தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
"ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர"
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்
என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.
அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்
இவ்வாறாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி திருத்தலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
திருத்தலம் அமைவிடம்:
ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம் : சூரிய ஸ்தலம்
தலவரலாறு:
கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத நூல்களை அபகரித்துச் சென்றான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பிரம்மா மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்தார். இதனைக் கண்ட பெருமாள், பிரம்மனுக்கு காட்சி தந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கோமுகாசுரனை அழித்து வேத சாஸ்திரங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுகோளின்படி இங்கேயே வைகுண்டநாதர் என்ற பெயருடன் எழுந்தருளினார். பிரம்மனும் தாமிரபரணி தீர்த்தத்தினை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வித்த காரணத்தாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவியதாலும் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு இக்கோயில் வழிபாடுகளின்றி, பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் மறைந்திருந்தது. இச்சமயத்தில், அரண்மனை மாடு, மேய்ச்சலுக்கு செல்லும் போது தினமும், அங்குள்ள ஒரு புற்றின்மேல் பாலை சுரந்துகொண்டு இருந்தது. இதனை அறிந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்தார். அங்கே சுவாமி சிலை இருப்பதைக் கண்டு, புதையுண்டு கிடந்த திருக்கோயிலையும் புனர் நிர்மாணம் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தார். பாண்டிய மன்னர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தமையால் பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயரும் உண்டானது.
தல பெருமை:
நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கையில் தண்டத்துடனும், ஆதி சேஷனைக் குடையாகவும் கொண்டு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, கோயிலின் கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தி இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
தலச்சிறப்பு:
வைகுண்டநாதப் பெருமாளின் பக்தர் காலதூஷகன் என்ற திருடன். இந்த காலதூஷகன் பல இடங்களில் திருடியவற்றில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை மக்கள் சேவைக்கும் செலவிட்டான். ஒருமுறை மணப்படை என்ற ஊரில் அரண்மனைப் பொருள்களை திருடச்சென்ற போது காலதூஷகனின் ஆட்கள் அரண்மனை காவலர்களிடம் பிடிபட்டார்கள். அவர்கள் மூலம் காலதூஷகனின் இருப்பிடம் அறிந்த காவலர்கள், அவனை சிறை எடுக்கச் சென்றனர். அப்போது தானே திருடன் வடிவில் வைகுந்தப் பெருமாள் அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை விசாரித்த அரசரிடம், வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன் எனவும், நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, அந்நாட்டை ஆளும் மன்னன் சரியான விதத்தில் அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே தான் திருடியதற்கு மன்னனே காரணம் என்று தைரியமாக கூறினார். இந்தப் புராணத்தைக் கேட்கும்போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியின் வீர முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு தன் முன் நின்று ஒரு திருடனால் தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த மன்னன், வந்திருப்பது பெருமாளே என அறிந்தார். தான் செய்த தவறையும் உணர்ந்தார். பெருமாள் திருடனது வடிவில் வந்தாலும் அனைவரையும் மயக்கும் அழகிய தோற்றத்தில் இருந்த படியால் அன்று முதல் கள்ளபிரான் என்று அழைக்கப்பட்டார்.
தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர். 108 திவ்ய தேசங்களிலும் உள்ள அனைத்துப் பெருமாளும் இந்த தினத்தில் கள்ளபிரானாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம்.
வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் திருக்கோயில்களின் சிறப்பம்சமே உலகமே வியக்கும் சிற்ப வேலைப்பாடுகள்தான். இந்த ஸ்ரீ கள்ளபிரான் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல. இக்கோயில் சிற்பங்களும் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள்.
தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையில
னேருடுத்த சிந்தை நிலையறி அயன் - போருடுத்த
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய் நாடுஞ்
சீவைகுந்தம் பாடும் தெளிந்து
- (108 திருப்பதி அந்தாதி)
21 comments:
அட... நம்மூரு கோவிலை அட்டகாசமா போட்டோ பிடிச்சு போட்டீங்களே.... நேரில் பார்த்த மாதிரியே இருக்கு. நன்றி
ஆஹா....
கள்ளபிரான் திருக்கோவில் தரிசனம் கண்டேன்...
விரிவான விளக்கங்களுடன், அருமையான புகைப்படங்களுடன் கூடவே பெருமாளின் தரிசனமும் முடிந்தது...
நன்றி.... நன்றி..........
எங்களின் நிறுவனத்தில் சார்பாக அழைத்து சென்றார்கள் நவதிருப்பதிக்கு ஆனால் என்னால் செல்ல முடியவில்லையே என்று பல நாள் கவலைப்பட்டேன். ஆனால் மிகுந்த அக்கறையோடு தயாரித்த இந்த விளக்க உரையை படித்தபின் நானே சென்று கடவுளை வணங்கியது போன்ற உணர்வு என்னை சிலிர்க்க வைத்தது.
நீண்டநாள் தாகத்தை தணித்த தங்கை புவனா நன்றிகள் பல உங்களுக்கு...
Good post & Pictures..Keep it up
One sugession..Try to give unique info which is not available in the net already so tht readers can get some new info
Thanks
Sa Sankar
ரொம்ப மகிழ்ச்சி வெங்கடேஷ் கண்ணா. நன்றி.
மிக்க நன்றி கோபி.
மிக்க நன்றி கமலகண்ணன்.
மேலும் புதிய தகவல்களை தர முயற்சி செய்கிறேன். ஆலோசனைக்கு நன்றி சங்கர்.
அருமையான பகிர்வு. மிக்க நன்றி. அற்புதமான சிற்பங்கள். அந்த யாழித் தூண்கள் வெகு அழகு. அதே போன்றதொரு மண்டபம் நெல்லையப்பர் கோவிலிலும் உண்டு. நான் எடுத்த படம்: http://www.flickr.com/photos/27182698@N05/4949083920/in/photostream/
Wow.. fantastic informations.. with appropriate fotos.. keep posting such..
nice post!! thxs for sharing..
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம். நீங்கள் எடுத்த யாழித் தூண்கள் படம் மிக அழகு.
மிக்க நன்றி மாதவன்.
மிக்க நன்றி மேனகா.
அருமையான பகிர்வு.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
நல்ல பதிவு. கள்ளபிரான் பற்றிப் பாண்டியநாட்டு திவ்யதேசம் பற்றிய பதிவுகளில் எழுதுவேன்.
நன்றி கோபி.
ஒவ்வொரு கோவிலைப் பற்றியும் இவ்வளவு அழகாக, பொறுமையாக , விளக்கமாகப் படங்களுடன் விளக்கியுள்ளீர்கள்.நேரிலே சென்று தரிசனம் செய்தது போலவே உள்ளது.மிக்க நன்றி.
மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
அட இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டனே..ரொம்ப அருமையான பரவசம் தரும் பதிவு
ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்//
சூப்பர் இதுவரை நான் கேள்விபடாத தகவல்..நிறைய ஆச்சர்யத்தை தருகிறது.மிக்க நன்றி
மிக்க நன்றி சதீஷ்குமார்.
Madam, I saw your write up about Srivaikuntam Temple. Very interesting and useful! I do not know how you missed the other Goddess in the temple- Choranayaki. Vaikuntanayaki sannadhi is on the right side of the swamy and the Choranayaki sannadhi is on the left side.
தாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன கருத்துக்களுக்கும்,
தங்களது வருகைக்கும் மிக்க நன்றி சாய்கிருஷ்ணன்.
அன்புடையீர்,
வணக்கம்.
நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.
அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.
படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
Post a Comment