Tuesday, January 11, 2011


பயணம் (சிறுகதை)

சொந்த மண்ணின் வாசம் விட்டு, சொந்த பந்தங்களின் நேசம் விட்டு, ஒரு கூட்டுப் பறவைகளாய் வாழ்ந்தவர்கள், இடம் பெயர்ந்து வந்து சேரும் வேடந்தாங்கல் சென்னை மாநகரம்.

சென்னை நகரத்துத் தொழிற்பேட்டை. வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி. பொன்னமராவதியில் இருந்து பல வருடங்கள் முன்பு கிளம்பி வந்து, தொழிலாளியாக வேலைப் பழகி முதலாளியாக உயர்ந்தவர் நாகராஜன். இவரது கம்பெனியில் மெஷின் ஓட்டும் வேலை ராமுவுக்கும், சரவணனுக்கும். மூன்று ஷிஃப்ட் வேலை நடக்கும் கம்பெனியில் ராமுவும், சரவணனும் மதிய ஷிஃப்டையும், இரவு ஷிஃப்டையும் வாராவாரம் மாற்றி மாற்றி செய்து கொள்வார்கள். கைகள் ஊறிப் போகும் அளவிற்கு மிகக் கடினமான வேலை. மெஷினில் வடியும் கூலன்ட் வாடை உடம்பிலேயே தங்கிவிடும். இரவு ஷிஃப்டில் தூங்கி வழிந்து மெஷின் கதவில் மோதி கண் விழிப்பது அன்றாடம் நடக்கும் விஷயங்களில் ஒன்று. கொசுத்தொல்லை, அதை ஒழிப்பதற்காக எரிக்கப்படும் வேப்பங்கொட்டையின் நாற்றம், ஒவ்வொரு இரவு ஷிஃப்டும் தண்டனை மாதிரி தான் கழியும். தொழிலாளர்களிடையே அன்பின் பரிமாற்றமும், விட்டுக்கொடுத்தலும் அதிகம் காணப்படுவது இரவு ஷிஃப்டில் தான். நகர வாழ்க்கையின் இன்னொரு பக்கமான நரக வாழ்க்கை நிகழ்வுகள் அரங்கேறும் இடம்தான் இந்த தொழிற்பேட்டை.


ராமு, ஆயிரம் ஜன்னல் வீடுகள் கொண்ட காரைக்குடியில் பிறந்து, கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவன். அப்பா மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். வளர்ந்த மகனையும் மடியில் வைத்து கொஞ்சுபவர். பிள்ளை வளர்ந்தாலும் தம்பி என்றே அழைக்கும் பாசக் கவிதை அம்மா. அக்காவை புதுக்கோட்டையில் கல்யாணம் கட்டிக் கொடுத்தாயிற்று. வீட்டிற்குச் செல்லப் பிள்ளை ராமு. படிப்பில் சுட்டி, குணத்தில் தங்கக் கட்டி. விளையாட்டுத்தனத்தால் +2 தேர்வில் மார்க் குறைந்தது. பொறியியல் படிப்பிற்குத் தேவையான மதிப்பெண் கிட்டாததால், திருச்சியில் பாலிடெக்னிக் ஒன்றில் சேர்ந்தான். இங்கு கிடைத்த நண்பன் தான் சரவணன். ஒரே படிப்பு, கல்லூரி விடுதியில் பக்கத்துப் பக்கத்து அறை என இவர்கள் நட்பு மேலும் வளர்ந்தது.

சரவணன், தகப்பன் சுவாமியின் ஊரான சுவாமிமலைவாசி. அம்மா, அப்பா, அக்கா, தம்பி என அழகிய குடும்பம். அப்பா விவசாயி. விவசாயிகளின் நீண்ட காலச் சொத்து, கடன். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. நன்றாக வாழ்ந்து நொடித்துப் போன குடும்பம். சரவணன் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும், பொருளாதார வண்டியின் அச்சு முறிவினால், பாலிடெக்னிக் படிப்பு சரவணனுக்கு.

சரவணனை ராமுவிற்கு மிகவும் பிடிக்கும். சரவணனின் குடும்ப சூழல் தெரிந்து, கல்லூரி காலத்திலிருந்தே அவனுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்பொழுது செய்வான் ராமு. ராமுவிடம் பண உதவி பெற்றால், எப்பாடுபட்டாவது திரும்பக் கொடுத்துவிடுவது சரவணின் வழக்கம். சரவணனின் இப்பண்பு ராமுவை மேலும் ஈர்த்தது.

*******

செவ்வாய்க்கிழமை மதிய ஷிஃப்ட் முடிந்து கிளம்பத் தயாராய் ராமு. இரவு ஷிஃப்ட் வேலைக்கு வந்த சரவணன், ராமுவுக்கும் சேர்த்தே சாப்பாடு வாங்கி வந்திருந்தான். வெள்ளிக்கிழமை பொங்கல். இவ்வருட பொங்கலை இருவரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். இருவருக்கும் புதன்கிழமை மதியமே ஊருக்குக் கிளம்பும் எண்ணம். லீவ் கிடைத்துவிட்டது போலவும், பொங்கலுக்கு தான் "இதச்செய்யப்போறேன், அதப்பண்ணப்போறேன்" என்று அளந்து கொண்டிருந்தான் ராமு.
"டேய் ராமு, இந்த கதையெல்லாம் அப்புறம் நிதானமா உக்காந்து பேசிக்கலாம். முதல்ல சார்கிட்ட லீவக் கேப்போம் வா."
"சரிடா மச்சான். ரெண்டு பேருமே சேர்ந்தே போயி கேப்போம்."

வீட்டிற்கு கிளம்பத் தயாரான நாகராஜனின் முன் இருவரும் ஆஜர்.
"சார், பொங்கலுக்கு ஊருக்கு போகணும், ஒரு நாள் முன்னாடியே லீவு வேணும்", சரவணன் கேட்க, ஒன்றும் சொல்லாமல் நாகராஜன் ராமுவைப் பார்க்க, "எனக்கும் தான் சார்", என்றான் ராமு.

"அட என்னப்பா நீங்க, நான் முன்னாடி வேலைப் பார்த்த கம்பெனிலேர்ந்து நெறைய ஆர்டர் வந்துருக்கு. நம்ம வேலையே எக்கச்செக்கமா இருக்கேப்பா. ஒரே மூச்சா இருந்து செஞ்சாத்தான் எல்லாத்தையும் சீக்கிரமா முடிக்கலாம்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். என் முதலாளி என்னைய நம்பி ஆர்டர் குடுத்துருக்காரு. ரெண்டு பேரும் ஒன்னா லீவு கேட்டா எப்படி?"

சரவணன் நடுவில் பேச முயல,

"நான் எப்பவும் சொல்றதுதான். உங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிக்குங்க. யாராவது ஒருத்தர் ஊருக்கு போங்க. ஒருத்தர் இங்க இருந்து வேலைய முடிச்சிட்டு பொங்கலுக்கு மொத நாள் கிளம்புங்க. நான் கிளம்புறேன், காலம்பர பாக்கலாம்."
லீவு கேட்டவர்களையே கோர்த்துவிட்டு கிளம்பினார் நாகராஜன்.

ஓரளவு இந்த பதிலை எதிர்பார்த்திருந்தாலும், இம்முறையாவது எதுவும் சொல்லாமல் லீவு கொடுத்துவிடுவார் என்ற நப்பாசையும் இருந்தது இருவருக்கும்.

"சரிடா சரவணா, நான் ரூமுக்கே போய் சாப்ட்டுக்குறேன், நீ வேலைய முடிச்சிட்டு காலம்பர வா பேசிக்கலாம்", கிளம்பினான் ராமு.
இருவருக்குள்ளும் ஆயிரம் மனப் போராட்டங்கள்.

*******

ஊரில் ராமுவின் பாசக்கார அப்பா, மகன் படித்துவிட்டு பொழுதை சுமந்துகொண்டு இருக்கிறானே என்று, வாய்தவறி சொன்ன சில வார்த்தைகள், ராமுவை ரோஷக்காரனாக்கியது. ரோஷ மிகுதியால், தன் அம்மாவையும் மீறி, கல்லூரி சீனியர் மூலமாக இந்தக் கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேர்ந்தான். கோபம், ரோஷமெல்லாம் அப்பாவிடம் மட்டும்தான். தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே சேமித்துவிட்டு, செலவிற்கு அம்மாவிடம் பணம் வாங்கிக் கொள்வான்.

தானே ஒரு மெஷின் போட்டு கம்பெனி ஆரம்பித்து முதலாளி ஆக வேண்டும் என்பதே ராமுவின் ஆசை. தனது அத்தானிடமும் பணம் கேட்டிருந்தான். உடனே பணம் கொடுக்காத அத்தான், ஒரு லட்சம் ருபாய் சேர்த்துவிட்டு தன்னிடம் வருமாறும், அரசுக்கடனுதவி போக மீதம் தேவைப்படும் பணத்தை, தான் கடனாக தருவதாகவும் கூறியிருந்தார்.

தீபாவளிக்கும் சரவணனை இரண்டு நாள் முன்னரே அனுப்பிவிட்டு கம்பெனி வேலைகளை ராமுவே பார்த்துக் கொண்டான். தீபாவளிக்கு முதல் நாள் இரவு பஸ் ஏறச்சென்ற ராமு, கூட்ட நெரிசலினாலும், நேரம் கடந்து போனதாலும், ஊருக்குச் செல்லும் எண்ணத்தை விடுத்து, ரூமுக்கே திரும்பி வந்துவிட்டான்.

"நம்ம வேலைல ஒரே வித்தியாசம், விசேஷ நாள்ல வீட்ல தூக்கம், மத்த நாள்ல ரூம்ல தூக்கம்", ராமு சரவணனிடம் அடிக்கடி நொந்து கொள்ளும் விஷயம் இது.

லீவ் சம்பந்தமாக நாகராஜன் சொன்னது, ராமுவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. "சரவணனுக்கு போன முறை நாம விட்டுக் கொடுத்ததுனால, இந்த முறை நிச்சயம் ஊருக்குப் போய் அம்மாவோட ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடிக்கலாம்", என்ற நம்பிக்கையுடன் சாப்பிட்டுத் தூங்கப் போனான்.

இங்கு சரவணனுக்கு வேலையே ஓடவில்லை. தன் அப்பாவின் கடன் தீர்க்க, டீச்சர் ட்ரைனிங் முடித்த தன் அக்காவை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க, தன்னால் படிக்க முடியாத பொறியியல் படிப்பை தன் தம்பியை படிக்க வைக்க, பாதியிலேயே நிற்கும் அப்பா கட்டிய வீட்டை முழுசாக முடிக்க, தன் குடும்பத்தை தூக்கி நிறுத்த, என, மளிகை கடை லிஸ்ட் போல நீண்டது சரவணன் வேலைக்கு வந்த காரணம். ராமுவின் மூலமாகத்தான் இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான் சரவணன். விசேஷ நாட்களுக்கு முதல் நாள் வேலை செய்தால், ஒன்றரை நாள் சம்பளம் கிடைக்கும் என்று, அன்றும் வேலை பார்த்து அந்த பணத்தில் ஊருக்குப் போவான் சரவணன்.

வீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க சிங்கப்பூர் செல்லும் முயற்சியில் இருந்தான் சரவணன். இது ராமுவிற்கு தெரியும். சிங்கப்பூர் போக ஏற்பாடும் செய்து விட்டான் சரவணன். அடுத்த பொங்கலுக்கு ஊருக்கு செல்வது உறுதியில்லை. இந்த பொங்கலுக்கு ஒரு நாள் முன்னரே ஊருக்கு செல்ல முடிவெடுத்திருந்தான் சரவணன். இதை எப்படி ராமுவிடம் கேட்பது என்ற குழப்பத்திலேயே இரவு ஷிஃப்ட் வேலையை முடித்தான் சரவணன்.

*******

ஷிஃப்ட் முடிந்து நாகராஜனின் வருகைக்காக காத்திருந்த சரவணன், அவர் வந்ததும் நேரே அவரிடம் சென்றான். தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்த சரவணன்,
"சார், இந்த முறை நான் முதல் நாளே ஊருக்குப் போகலாம்னு இருக்கேன். ஆறு மாசத்துல சிங்கப்பூர் போக ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த பொங்கலுக்கு ஊருக்கு போக முடியுமோ என்னவோ, அதனால இந்த வருஷமே பொங்கலுக்குப் போய் எல்லாரையும் பார்த்துட்டு வந்துடறேன். தீபாவளிக்கே எனக்காக லீவ விட்டுக்குடுத்தான் ராமு. அதனால இந்த தடவையும் என்னால அவன்கிட்ட கேக்க முடியாது, நீங்க தான் ராமுகிட்ட பேசனும்", படபடவென கொட்டிமுடித்தான் சரவணன்.

"என்னப்பா சொல்ற நீ, ராமு என்னடான்னா, அவன் ஆரம்பிக்கப் போற கம்பெனில உன்னையும் பார்ட்னரா சேர்த்துக்கப் போறதா என்கிட்ட சொல்லிட்டுருக்கான், நீ என்னடான்னா சிங்கப்பூர் போறதா சொல்ற?" என்ற நாகராஜனைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் சரவணன்.
ராமு கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறான் என்பது மட்டுமே சரவணனுக்கு தெரியும். தன்னையும் இணைத்துக்கொள்வான் என்றெல்லாம் எண்ணியதில்லை. தனது எண்ணம் முழு வடிவம் பெரும் வரை, ராமுவும் இதைப்பற்றி கூற விரும்பியதில்லை.

"நம்ம கணேசனோட ஷெட் ஆறு மாசத்துல காலியாகப் போதாம். ராமு கேட்ருந்தான், அவன்ட சொல்லிடு", முடித்தார் நாகராஜன்.

ராமு தன்னை இப்படி ஒரு நல்ல இடத்தில் வைத்திருப்பதை நினைப்பதா, அதற்கு நாகராஜன் செய்யும் உதவியை நினைத்து சந்தோஷப்படுவதா, என திக்குமுக்காடிப் போனான் சரவணன்.

என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றிருந்த சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்த நாகராஜன், இரு விதமான மன நிலையில் இருந்தார். இருவரின் மீதும் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும், நன்றாக வேலை பார்க்கும் இருவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு சென்று விடுவார்களே என்ற வருத்தமும் சில நாட்களாக அவருக்கு உண்டு. இதேபோல் தன் முதலாளி நினைத்திருந்தால், தான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றும் தோன்றியது.

"நம்மகிட்ட வேலை பாத்துட்டு வெளில போற யாரும் நம்மள மறந்துட்டா கூட பரவால்ல, நம்மளப் பத்தி நினைச்சாங்கன்னா, நல்லதாத்தான் நினைக்கணும்", தான் வெளியில் வரும்போது தன் முதலாளி தன்னிடம் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது நாகராஜனுக்கு.

மெதுவாக வெளியே சென்றுகொண்டிருந்தான் சரவணன்.
"தம்பி சரவணா, எங்க கிளம்பிட்ட, இங்க வாய்யா."
"என்ன சார்?", வேகமாக உள்ளே வந்தான் சரவணன்.
"நீங்க ரெண்டு பேருமே இன்னைக்கு மதியம் ஊருக்குப் கிளம்புங்க, ராமுகிட்ட நீயே சொல்லிடு."
"நம்ம காதுக்கு பொங்கல் போனஸ் மேல போனஸா குடுக்குறாரே சார்" என்று இன்ப அதிர்ச்சி அடைந்தான் ராமு.
"அப்போ எக்ஸ்ட்ரா ஆர்டர எப்படி சார் முடிப்பீங்க?"
மூன்று வருடங்களாக மெஷின் ஓட்டுவதையே விட்டிருந்த நாகராஜன், "என் முதலாளிக்காக திரும்பவும் நானே மெஷின் ஓட்டப் போறேன்", என்றார்.

சரவணன் தன்னை மறந்த நிலையில் ரூமிற்குப் போய் சேர்ந்தான். "நம்ம ரெண்டு பேரையுமே சார் ஊருக்குப் போகச் சொல்லிட்டாரு, மதியம் ஒரு மணிக்கு பஸ்ஸ பிடிச்சிருவோம்", ராமுவிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான் சரவணன்.
"என்னடா ஆச்சு அவருக்கு, ரெண்டு பேரையும் கிளம்ப சொல்லிட்டாரு, வேலைய யாரு பாக்குறது?"
"அவரே பாத்துக்குறாராம்," வேறேதும் கூறவில்லை சரவணன்.
"அப்படியா சேதி, நல்ல மனுஷண்டா மச்சான் நம்ம சார்", ராமுவும் கிளம்ப ஆரம்பித்தான்.

சாப்பிட்டுவிட்டு இருவரும் பஸ்ஸ்டான்ட் வந்தனர். ராமுவை பஸ் ஏற்றி விட்ட பிறகு, தான் பஸ் ஏறலாம் என்று எண்ணியிருந்தான் சரவணன். காரைக்குடி பஸ்ஸுக்காக காத்திருந்த இருவருக்குள்ளும் இனம்புரியாத சந்தோஷ நினைவுகள். பஸ்ஸுக்கு காத்திருந்த பிற பயணிகளின் முகங்களிலும் படர்ந்திருந்தது மகிழ்ச்சியும், ஊருக்குச் செல்லும் ஆர்வமும்.

சரவணன் ராமுவிடம் என்னென்னவோ பேச நினைத்து, எதில் ஆரம்பிப்பது என்ற தவிப்பில் நின்று கொண்டிருந்தான். காரைக்குடி பஸ்ஸும் வந்தது.
"பொங்கல் வாழ்த்துக்கள்டா மச்சான், ஊர்ல எல்லாரையும் கேட்டதா சொல்லு", பஸ் ஏறி அமர்ந்தான் ராமு. பதிலேதும் கூறாமல் தலையசைத்தான் சரவணன். கூட்டம் நிரம்பி பஸ்ஸும் கிளம்ப, வெளியே நின்று கையசைத்துகொண்டிருந்த சரவணன், திடீரென்று ஓடிச் சென்று அதே பஸ்ஸில் ஏறினான். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னடா, உங்க ஊருக்கு போகாம இந்த பஸ்ஸுல ஏறுற?"
"திருச்சி வரைக்கும் உன் கூட வரேண்டா மாப்ள."

*******

ஜனவரி மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் இச்சிறுகதை வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.

40 comments:

RVS said...

கதை அருமை. முதல் இரண்டு பாராக்களில் சூழ்நிலை வர்ணனை. லேத் வேலை செய்யும் இரு நண்பர்களின் கதையாகத் தான் தெரிகிறது. தலைப்பு தோஸ்த் அல்லது சிநேகிதனே!! என்று வைத்திருக்கலாமோ.. ;-) ;-)

ராமலக்ஷ்மி said...

பத்திரிகையில் படித்து விட்டிருந்தேன். மிக அருமையான கதை. வாழ்த்துக்கள் புவனேஸ்வரி.

ஸாதிகா said...

//சொந்த மண்ணின் வாசம் விட்டு, சொந்த பந்தங்களின் நேசம் விட்டு, ஒரு கூட்டுப் பறவைகளாய் வாழ்ந்தவர்கள், இடம் பெயர்ந்து வந்து சேரும் வேடந்தாங்கல் சென்னை மாநகரம்.//
// வார்த்தை ஜாலம் அபாரம்.அற்புதமான சிறுகதையை தந்திருக்கீங்க ஸிஸ்டர்.மாத இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ,ன்னும் பற்பல படைப்புகள் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS,
//தலைப்பு தோஸ்த் அல்லது சிநேகிதனே!! என்று வைத்திருக்கலாமோ..//
நல்லாத்தான் இருக்கு. இரு நண்பர்களோட வாழ்க்கைப் பயணத்த குறிப்பிடத்தான் அப்படி வைத்தேன். மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஸாதிகா,
ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் மேடம். கதை நன்றாக இருந்தது.

Kurinji said...

முதலில் வாழ்த்துக்கள் மேடம். கதையும் மிகவும் அருமை. தொடர்ந்து நிறைய கதை எழுதுங்கள்.

குறிஞ்சி குடில்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
மிக்க நன்றி ரமேஷ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kurinji,
ரொம்ப சந்தோஷம் குறிஞ்சி. மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

கதை அருமை! “லேடீஸ் ஸ்பெஷலில்’ இச்சிறு கதை வெளிவந்ததற்கு என் இனிய வாழ்த்துக்கள்!!

Chitra said...

அருமையான கதை. பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்! நல்ல பொங்கல் பரிசுங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
மிக்க நன்றி மனோம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

ரவி said...

சிறுகதை பிடித்திருந்ததால் என்னுடைய வாக்கை செலுத்திவிட்டேன். கூடிய விரைவில் வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கும், வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப சந்தோஷம் செந்தழல் ரவி அவர்களே. தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

லேடீஸ் ஸ்பெஷ்லில் புவனா என்றுப் போட்டு இருந்தது, அதனால் நீங்கள் எனத் தெரியவில்லை.

கதை அருமை. நட்பின் மேன்மை விளக்கும் கதை.

வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களது கருத்து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கோமதியம்மா. மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

அட!! அந்த புவனா நீங்கதானா!!.. நான் நம்ம அடப்பாவியக்கான்னு நினைச்சிட்டேன் :-))))

கதையை பத்திரிக்கையிலேயே வாசித்தேன் ரொம்ப அருமையாயிருக்கு :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

//அட!! அந்த புவனா நீங்கதானா!!.. நான் நம்ம அடப்பாவியக்கான்னு நினைச்சிட்டேன் :-))))//

நானே தாங்க :) ரொம்ப நன்றி.

ADHI VENKAT said...

சிறுகதை ரொம்ப நல்லாயிருந்தது. இந்த பதிவுலகில் நிறைய புவனா இருக்கிறார்கள் போல. என்னையும் வீட்டில் அழைக்கும் பேர் புவனா தான். பொங்கல் நல்வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி,
உங்க பேரும் வீட்ல புவனா தானா.. ரொம்ப சந்தோஷம். கதையை படித்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மாதவி.

Menaga Sathia said...

அருமையான கதை!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேனகா.

Kanchana Radhakrishnan said...

கதை நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காஞ்சனா.

Aathira mullai said...

கதை அருமை. வாழ்த்துகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் கரும்பாக இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஆதிரா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Vikis Kitchen said...

I am stunned on reading your style. Though there is a one line story (asking for leave), I liked the way you explained their background. The lathe shop narration is nice. I can't explain how I enjoyed reading this. A story with real depth and illustrates the feelings of aspiring people.
Keep rocking. Wishing you and family a bright and Prosperous Pongal dear.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விக்கி, நீங்க சொல்ற நல்ல வார்த்தைகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

R. Gopi said...

கலக்குறீங்க மேடம். இதோட ரெண்டு ட்ரீட் பாக்கி

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
ஆமாம் கோபி :) மிக்க நன்றி.

Asiya Omar said...

புவனா நல்ல கதை,இப்ப தான் இந்த கதையை பார்க்கிறேன்,வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப நன்றி ஆசியாம்மா.

R.Gopi said...

அருமையான கதை... அழகான எழுத்து நடை...

சூப்பர்... எல்லா பதிவையும் போல், கதையும் நன்றாக எழுதுகிறீர்கள்.....

வாழ்த்துக்கள்....

***********

நாங்கள் முதன் முதலாய் எடுத்துள்ள குறும்படம் “சித்தம்” கண்டுகளித்து கருத்து பகிருங்களேன் புவனா மேடம்....

'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

மதுரை சரவணன் said...

kathai arumai... naanum thirichchikku payaniththeen.. kathai avvaalavu irppu ... vaalththukkal

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபி. தங்களது முயற்சி தொடர என் வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மதுரை சரவணன்,
கதையோடு சேர்ந்து பயணித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி சரவணன்.

Post a Comment

Related Posts with Thumbnails