Saturday, October 16, 2010


கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

என்பது வள்ளுவர் வாக்கு. இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடையும் போது செல்வங்கள் எனப்படும் நவநிதிகளும் கிடைத்தன. இந்த நவநிதிகளில் அனைத்து செல்வங்களும் இருந்தன. கல்விச் செல்வம் மட்டும் இல்லை. ஸ்ரீ ஹயக்ரீவரால் சரஸ்வதிக்கு இந்த கல்விச் செல்வம் அளிக்கப்பட்டதாக புராதன நூல்களில் கூறப் பட்டுள்ளது.


நவராத்திரி விழா வரலாறு:
சுபாகு என்பவர் ஆதி பராசக்தி அன்னையின் தீவிர பக்தராக விளங்கினார். சுபாகுவின் மகள் சசிகலையும் அப்படியே. சுபாகுவின் முறை மாமன் சுதர்சனன் என்பவரும் பராசக்தயின் பக்தராகவே விளங்கினார். ஆகவே சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி , நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள். அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர். இப்படி சுதர்சனனாலும், சுபாகுவினாலும் செய்விக்கப்பட்டதுதான் நவராத்திரி விழா.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற புனிதத் தத்துவத்தை உணர்த்தும் விழாவே இந்த ஆயுத பூஜை. இந்த ஆயுத பூஜை நம் நாட்டில் மத வேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் தொழிலுக்கு உதவக் கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய திருக்கோயில் பதிவில் கூத்தனூரில் அமைந்துள்ள அருள்மிகு மஹா சரஸ்வதி அம்மன் ஆலய தரிசனம் செய்வோம்.

திருக்கோயில் அமைவிடம்:
இந்த மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 km தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 20 km தொலைவில் அமைந்துள்ளது.


திருக்கோயில் அமைப்பு:
தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயில் இந்த கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்தான். இக்கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது.


கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக்கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

திருத்தல வரலாறு:
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தவர்
ஒட்டக்கூத்தர். இராமாயண காவியத்தில் ஏழாவது காண்டமாகிய உத்திரகாண்டத்தையும், குலோத்துங்க சோழனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட தக்கயாக பரணி என்ற நூலையும் படைத்த பெரும் புலவர் ஓட்டக்கூத்தர். இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். ஒட்டாக்கூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி தேவி. பிரம்ம லோகத்துக்கே தான்னால் தான் பெருமை என்று சரஸ்வதி, பிரம்மா என இருவருக்குள்ளும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக பூலோகத்தில், சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோமனை என்ற தம்பதிக்கு மகனாக பிரம்மா பிறந்தார். பகுகாந்தன் என்ற பெயர் சூட்டப் பெற்றார். சிரத்தை என்ற பெயருடன் சாஸ்வதி தேவி பிறந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாட்டை புண்ணியகீர்த்தி செய்யும் வேளையில், சிரத்தைக்கும், பகுகாந்தனுக்கும் முன்ஜென்ம நினைவு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர்.

சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். கங்காதேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதி தேவியும், பிரம்மனும் ஒன்று சேர்ந்தனர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமள நாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹா சரஸ்வதி அம்மனாகக் குடிகொண்டாள். இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது.


இக்கோயில் விஷேசங்கள்:
இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜய தசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிள்ளைகளை அன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் இக்கோயிலில் மழலைகளுக்கு முதன் முதலாக கல்வி போதிக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ் வருடப் பிறப்பிலிருந்து தொடங்கி நாற்பத்தைந்து நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். ஆடி, தை வெள்ளிகளில் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் அன்னைக்கு செய்விப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் நல்வித்தை பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நர்த்தன கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியன்றும், விநாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன. மூலைப் பிள்ளையாரிடம் தண்ணீரை நிரப்பி வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

பிரம்ம புரீஸ்வரருக்கு மகா சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது.

ஸ்ரீ குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை...


20 comments:

எல் கே said...

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கார்த்திக். உங்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி. உங்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

R. Gopi said...

தக்காய=தக்கயாக.

சகலகலாவல்லி மாலை எனக்கு மனப்பாடமாகத் தெரியும் # தற்பெருமை

CA பரீட்சைக்கும் முன்னும் பாஸ் செய்த அப்புறமும் கூத்தனூர் போய் இருக்கிறேன். நாகப்பட்டினம், மயிலாடுதுறை பக்கங்களில் ஆடிட் போகும் ஒவ்வொரு சமயமும் கூத்தனூர் போய் விடுவேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

நன்றி...!சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

திருவாரூர் அருகே கேது பகவானுக்கென தனி கோவில் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கின்றேன்
அது பற்றி தகவல் கிடைக்குமா..?

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
மாற்றிவிட்டேன் கோபி. சுட்டியமைக்கு மிக்க நன்றி.

சகலகலாவல்லி மாலை #சூப்பர்.

உங்களுக்கும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கீழ்பெரும்பள்ளம் கேது பகவான் கோயிலைப் பற்றியும் மிக விரைவில் பதிவிடுகிறேன்.

வாழ்த்துக்கு நன்றி தமிழ் அமுதன். உங்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

///புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் அமுதன்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கீழ்பெரும்பள்ளம் கேது பகவான் கோயிலைப் பற்றியும் மிக விரைவில் பதிவிடுகிறேன்.///

மிக்க நன்றி..!

ராமலக்ஷ்மி said...

இன்றைய தினத்துக்கு ஏற்ற பதிவு.

வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேடம். தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

இன்றைக்கு போகலாம் என இருந்தேன். முடியலை. அதானால என்ன இந்த பதிவை படிச்சாச்சு! சந்தோஷம்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி அபி அப்பா. நன்றியும் வாழ்த்துக்களும்.

Chitra said...

வாழ்த்துக்கள்.

வார்த்தை said...

15‍- 6 வருடங்கள் முன் இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்ல முடிந்தது.
ஊரும், கோவிலும், தெருக்களும் இன்னும் மனதில் உள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

@வார்த்தை,
ஆம், மிக அழகான சிற்றூர்.

தேவன் மாயம் said...

நவராத்திரி வாழ்த்துகள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி. தங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

மாதேவி said...

நவராத்திரி நாளில் "கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன்" பற்றி அறியக்கிடைத்தது மிக்கமகிழ்ச்சி.

விஜயதசமி வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மாதேவி. தங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails