Thursday, October 21, 2010


மயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. இச்சொல் வழக்கு முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சொல்வழக்கு. மயிலாடுதுறையில் வாழ்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அத்தனை சிறப்புக்கள் வாய்ந்த ஊர் மயிலாடுதுறை. இந்த ஐப்பசி மாத ஆரம்பத்தில் மாயவரம் பற்றிய பதிவினைப் போடுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகளாய வல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே
-- திருநாவுக்கரசர்


அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.


இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.

பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிக்கையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர்.

மயிலாடுதுறை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் விளிக்கப் பட்டுள்ளது. திருமயிலாடுதுறை, மாயூரம், கௌரிமாயூரம், தென்மயிலை, பிரமவனம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம் என பல பெயர்கள் உண்டு மயிலாடுதுறைக்கு. வடமொழியில் உள்ள ஸ்காந்தம், சிவரகசிய மகாஇதிகாசம், துலா காவிரி மகாத்மியம், சிதம்பர புராணம், சிவ புராணங்கள் 10, பிரம்மாண்ட புராணம், ஆக்கினேய புராணம் போன்றவற்றிலும், கந்தபுராணத்திலும், இத்தலப் பெருமை சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது என்ற பழமொழி மயிலைப் போன்ற அழகான பறவை உலகில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பழமொழி. திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராக திருவாவடுது
றையிலும், மயிலாடுதுறையிலும் வாழ்ந்தவர். இவர் இல்லையென்றால் தமிழில் தோன்றிய காவியங்களை நம்மால் கண்டு ரசித்து படித்திருக்க முடியாது. அக்கால சுவடிகளைக் கண்டறிந்து சேகரித்து ஐம்பெரும் காப்பியங்களை தொகுத்து அச்சில் ஏற்றியவர் இவர். தமிழ் வாழும் வரை இவரது புகழும் வாழும்.

இவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:
*அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை
*அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை
*சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை
*அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்
*புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை
*அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி
*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை பெரியகடைவீதி


இத்தலத்து சித்தராகப் போற்றப் பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணஸ்வாமி ஐயர். இத்தலத்து அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி இவரால் பாடப்பட்டது 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம்.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : மயூரநாதர் (கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்)
தல இறைவி : அபயாம்பிகை (மயிலம்மை, அஞ்சலைநாயகி, அஞ்சலை)
தல விருட்சம் : மாமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்


திருத்தலம் அமைவிடம்:
இந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.

ஆதி மயூரநாதர் திருக்கோயில்:
சுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.


இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.


கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.


கி.பி 1070 - 1118-ம் வருடங்களில் கட்டப்பட்ட செங்கல் கற்றளி மண்டபங்களாக இருந்த சுவாமி, அம்பாள் திருக்கோயில் இடிக்கப் பட்டு இப்போது உள்ள கருங்கல் கற்றளி 1928-ம் ஆண்டு எழுப்பப் பட்டுள்ளது. இங்கே அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.


இத்தல வரலாறு:
தட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.


அனைவரும் தாம் செய்த பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்து ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரி விருஷப தீர்த்தத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. கங்கையைத் தேடி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுரைக்கே வந்துவிட்டனர். அந்த நாள் ஐப்பசி மாதம் 30-ம் நாள். அன்று வந்தவர்கள் மயிலாடுதுறையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் மயிலாடுதுறையின் புனிதச் சிறப்பு அனைவருக்கும் புரியும்.

ஐப்பசி மாதம் முப்பது நாட்களும், கார்த்திகை மாதம் முதல் தேதி வரையிலும் இத்திருத்தலம் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை, வள்ளலார்கோயில், காவிரி வடகரை காசிவிஸ்வநாதர், தென்கரை காசி விஸ்வநாதர், ஐயாறப்பர், போன்ற 5 திருக்கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் ஐப்பசி முதல் நாள், ஐப்பசி அமாவாசை, ஐப்பசி கடைசி நாள்களில் தீர்த்தம் கொடுத்து அருள்வர். இவற்றுள் கடைமுழுக்குத் தீர்த்தமே மிக விசேஷமானது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கடை முழுக்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனின் அருளைப் பெறுவர். இந்த விழா இப்போது, ஐப்பசி மாதம் ஆரம்பமாகிவிட்டதால், ஐப்பசி முதல் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமயிலாடுதுறையில் வாழ்பவர்கள் மட்டுமல்ல இந்த கடை முழுக்கு தீர்த்த விழாவில் கலந்து கொள்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே !!!!

****************

பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.

திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே !!

நின்றுஉண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மைஉயர்ந்த
வென்றி அருளான் அவன்ஊரான்
மன்றல் மயிலாடு துறையே !!

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலால் உரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே !!

திருச்சிற்றம்பலம் !!

35 comments:

புதிய மனிதா. said...

படங்கள் பாடலுடன்அருமையான பதிவு ...

RVS said...

கட முழுக்கு முட முழுக்குவிற்கு பாட்டியுடன் வந்து முங்கியது. அப்புறம் சமீபத்தில் ஐந்தாறு முறை அந்தப் பக்கம் வரும்போதெல்லாம் தலைவரை விஸிட் செய்தாயிற்று. எவ்வளவு முறை வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. அபயம் தரும் அம்பிகை அபயாம்பிகை. இது ஒரு நல்ல பணி. தொடர வாழ்த்துக்கள்.
;-) ;-)

அபி அப்பா said...

ஆகா ஆகா அற்புதம். இருங்க படிச்சுட்டு வந்துடுறேன்!ஸ்ரீ மாயூரநாதா போற்றி, அம்மா அவையாம்பிகா போற்றி போற்றி!

அபி அப்பா said...

ஆகா முன்னமெ தெரிஞ்சு இருந்தா போட்டோஸ் அனுப்பி இருப்பேனே!!

அபி அப்பா said...

அருமை அருமை! என்னான்னு சொல்ல இந்த பதிவை பத்தி! அருமையான துலா மாதத்தில் இந்த பதிவு அபாரம்! சொல்ல வார்த்தை இல்லியே!அவையாம்பாளின் முழு அனுக்ரகம் கிடைக்கட்டும் உங்களுக்கும், இதை படிப்பவர்களுக்கும், உலக மக்களுக்கும்!!

R. Gopi said...

மாயவரமும், திருச்சியும் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஊர். நிறைய ஆடிட் பண்ண வந்திருக்கேன். சுத்தி இருக்கிற நிறைய எல்லா திவ்யதேசமும் பாத்திருக்கேன். திவ்யதேசம் பத்தி எழுத முடியல இப்போ. மறுபடி ஆரம்பிக்கனும்.

சப்த ஸ்தானம் அப்படிங்கறது நிறைய இடத்தில் உண்டு. ஏழு சிவன் கோயில்கள் அருகருகில் இருந்தால்,எல்லாக் கோயிலையும் சேர்த்து சப்தஸ் தானம் என்று சொல்வார்கள். திருவையாறும் சப்தச்தானம்தான். குடவாசல் கூட என்று ஞாபகம்.

மிக நல்ல பதிவு. அபயாம்பாளைப் பார்க்க வேண்டும்போல உள்ளது !

ஆயில்யன் said...

பெரிய கோவில் - படங்களை விட்டு அகல மறுக்கிறது மனம் !

நிறையவே மிஸ் பண்றேன் :(

கோமதி அரசு said...

மயிலாடுதுறைத் தலத்தைப் பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்!

கெளரி தாண்டவ நடனத்தைக் குறிப்பிட அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்(மேலகடம்பூர்)
ரிஷபத் தாண்டவ மூர்த்தியை போட்டீர்களா? அவரை பிரதோஷகாலத்தில் வழிபட்டால் சகலதோஷ நிவர்த்தி
ஆகும் என்பார்கள்.

Madhavan Srinivasagopalan said...

Thanks for the details.

There are important Vishnu temples also sround Mayuram.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@புதிய மனிதா.,
நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புவனா ரொம்ப ரொம்ப நன்றிங்க. அருமையான தொகுப்பு.. அதுவும் ஐப்பசியில் இதை எழுதி எங்கள் மனம்குளிர வைத்துவிட்டீர்கள்..

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS,
நீங்கள் சொல்வது போல், எத்தனை முறை இக்கோவிலுக்கு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி தான். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அபி அப்பா,
அவையாம்பாளின் அனுக்ரகம் அனைவருக்கும் கிடைக்கட்டும். போட்டோஸ் நிச்சயம் அனுப்புங்கள். மிக்க நன்றி அபி அப்பா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
சப்த ஸ்தானம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. 'சுற்றியுள்ள' என்பதற்கு பதில் 'சுற்றிய' என்று எழுதிவிட்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் திருச்சி அனைத்துமே சொந்த ஊர் போல தான். நன்றி கோபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆயில்யன்,
ஊரை விட்டு வந்துட்டா எனக்கும் இதே நிலைமை தான்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
தகவலுக்கு மிக்க நன்றி கோமதி அரசு. தகவலை விரைவில் சேர்த்து விடுகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan,
நன்றி மாதவன். மாயவரத்தை சுற்றித்தான் எத்தனை கோயில்கள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@முத்துலெட்சுமி,
மிக்க நன்றி முத்துலெட்சுமி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராம்ஜி_யாஹூ,
மிக்க நன்றி ராம்ஜி.

பொன் மாலை பொழுது said...

அத்தை வீடு கோவில் சந்நிதியில் இருந்ததினால், சின்ன வயதில் சுற்றித்திரிந்து மகிழ்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.
தருமபுரமும், மயிலாடுதுறையும் மனத்தை விட்டு அகலாத இடங்கள்.
ஒரு தமிழ் ஆசிரியர் பாடம் சொல்வது போன்ற உணர்வு வரும் உங்கள் பதிவிகளை படிக்கும் போது.
வழங்கும் தன்மைக்கு நன்றிகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கக்கு - மாணிக்கம்,
தங்களது சிறுவயது நினைவுகளை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி மாணிக்கம். ஆசிரியர் போல் கூறுகிறேனா.?! சலிக்கவில்லை தானே? பாராட்டுக்கு மிக்க நன்றி மாணிக்கம்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் விவரங்களுமாக மிக அருமையான பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
மிக்க நன்றி மேடம்.

நாடி நாடி நரசிங்கா! said...

அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Narasimmarin Naalaayiram,
நன்றி ராஜேஷ் நாராயணன்.

Menaga Sathia said...

அருமையான பகிர்வுங்க...நன்றிகள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேனகா.

மாயவரத்தான் said...

சூப்பர்!

சொர்க்கமே என்றாலும் அது மாயூரத்தைப் போலாகுமா?!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சரிதான். மிக்க நன்றி மாயவரத்தான்.

மாதேவி said...

திருமயிலாடுதுறைதலம் படங்களுடன் மிகவும் விரிவான பதிவு.

தரிசித்தோம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி மாதேவி.

மயிலாடுதுறை சிவா said...

தொடர்ந்து எழுதுங்கள் புவனேஸ்வரி

வாழ்த்துக்கள் பல...

இந்த வலைப் பூவை எனக்கு அறிமிக படுத்திய அபி அப்பாவிற்கு நன்றிகள் பல...

மயிலாடுதுறை சிவா...

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா. அபி அப்பாவிற்கும் நன்றிகள் பல.

முரளி வேணுகோபாலன் said...

அப்படிங்க எவ்வளவு தகவல்களைச் செகரிசிங்க ? அந்த கோவில் பக்கதுல நானும் இருக்கேன் . ஆனா எனக்கே அத பத்தி எவ்வளவு தகவல் தெரியாது. way to go with your work... bhuvana

Post a Comment

Related Posts with Thumbnails