Monday, April 23, 2012


திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம்.


தெளியும் பசும்பொன் சிறைகாற்று வீச
விளியுந் துயர் போய் விடுமே யெளியேற்
கருளப் புளிங்குடி வாழச்சுதனைக் கொண்டு
கருளப் புளிங்கு வந்தக்கால்!!
(108 திருப்பதி அந்தாதி)

பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீயத்துப்பல் படிகால் குடி குடி வந்து
ஆட்செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்துன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தென்டீரைப் பொருநல் தன்பணை சூழ்ந்தனை திருப்புளியங்குடி கிடந்தானே!!

திருக்கோயில் அமைவிடம்:
நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் இந்த திருப்புளியங்குடி, திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
ஒரு சமயம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் திருமால், கருடன் மேலேறி இப்பூவுலகைச் சுற்றி வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் அழகிய மணற்பரப்பைக் கண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி விட்டார். பூலோகம் வந்தும் தன்னை கவனிக்கவில்லையே என்று மனம் வருந்திய பூமாதேவி, லக்ஷ்மி தேவி மீது பொறாமைக் கொண்ட பூமாதேவி, கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள். இதனால் உலகம் தன் நிலை மாறி வறட்சி அடைந்தது. அனைத்து ஜீவராசிகளும் துன்புற்றனர். இதனைக்கண்ட தேவர்கள் திருமாலிடம் வந்து முறையிட்டனர்.

தன்னை வந்து சந்தித்த தேவர்களை சமாதானம் செய்துவிட்டு பின் லக்ஷ்மி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை தேற்றி, பூமாதேவியின் மன வருத்தத்தைப் போக்கி மீண்டும் பூலோகம் அழைத்து வந்தனர். இவ்வாறாக பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். திருப்புளியங்குடியில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் பூமிபாலகராய் இங்கு எழுந்தருளியுள்ளார்.


இந்திரனுக்கு சாபம் நீங்கிய வரலாறு:
இமயமமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மானுருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்திரன், மானுருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வணங்கி வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றான். அது முதல் இத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் என பெயர் கொண்டது. தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனைக் கொன்றார்.

அதன்பிறகு அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க "நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக் கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்" எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருபெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த சதிபதிவேள்வியினை சிறப்புடன் செய்து முடித்தான்.

இங்கே திருமால் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய சாளரம் வழியாக தரிசிக்கலாம். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது. லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக்கொடி சுவற்றில் பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமைரையுடன் சேரும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது.


புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வாராயே!!

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனைக் காலம் கிடத்தியுள் திருஉடம்பு அசைய
தொடர்ந்து குற்றவேல் செய்து கொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி
தடங் கொள்தாமரைக் கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழவிருந்த தருள்வாய் திருப்புளியங்குடி கிடந்தானே!!

18 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி .....

மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

இராஜராஜேஸ்வரி said...

பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்

சிறப்பான பகிர்வுகள்.. அழகான படங்கள்.. பாராட்டுக்கள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@இராஜராஜேஸ்வரி.....

வருகைபுரிந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி.

Madhavan Srinivasagopalan said...

சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்..
தகவல்களுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan...

பாராட்டுக்கு மிக்க நன்றி மன்னை மைந்தரே.

ADHI VENKAT said...

நல்லதோர் பகிர்வு. கோயிலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

அப்பாதுரை said...

சிறப்பான கட்டுரை. ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடலாம்.
தமிழ்ப் பாடல்களுக்கு பொருளும் சேர்த்து எழுதினால் படிக்கத் தோன்றும் :) (இல்லேன்னா ஸ்க்ரோல் பண்ணத் தோணுதுங்க..)

Vikis Kitchen said...

கோவில் அருமையாக இருக்கிறது. ஸ்தல புராணம் நன்றாக எழுதியுள்ளீர்கள் புவனா. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி....

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க ஆதிவெங்கட்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை....

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி அப்பாதுரை சார்.
அதனை பின்பற்ற முயற்சிக்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Vikis Kitchen....

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி விக்கி.

மாலதி said...

சிறப்பான பகிர்வு... நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாலதி....

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாலதி.

சீனு said...

அருமையான பதிவு. தங்கள் எழுதும் நடையும் அருமை. உங்கள் அனைத்துப் பதிவையும் படித்து வெகு விரைவில் பின்னோடங்களை இடுகிறேன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@சீனு...

தங்களது கனிவான கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சீனு.

மாதேவி said...

உங்கள் பதிவில் பல புதிய கோயில்களையும் தர்சிக்க முடிகின்றது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி....

தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி
மாதேவி.

Post a Comment

Related Posts with Thumbnails