Monday, December 26, 2011


ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

உயர்ந்த கோபுரங்கள் நிறைந்த கோவில்கள் மட்டுமல்ல, உயர்ந்த உள்ளங்கள் நிறைந்த மக்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. காலமும் கடவுளும் நம் தமிழ் மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கட்டும்.


கோவில் கோபுரங்களை மெதுவாக அண்ணாந்து பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்பு வார்த்தைகளில் வடிக்கக் கூடிய விஷயம் அல்ல. கோபுரங்களை பார்க்கையில் தலை தானாய் உயரும். நம்முள் தோன்றும் ஆணவம், அகங்காரம் தானாய் மண்ணில் புதையும், கரைந்து காணாமல் பொடிப்பொடியாய் போகும். எத்தனை கால மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கட்டிடக் கலையில் புதிய நுணுக்கங்களைப் புகுத்தினாலும், கோபுரங்களின் பேரழகையும், கோபுரங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் கலவை நுணுக்கங்களையும், எவற்றாலும் ஈடு செய்ய முடியாது.


திருவரங்கம் திருக்கோயிலைப் பற்றிய விவரங்கள் உலகம் அறிந்த ஒன்றே. இக்கோயிலைப் பற்றி புதியதாய் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. வழக்கம் போல் இக்கோயிலிலும் கோபுரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. இத்திருக்கோவிலில் எல்லா கோபுரங்களையும் சேர்த்து மொத்தம் 21 கோபுரங்கள் அமைந்துள்ளன.

திருவெண்ணாழி பிரகாரம், ராஜமகேந்திரன் பிரகாரம், குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடன் திருச்சுற்று, அகலங்கன் திருவீதி, திருவிக்ரமன் திருவீதி(உத்திரவீதி), கலியுகராமன் திருவீதி(சித்திரை வீதி) என மொத்தம் 7 பிரகாரங்கள் அமைந்துள்ளன.


சந்திரபுஷ்கரணி, வில்வதீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், விருட்சி தீர்த்தம் என மொத்தம் 9 தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளன.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக நாயக்க மன்னர்களால் கட்ட ஆரம்பித்து முடிக்கப் பெறாமல் இருந்த தெற்கு ராஜகோபுரம் பிற்காலத்தில், ஆசியாவிலேயே உயரமான 236 அடி உயரம் கொண்ட கோபுரமாக கட்டி முடிக்கப் பெற்றது. 13 கலசங்களுடனும், 13 நிலைகளுடனும், 236 அடி உயரத்தில் மிக உயர்ந்து நிற்கிறது திருவரங்கம் கோபுரம்.


ஏழாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரங்கள் இராமகோபுரம் என அழைக்கப்படுகிறது. ஆறாவது பிரகாரம் நான்கு கோபுரங்களை கொண்டு அமைந்துள்ளது. கிழக்கு கோபுரமாகிய கலியுகராமன் கோபுரம் பிற கோபுரங்களைக் காட்டிலும் உயரமானதாக உள்ளது. ஐந்தாம் பிரகாரம் குடியிருப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரம் ரங்கவாசல் அல்லது நான்முகன் கோபுரம் என விளிக்கப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது கார்த்திகை கோபுரம் எனப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் பல சந்நதிகளையும் மண்டபங்களையும் கொண்டதாக உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் ஆரியபட்டாள் கோபுரம் அமையப்பெற்றுள்ளது. முதற் பிரகாரத்தில் நாழி கேட்டான் கோபுரம் அமைந்துள்ளது.


இத்திருக்கோயிலின் பழமையை உணர்த்தும் வண்ணம் பல்வேறு இலக்கியங்களில் திருவரங்கம் பற்றிப்பாடப்பட்டுள்ளது.

குடதிசை முடிய வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருமாலோ என்செய்கேனுலகத்தீரே !!!!
-- ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதாவ மரரேறே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிரயான் போய் இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !!!!
-- ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்

பொங்கேதம்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ்சோராமே ஆள்கின்றவெம் பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல்வளையால் இடர்தீர்வராகாதே !!!!
-- ஸ்ரீ ஆண்டாள்

ஒன்று மறந்தறியேன் ஒதநீர்வண்ணனை நான்
இன்று மறப்பனோவேழைகாள்
அன்று கருவரங்கத்துட்கிடந்த கைதொழு தேன்கண்டேன்
திருவரங்கமே யான்திசை !!!!
-- ஸ்ரீ பொய்கையாழ்வார்

என இவ்வாறு பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


கோபுர தரிசனத்தின் போது நாம் நம் மனதார, இக்கோபுரங்களைக் கட்ட உழைத்துப் பாடுபட்ட அத்தனை மக்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம்.

கோபுர தரிசனம் - 1

கோபுர தரிசனம் - 3

12 comments:

ராமலக்ஷ்மி said...

படங்கள் விவரங்களுடன் அருமையான பகிர்வு. நீண்ட இடைவெளிக்குப் பிறகான பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி. இனித் தொடர்ந்து வருவீர்கள்தானே புவனேஸ்வரி:)?

பால கணேஷ் said...

திருவரங்கம் செல்லும் போதெல்லாம் நான் ஏதோ ஒரு பிறவியில் வாழ்ந்த ஊர் என்ற எண்ணம் என் உள்மனதில் எழும். நான் மிகமிக ரசிக்கும் ஆலயம் அது. அழகிய படங்கள், அருமையான தகவல்கள் மூலம் தரிசனம் செய்த உணர்வை ஊட்டிய தங்களுக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!

ராம்ஜி_யாஹூ said...

மேடம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் பதிவு.
பல அரிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளீர்கள், நன்றிகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

வருகை தந்து ரசித்தமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி ராமலக்ஷ்மி. இனி கண்டிப்பாகத் தொடந்து வருவேன். மீண்டும் நன்றிகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இது போன்றதொரு உணர்வு சில ஊர்களுக்குச் செல்லும்போதுதான் நமக்கு ஏற்படும். அந்த கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு உண்டாவது உண்மைதான். மிக்க நன்றி கணேஷ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராம்ஜி_யாஹூ
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ராம்ஜி.

RVS said...

கோபுரம் போட்டு மீண்டும் உங்களது வருகையை வானுயர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS....
வார்த்தை விளையாட்டில் வல்லவர் என்பதை எப்போதும் நிரூபிக்கும் RVS,வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Rathnavel....

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

மனோ சாமிநாதன் said...

Welcome back Buvaneswari!
வழக்கம்போல் புகைப்படங்களும் கோவிலைப் பற்றிய தகவல்களும் அருமை!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனோம்மா.

Post a Comment

Related Posts with Thumbnails