் அபிஷேகப் பிரியரான கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டும், பூஜைக்குரிய பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்து இறைவனுக்குப் படைத்துக் கொண்டும் தங்களது கைங்கர்யங்களைச் செய்து வந்தன. இது போல பசுக்களினால் தெய்வ ஆராதனை செய்யப்பட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற காரணப் பெயரும் உண்டானது.

இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்தமையினால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.

இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்ட நந்தினி, பட்டி பசுக்கள் கேவி, கேவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கி விட்டன. ஏன் இந்த அழுகை எனக் கேட்ட நாரத முனியிடம், அத்தகைய பெருத்த, பருத்த, பயமூட்டும் காளிங்கனிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு பகவான் போராடியிருப்பார்? அவ்வாறு போரிடும்போது கண்ணனது உடலெங்கும் காயங்கள் பட்டிருக்குமே. நீல வண்ண மேனி வலித்திருக்குமே எனப் பலவாறாக புலம்பித் தீர்த்து அழுது கொண்டே இருந்தன அந்த கன்று பசுக்கள்.

இது போன்ற மனதை நெகிழச் செய்யும் காட்சியினை தேவ லோகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ காமதேனுப் பசு, தன் பிள்ளைகள் கதறி அழுவதைக் காண முடியாமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து, தன் குழந்தைகளின் நிலையினை எடுத்துச் சொல்லி இப்படி ஒரு நிலைக்குத் தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

அவ்வாறே ஸ்ரீ காமதேனு பசுவின் வேண்டுகோளுக்கு இணங்க பூமாதேவி வாசம் செய்யும் பூலோகத்திற்கு வந்து இவ்விரு பசுக்களையும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

கண்ணன் ஆறுதல் படலத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் சென்று, இந்த ஊத்துக்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புஷ்ப வனத்திற்கு அருகாமையிலேயே ஒரு ஊற்றினை உருவாக்க, தண்ணீர் பெருக்கெடுத்து அங்கொரு குளம் உண்டானது. ஊத்துக்காடு எனும் பெயரும் பெற்றது. அக்குளத்திலேயே காளிங்க நர்த்தனத்தை மீண்டும் இப்பசுக்களுக்காக ஒரு முறை செய்து காண்பித்தார். தான் காளிங்க நர்த்தன லீலையை புரியும்போது எவ்விதத்திலும் கஷ்டப் படவில்லை, துன்பப் படவில்லை என்பதை அப்பசுக்களுக்கு உணர்த்தினார்.

இந்த காளிங்க நர்த்தன லீலையைக் கண்ணுற்ற இவ்விரு பசுக்களும் மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தன. பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளினால் மயக்கம் தெளிந்து, பெரும்மூச்சும் வந்ததால் மூச்சுக்காடு என்றும் இத்தலம் பெயர் பெற்றது.

திருத்தல அமைப்பு:
மெத்தச் சிறப்பு வாய்ந்த புனிதத் தன்மை உடைய காவிரி ஆற்றினாலும், அதன் கிளை நதிகளாலும் சூழப்பட்டு, வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தேனுஸ்வாஸபுரம் என வடமொழியிலும், மூச்சுக்காடு என தேன் தமிழிலும் ஆதிகாலப் பெயர் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த இவ்வூர் சிவஸ்தலமாகவும், விஷ்ணுஸ்தலமாகவும் விளங்குகிறது.

சங்க காலத்தில் இச்சிறிய கிராமம் கோவூர் என்ற திருநாமத்துடன் பெருமை பெற்று விளங்கியது. தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தனது கிருஷ்ண லீலையை செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் இன்றுவரை விளங்குகிறது. இந்த பெருமை மிகு காளிங்க நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இவ்வூருக்கு தென் கோகுலம் என்னும் பெயரும் உண்டு.

இந்த ஆலயத்தின் மேற்கு திசையில் ஏரியைப் போன்ற தோற்றத்தில் பெரிய தாமரைத் தடாகம் ஒன்று அமைந்துள்ளது.

மிகவும் பழமையானதும், பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு சிறப்பம்சங்களை தானகத்தே கொண்டுள்ள இத்திருக்கோயில் நுழைவு வாயிலின் இடப்புறமாக அருள்மிகு கணேசமூர்த்தி, நர்த்தன கோலத்தில் காட்சி அளித்து அருள் செய்கிறார். திருக்கோயில் மூலஸ்தான சன்னதியில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வேதநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ பாமா சமேதராக ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் காளிங்கன் என்னும் சர்ப்பத்தின் சிரசின் மேல் நடன கோலத்தில் உற்சவ மூர்த்தியாக ஐம்பொன் சிலா ரூபமாக காட்சி அளிக்கிறார். இதுபோன்ற பாம்பின் மேல் நடனமாடும் கோலத்தில் காளிங்க நர்த்தன பெருமாளை உலகில் வேறு எங்கும் காண இயலாது.

ஸ்ரீ நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாங்கள் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடிய லீலையை மீண்டும் இங்கே புரிந்ததால் நீங்கள் இங்கேயே விக்கிரகமாகி ஊத்துக்காட்டிலேயே தங்கி உலக மக்களுக்கெல்லாம் அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெருமானும் இங்கேயே தங்கி விட்டார். ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஸ்ரீ நாரதரே பிரதிஷ்ட்டையும் செய்துள்ளார். இந்த உற்சவ மூர்த்தி காளிங்க நர்த்தனரின் காலடியிலேயே நந்தினி, பட்டி எனும் இரு பசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அண்ணாந்து, கண்ணனையே பார்த்த கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

தனிச்சிறப்பு:
ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமான், காளிங்கனின் சிரசின் மேல் தன் இடது திருவடியை வைத்துள்ளார். தனது வலது காலை நர்த்தன கோலத்தில் உயர்த்தியபடி உள்ளார். ஆக இறைவனது ஒற்றைப் பாதமே பாம்பின் சிரசின் மேல் உள்ளது. அவரது பாதத்திற்கும் பாம்பின் சிரசிற்கும் ஒரு நூல் விட்டு எடுக்கும் இடைவெளி உள்ளது. ஒரு கையை நானிருக்கிறேன் என்னும் பொருள்படும்படி அபயஹஸ்தமாகவும், மற்றொரு கையினால் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார். அதுவும் காளிங்க பாம்பின் வாலினை பகவானின் கட்டை விரல் மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை.

இவ்வாறாக வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை என இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சிற்பத்தின் சிறப்பினை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்ந்த மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஊத்துக்காடு வெங்கடகவி:
உலகமெங்கும் இசை உலகில் பிரபலமாகவும், எல்லா இசைக் கலைஞர்களாலும் பாடப்படும் பாடல்களை இயற்றிய பெருமை கொண்டவர் ஊத்துக்காடு வெங்கடகவி. இவர் பிறந்த ஊரோ பல்வேறு சிறப்புக்களை உடைய மன்னார்குடி. ஆனால் அவர் வளர்ந்து கண்ணன் மேல் பாடல் பாடி உலகப் புகழ் பெற்ற ஊர் ஊத்துக்காடு. இந்த ஊரின் பெயரே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

இவருக்கு ஸ்ரீ காளிங்க நர்த்தன் பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். பெருமானை கண்ட பெரு மகிழ்ச்சியில் இத்தல இறைவன் மேல் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அனேக கர்னாடக சங்கீத பாடகர்களால் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.

கதிரும் மதியும் என
நயன விழிகள் இரு நளினமான
சலனத்திலே காளிங்க சிரத்திலே
கதித்தபதத்திலே என்
மனத்தை இருத்தி கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும் கனிந்துருக
வரந்தருக.....
(பால் வடியும் முகம்) எனத் தொடங்கும் பாடல்
-- ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வெங்கட கவி எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஆடாது அசங்காது, அலை பாயுதே கண்ணா, அசைந்தாடும், குழலூதும் எனத் தொடங்கும் மிகப் பிரபலமான கர்னாடக சங்கீத கீர்த்தனைகளும் அடங்கும்.

இவ்வாறாக பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை நமது வாழ்நாளில் நாம் நமது குடும்பத்துடன் சென்று இத்தல பெருமானது தனித்த தன்மையையும், பேரழகையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத இப்பெருமானது தோற்றப் பொலிவையும், பெருமானது கண்ணில் பொங்கும் கருணையையும் கண்ணார மனதாரக் கண்டு களித்து வருவோம். இந்த காளிங்க நர்த்தன பெருமாளைக் காணும் அந்த கணம் அந்த நொடிப் பொழுது அப்படியே நின்று விடாதா? என நினைக்கும் வண்ணமும், நம்முடன் பகவான் பேசுவது போலவும், பல்வேறு நிலைப்பாடுகள் நம்முள்ளே வந்து வந்து செல்கின்றன. இப்படி ஒரு உன்னத அனுபவம் இத்திருக்கோயில் சென்று நர்த்தன பெருமாளை நேரில் காணும்போது மட்டுமே கிடைக்கும் அனுபவம்.

நமது இந்திய நாடு, குறிப்பாக தமிழகம் எத்தனையோ கால மாற்றங்களைச் சந்தித்தாலும் இந்தத் திருக்கோயில் வடிவங்களும் அதன் அமைப்புகளும், திருக்கோயிலில் காணப்பெறும் பல்வேறு சிலாரூபங்களும், அவற்றின் அதிசய சிறப்புக்களும், இத்தனை யுகங்களைத் தாண்டி வந்த நமது பாரத நாட்டின் சொத்துக்களாகிய இவை, இனியும் எத்தனை யுகங்கள் ஆனாலும் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் துளியும் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. நமது பெருமைமிகு சிறப்புமிகு சொத்துக்களைக் காத்திடுவோம்!

இவற்றுக்கெல்லாம் மேலாக, இத்தகைய சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இத்திருத்தலம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால், இக்கோயிலை சீரமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது.


திருக்கோயில் தொலை பேசி எண்:
ஊத்துக்காடு: 04374 - 268549, 94426 99355
சென்னை: 98846 20129

ஊத்துக்காடு வேங்கடகவி பாடல் தொகுப்பு


பட உதவி : www.oothukkadu.com

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தல வரலாறு உட்பட சிறப்பான விளக்கங்கள் + தகவல்களுக்கு நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி தனபாலன்.

ADHI VENKAT said...

சிறப்பான தகவல்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை காண்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து எழுதுங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது சிறப்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதி.

கோமதி அரசு said...

புவானேஸ்வ வாழ்க வளமுடன். உங்களை மூண்டும் காண்பதில் மகிழ்ச்சி. அருமையன பதிவு. ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் போனஸ் பரிசு . வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அன்பு கோமதி அம்மா தங்களது வாழ்த்துக்களுக்கும், நலம் விசாரித்தலுக்கும் முதலில் மிக்க நன்றி. நீங்கள் நலமுடன் உள்ளீர்களா? எனக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நடுவில் கொஞ்சம் நாட்கள் வலைப்பக்கம் வரமுடியாத சூழ்நிலை. இனி மெதுவாக தொடர எண்ணியுள்ளேன். மீண்டும் தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

சென்ற வாரம்தான் கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன். இந்தத் தகவல் தெரிந்திருந்தால் ஒரு முயற்சி செய்து பார்த்திருக்கலாம். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்களை விரும்பாதவர்கள்தான் யார்?! எனக்கு மிகவும் பிடித்தது 'நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்'.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இந்தப் பக்கம் வரும்போது நிச்சயம் கிருஷ்ணர் தரிசனம் செய்யுங்கள் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

தகவல்களுடன் பகிர்வு அருமை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

Anonymous said...

I came across your site and am Very Happy about it. Read many of your blogs on various temples. Finding guidance to visit them myself. I particularly enjoyed the write up on Sri AM Raja and the mention of the film Kalathur Kannamma.. My father (late) Director A.Bhimsingh directed most of the movie.
Please do keep the good work. WISH YOU THE BEST.
Regards
Dr. Suresh Bhimsingh

புவனேஸ்வரி ராமநாதன் said...

வருகை தந்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து
கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails