திருக்கோயில் அமைவிடம்:
இந்த அழகிய வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் உள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து 18 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 km தொலைவிலும் அமைந்துள்ளது.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : வெங்கடாசலபதி (ஸ்ரீநிவாச பெருமாள்)
தல இறைவி : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : புளியமரம்
தல வரலாறு:
சுபகண்டன் என்னும் அரசனுக்கு தீராத நோய் ஏற்பட்டு, அந்நோயின் காரணமாக உடல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். அதன் காரணமாக திருப்பதி சென்று ஏழுமலையானிடம் தனது உடல் உபாதையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மனமுருக வேண்டிக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற திருப்பதி வேங்கடவன், சந்தன மரத்தால் ஆன தேர் ஒன்றை செய்யும்படியும், அவ்வாறு தேர் செய்யும்போது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும் எனவும், அந்த சந்தனக் கட்டைகளை, தென்பாண்டி நாட்டிற்கு எடுத்துச் சென்று, கருங்குளத்தில் உள்ள வகுளகிரிமலையில் பிரதிஷ்டை செய்தால் அங்கு வாழும் எல்லா மக்களும் நல வாழ்வு பெறுவர் எனவும், அவ்வாறு செய்தால் மன்னரின் உடல் உபாதை சரியாகும் எனவும், திருமலையின் நாயகன், மன்னரின் கனவில் வந்து கூறினார்.
இறைவனின் அருள்வாக்கின்படியே மன்னர் தேர் செய்து மீதமான இரண்டு சந்தனக் கட்டைகளை கருங்குளத்தில் பிரதிஷ்டை செய்தார். அவரது வேதனையும் தீர்ந்தது.
திருத்தலப் பெருமை:
பொதுவாக எல்லா கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோயில் கற்பக்ரஹ சுவாமி சந்தனக் கட்டையால் ஆனவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியே நவதிருப்பதி கோயில்கள் உள்ளன. இந்த நவதிருப்பதி கோயில்களுக்கும், இந்த கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. எவ்வாறென்றால், நாம் நவதிருப்பதி கோயில்களை தரிசனம் செய்வதற்கு முன்னால் இந்த வெங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், எல்லா நவதிருப்பதி கோயில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைப் போலவே முதலில் வேங்கடவனை தரிசித்து பின் நவதிருப்பதி காணச் சென்ற எங்களுக்கு அத்தனை கோயில்களின் தரிசனமும் முழுமையாகக் கிடைத்தது. வேங்கடவனுக்கு நன்றி!!!
தலச் சிறப்பு:
இக்கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோயில். இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மிக அழகிய கோயில். இக்கோயில் அமைந்துள்ள இடம் நம் நகரங்களில் பார்த்திட முடியாத, இயற்கை அழகு நிறைந்த, சுத்தமான காற்று வீசும் பகுதியில் அமைந்துள்ளது. வெங்கடாசலபதிக்கு தினமும் திருமஞ்சனம் என்பது சிறப்பு. விஷ்ணு தாரு ரூபமாக காட்சி தரும் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது திருப்பதி திருமலைக்குச் சென்று வருவதற்குச் சமம் என்று சொல்கிறார்கள். இக்கோயில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை. அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இக்கோயில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன.
வகுளகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் வகுளகிரி க்ஷேத்திரம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வேண்டிக் கொண்டு சித்திரான்னங்களாகிய தேங்காய் சாதம், புளியஞ் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்ற இவற்றை சுவாமிக்கு படையல் போட்டு அனைவருக்கும் பிரசாதமாகத் தருவர். இங்கிருக்கும் வெங்கடாசலபதி மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர். அதனாலேயே பல இருதய நோய் சிகிச்சை நிபுணர்கள் இங்கு வந்து தாங்கள் செய்யும் மருத்துவம் எல்லோரது நோய்களையும் சரிபடுத்த வேண்டும் என்றுவேண்டிச் செல்வர்.
சித்திராப் பௌர்ணமி விழா இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுகிறது. பவித்ரோத்சவம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாசிமகமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வகுளாசல வாஸாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே
தாருரூபாய ஸத்யாய நமஸ்தே பரமாத்மனே !!
14 comments:
பலமுறை சென்றிருக்கிறேன். சமீபத்தில் சென்றபோது புகைப்படங்களும் எடுத்தேன். விரிவான விவரங்களுக்கு நன்றி.
Very nice write up and also informative
இப்போழுது இத்திருத்தலத்தை கேள்விபடுகிறேன்..பகிர்ந்தமைக்கு நன்றி!!
nice post and nice photos
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி பது.
நன்றி மேனகா.
நன்றி சித்ரா.
Thanks for the useful information.
fotos are very nice.
நன்றி மாதவன்.
கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோயில் ஸ்தல புராணம் வழக்கம் போலவே பலேவா இருந்தது...
விரிவாக எழுதப்பட்டமையும், கூடவே புகைப்படங்களை இணைத்தமையும் நன்றாக இருந்தது....
//திருத்தலப் பெருமை:
பொதுவாக எல்லா கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோயில் கற்பக்ரஹ சுவாமி சந்தனக் கட்டையால் ஆனவர்//
இந்த அரிய தகவலை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...
மிக்க நன்றி கோபி.
I have gone to this temple long back. Love this Temple and environment very much. Still I cherish the memories very much.Thanks for the beautiful post on Karungulam, Vengatajalapathy temple.All your posts on religious tour is superb.
If possible, pls make a post on Tirunelveli, Nellai Appar... That's a very big and divine one too.
நெல்லையப்பர் கோயில் பற்றி கூடிய விரைவில் பதிவிடுகிறேன். மிக்க நன்றி விக்கி.
can you please tell me how many steps are there in this temple and how long did it take to climb. i am planning to visit this temple with a 71 year old arthritis patient, are there any ghat road to reach the temple.thanks in advance
ஐயா, அருள்மிகு கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோயிலை படிகள் வழியாக மட்டுமல்ல சாலை மார்க்கமாகவும் சென்று அடையலாம். ஒரு சிறிய குன்றில்தான் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் குறைந்த அளவு படிகளே உள்ளன. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ என அனைத்தும் திருக்கோயில் வாசல் வரை செல்லும் அளவிற்கு மேலே இட வசதியும் சாலை வசதியும் உள்ளது. அதனால் சிரமமின்றி இறைவனை தரிசிக்க வசதி உள்ளது. வெங்கடாசலபதியை கண்ணார மனதார சென்று தரிசித்து வாருங்கள். விரைவிலேயே தெய்வதரிசனம் கிடைக்கப் பெற வாழ்த்துக்கள்.
thank you so much madam, your information was very helpful.
Post a Comment