Friday, July 16, 2010


சிங்கிரிகோயில்

எல்லாம் நரசிம்மனே! எதிலும் நரசிம்மனே!


திருக்கோயில் தரிசனம் என்பது அனைவருக்குமே மனதிற்கு ஆத்ம திருப்தியை அளிக்கக்கூடிய விஷயம். அவ்வாறு நாங்கள் சென்று தரிசனம் செய்த திருக்கோயில்களில் ஒன்று சிங்கிரிகோயில். நாம் நம் ஊருக்குள்ளேயே உள்ள கோயில்களை அன்றாடம் சென்று பார்த்து வருவது ஒரு ஆனந்தம் என்றால், நெடுந்தூரம் பயணம் செய்து, நாம் செய்த உணவினை மற்றவர்களுக்கு கொடுத்து, பின் தெய்வ ஆராதனைகளைக் கண்டு, பின்னர் மீண்டும் பயணம் செய்து நம் வீட்டிற்கு வருவது என்பது வேறுவித ஆனந்தம்.


இக்கோயிலை நாங்கள் வேலூரிலிருந்து சென்று தரிசித்துவந்தோம். வேலூர் ஒரு வரலாற்று சிறப்பு நிறைந்த ஊர் ஆகும். நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் ஊர் வேலூர். 1806-ம் ஆண்டு வாக்கில் இந்திய சுதந்திரப்போராட்டம் நாடு முழுக்கப் பரவி ஒரு எழுச்சி உண்டாகக் காரணமாக இருந்த சிப்பாய் புரட்சி தொடங்கிய ஊர் இந்த வேலூர். நாடு சுதந்திரம் அடைந்து முதன்முதலாய் ஏற்றப்பட்ட நமது தேசியக்கொடி வேலூரில் இருந்துதான் நெய்து அனுப்பப்பட்டது. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது மிகப் பெரிய தொலைநோக்கி (telescope) வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த காவலூர் என்ற ஊரில்தான் உள்ளது. வேலூர் வெயிலுக்கு மட்டுமல்ல, இது போன்ற நிறைய விஷயங்களுக்கு பெயர் பெற்ற ஊர்.


வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 20 km தொலைவில் கண்ணமங்கலம் என்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர் உள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து காட்டுக்கானல்லூர் சாலையில் சென்றால் 5 km தொலைவில் இந்த சிங்கிரிகோயில் உள்ளது. ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றே. இந்த கோயில் பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது. இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் லக்ஷ்மி தேவி, நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருப்பார். இத்திருக்கோயிலில் ஸ்ரீ லக்ஷ்மி தேவி நரசிம்மரின் வலது மடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை நரசிம்மரிடம் கூறி நிறைவேற்றி வைக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியின் இடப் பக்கம், என் இதயத்தை திறந்து பார்த்தால் அதில் என் தாய் தந்தை வடிவில் ராமரும் சீதா தேவியும் இருப்பார்கள் என்று இதயத்தை பிளந்து காட்டி பக்திக்கு இலக்கணம் வகுத்த அனுமனின் சன்னதி உள்ளது. இக்கோயில் நரசிம்மரைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த சிறப்பு வாய்ந்த சிங்கிரிகோயில் சென்று நம் வாழ் நாளின் சில நாட்களை புண்ணிய நாட்களாக்குவோம்.


கண்ணமங்கலத்தில் இருந்து 15 km தொலைவில் படவேடு என்று ஒரு கிராமம் உள்ளது. அங்கு சுமார் 15 மிகப் பழைமையான திருக்கோயில்கள் உள்ளன. கைலாச விநாயகர் ஆலயம், படவேடு ரேணுகாதேவி ஆலயம், சுப்பிரமணியர் ஆலயம், ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலயம், கோட்டைமலையில் உள்ள பெருமாள் ஆலயம், சிவன் கோயில், ராமர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் என்று இன்னும் பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில் அனைத்தையும் TVS நிறுவனத்தார் மிகவும் சுத்தமாகவும், பழமை மாறாமலும் பராமரித்து வருகின்றனர். நம்மால் முடிந்தது நாம் கோயிலுக்கு செல்லும் பொழுது கோயிலை அசுத்தம் செய்யாமல், முடிந்தால் சுத்தம் செய்து புண்ணியம் பெறுவோமாக!

9 comments:

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

ராம்ஜி_யாஹூ said...

மிக நல்ல பதிவு. லக்ஸ்மி நரசிம்மரை வழி பட்டால் கடன் தொல்லைகள் குறையும் என்பது நம்பிக்கை

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ராம்ஜி.

puduvaisiva said...

புதுவை அருகில் அமைந்த மிக பழமையான புகழ் மிக்க கோயில்.

16 கைகளுடன் காட்சியளிக்கும் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் உள்ள திருக்கோயில் பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலிருந்து தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் வழியாக மடுகரை என்ற ஊருக்குச் செல்லும் பஸ் மார்கத்தில் அபிஷேகப்பாக்கத்திளிரிந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிங்கிரிகோயில் என்ற ஊர் உள்ளது.

(புதுவை-யில் இருந்து 3\4 (0.45 )மணிநேர பஸ் பயணத்தில் கோயிலை சென்று அடையலாம்.)

R.Gopi said...

//திருக்கோயில் தரிசனம் என்பது அனைவருக்குமே மனதிற்கு ஆத்ம திருப்தியை அளிக்கக்கூடிய விஷயம்.//

உண்மையே... நானும் இதை பலமுறை வாழ்வில் அனுபவித்து இருக்கிறேன்....

நரசிம்மர் மிகவும் உக்கிரமானவர் இல்லையோ!!

//பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது. இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். //

ஆஹா.... திவ்ய தரிசனம்.... காண கண் கோடி வேண்டும்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு மிக்க நன்றி சிவா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆமாம் கோபி.

R. Gopi said...

'நாளை என்பதே நரசிம்ஹனிடம் இல்லை' என்பார்கள். மற்ற அவதாரத்துக்கெல்லாம் பெருமாளுக்கு நேரமிருந்தது. இந்த அவதாரம் மட்டும் சட்டெனத் தோன்றிய ஒன்று. குழந்தை (பிரஹலாதன்) எந்தத் தூணைக் காட்டினாலும் அதில் தோன்ற வேண்டும் என்று எல்லாத் தூணிலும் பெருமாள் இருந்ததாகச் சொல்வார்கள். அதனால்தான் நரசிம்ஹனை வழிபட்டால் விரைவான அதிகமான பலன் கிடைக்கும் என்பார்கள்.

சிங்கிரி கோயிலுக்கு 1 .5 ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். மீண்டும் அதைப் பற்றிப் படிக்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

Post a Comment

Related Posts with Thumbnails