Sunday, January 9, 2011


கொள்ளையழகு கொல்லிமலை

சங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவேண்டுமானால் நம் நினைவில் முதலில் வந்து நிழலாடுவது குறிஞ்சிப் பகுதிகளான மலை வாசஸ்தலங்கள் தான். மலைகள் என்றவுடன் கொடைக்கானல், உதகமண்டலம் என இது போன்ற இடங்கள் தான் செல்லவேண்டும் என்று இல்லை. மதுரைப் பக்கம், கோவைப் பக்கம் செல்லும் பாதையை, நாமக்கல், சேலம் பக்கம் பாதையை சற்றே மாற்றி கொல்லிமலை நோக்கிச் செல்லலாம்.


மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டும் வெண் மேகங்கள் உரசிச் செல்லவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையையும் கிட்ட வந்து தொட்டுப் பார்க்கிறது இயற்கை எழில். நாமக்கல்லில் இருந்து 55 km தொலைவில் அமைந்துள்ளது இந்த மூலிகை மலையான கொல்லிமலை. பூமிப்பந்தின் இயற்கைச் சங்கிலியை தன் விருப்பம் போல் இழுத்து வளைக்கும் மனிதனின் மாசுக்கள் அதிகம் தீண்டாத மருந்து மலையாகவே இன்று வரை திகழ்கிறது கொல்லிமலை.

எப்பொழுதுமே மலையை நோக்கிய பயணத்தில் நம் எல்லோருக்குமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று ஏற்படும். அவ்வாறே, கொல்லிமலையின் மலைப் பாதையை அடைவதற்கு ஒரு 15 km முன்பாகவே மலையின் முழு வடிவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. எனக்கு அந்த மலையின் முழு வடிவத்தைக் காணும் போது ஒரு மனிதன் நேராகப் படுத்திருந்தது போன்ற தோற்றம். ஒரு மனிதனின் முகம் முழுமையாகத் தெரிந்தது. கற்பனைக்குக் கால் கட்டு போடமுடியாதல்லவா.


கொல்லிமலையின் அடிவாரம், காரவல்லி என்ற ஊரில் தொடங்குகிறது அருமையான மலைப் பயணம். தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களை சென்றடைவதை விட சற்று கடினமானது வால்பறையும், கொல்லிமலையும். சுமார் 26 km தூர மலைப் பாதையை 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கொல்லிமலையை அடையலாம். அதன் பிறகு, திருப்பதி போல ஒரு அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஊர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை.

கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சைமலை, கல்ராயன்மலை என இவற்றின் வரிசையில் அமைந்துள்ளது கொல்லிமலை. மனிதர்களின் அடர்த்தி அதிகம் இல்லாத மலையாக உள்ளது இந்த எழில்மிகு கொல்லிமலை. சித்தர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது கொல்லிமலை. இங்கே வாழ்ந்த சித்தராகக் கருதப்படுபவர், கோரக்கர் சித்தர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம், சிவபிரான், கடற்கரையோரம் பார்வதி தேவிக்கு தாரக மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த வேளையில், உமாதேவி சற்றே கண்ணயர்ந்தார். அதே நேரத்தில் சிவன் ஓதிய மந்திரத்தை ஒரு மீன்குஞ்சு கேட்டதன் பலனாக மனித வடிவம் பெற்றது. முக்கண்ணன் அதற்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்டார். அந்த மச்சேந்திரனை சிறந்த சித்தராக மாறி உலகம் முழுதும் ஞானத்தைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மிகக் கடுமையாக தவம் புரிந்து மேன்மையான சித்தரானார். பிறரிடமிருந்து தானம் பெற்று உணவு உண்பதே சித்தர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள், இவருக்கு அன்ன தானம் அளித்த ஒரு பெண்ணின் மனத்துயர் துடைக்க நினைத்தார் மச்சேந்திரர். தனக்குக் குழந்தை இல்லாத குறையை அந்தப் பெண்மணி இவரிடம் கூற, மச்சேந்திரர் கொஞ்சம் திருநீறு கொடுத்து, "இதனை நீ உட்கொள்ள குழந்தைபேறு அடைவாய்" எனக் கூறிச் சென்றார்.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயன் திருநீறே

என்ற திருஞானசம்பந்தரின் பாடலில் உள்ளது போல, திருநீற்றின் பெருமையையும் அறியாமல், மேலும் மச்சேந்திரரையும் நம்பாத அப்பெண்மணி அவர் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் சென்ற பிறகு அதே இல்லத்திற்கு வந்த மச்சேந்திரர், அந்த பெண்மணியிடம், அவரது மகனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். முன்பு தான் செய்த காரியத்தின் முழு விவரத்தையும் அப்பெண்மணி கூற அந்த அடுப்பின் அருகில் தன்னை அழைத்துச் செல்லுமாறு மச்சேந்திரர் கூறினார். அந்த பெருஞ்சித்தர் அடுப்பின் பக்கம் சென்று கோரக்கா என உரக்கக் கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதற்கொண்டு இருக்க வேண்டிய வளர்ச்சியோடு எழுந்து வந்தது. அந்த கோதார அடுப்பு சாம்பலில் இருந்து வெளிப் பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சேந்திரர்.

இவ்வாறு கொல்லிமலையைப் பற்றி பேசும்போது கோரக்கச் சித்தரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

கோரக்கர் இயற்றிய நூல்களாக தற்காலத்தில் கிடைப்பவை,
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத்திறவுகோல்
கோரக்கர் ரக்ஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர்மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்


சித்தர்கள் மனிதனுக்கும், கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப் படுபவர்கள். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு, தங்களது சக்திகளின் மூலம், பல்வேறு நோய்களை இவர்களால் குணப் படுத்த முடிந்திருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக் கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கோரக்கர் சித்தர் தியான மந்திரம்:
சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே !!


இந்த கொல்லிமலையோடு சேர்ந்த சித்தர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பல வளைவுகளைத் தாண்டிய பயணத்திற்குப் பிறகு கொல்லிமலையை அடைந்த நமக்கு, அங்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. சமதள பூமியில் பயிரிடப் படுவதைப் போலவே இந்த மலை பூமியில் அமைந்துள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது.


மேலும், இங்கே காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசிப் பழம், மலை வாழை, கொய்யா, ஏலக்காய், தேன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு என பலதரப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த கொல்லிமலைக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு காணவேண்டிய முக்கியமான இடங்கள்:

சுமார் 300 அடி உயரம் கொண்ட, 1000 படிகளை உடைய, 1 1/2 km தூரம் கீழே இறங்கிச் சென்று காணவேண்டிய ஆகாயகங்கை அருவி. இதன் கடைசி படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காணமுடியும் என்பது, கொல்லிமலை வாசி ஒருவரின் கருத்து. இங்கு ஐந்து ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து கொட்டுகிறது.


சித்தர்கள் வாழும் குகை. இன்றும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிளிரும் இடம்.

தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி. ஆகாய கங்கையைப் போல் அல்லாது இந்த மாசிலா அருவியை சென்றடைவது சற்று சுலபமாக உள்ளது.

276 பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் அறபளீஸ்வரர் ஆலயம்.


நம் வாழ்வில், நமக்கு ஏற்படும் தீராத துயரங்களையும் தீர்த்து வைக்கும் வல்லமை நிறைந்த எட்டுகை அம்மன் அருள் புரியும் எட்டுகை அம்மன் ஆலயம்.

மேலும் காண வேண்டிய இடங்கள், மாசி பெரிய சாமி கோயில், மேகங்கள் சூழ்ந்த மலைத் தொடர்கள், மலை அடிவாரத்தில் உள்ள ஊர்கள், இவற்றை பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் வியூ பாயிண்ட், படகு வீடு, மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, சீக்குப்பார்வை வியூ பாயிண்ட், சந்தனப் பாறை, தொலைநோக்கி நிலையம் என இன்னும் நிறைய உள்ளன இந்த கொல்லிமலையில்.

இந்த மலை கிராமத்தை முழுதாக சுற்றிப் பார்க்க, இரண்டு நாட்கள் தேவைப்படும். எல்லா விதமான கட்டணத்திலும் இங்கே தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே வீசும் சுத்தமான காற்று, இங்கே நிலவும் மிதமான தட்பவெப்பம், விடுமுறைக் காலங்களில் சென்று தங்க மிகவும் பொருத்தமான சுற்றுலாத்தலம்.

கடையேழு வள்ளல்கள் பாரி, எழினி, காரி, நள்ளி, பேகன், மலையன், ஓரி போன்றவர்கள். இந்த கொல்லிமலையை வல்வில் ஓரி என்னும் மன்னரே ஆண்டதாகச் சொல்லப் படுகிறது. வள்ளல்களில் ஒருவர் ஆண்ட கொல்லி மலையில் நம் மனம் விரும்பும் ஏகாந்தத்தை நம்மால் உணர முடிகிறது. எங்கும் வேகம், எதிலும் வேகம், நிதானத்திற்கு இடமில்லாத இந்த மனித வாழ்க்கைச் சூழலை கொஞ்ச காலம் மாற்றி அமைத்து, அமைதியான, வாழ்வின் உண்மையான சுவையை அனுபவிக்க இது போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி இளைப்பாறுவது இக்கால கட்டத்தில் நம் அனைவருக்குமே தேவையான ஒன்று. இங்கு வாழும் மக்களுக்கு அநேகமாக எந்த நோயும் அண்டாது என்றே நினைக்கிறேன். மாசு படாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்விற்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது. உலக வெப்பமயமாதல் போன்ற நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே உள்ளது இந்த கொல்லிமலை.

கோடி கொடுத்தாலும் கிடைக்காத, சுத்தமான காற்றையும், தூய்மையான கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளா பசுமையையும், மூலிகை சுவாசத்தையும், கற்பனை வளத்தையும், தாய்ப்பால் போன்ற சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டுமகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.

56 comments:

ஸாதிகா said...

இயற்கை அழகும்,உங்கள் வர்ணனையும் மனதை கொள்ளை கொள்கின்றது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவை ரசித்து உடனே கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஸாதிகாம்மா.

தமிழ் உதயம் said...

கொல்லிமலை குறித்து முழுமையாக சொல்லி இருக்கிறிர். பதிவு, படங்கள் வெகு சிறப்பு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ரமேஷ்.

middleclassmadhavi said...

நேரில் கூடவே பார்த்தாற் போல இருந்த்து உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப சந்தோஷம் மாதவி. மிக்க நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சென்ற ஆண்டு நாங்கள் பத்து பேர் கொல்லிமலையை காரவல்லியில் இருந்து நடந்தே ஏறிச சென்றோம். வன அதிகாரிகள் துணை வர டிரெக் செய்தது அற்புதமான அனுபவம். ஐந்து மணி நேரமாயிற்றுரி முடிக்க. இது குறித்து விரிவாக எனது பதிவில் எழுத எண்ணியுள்ளேன். உங்கள் அனுபவம் எங்கள் பயணத்தை நினைவூட்டியது.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு. என் அம்மா சென்றிருக்கிறார்கள். மலை மிகவும் செங்குத்தானது என அவர்கள் சொன்னதைப் படங்கள் புரிய வைத்து விட்டன.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam),

//சென்ற ஆண்டு நாங்கள் பத்து பேர் கொல்லிமலையை காரவல்லியில் இருந்து நடந்தே ஏறிச சென்றோம். வன அதிகாரிகள் துணை வர டிரெக் செய்தது அற்புதமான அனுபவம். ஐந்து மணி நேரமாயிற்றுரி முடிக்க. இது குறித்து விரிவாக எனது பதிவில் எழுத எண்ணியுள்ளேன். உங்கள் அனுபவம் எங்கள் பயணத்தை நினைவூட்டியது.//

ஐந்து மணி நேர ட்ரெக்கிங் அனுபவம் அற்புதமாக இருந்திருக்குமே. எனக்கும் ட்ரெக்கிங் போக வேண்டுமென்பது ஆசை தான். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மேடம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
ஆமாம் மேடம், மிகவும் செங்குத்தான மலைகள். மிகவும் அழகான பிரதேசம். மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு.வர்ணனை அருமை புவனேஸ்வரி.

Kurinji said...

கொல்லி மலைக்கே சென்று வந்தது போல உள்ளது. சித்தர் பற்றிய பகிர்வும் அருமை!

Madhavan Srinivasagopalan said...

// கோடி கொடுத்தாலும் கிடைக்காத, சுத்தமான காற்றையும், தூய்மையான கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளா பசுமையையும், மூலிகை சுவாசத்தையும், கற்பனை வளத்தையும், தாய்ப்பால் போன்ற சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டுமகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை. //

சரியாச் சொன்னீங்க....
இயற்கை இயற்கைதான்..
விசிட் பண்ண ஆர்வத்த தூண்டுது..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி காஞ்சனா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kurinji,
ரொம்ப சந்தோஷம் குறிஞ்சி. மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan,
நிச்சயமா. அவசியம் போயிட்டு வாங்க. மிக்க நன்றி மாதவன்.

மதுரை சரவணன் said...

நல்ல அருமையான விவரிப்பு , சித்தர் பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள். படங்கள் இடுகைக்கு அழகு சேர்க்கிறது...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

அருமை புவனா.காணக்கிடைக்காத இயறகை அழகு.விளக்கமும் மிகச்சிறப்பு.பாராட்டுக்கள்.

Pushpa said...

Such a beautiful place,nicely presented..

டக்கால்டி said...

Superb...Since its near to my place, I have gone there so many times... Good place to go...This is the place where one can have some privacy and it's not like other hill stations such as ooty, kodai, yercaud etc.,

Vikis Kitchen said...

Enjoyed reading this post dear. Never been there. But you make me imagine the beauty:)

நாடோடிப் பையன் said...

Really nice post. Thank you.

Mohan said...

அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்...
பல தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள்!
மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மதுரை சரவணன்,
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி சரவணன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@asiya omar,
ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஆசியாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
மிக்க நன்றி புஷ்பா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@டக்கால்டி,
நீங்கள் சொல்வது போல் பிற மலைவாசஸ்தலங்களை விட அதிக அமைதி இங்கு நிலவுகிறது. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Viki's Kitchen,
இங்கு வரும்பொழுது அவசியம் சென்று வாருங்கள் விக்கி. மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@நாடோடிப் பையன்,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Mohan,
பதிவை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மோகன்.

சாந்தி மாரியப்பன் said...

அழகான வர்ணனை.. எத்தனை முறை பார்த்தாலும் மலைப்பிரதேசங்களின் அழகு அலுப்பதில்லை :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாங்க. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்.

R.Gopi said...

கொல்லிமலை பற்றிய குறிப்பு, சித்தர்கள் பட்டியலுடன் கூடிய விரிவான விளக்கம், கூடவே அந்த ஃபோட்டோஸ் என பதிவு களை கட்டியது...

//கோடி கொடுத்தாலும் கிடைக்காத, சுத்தமான காற்றையும், தூய்மையான கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளா பசுமையையும், மூலிகை சுவாசத்தையும், கற்பனை வளத்தையும், தாய்ப்பால் போன்ற சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டுமகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.//

பதிவின் முடிவில் இதை முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தமை நன்று...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி கோபி.

கோமதி அரசு said...

//எங்கும் வேகம், எதிலும் வேகம், நிதானத்திற்கு இடமில்லாத இந்த மனித வாழ்க்கைச் சூழலை கொஞ்ச காலம் மாற்றி அமைத்து, அமைதியான, வாழ்வின் உண்மையான சுவையை அனுபவிக்க இது போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி இளைப்பாறுவது இக்கால கட்டத்தில் நம் அனைவருக்குமே தேவையான ஒன்று. இங்கு வாழும் மக்களுக்கு அநேகமாக எந்த நோயும் அண்டாது என்றே நினைக்கிறேன்.//

இயற்கையோடு இணைந்து வாழும் போது எந்த நோயும் அண்டாது.

படங்கள் எல்லாம் அருமை.
அந்த இடங்களை நேரில் கண்டு களித்த உணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் வர்ணனை.

நன்றி புவனேஸ்வரி.

தமிழ் அமுதன் said...

அவசியம் ஒரு தடவை கொல்லி மலை போகனும்..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
//இயற்கையோடு இணைந்து வாழும் போது எந்த நோயும் அண்டாது.//
உண்மைதானம்மா. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
அவசியம் சென்று வாருங்கள். நிச்சயம் நல்லதொரு பயண அனுபவத்தை தரும். வருகைக்கு நன்றி தமிழ் அமுதன்.

பின்னோக்கி said...

முழுமையான தகவல்களுடன் கூடிய அருமையான பயணக்கட்டுரை இது. படங்கள் அருமை. கொண்டை ஊசி வளைவுகளை படம் எடுக்கவில்லையா ?. சித்தர் பற்றி மிக அதிகமான விளக்கங்கள் நன்றாக இருந்தது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@பின்னோக்கி,
கொண்டை ஊசி வளைவுகளை இம்முறை படமெடுக்க இயலவில்லை. கட்டுரையையும் படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! புகைப்படங்களும் உங்களின் அழகான வர்ணனையும் உடனேயே இந்தக்கொல்லிமலை சென்று பார்க்க வேண்டுமென்ற தாகத்தை ஏற்படுத்தியது. நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு கார் மூலம் பயணிக்கலாமல்லவா? காரவல்லியில் தங்குவதற்கு ஹோட்டல்கள் உள்ளனவா?

வெங்கடேசன் said...

The 72 hairpin bends,is the largest number in Asia.By the by The " KOLLIPPAVAI " is missing in this article.Plz add it,then it is completed.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு காரில் பயணிக்கலாம். 55 km தூரப் பயணம். மலைப்பயணம் மட்டும் 26 km தூரம். காரவல்லியில் ஹோட்டல்கள் கிடையாது. கொல்லிமலையில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன. அவசியம் சென்று வாருங்கள். இனிதான பயணமாக இருக்கும். மிக்க நன்றி மனோம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@வெங்கடேசன்,
தகவலுக்கு மிக்க நன்றி வெங்கடேசன். எட்டுகை அம்மன் என்று கொல்லிப்பாவை அம்மன் பற்றி குறிப்பிட்டுள்ளேன். படங்கள் சரியாக அமையவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மாதேவி said...

கொல்லி மலை கேள்விப்பட்டிருக்கிறேன்... பார்ப்பதற்கு இவ்வளவு இடங்கள் இருக்கிறதே மிகவும் விரிவான ரசனையான கட்டுரை.

அப்பாதுரை said...

லிஸ்டில் சேர்த்தாச்சு.
படங்களும் விவரங்களும் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி,
ஆமாங்க, பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை,
ரொம்ப சந்தோஷம் அப்பாஜி. மிக்க நன்றி.

நிகழ்காலத்தில்... said...

குடும்பத்தோடு செல்ல உகந்த இடமாக இருக்கிறது..

பகிர்வுக்கு நன்றி சகோ.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் சகோ. மிக்க நன்றி.

கல்வெட்டு said...

.
அருமையான பகிர்வு. நன்றி
.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தாங்கள் வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ganesan said...

கொல்லிமலை குறித்து முழுமையாக சொல்லி இருக்கிறிர் மிக்க நன்றி i going soon

புவனேஸ்வரி ராமநாதன் said...

கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.

மிக்க நன்றி கணேசன்.

இராஜராஜேஸ்வரி said...

தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களை சென்றடைவதை விட சற்று கடினமானது வால்பறையும், கொல்லிமலையும்.

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@இராஜராஜேஸ்வரி.....

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

Post a Comment

Related Posts with Thumbnails