Saturday, July 24, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 2

திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய திருநீலகண்டப் பதிகம்:
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்கள் செய்தருளும் தனிப்பெருங் கடவுளாம் அருள்மிகு நடராஜப் பெருமான், நாம் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு தகுந்தவாறு அருள் செய்கிறார்.

நம் முதற்குருநாதர் ஆகிய திருஞானசம்பந்தர், அவர் வாழ்ந்தருளிய காலத்தே தோன்றிய காய்ச்சல் நோய் நீங்கும் பொருட்டு பாடியருளிய திருநீலகண்டப் பதிகத்தை, நாம் அனைவரும் பக்தியோடு பாடிப் பெருமானைப் போற்றுவோம்.


அவ் வினைக்கு இவ்வினை ஆம்என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(1)

காவினை இட்டும் குளம்பலதொட்டும் கனிமனத்தால்
ஏ வினையால் எயில்மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலர்அடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(2)

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச்சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(3)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண்இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(4)

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(5)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்புஇலித் தீவினைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(6-7)

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர்கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்ந்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(8)

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன்வாது செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அறியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றம் அது ஆம்வினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(9)

சாக்கியப்பட்டும் சமண்உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்!
(10)

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல்அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே!
(11)

திருச்சிற்றம்பலம்!

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

அற்புதமான வரிகள்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Menaga Sathia said...

thxs for sharing..

R.Gopi said...

புவனா மேடம்...

திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய திருநீலகண்டப் பதிகம் மிக நன்றாக இருந்தது...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

ஒரு கேள்வி.... இந்த பாடல்களுக்கு விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி. இனி முடிந்த வரையில் விளக்கத்துடன் பதிவிடுகிறேன்.

Akila said...

you have nice blog..

Keep it up...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அகிலா.

Post a Comment

Related Posts with Thumbnails