Friday, May 4, 2012


நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர


என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்



கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:
சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):
சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:
புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:
குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
மேலும் விவரங்களுக்கு...



தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:
சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:
சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன. இந்த திருத்தலங்களைப் பற்றியும், அத்திருக்கோயில்களை தரிசனம் செய்து, எழுதவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய அவா. நிச்சயம் செய்ய முயல்வேன்.

இப்போது நம் அனைவருக்குமே கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம், நமக்குக் கிடைத்துள்ள கோடை விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாமல், இது போன்ற பல்வேறு திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், நம் முன்னோர்களது வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் எத்தகைய பெருமை மிகுந்த சிறப்பான வாழ்க்கையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதையும், நமது கோயில்களின் கலை நுணுக்கங்களையும், வண்ணக் கலவைகளையும், சிற்ப வேலைப் பாடுகளையும், அவை இத்தனை காலங்கள் ஆகியும் நிமிர்ந்து நிற்பதன் மேன்மையையும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற சமதர்ம சன்மார்கத்தையும், அவர்களுக்கு நேரடியாகக் காண்பித்து, நமக்கு எத்தனை பெருமை மிகு பின்னணி உள்ளது என்பதையும், அவற்றை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது போன்ற பொன்னான விஷயங்களை அவர்களது மனதின் ஆழத்தில் விதைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும். வாழ்க வளர்க நமது திருக்கோயில்களும், அவற்றின் பெருமைகளும்!!

Thursday, May 3, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் கேது ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


சிந்தையாலும் சொல்லாலும் செய்கை னாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்றடைந்து வண்குரு கூர வர் சடகோபன் சொல்
முந்தை ஆயிரத்துள்ளி இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லர் அடி மை செய்வார் திருமாலுக்கே!!


திருத்தல அமைவிடம்:
இந்த கேது ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்


திருத்தல வரலாறு:
தேவர்பிரான் திருக்கோயிலில் யாகம் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்த சுப்ரபர், தினப்படி திருக்கோயிலின் அருகில் அமைந்திருந்த திருக்குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து தேவர்பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார். நம் கையால் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சூடிபார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் அளவே இல்லைதான். அத்தகைய மனநிறைவுடன் தன் வேலைகளை, சுவாமி கைங்கர்யங்களை அன்றாடம் செய்து வந்து கொண்டிருந்தார் சுப்ரபர். தனக்கு மாலை சூட்டி வணங்கும் சுப்ரபரின் பக்தியில் மனம் மகிழ்ந்த தேவர்பிரான், அவர் நாள்தோறும் எங்கிருந்து தனக்கு மலர் மாலை கொண்டுவந்து அணிவிக்கிறார் என்பதை அறிய ஆசைகொண்டு, முனிவர் பெருமான் தோட்டத்தில் உள்ள பொய்கைக்கு செல்லும் நேரம் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தார்.


அங்கு வந்த தேவர்பிரான், அந்தப் பொய்கையின் வளமையையும், பசுமையையும், குளிர்ச்சியான தோற்றப் பொலிவும் கண்டு, முனிவரை நெருங்கி அவரிடம், "முனிவரே, இந்த இடம் மிகவும் குளிர்ச்சி மிகுந்ததாகவும், மலர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது, இங்குள்ள மலர்களைப் பொழியும் மரங்களின் மீது மலய மலையில் இருந்து வீசுகின்ற தென்றல் தவழ்ந்தோடுகிறது. இந்த இடம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது, அதனால் இந்த சுகந்தமான பொய்கையின் கரையிலேயே நான் வாசம் செய்ய விரும்புகிறேன், உமது யாகசாலையில் தேவநாதனாகவும், இந்தத் தூய்மையான தடாகத்தில் அரவிந்தலோசனாகவும் குடியிருக்கப் போகிறேன். இன்றிலிருந்து தடாகங்களின் கரையோரம் அமைந்துள்ள எனக்கும், எனக்குத் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள தேவர்பிரானையும் தாமரை மலர்களால் பூஜை செய்வீர்களாக", என்று சுப்ரப முனிவரிடம் கூறி அருளினார். அதுமுதல் இரட்டை திருப்பதியில் அமைந்துள்ள இரண்டு திருமாலுக்கும் தாமரை மலர்களால் அன்றாடம் அர்ச்சனை செய்து இறைவனடி சேர்ந்தார் சுப்ரப முனிவர்.

அரவிந்த லோசனர் அஸ்வினி தேவர்களுக்கு வரம் அளித்த வரலாறு:
முன்னொரு காலத்தில் அஸ்வினி தேவர்கள் என இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரம்மதேவனிடம் சென்று, "உலகில் செய்யப்படும் வேள்விகளிலும், யாகங்களிலும் இருந்து தேவர்களுக்கு கிடைப்பதுபோல எங்களுக்கும் பங்கு வேண்டும்" எனக் கேட்டனர். மக்களுக்கு வைத்தியம் செய்யும் நீங்கள், உங்களுக்கும் யாகத்தில் பாகம் வேண்டும் என்று விரும்பினால் பூலோகத்திற்குச் சென்று அங்கு திருத்தொலைவில்லிமங்கலம் என்ற இடத்தில் வாசம் செய்யும் தேவநாதன், அரவிந்தலோசனர் என்னும் இரண்டு பெருமாளையும் வணங்கி தவமிருக்க, நீங்கள் வேண்டியது கிடைக்கும், என பிரம்மன் அருளினார்.

அதுபோலவே தொலைவில்லிமங்கலம் வந்த அஸ்வினி தேவர்கள், இத்தல தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் மனதார எண்ணி தவமியற்றினர். அவர்களது அன்பிற்கும், பக்திக்கும் மனமிரங்கிய பெருமான், அஸ்வினி தேவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அஸ்வினி தேவர்கள்,"யாகங்களில் இருந்து தேவர்களுக்குக் கிடைப்பது போல பாகம் எங்களுக்கும் வேண்டும்" எனக் கேட்டனர். உடனே திருமால் தேவர்களைப் பார்த்து இவர்கள் என்மீது கொண்ட பக்தியின் பலனாக இவர்களுக்கும் இன்றிலிருந்து யாகத்தில் பாகம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டார். அஸ்வினி தேவர்கள் இருவரும் இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி என் மீது தவம் இருந்த காரணத்தால் இன்று முதல் இந்த தீர்த்தம் அஸ்வினி தீர்த்தம் என அழைக்கப்படும்" என்றார் பெருமாள்.


அஸ்வினி தீர்த்த மகிமை:
பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாக இமயமலைக்குத் தென் புறமாக, கங்கை நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்தியசீலர் என்பவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது என மூன்று பேரும் ஆவர். இதில் விபீதகன் சரும நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனது நோய் தீர்ந்தபாடில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த நாரத பெருமானிடம், தனது பிள்ளை விபீதகன் இவ்வாறு நோயால் அவதிப்பட என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு நாரதர், "இவன் தனது முற்பிறவியில் தனது குருவின் பசுவைத் திருடிவிட்டான், அதனால் அவனது குரு தந்த சாபத்தினால், இப்பிறவியில் விபீதகனுக்கு இந்த சரும நோய் பீடித்துள்ளது" எனக் கூறினார். மேலும், "தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தொலைவில்லிமங்கலம் சென்று, அங்குள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் உன் உடல் உபத்திரவம் தீரும்" எனவும் கூறி அருளினார் நாரதர். அவ்வாறே விபீதகனும் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி தனது நோயிலிருந்து விடுபட்டான். விபீதகன் அங்கேயே தங்கி தேவர்பிரானுக்கும், அரவிந்தலோசனருக்கும் சேவை புரிந்து முகுந்த பெருமானால் முக்தி பெற்றான்.



இந்தத் திருத்தலமும் வனத்திற்கு நடுவிலேயே அமைந்து மிகவும் அமைதியான சூழ்நிலையில் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளேயே பசுமாடுகள் வளர்க்கப் படுகின்றன. வனங்களுக்கு இடையில் திருக்கோயில் அமைந்துள்ளதால் வீடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் திருக்கோயில் சிப்பந்திகளுக்கு திருத்தலத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு உள்ளேயே பூங்காக்கள் அமைக்கப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



வேலூருக்கு அருகில் அமைந்துள்ள படவேடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ள புண்ணியமிகு திருத்தலங்களில் ஏறக்குறைய 14 திருத்தலங்களை TVS நிறுவனத்தார் தங்களது மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து, அவற்றை மிகவும் தூய்மையாகவும், அழகாகவும் பராமரித்து வருகின்றனர். அதுபோலவே இங்கு அமைந்துள்ள நவ திருப்பதி ஆலயங்களையும் அதே TVS நிறுவனத்தரே மிகுந்த கர்ம சிரத்தையுடன் பாதுகாத்து வருகின்றனர். இது போல நாமும் நம் நாட்டின் பெருமைகளான, அழியாத சொத்துக்களாக விளங்கும் திருக்கோயில்களை சிறப்பாகப் பேணி காத்திட நம்மால் முடிந்ததை செயல்படுத்திடவேண்டும். நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்களே நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான நிலையான சொத்து.

Wednesday, May 2, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் ராகு ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே!!
நம்மாழ்வார்

திருத்தலம் அமைவிடம்:
இந்த ராகு ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்


திருத்தல வரலாறு:
திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உரு மாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளி வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், "நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள்" எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், "நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, "இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்" என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.

இத்திருக்கோயிலின் கோபுரங்களில் சிவபிரானின் வடிவமான மரத்தின் அடியிலே அமர்ந்து தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஒரு தனிச் சிறப்பு.
இந்த இரட்டை திருப்பதி தலத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இரண்டு திருத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் அருகிலே வீடுகள் அதிகம் காணப்படவில்லை. வனங்களுக்கு நடுவிலேதான் இத்திருக்கோயில்கள் அமைந்துள்ளன. மிகவும் தூய்மையாக, சுத்தமாகத் திருக்கோயிலை பராமரித்து வருகின்றனர் இத்தலத்தை. தூய்மை இருக்கும் இடத்தில் இறைவன் குடியிருப்பான்.


வாயும் மனைவியர் பூமங்கையார்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம்படைகள் தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள் புருவமேனி
மலையில் இமம் கலந்தவாள்!!
108 திருப்பதி அந்தாதி

Related Posts with Thumbnails