Friday, October 29, 2010


பச்சை பூமி

சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. காவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.

இந்த பூமியும் வானம் பார்த்த பூமியாகி பல காலம் ஆகிவிட்டது. மனிதர்கள் தராத தண்ணீரை மகேசன் தருகிறார் மழையாக. மூன்று புறமும் கடல் நீரால் சூழப்பட்ட நாம் ஒருபக்கம் சுயநல நெருப்பால் சூழப்பட்டுள்ளோம். இவர்கள் தண்ணீருக்கு மட்டும் அணை கட்டவில்லை. மனித நேயத்திற்கும் சேர்த்து அணை கட்டுகிறார்கள். இங்கே நம்மில் இரும்பிலே இதயம் முளைக்கின்ற காலத்தில் அங்கே இதயங்கள் இரும்பாகிப் போயினவே. குதிரை பேரத்தில் மூழ்கி காணாமல் போனவர்கள் தண்ணீர் என்றதும் ஒன்று கூடும் மனிதர்கள் வாழும் பூமியில் இருந்து தண்ணீருக்கு நாம் கையேந்தி நிற்க அவசியம் ஏற்படாதவாறு இந்த ஆண்டு நல்ல மழை, காலத்தே பொழிய இறைவனை பிரார்த்தித்து வருண பகவானை துணைக்கு அழைப்போம். வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.

பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார் போன்ற ஊர்களில் சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான். இப்பகுதியில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வதில் எந்த வித உடல் சோர்வோ, பயணக் களைப்போ தெரியாது. இதற்கு முக்கிய காரணம், பசுமையான வயல்வெளிகள், அடர்த்தியான மரங்கள், ஆற்றுப் படுகைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், வயல்வெளிகளின் உட்புறத்திலே காணப்படும் பெரிய கிணறுகள், தண்ணீர் அருவி போல் கொட்டும் ஆழ் குழாய் கிணறுகள், இவற்றின் உதவியால் வருடம் முழுவதும் பசுமை வண்ணமே இங்கு படர்ந்திருக்கும்.

பேருந்திலே பயணம் செய்யும் போது எஸ்.ஏ. ராஜ்குமாரின் புண்ணியத்தில் பிரபலமான லா லா லா பாடல்கள் ஒலித்த காலம் அது. இது போன்ற வளமான பகுதிகளைக் கடந்து செல்லும் வேளையில் இந்தப் பாடல்கள் செவிக்கு உணவாகவும், பயிர்கள் கண்ணிற்கு உணவாகவும் ஒன்றிணைந்த பயணம், ஆஹா, சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் பகுதிகளில் பயணம் செய்வது போல் வருமா. அநேகமாக இப்படி நாங்கள் பேருந்து பயணத்தில் கேட்டுத்தான் லா லா லா மிகவும் பிரபலமானதோ என்னவோ. நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் இப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அந்த சுகானுபவத்தை பெறலாம்.


உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இப்பகுதி விளை நிலங்களில் காணும் அழகு பச்சை வண்ணத்தை வேறு எங்கும் காணமுடியாது. இந்த மண்ணின் தன்மை அப்படிப்பட்டது. நாங்கள் சொந்த ஊர்ப் பக்கம் செல்லும்போது எங்களைத் தலையாட்டி முதலில் வரவேற்பது அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள்தான். காவிரித் தாய் கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து , தனது நெடுந்தூரப் பயணத்தை பல ஊர்கள் வழியாக வந்து கடைசியில் கடலில் கலப்பது எங்கள் ஊர் பகுதியான பூம்புகாரில் தான்.

இங்கே வாழும் மக்களை மதங்கள் கூட பிரித்துப் பார்த்ததில்லை. எங்கள் குடும்பங்களில் வேண்டுதல்கள் கோயில்களோடு நின்று விடுவதில்லை. மன்னார்குடியில் உப்புக்காரத்தெருவில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கே இஸ்லாமியர்கள் வந்து உடல் பிரச்சினைகள் தீர மந்திரம் போட்டுச் செல்வார்கள். நாகூர் தர்காவிலும் நேர்த்திக்கடனை செலுத்துவோம், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரக்கண் வாங்கி நட்டு வேண்டுதல் நிறைவேற்றுவோம். சிக்கல் சிங்கார வேலன் கோயிலிலும் நிறைவேற்றுவோம். நாகை பகுதிக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, சிக்கல் சிங்கார வேலன் மூவரையும் தரிசித்த பின்னரே எங்கள் பயணம் நிறைவுபெறும். இது ஏதோ வினோதமான அதிசயமான விஷயமாக நாங்கள் கருதுவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட புனிதமான விஷயம் இது. இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.

மன்னை, இன்றும் திண்ணை வைத்த வீடுகளைப் பார்க்கலாம். பழமை மாறாத ஊர்.

மயிலாடுதுறை, பழமையை வெளியேற்றாமல் புதுமை புகுந்து விளையாடும் ஊர்.

கும்பகோணம், குட்டி மும்பை என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில், வியாபாரத்தில் செழித்தோங்கும் ஊர்.

தஞ்சை, தமிழ் மாநாடு நடத்திய பெருமை கொண்ட ஊர். கலையழகு கொஞ்சும் தரணி போற்றும் ஊர்.

நாகை, சுனாமி சுழற்றி அடித்தாலும் சுயம்பாய் எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையின் இருப்பிடமாய் விளங்கும் ஊர்.

திருவாரூர், இந்த ஊரைப் பற்றி நான் சொல்வதை விட இவ்வூரின் பெருமை என்னவென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அழகான ஆழித் தேர் கொண்ட ஊர் என்பது தனி கதை.

திருவையாறு இசை ஆசான்களின் இருப்பிடம். இசைப் பிரியர்களின் கொள்ளிடம்.

நாகூர், மெக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் வரவிரும்பும் ஊர்.

வேளாங்கண்ணி, வாடிகன் சிட்டிக்கு அடுத்து அதிகம் மக்கள் வர பிரியப் படும் ஊர்.

வேதாரண்யம், முத்துப்பேட்டை கடல் மாதாவின் முத்துக்கள்.

பூம்புகார், தமிழன் கடல் மார்கமாகவும் தன் வாணிபங்களை விரிவு படுத்தியுள்ளான் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள உதவும் ஊர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சோழவளநாட்டின் பெருமைகளை. இந்த காவிரிப் படுகை சார்ந்த ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் செல்லும்போதும் சொந்த ஊருக்குச் சென்ற நினைப்புதான் வருமே தவிர வேறு ஊருக்குச் சென்ற எண்ணம் தோன்றாது. ஆனால் விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் இங்கும் நிகழ்கிறது. விவசாயத்தை படித்தவர்களும் ஒரு தொழிலாக எடுத்து செய்யும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டிற்கே படியளக்கும் வண்ணம் எங்கள் தஞ்சை மண் நெற்களஞ்சியமாக விளங்கியது ஒரு காலத்தில். மீண்டும் அதே போன்றதொரு நல்ல நிலை வர வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் அவா.

ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே தங்கள் காலத்தைக் கழிக்க வாய்ப்பில்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு , நாடுகளுக்கு சென்று வாழ்பவர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இன்னும் சொல்லப் போனால் இப்போது நாங்கள் வாழும் பூமிதான் இன்றைய பொழுதிற்கு எங்களுக்கு சோறு போடும் ஊர். இந்த சொந்த ஊர் பாசமெல்லாம் வருடத்தில் எப்போதாவது வரும் பண்டிகைகளின் சந்தோஷங்களைப் போல கனவில் வந்து போகும் கடவுள் முகம் போல.

மரம் தன் கிளைகளை எங்கு பரவி வளர்ந்தாலும் வேர்தான் அடிப்படை. ஊர் பாசம் உள்ளவர்களுக்கு சொந்த மண் தான் அடிப்படை. இப்படி நான் குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.

பட உதவி:
gkamesh.wordpress.com

45 comments:

Madhavan Srinivasagopalan said...

அட நம்ம ஊரப் பத்தி போட்டுத் தாக்கிட்டீங்களே(good aspects) .
உண்மைதான்.. கும்பகோணம்-தஞ்சாவூர்-மன்னார்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர்-நாகை.. -- பச்சைப் பசேல் வயல்வெளி சாலை.. -- குளுமைதான்..

தமிழ் உதயம் said...

பச்சை பூமி -நீரின், நிலத்தின், சமத்துவத்தின் கதையை சொன்னது. மனதை கவர்ந்த பதிவு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

நன்றி ரமேஷ்.

பொன் மாலை பொழுது said...

குறிப்பாக கும்பகோணம் - மயிலாடுதுறை பஸ்ஸிலோ , காரிலோ சென்று வரும் ஒவ்வொரு முறையும், நாம் செல்லும் வேலை அல்லது தேவைகளை விட நம் மனதில் இடம் பிடிப்பது இந்த பயண நேரங்களே. நீங்கள் சொல்வதுபோல கூட பாடல்களும் கேட்டுக்கொண்டு நம்மை மறந்து, கண்ணில் விரியும் இக்காட்சிகளில் மனம் லயித்தபடி அவைகளை கடந்து வருவதே சுகமான ஒன்று. ஆனால் இவைகள் எல்லாம் அரிதாக எப்போதாவது கிடைக்கும் வரங்களே.

சுயநலம் மிகுந்த ,காழ்புணர்வு மிகுந்த இந்திய அரசியல்களால் ஒரு இணையற்ற நாகரீகமும் வாழ்கை முறையும் பாழாக போகவிடுவது வேதனையான ஒன்று. இன்றுவரை இந்த காவிரிக்கு ஒரு விடிவுகாலம் இல்லை. நமிடையே ஒற்றுமை இல்லாததே இதற்க்கு அடிப்படை காரணம். தமிழர்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன தொடர்பு?

புவனேஸ்வரி ராமநாதன் said...

நாம் ஒற்றுமையாக இருந்த சமயங்களில் கூட எதுவும் நடக்கவில்லையே. அவர்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் சமயங்களில் மட்டுமே இங்கே தண்ணீர் வருகிறது.

RVS said...

// தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார்//
ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டேன். சூப்பர். மன்னை திண்ணை.. ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆர்.வி.எஸ்.

கோமதி அரசு said...

பச்சை பூமி அருமையான பதிவு.

மழை காலத்தில் நல்ல மழை பெய்யட்டும்.
மழை நீரை சேமித்து வளம் பெறுவோம்.

தஞ்சை நெற்களஞ்சியமாக ஆகட்டும்.

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
தனி,தனி பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

Kurinji said...

விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் மாறவேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kurinji,
நன்றி குறிஞ்சி.

Unknown said...

//சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி.//

நானும் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் :)

//வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.//

என் பிரார்த்தனைகளும் சேரட்டும்.

//சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான்//

உண்மைதான். எனக்குப் பிடித்தது கும்பகோணம் டூ நீடாமங்கலம் சாலை!!

//காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.//

அட ஆமா...

//அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.//

விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

கும்பகோணம் நீடாமங்கலம் சாலையின் இருபுறங்களும் அருமை தான். தங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தஞ்சாவூரான்.

Menaga Sathia said...

nice post!!

தமிழ் அமுதன் said...

ஆஹா ஊருக்கு போகனும் போல இருக்கே...!

பெரும்பாலும் ஊருக்கு போகும் போது கும்பகோணத்தில் பொழுது புலர தொடங்கும்..!
அதுவும் நெற்பயிர்கள் வளர்ந்திருக்கும் காலங்களில்
கதிரவன் மெல்ல உதிக்க கும்பகோணம்-வலங்கைமான் - நீடாமங்கலம்- மன்னார்குடி- பரவாக்கோட்டை-கீழக்குறிச்சி-மதுக்கூர் வரை சாலையின் இரு பக்கமும் வயல் வெளிகளை ரசித்து கொண்டே செல்வது அலாதி சுகம்..!



அருமையான பதிவு ...!

இன்னும் நிறய படங்கள் சேர்த்து இருக்கலாம்..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Mrs.Menagasathia,
நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
கும்பகோணம் மன்னார்குடி ரோடு சரியில்லைனாலும் மாறிமாறி ரெண்டுபக்கமும் ஆறு, கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் - இந்த ரூட்டே ஸ்பெஷல் தான். இனி அதிக படங்கள் சேர்க்கிறேன். மிக்க நன்றி தமிழ் அமுதன்.

பொன் மாலை பொழுது said...

ஒன்றை கவனித்தீர்களா?
மண்ணின் மைதர்களை எல்லாம் ஒன்று சேர்த்துவிட்டீர்கள்.
எந்த பதிவர் எந்த ஊர் காரர் என்ற ரகசியம் அம்பலம் :))))))

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஊர்காரர்கள் ஒன்றுகூடுவதில் ஒரு தனி சந்தோஷம் தான்.

Chitra said...

அழகு!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

a said...

//
ஊர்காரர்கள் ஒன்றுகூடுவதில் ஒரு தனி சந்தோஷம் தான்.
//

நானும் வந்திட்டேன்...............

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாங்க வாங்க யோகேஷ்.

Anonymous said...

Dear brothers and sisters i hope you are all will excuse me, due to my Very very excellenct Article by Buvaneswari Ramanathan, I am very much glad about reading this article

மனோ சாமிநாதன் said...

உண்மையிலேயே மிக அருமையான பதிவு புவனேஸ்வரி!
‘ சோழ வள நாடு’ என்று கம்பீரமாக ஆரம்பித்ததும் எனக்கு உடனேயே பொன்னியின் செல்வன் ஞாபகம் வந்து விட்டது!
இன்னும் பசுமையின் மிச்சமிருக்கிற தஞ்சை-வடுவூர்-மன்னை சாலை, தஞ்சை-குடந்தை-மயிலாடுதுறை சாலைகள், திருவாரூர்-நன்னிலம்-குடவாசல் சாலைகள், நிறைய சாலைகளில் கூடவே சலசலத்து வரும் ஆறுகள், பச்சை பசேலென்ற வயல்கள், மரங்கள் எல்லாமே எப்போதுமே அழகுதான்! அதுவும் தஞ்சை-திருவையாறு சாலை இரு மருங்கிலும் ஐந்து ஆறுகளைத் தாண்டும்போது அத்தனை பசுமையாக, குளுமையாக இருக்கும்! அதுவும் பனி படர்ந்த விடியற்காலையில் பயணம் செய்யும்போது, சூரியன் மெல்ல மெல்ல எழுந்து சுற்றிலும் பசுமை வயல்கள் பளீரிடும் அழகே தனி!

நான் சாதாரணமாகவே வருடம் இரு முறை ஊருக்கு வருவேன்.
இப்போது தஞ்சையிலிருந்து திரும்பி வந்து 4 மாதங்கள்தான் ஆகின்றன! சோழவள நாட்டைப்பற்றி அழகுற எழுதி உடனேயே ஊருக்குப்புறப்படும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!!

Anonymous said...

My dear Brothers and sisters from the Erstwhile Thanjavur District, I hope you all will excuse me first for responding my comment in English instead of my MOTHER TONGUE TAMIL, i am unable to type here in tamil and unable to know how to type here in tamil;
The following term is very fondly and proudly called by us once upon a time that :"Chola Nadu Sorudaithu", "Tharani Anda Thanjai"
The three arts have grown there;
Particularly Music - The Nature, The Green, The pollution free;
Excellenct Article and my advance heartiest welcome for your proposed wide coverage of all towns as mentioned in your present article;
First i am very proud to be a Native of Nagapattinam,
Nagapattinam was a Natural Harbour since Chola Kings Reign
Though the Tsunami has catastrophed the one among the ancient TownS of Nagapattinam in the Erstwhile Thanjavur District, since it is another District, the people of Nagapattinam District has never lost their self confidence and aroused once again like "Phoenix,
I hope, since we the people of Erstwhile Thanjavur District Spread all over the world for earnings;This article muse you all to your golden days
This article mused me to my golden memories & days of my life in Nagapattinam and sorrounding the district and all the places mentioned in this article
once again i congradulate u and request u to continue your articles and make us happy;
If any of the interested public can file a PUBLIC INTEREST LITIGATION BEFORE THE HIGH COURT/SUPREME COURT OF INDIA FOR CURBING THE MENACE OF THE TRANSFORMATION OF AGRICULTURAL LANDS IN TO HOUSE GROUND PLOTS OR LAYOUTS
SAVE AGRICULTURE, SAVE MOTHER INDIA SAVE THE MOTHER EARTH - AGRICULTURE IS THE PRIMARY SECTOR OF INDIA.
JAIHIND

அபி அப்பா said...

நானும் இங்க தான் இருக்கேன். முதல்லயே வந்து ஓட்டு மட்டும் போட்டுட்டு போனேன். வந்து பார்த்தா எல்லாம் நம்ம ஊர் மக்கள்! ஆகா அருமை!

R. Gopi said...

சூப்பர் போஸ்டிங். வேற ஒன்னும் சொல்லத் தோணலை. மத்த பின்னூட்டங்களும் சூப்பர். சொந்த ஊர் சொந்த ஊர்தான்.

Philosophy Prabhakaran said...

உங்கள் ஊரைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது... நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
அதிகாலை பயணம் பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள். தங்களை ஊருக்கு வர தூண்டிய பதிவாக அமைந்துள்ளதாக நீங்கள் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி மனோம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Anonymous,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. சோழவள நாட்டின் பெருமைகளை அருமையாக கூறியுள்ளீர்கள். நாகப்பட்டினத்தின் பெருமையையும் அம்மக்களின் தன்னம்பிக்கையையும் கூறியது மிக அழகு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அபி அப்பா,
ஊர் மக்கள் இங்கே ஒன்றுகூடியது சந்தோஷம் தான். நன்றி அபி அப்பா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
ஆமாம் கோபி. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@philosophy prabhakaran,
மிகுந்த மகிழ்ச்சி. நன்றி பிரபாகரன்.

Unknown said...

மிகவும் நல்ல பதிவு. நான் தஞ்சாவூருக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள ஊரில் வசிக்கிறேன். வேலை காரணமாக நான் திருப்பூரில் உள்ளேன். நீங்கள் சொன்ன அனைத்தும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போ நான் விடுமுறைக்காக ஊருக்கு போகும் போது தஞ்சை - குடந்தை சாலையில் பச்சை பசேல் வயல்வெளிகளுக்கு பதில் வீட்டு மனைகளாக காட்சி தருகிறது. எங்கு பார்த்தாலும் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்ற பலகை மட்டும் உள்ளது. பாபநாசம் - திருவைக்காவூர் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிள் மட்டுமே இப்பொழுது பச்சைப்பசேல் வயல்வெளிகளை காண முடிகிறது. இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தின் ”நெற்களஞ்சியம்” என்ற பெயரே இல்லாமல் போகக்கூடிய நிலமை வரலாம். உணவுக்காக வெளிமாநிலத்திடம் கையேந்தும் நிலையும் வரலாம். விவசாய எனவே நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுத்தாக வேண்டும்.
உங்களிம் பதிவு என் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள். நிச்சயம் நிலைமை மாறும் என நம்புவோம். கருத்துகளுக்கு நன்றி மணி.

க.பாலாசி said...

நல்ல பதிவுங்க...எப்பவும் கவனிக்கறதுண்டு.. கும்பகோணத்தை தாண்டியவுடன் இரயிலின் சன்னலோரம் அமர்ந்துகொள்வேன் மாயவரம் வரும்வரை. அந்த பச்சைபசேல் புல்வெளிகள், வயல்வெளிகள்.... ம்ம்...இதையெல்லாம் எத்தனைக்காலம் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணம் எழாமலில்லை. நம்மாள் முடிந்தவரை அனைத்தையும் காப்போம்..

க.கமலகண்ணன் said...

நீங்கள் சொன்து அனைத்தும் உண்மை. Nருந்தில் பயணம் செய்யும் போது நாம் வந்த வேலைவிட அந்த இடத்தின் பசுமை நிறைந்த காட்சிகள் நம்மை வசியப்படுத்திடும்.

ம்ம்ம்ம் நீண்ட பெருமூச்சுடன் படித்தேன். மீண்டும் எப்போது ஊருக்கு என்று....

நன்றி சகோதரி தஞ்சையின் தரணியில் இருந்ததை போன்ற பாதிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை

புவனேஸ்வரி ராமநாதன் said...

@க.பாலாசி,
நம்மால் முடிந்தவரை நிச்சயம் காக்க முயல்வோம். நன்றி பாலாசி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கமலகண்ணன்,
சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வாங்க. நன்றி சகோ.

தமிழ்க்காதலன் said...

சோழநாட்டுக்கு சொந்தக்காரன் என்கிற உரிமையுடன் அழைக்கிறேன். இலக்கிய சோறு படைக்க வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com ) இன்னும் நாம் சுவாசிக்காத தென்றல், நடவாத ஒற்றையடிப் பாதை, யாரும் வசித்தறியா குடில், மனித கால்தடம் பதியா சிற்றோடைகள்,,... இருக்கத்தான் செய்கின்றன... வாருங்கள். சோழச் செழுமை படைப்போம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ்க் காதலன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.//
அட இப்படிஒன்னு இருக்கா..எனக்கு பச்சை நிறம் ரொம்ப பிடிக்கும்..
நல்ல பதிவுங்க புவனேஸ்வரி

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி முத்துலெட்சுமி.

VinothSivanandam said...

NICE

Post a Comment

Related Posts with Thumbnails