Tuesday, June 29, 2010


இறையருள்

வணக்கம்.

வாழும் தெய்வங்களான என் பெற்றோரை வணங்குகிறேன். என் இஷ்ட தெய்வங்களான கணபதியையும் நரசிம்ஹரையும் வணங்கி இந்த நல்ல விஷயத்தை தொடங்குகிறேன். இங்கே நான் சென்று பார்த்த திருக்கோயில்களைப் பற்றியும், நான் சென்று பார்த்த சுற்றுலா தலங்களைப் பற்றியும், நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும் சந்திக்கும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று திருக்கோயில்கள். திருக்கோயில்கள் என்பவை நமது இந்திய மக்களோடு, இந்திய கலாசாரத்தோடு பிண்ணிப் பிணைந்த ஒரு விஷயம். திருக்கோயில்கள் கடவுளின் இருப்பிடமாக மட்டுமல்லாது, நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், கலை, அப்போது ஆண்ட மன்னர்களுடைய வரலாறு போன்ற செய்திகளை நாம் தெரிந்து கொள்வதற்கான காலக் கண்ணாடிகளாக இந்த திருக்கோயில்கள் அமைந்துள்ளன.


திருநீறு இல்லாத நெற்றியும் கோயில் இல்லாத ஊரும் பாழ்
என்பது ஆன்றோர் வாக்கு. இதனை கருத்தில் கொண்டுதான் அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நிறைய கோயில்களைக் கட்டினர். நாம் கோயில்களுக்கு செல்வதால் நம் மனம் மட்டுமல்லாது உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. நாம் இப்போது மேற்கொள்ளும் நடைப் பயிற்சியினால் கிடைக்கும் பயனை அப்போது கோயில் பிரகாரத்தை சுற்றியே பெற்றார்கள். எப்படியென்றால் கோயில் பிரகாரப் பாதையில் கருங்கல் தரையில் நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்புகள் மூலமாக நமக்கு உள்ள உடல் உபாதைகள் தீரும். கோயிலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் அதிர்வலைகள் நமக்கு நன்மைகளை அளிக்கும். அங்கு நமக்கு தரப்படும் பிரசாதங்களை ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணும்போது கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற நெறி நிலைநாட்டப் படுகிறது. அக்காலத்தில் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளை வளர்க்கும் இடமாகவும், பலவிதமான சிற்பவேலைப் பாடுகளின் இருப்பிடமாகவும் திருக்கோயில்கள் இருந்துள்ளன. அக்காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மக்களுக்கு உறைவிடமாகவும், போர் காலங்களில் மன்னரோ மக்களோ எதிரி நாட்டினரிடமிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ளும் மறைவிடங்களாகவும் இருந்துள்ளன. இவ்வாறு கோயில்கள் அப்போதும் சரி இப்போதும் சரி நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கழுக்காணிமுட்டம் என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் முன் மண்டபத்தை சீரமைப்பதற்காக நிலத்தை தோண்டும்போது 87 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவை சோழர் காலத்து செப்பேடுகள். இதிலிருந்தே கோயில்கள் வரலாற்றை காட்டும் கண்ணாடி என்பது தெரிகிறது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தியை நமக்குக் காட்டும் திருக்கோயில்களை நாம் அன்றாடம் சென்று தரிசித்து அங்கே நெய் விளக்குகளை ஏற்றி வைத்து அதனால் கிடைக்கும் புண்ணியம் மட்டுமே காலங்களை கடந்து நிற்கும் நம் திருக்கோயில்களைப் போல நமது சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் நிலையான சொத்து ஆகும்.


நன்றி,
புவனேஸ்வரி ராமநாதன்


10 comments:

Anonymous said...

good opening

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி பாலராஜன்கீதா.

priya said...

Interesting..........

புவனேஸ்வரி ராமநாதன் said...

Thanks Priya.

R.Gopi said...

அசத்தல் ஆரம்பம் புவனா....

//நாம் நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும் சந்திக்கும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று திருக்கோயில்கள்.//

மிக மிக உண்மை....

நிறைய எழுதுங்கள்.....

cheena (சீனா) said...

அன்பின் புவனேஷ்வரி

நல்ல துவக்கம் - ஆன்மீக செய்திகள் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

கோயில்கள் அப்போதும் சரி இப்போதும் சரி நம் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது.


அருமையான பகிர்வுகள்.. நிறைவான பாராட்டுக்கள்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@இராஜராஜேஸ்வரி....

வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

Post a Comment

Related Posts with Thumbnails