Thursday, August 12, 2010


எறும்பீஸ்வரர் கோயில்

ஓம் நமச்சிவாய!!

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் திருச்சி அருள்மிகு திருஎறும்பீஸ்வரர் திருக்கோயிலை கண்டு மகிழ்வோம்.

கோயில் அமைவிடம்:
திருச்சி பொதுவாகவே கந்தக பூமி என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் உண்டு. இங்கே உள்ள மலைகள் எல்லாமே பாறைகள் நிறைந்த மலைகளாகவே உள்ளன. அதனாலேயே இங்கு வெய்யிலின் தாக்கம் அதிகம். இது போன்ற ஒரு பாறை மலையில் தான் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இத்திருக்கோயில் திருச்சியில் இருந்து சுமார் 25 km தொலைவில் திருச்சி, தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் என்னும் ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஜங்க்ஷன் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் செல்கின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் தொடர் வண்டிகளும் திருவெறும்பூரில் நின்று செல்கின்றன.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ( படும தீர்த்தம்)

நாம் எல்லோரும் தற்போது நிறைய கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் புவி வெப்பமயமாதல் (Global Warming) பற்றித்தான். ஆனால் அப்போதே இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கைதான் சிறந்தது என்று நம்பிய நம் முன்னோர்கள், ஒவ்வொரு திருகோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சம் என்று வளர்த்து வந்துள்ளனர். அவ்வாறு ஸ்தல விருட்சமாக உள்ள மரத்தை அவ்வூரில் யாரும் வெட்டுவதில்லை. இவ்வாறாக மரம் வெட்டப் படுவது தடுக்கப் பட்டு வந்துள்ளது. இன்றும் நாம் இந்த பழக்கத்தை தொடர்ந்தோம் என்றால் நமக்கும் நல்லது. இயற்கைக்கும் நல்லது.


திரு எரும்பீஸ்வரர் திருக்கோயில் பழமையான கோயில்களைப் பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோயில். தமிழகத்தில் உள்ள 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124-வது ஸ்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இது சோழர் காலக் கோயில். இக்கோயில் 120 அடி உயர மலையின் மேல் 125 படிகள் ஏறிச் சென்று காணும் வகையில் அமைந்துள்ளது.


தல
வரலாறு:
திருமாலும், பிரம்மனும், நைமிசாரண்ய ரிஷிகளும் வழிபட்ட கோயில் இத்திருக்கோயில். இந்திரனும் தேவரும் எறும்பு வடிவங்கொண்டு இக்கோயில் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். சுரங்கப் பாதை ஒன்று நால்வர் சன்னதி அடுத்துள்ள வாயில் வழியே மேலே மூடப்பட்டுள்ளது. சூரியன் 2 மனைவியரோடு காட்சி தருகிறார். மூல லிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால் நீர் விழாமல் பாதுகாக்கப் படுகிறது.


தாரகாசுரனை அழிக்க பிரம்மன் சொல்லியபடி எறும்பு வடிவில் தேவர்கள் அசுரர்களுக்குத் தெரியாமல் சிவ லிங்கத்தின் மேல் ஏற முயன்றனர். ஆனால் எண்ணெய்ப் பசையின் காரணமாக ஏற முடியாமல் கஷடப்பட்டனர். அதனால் சிவபிரான் புற்றாக மாறி, சொசொரப்புத் திருமேனி கொண்டார். நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் செவிசாய்த்துக் கேட்டுக் கொள்வது போல சிவலிங்
கம் சற்று சாய்ந்த நிலையில் காணப்படும். எறும்புகள் ஊர்ந்து சென்ற தடம் சிவலிங்கத்தின் மேல் தெரியும்.

சிவன் சன்னதியின் இடப்புறம் நவக்ரகங்கள் சன்னதியும், சிவன் சன்னதிக்கு வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!

****************

திருஎரும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை
மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!

இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!

கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!

நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்
நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!

14 comments:

Madhavan Srinivasagopalan said...

thanks for the info

ஸ்ரீ.... said...

புகைப்படங்களும், தகவல்களும் அழகு. (இன்னும் புகைப்படங்களைச் சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.)

ஸ்ரீ....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

நன்றி ஸ்ரீ. அடுத்த கோவில்கள் பற்றிய பதிவில் அதிக படங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.

vanathy said...

தகவலுக்கு நன்றி. திருச்சி கந்தக பூமியா?

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் வானதி.

Menaga Sathia said...

திருச்சி கந்தக பூமி என்பது இப்போழுது தான் எனக்குதெரியும்..புகைபடங்களும்,தகவல்களும் அருமை..பகிர்வுக்கு நன்றிங்க..நிறைய ஆன்மிகத்தலங்கள் எழுதுங்கள்..படிக்க ஆவலாக உள்ளேன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அவசியம் எழுதுகிறேன். நன்றி மேனகா.

ராம்ஜி_யாஹூ said...

many thanks for sharing

SABARIRAJAN said...

நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக அருமையாக உள்ளது. அக்கோவில் பற்றிய பாடல்களையும் அளிக்கலாமே?(திருநெடுங்களம் பதிவு போல)

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சபரிராஜன். முடிந்தவரை பாடல்களையும் சேர்த்து அளிக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான எழுத்து முறை. ஸ்தல விருட்சம் பற்றிய உங்கள் கருத்து அருமை.

ஆசிகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஸ்வாமிஜி.

R.Gopi said...

புவனா...

தங்களின் ஆன்மீக அறிவு என்னை சிலிர்க்க வைக்கிறது...

நல்ல பல ஆன்மீக பதிவுகளை தொடர்ந்து பதிந்து வருவதற்கு வாழ்த்துக்கள்....

இன்று உங்கள் தயவால் திருவெரும்பூர் எறும்பீஸ்வரர் பற்றி அறிந்தேன்...

தொடர்ந்து இது போல் நல்ல பல பதிவுகளை பதிய வேண்டுகிறேன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

Post a Comment

Related Posts with Thumbnails