Monday, November 1, 2010


திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூர்.


திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோயில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோயிலை தரிசனம் புரிய சென்ற அழகிய மாலைப் பொழுதில் மழை பூத்தூறல் போட்டு பூமியை நனைத்துக் கொண்டிருந்தது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள பேரளத்தில் இறங்கி அங்கிருந்து திருமீயச்சூர் சாலையில் செல்ல ஆரம்பிக்கும்போதே இத்திருக்கோயில் கோபுரம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. அந்த கிராமத்து சாலையின் இரு மருங்கிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக பச்சைப் பசேலென வயல்வெளிகளைக் கண்டதும் மனம் ஏங்கியது, இங்கேயே ஒரு குடிசை போட்டு குடியேறி விடலாம் என்று. அடர்ந்து காணப்பட்ட தென்னை மரங்களின் ஊடே தெரிந்த கோபுர தரிசனம் இயற்கையோடு இணைந்த தெய்வீக தரிசனம். இயற்கையே தெய்வம் என்று கருதுபவர்கள்தானே நாம்.


திருத்தலக் குறிப்பு:
இத்திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

லலிதாம்பிகை திருக்கோயில் குறிப்பு:
தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி


திருமீயச்சூர் பெருங்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார். முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.


இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஈஸ்வரனக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.


இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.

இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.


கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.


இளங்கோயிலின் குறிப்பு:
தல மூர்த்தி : அருள்மிகு ஸகல புவனேஸ்வரர்
தல இறைவி : அருள்மிகு வித்வன் மேகலாம்பிகா (மின்னும் மேகலையாள்)
தல விருட்சம் : மந்தார மரம்
தீர்த்தம் : காளி தீர்த்தம்

இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர் உள்ளனர். தலவிநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

இத்திருக்கோயில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும் என்பதை இக்கோயிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


திருத்தல வரலாறு:
காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' எண்டு கூறினார்.

இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ''நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்'' என்று கூறினார்.

இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். அருணன் சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று அவரை தரிசித்து வர சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியன் அருணனை பரிகசித்து, பெருமானை பார்க்கச் செல்ல உன்னால் முடியாது என்றும் கூறினான். நம்பிக்கை இழக்காத அருணன் இறைவனை நினைத்து தவமியற்றினான். சூரியன், இப்போதும் அருணனுக்கு பலவிதங்களில் தொல்லைகளைக் கொடுத்தாலும், தன் மனம் தளராத அருணன் மேலும் தீவிரமாக தவமிருந்தான்.

இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ''என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்'' என்று சாபமிட்டார். இதன் காரணமாக இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டது. சூரியன் இன்றி உலகம் இயங்காதே என வினவினார். கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார். ஈசன் சூரியனிடம் "எம்மை நீ ஏழு மாத காலம் வணங்கினால் உனது சாபம் நீங்கும்'' என்றார்.

அதன்படியே சூரியன் இத்திருக்கோயில் வந்து ஏழு மாத காலம் தவமிருந்து பூஜை செய்து வழிபட்ட பின்னரும் தனது கருமை வண்ணம் குறையவில்லையே என்று மனம் வருந்தி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறார். இவர் செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கோபம் கொண்ட பார்வதி தாயார், தானும் சாபமிட முற்படுகிறார். அவரி தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று கூறிவிட்டு, சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார்.

அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார். அன்னையின் திருவாயிலிருந்து வசினீ என்ற தேவதைகள் தோன்றி அவர்கள் துதித்த பாடல்களே சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் எனப் படுகிறது. அம்பாளே அருளிச் செய்ததால் லலிதா சஹஸ்ரநாமம் என்று அழைக்கப் படுகிறது. சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என விளிக்கப் படுகிறது.

திருக்கோயில் சிறப்பு:
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சூரியன் உதிக்கும் நேரத்தில் இவ்வாலய சிவலிங்கத்தின் மேல், கதிரவனின் செங்கதிர்கள் விழுவது இயற்கையின் கொடை. இயற்கையே இறைவன்.

சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உள்ளது என்பதால், சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளைத் தரவல்ல சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டை கலந்த சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இக்கோயில் ஐதீகம்.


ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீ லலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார். அவ்வாறே அகத்தியரும் இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து பூரண பலனைப் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

அமர்ந்த திருக்கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார் இத்தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை. நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று விடுவோம் அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தைக் காணும்போது. அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அன்னை லலிதாம்பிகை பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி என எல்லோரும் இணைந்த வடிவமாகத் திகழ்பவள்.

சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை பல ஆபரணங்கள் அணிந்த அன்னை, தனது பக்தை ஒருவரிடம் கொலுசு வாங்கி போட்டுக் கொண்டுள்ள அதிசயமும் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளது. பக்தையின் கனவில் தோன்றிய அன்னை தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை, அதனை தனக்கு அணிவிக்குமாறு கூறிச் சென்றுள்ளார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அந்த, பெரும் புண்ணியம் செய்த பக்தை அழகு கொலுசினை செய்து கொண்டு ஊர் ஊராக அலைந்து கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார். இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசிட துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர். தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசிட்ட பெண்ணும் மகிழ்ந்தார்.

பரபிரும்மத்தின் சக்திகள் அனைத்து இணைந்த வடிவமாகவே துதிக்கப் படுகிறாள் அன்னை லலிதாம்பிகை. இத்தலத்தில் லலிதாம்பிகையிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்தான் ஸ்ரீ ஹயக்ரீவர். அகத்தியரின் மனைவி இங்கு வந்து அன்னையை வழிபட்ட போது , அவருக்கு அம்பாள் நவரத்தினங்கள் வடிவில் காட்சி தந்தார். இதன் காரணமாகவே அகத்தியர் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எனத் தொடங்கும் லலிதா நவரத்தின மாலையை அருளிச் செய்து நல்ல பலன்களைப் பெற்றார்.

இத்திருத்தலத்தில் காணப்படும் அன்னையின் திருவுருவத்தை, வடிவத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பது இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.

****************

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தியானம்


அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை பாடல் வடிவம்


அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை எழுத்து வடிவம்


****************

திருமீயச்சூர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பாடல்:

காயச் செல்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே !!

பூவார் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே !!

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைச்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம்எய்தற் கரிதன்றே !!

வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடமாடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே !!

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்று உடையார் மீயச் சூராரே !!

குளிரும் சடைகொள் முடிமேல் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகொடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட(ம்) நவில்நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே !!

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாம் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழகர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே !!

புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற்கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வண்கண் அரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே !!

காதில் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனு(ம்) மாலும் தொழப் பொங்கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே !!

கண்டார் நாணும் படியார் கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே !!

வேட முடைய பெருமான் உரையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே !!

திருச்சிற்றம்பலம் !!!!!

29 comments:

Kurinji said...

Really gr8...

RVS said...

அந்த பக்தையின் கொலுசு காணிக்கை சக்தியிலோ பக்தியிலோ படித்து பரவசம் அடைந்தேன். நல்ல பதிவு. ஏனைய சிவன் கோவில்களைக் காட்டிலும் இந்தக் கோயிலில் அம்மனை தரிசித்துவிட்டுதான் சிவனை தரிசிக்கவேண்டும் என்று ஐதீகம் உள்ளது. பகிர்வுக்கு நன்றி. ;-)

தமிழ் உதயம் said...

உங்க பதிவில் வரும் கோபுர படங்களை நான் விரும்பி எடுத்து கொள்கிறேன்.

புதிய மனிதா. said...

அருமையான தகவல்கள் .

Gayathri Kumar said...

Kurippugal arumai..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி குறிஞ்சி.

நன்றி ஆர்.வி.எஸ்.

மிக்க மகிழ்ச்சி ரமேஷ். நன்றி.

நன்றி புதிய மனிதா.

நன்றி காயத்ரி.

Ms.Chitchat said...

Enjoyed browsing thro' ur space and loved it. Arumaiyana kurippugal,padangalum arumai. Migavum aanandha padugirein to follow u:):)

Chitchat

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி.

Menaga Sathia said...

super photos..thxs to know abt this temple!!

vanathy said...

thanks 4 sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

நன்றி வானதி.

ராம்ஜி_யாஹூ said...

many thanks for sharing

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. ஈஸ்வரன் லலிதாம்பிகை சிற்பங்களுக்கான விளக்கத்தையும் ரசித்தேன்.

R. Gopi said...

சூப்பர்

Chitra said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

dondu(#11168674346665545885) said...

அந்த கொலுசு போட்டவர் எனக்கு மாமியார் முறை ஆக வேண்டும். அவர் பெயர் மைதிலி ராஜகோபாலாச்சாரி. கொலுசு போட்டது பற்றிய மேல்விவரங்களை நான் எனது இடுகை ஒன்றில் தந்துள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/04/1000.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

a said...

நல்லதொரு வர்ணனை...... நேரில் தரிசனம் செய்தது போல......

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

நன்றி கோபி.

நன்ற சித்ரா.

தங்களின் இடுகையை படித்தேன். கொலுசு போட்டவர் பற்றிய தகவலுக்கு நன்றி ராகவன் அவர்களே.

மிக்க மகிழ்ச்சி. நன்றி யோகேஷ்.

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு.

நான் அந்த கோவிலுக்கு சென்றபோது ஒரு குடும்பம் லலிதாம்பிகைக்கு அபிஷேகம் செய்ய வந்தார்கள்,அபிஷகம் செய்யும் நேரத்தில் குருக்கள் நவரத்தின மாலை தெரிந்தவர்கள் பாடுங்களேன் என்றார்கள். எனக்கு லலிதாம்பிகையே என்னை பாட சொல்வதாய் மெய்சிலிர்த்து பாடினேன்.

சிறு வயது முதலே அந்த பாடலை பாடுவேன். எங்கள் குடும்பத்தார் எல்லோரும் பாடுவோம்.

உங்கள் பதிவால் மீண்டும் லலிதாம்பிகை தரிசனம் கிடைத்தது.
படங்கள் எல்லாம் அருமை.

தீபாவளி வாழ்த்துக்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

தாங்கள் லலிதாம்பிகை கோயில் சென்றது பற்றிய நிகழ்வுகளை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. ஊக்கமளிக்கும் வகையில் நீங்களிடும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி கோமதியம்மா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

அருமையான பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ் அமுதன்.

Vassan said...

எங்களுடைய ஊர் பற்றி எழுதியமைக்கு நன்றி.

வாசன்

நியு மெக்ஸிக்கோ யூ எஸ்

பால கணேஷ் said...

அரிய பல ஆலயங்களை தரிசித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு நன்றிகள் பல. இக் கோயிலின் ஓரிடத்தில் நின்று பார்த்தால் ஐந்து கோபுரங்களும் தெரியும் என்ற தகவலும் வெளியிட்டுள்ள படங்களும் அழகு. உங்களுக்கு என் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கணேஷ்.....

மிக்க நன்றி கணேஷ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தக்குடு said...

கவினயா அக்கா மூலமாக பதிவின் சுட்டி கிட்டியது. அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி! இந்த வருஷம் தரிசனம் செய்ய முயற்சி செய்கிறேன்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தக்குடு..

தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி தக்குடு.

Unknown said...

watch Lalithambigai Temple Maha Kumbabhishekam only on www.swasthiktv.com on 8-2-2015 from 9.00 onwards....
for more details contact - Sangeetha - 99402 92777 / sangeetha@magicsquare.in

Post a Comment

Related Posts with Thumbnails