Thursday, November 20, 2014


மன்னார்குடி - ஆன்ட்ராய்ட் மென்பொருள்

மன்னார்குடி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையிலுள்ள இருபது ஊர்களின் சிறப்புகளை விளக்கும் இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் MANNARGUDI என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம்.


மன்னர்குடியைப் பற்றிய 18 வகையான தகவல்களை வரைபடக் குறியீடுகள் மற்றும் இணைப்புகள் மூலமாக இந்த மென்பொருள் விளக்குகிறது. கோயில்கள், திருவிழாக்கள், ஊர் சிறப்புகள், பிரபலங்கள் குறித்த விவரங்கள் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் கால அட்டவணை, இருக்கை நிலை, கட்டண விவரம் போன்றவற்றின் தகவல்கள் ஊர்வாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இருபது ஊர்களின் தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளது.

இந்த மென்பொருளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

MANNARGUDI : THE PEARL OF KAVERI DELTA



Wednesday, June 25, 2014


கோபுர தரிசனம் - 4

நமது பெருமை மிகு திருக்கோயில் கோபுரங்கள், நமது கலைப் பொக்கிஷங்களாகவும், நமது கட்டிடக் கலையின் அடையாளங்களாக மட்டுமல்லாது, நம் தமிழர்களின் நுணுக்கமான அறிவியல் அறிவையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன. இதனை உணர்த்தும் விதமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி திருக்கோயில் கோபுரம் அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கோபுரம். இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது. அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது. ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.

‌பிரஹ‌தீ‌ஸ்வர‌ர் திருக்கோயில்
கங்கைகொண்ட சோழபுரம்
கைலாசநாதர் திருக்கோயில்
பிரம்மதேசம், திருநெல்வேலி


திருவேங்கடமுடையான் திருக்கோயில்
அரியக்குடி, சிவகங்கை
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
பட்டீஸ்வரம்


வடபத்திர சாயி ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர்
வைரவன் சுவாமி
திருக்கோயில்
வைரவன்பட்டி, சிவகங்கை


பிரகதாம்பாள் திருக்கோயில்
திருக்கோகர்ணம்
சங்கரநாராயணர் திருக்கோயில்
சங்கரன்கோயில்


சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
காளையார்கோயில்
தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
பட்டமங்கலம், சிவகங்கை


பாபநாசநாதர் திருக்கோயில்
பாபநாசம், திருநெல்வேலி
சௌமியநாராயண பெருமாள்
திருக்கோயில், திருக்கோட்டியூர்


சீனிவாச பெருமாள் திருக்கோயில்
நாச்சியார்கோவில், குடந்தை
கொப்புடை நாயகி அம்மன்
திருக்கோயில், காரைக்குடி


கோபுர தரிசனம் - 1

ஸ்ரீரங்கத்து கோபுரங்கள் (கோபுர தரிசனம் - 2)

கோபுர தரிசனம் - 3

Wednesday, April 23, 2014


மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்

இன்றைய திருக்கோவில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில், மாந்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


அருணகிரிநாதர் அருளிய திருமாந்துறை திருப்புகழ்:
ஆக்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்குவு மறிந்து
ஆண்டு பல சென்று கிடையோடே
ஊங்கிருமல்வந்து வீங்குடல் நொந்து
ஓய்ந்துனர் வழிந்து உயிர்போமுன்
ஓங்கு மயில் வந்து சேன்பெற விசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையுமுயர்ந்த தீம்புனமிருந்த
வேந்திழையின் இன்ப மணவாளா
வேண்டுமவர் பூண்ட தாங்கள் பதமிஞ்ச
வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனியுடைந்து தேங்கவயல் வந்து
மாண்பு நெல் விளைந்த வளநாடா
மாந்தர்தவர் உம்பர்கோன் பரவிநின்ற
மாந்துறை யமர்ந்த பெருமானே!!

திருக்கோயில் அமைவிடம்:
தமிழகத்திலேயே சூரிய பகவானின் அதிகபட்ச அன்பிற்கும், பாசத்திற்கும் ஆளாகும் ஊர் திருச்சி தான். மழையோ, குளிரோ அதிகமில்லாத, வருடம் முழுக்க வெட்கை மழையில் நனையும் பிரதேசம். மழை அதிகம் இல்லாவிட்டாலும், சுற்றி உள்ள ஊர்களில் பொழியும் மழைநீர் திருச்சிக்கு வந்து சேர்ந்துவிடும். இப்படி காவிரி ஆற்றின் புண்ணியத்தில் வளம் கொழிக்கும் திருச்சிக்குள்ளும், திருச்சியை சுற்றியும் பாடல் பெற்ற தலங்களும், திவ்ய தேசங்களும் நிறைய உள்ளன. அப்படி திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள், திருமாந்துறை திருக்கோயிலும் ஒன்று.

இத்திருத்தலம் திருச்சியில் இருந்து 20 km தொலைவிலும், லால்குடியில் இருந்து 4 km தொலைவிலும், திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் இருந்து 12 km தூரத்திலும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் இருந்து 12 km தொலைவிலும், நம் தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றான கல்லணையில் இருந்து 25 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்
தல இறைவி: அழகம்மை, பாலாம்பிகை
தல விருட்சம்: மாமரம்
தல தீர்த்தம்: காயத்ரி நதி


திருத்தல அமைப்பு:
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரை, சிவ தலங்களுள் 58-வது தலமாக விளங்குகிறது. இங்கு அமையப் பெற்றுள்ள ஆம்ரவனேஸ்வரர், சுயம்பு லிங்கமாக உள்ளது தனிச் சிறப்பு. தமிழ் மாதங்களுள் பங்குனி மாதம் மூன்று நாட்கள் இந்த சுயம்பு லிங்கத்தின் மேல் சூரியனின் கதிர்கள் படர்வது திருக்கோயில் கட்டமைப்பின் அதிசயம்.

மாமரங்கள் அதிகம் காணப்பட்ட தலம் என்பதால் இத்தலம் மாந்துறை என்றழைக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், மானுக்கு அருள்புரிந்த தலம் என்பதாலும் மாந்துறை என்று வழங்கப் படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்து அருள்பாலிக்கிறார் மூலவர் ஆம்ரவனேஸ்வரர். இத்தல அன்னை பாலாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தந்து உலகை ரட்சிக்கிறாள். பரிவார தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற தெய்வங்களும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தபடியும், தண்டாயுதபாணி கோலத்தில் முருகப் பெருமான் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி என அனைத்து சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.


திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பஞ்ச சிவ தலங்களுள் இத்திருத்தலமும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆதிசங்கரர் இத்தல மூர்த்தியை வழிபாடு செய்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி காட்சி தருகிறார். மிருகண்டு முனிவரும் இத்தல இறைவனை வணங்கியுள்ளார். கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்க்கை, சாந்த நிலையில் காட்சி தருகிறாள். துர்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் காணப்படவில்லை.

திருத்தல வரலாறு:
இந்த திருமாந்துறை திருத்தலத்திற்கு ஆம்ரவனம், ப்ரம்மானந்தபுரம், மிருகண்டீஸ்வரபுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு. ஆதி காலத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய விஸ்வகர்மாவின் மகளாகப் பிறந்தார் சமுக்யாதேவி. பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கிய சமுக்யாதேவியை சூரிய பகவான், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், தேவர்கள் என எல்லோரது ஆசியுடனும் வாழ்த்துக்களுடனும் திருமணம் புரிந்து கொண்டார். தம்பதியர் இருவரும் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சமுக்யாதேவிக்கு கதிரவனின் வெப்ப உக்கிரத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சூரிய பகவானிடம் அவரது வெப்ப மிகுதியை தனித்துக் கொள்ளச் சொன்னாள் சமுக்யாதேவி. அவ்வாறு சூரியனிடம் வேண்டிக்கொண்டும் அவர் தனது வெப்பக் கதிரின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இனி இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில், தனது தந்தையான விஸ்வகர்மாவிடமே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தாள் சமுக்யா. அதனை தன் தகப்பனாரிடம் கூற, அவரோ ஆறுதல் கூறி அவளை கணவனிடமே சேர்ந்து வாழ வலியுறுத்தினார். பொறுக்க முடியாத சமுக்யா கணவனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தன்னைப் பிரிய தன் கணவர் ஒப்புக் கொள்ளமாட்டார், மேலும் மனம் வருந்துவார் என்றெண்ணிய சமுக்யா தன்னைப் போலவே துளியும் வித்தியாசம் காணமுடியா வண்ணம் ஒரு உருவத்தை தனது நிழலில் இருந்து உருவாக்கினாள். அந்த உருவத்திற்கு சாயாதேவி எனப் பெயரிட்டு, தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக வாழ்ந்து அவருக்கு உதவியாக இருக்கும்படி பணித்தாள். அதன் பின் தன் தகப்பனிடமே வந்து சேர்ந்த சமுக்யா, தந்தை விஸ்வகர்மா எத்தனை சொல்லியும் திரும்பவும் கணவனிடம் செல்லவில்லை. இவ்வாறு தான் கணவனைப் பிரிந்து வந்து இங்கு வசிப்பதை விரும்பிடாத தன் தந்தையால் மனம் வெதும்பிய சமுக்யா, குதிரை வடிவம் பெற்று இந்த மாந்துறை தலம் வந்து இத்தல இறைவனை வணங்கி, தனது கணவரின் உக்கிரம் குறையவும், சூரியனது உக்கிரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை தனக்கு அருளுமாரும் வேண்டினாள்.


இதற்கு நடுவே தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பது சமுக்யாதேவி இல்லை என்பதை உணர்ந்த சூரிய பகவான், விஸ்வகர்மாவின் மூலம் சமுக்யாதேவியின் பிரிவை அறிந்த கதிரவன், அவரின் முன்பாகவே தனது உக்கிரத்தைக் குறைத்துக் காண்பித்தார். பின்னர், இந்த மாந்துறை திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு சமுக்யா தேவியுடன் சேர்ந்தார். இதன் காரணமாகவே இத்திருத்தலத்தில் நவக்ரஹங்களில் உள்ள சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயதேவியுடன் தம்பதி சமேதராய் காட்சி தருகிறார். மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன.

மானுக்கு சாப விமோசனம் தந்த திருத்தலம்:
முன்னொரு காலத்தில் மாமரங்கள் நிறைந்த மாந்தோப்பாகக் காணப் பட்டது இந்தப் பகுதி. இந்த மாமரங்கள் நிறைந்த வனத்தில், தவம் மேற்கொண்டிருந்த முனிவர் ஒருவர் சிவனை பழித்த காரணத்தினால் மானாகப் பிறக்கும்படி சாபம் பெற்றார். இது போல முற்பிறவியில் அசுரர்களாக வாழ்ந்து இப்பிறவியில் மான்களாகப் பிறந்துள்ள அசுரர்களுக்கு பிறந்தார்.

ஒரு சமயம் தனது குட்டி மானை விட்டு தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட, அங்கே வேட்டையாடும் ரூபத்தில் வந்த சிவன் பார்வதி தம்பதியினர், இந்த இரு மான்களையும் அம்பால் எய்து சாபவிமோசனம் தந்தருளினர். அதேநேரம், அங்கு தனியே இருந்த குட்டி மான் தன் தாய் தந்தையரைக் காணாமல் தவித்து பயத்திலும், பசியிலும் அழுதது. அதனைக் கண்ட சிவனும் பார்வதியும், குட்டி மானிடம் வந்து அதற்கு பாலூட்டி சீராட்டினர். இவ்வாறு சிவன் பார்வதியின் தரிசனம் கிடைக்கப் பெற்ற குட்டிமான், தனது சாபத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் மகரிஷியாக வடிவம் பெற்றது. மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனும் பார்வதியும் இத்திருத்தலத்திலேயே தங்கி விட்டனர்.

திருத்தலச் சிறப்பு:
மிருகண்டு முனிவர் கடும் தவம் இருந்து பெற்ற செல்வமான மார்கண்டேயன் தோன்றிய திருத்தலம் மாந்துறை. அந்த மகன் 16 வயதை அடைந்த பின்னரும் மரண பயமின்றி வாழ தவம் மேற்கொண்ட தலம் மாந்துறை.

சூரியனது வெப்பக் கீற்றைப் பொறுத்து தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை வேண்டி சமுக்யா தேவி வழிபட்ட தலம்.

செவ்வாய்க் கிழமையும், சதுர்த்தி தினமும் ஒன்றாய் வரும் நாளான அங்காரக சதுர்த்தி அன்று இங்குள்ள காயத்ரி நதியில் நீராடி இத்தல இறைவனை வணங்கிட, எல்லா பாவங்களும் நீங்கி மன நிம்மதியுடன் வாழ வழி செய்வான் இறைவன்.

சைவ சமய நால்வருள் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பட்ட திருத்தலம். இத்தல முருகன் மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி அருளியுள்ளார்.

இத்தலத்து இறைவி பாலாம்பிகையை பாலபிஷேகம் செய்து வணங்கிட பாலதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.

மானுக்கும் சாப விமோசனம் தந்த திருத்தலம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த திருத்தலம்.

திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட திருத்தலம்.

மாமரங்கள் நிறைய காணப்படும் இடமாக உள்ளத்தால் இத்தல இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல மரமும் மாமரமாகவே விளங்குகிறது.


திருஞானசம்பந்தர் மாந்துறை திருத்தலத்தில் அருளிய தேவாரப்பதிகம்:
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொ னேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரான்இமை யோர்தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே!!

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உரைவானத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச்
சுடவிழித் தவன்நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனை
அன்றிமற்று அறியோமே!!

கோடு தேன்சொரி குன்றிடை பூகமும்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யில்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந் தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
கெழுமுதல் அறியோமே!!

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே!!

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி
குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறை வானைப்
பாங்கி னால்இடுந் தூபமும் தீபமும்
பாட்டவிம் மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படும் தவத் தோரே!!

பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமர நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன்எம் பெருமானைப்
பரிவி னால்இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே!!

நரவ மல்லிகை முல்லையு மௌவலு
நாள்மலர் அவை வாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்று அங்கு
அரவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்தெயில் எய்தவன்
நிரைகழல் பணிவோமே!!

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத்து ஆர்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தியாமனத் தார்அவர் சேர்வது
தீநெறி யதுதானே!!

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமவர்வானை
மாலு நான்முகன் தேடியும் காண்கிலா
மலரடி யிணை நாளும்
கோலம் ஏத்திநின்று ஆடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே!!

நின்று ணும்சமண் தேரரு நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலன்களும்
நாணலி னுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொரு காலம்
அன்றி யுள்ளழிந்து எழும்பரி சழகிது
அதுஅவர்க்கு இடம் ஆமே!!

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உரைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே!!

திருச்சிற்றம்பலம்!!

Saturday, April 19, 2014


திருக்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருக்செங்கோடு.


திருக்கோயில் அமைவிடம்:
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தெய்வீகச் சிறப்பு மிக்க திருசெங்கோடு திருத்தலம். நாமக்கல்லில் இருந்து திருசெங்கோடு 37 km தொலைவிலும், ராசிபுரத்தில் இருந்து 36 km தொலைவிலும், சேலத்தில் இருந்து 48 km தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 22 km தொலைவிலும், கரூரில் இருந்து 61 km தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 130 km தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.

குருக்கோடு நவமணியும் நவநிதியும் நவரசமும் கொழிக்குங்கோடு
தருக்கோடு சுருபியும் சிந்தாமணியும் தழைத்த தெய்வத்தான மாமால்
இருக்கோடு பலகலைகளாகமங்கள் குரவோர்களிரைக்குங்கோடு
செருக்கோடு முமையரனைப் பிரியாம லினிதிருக்கும் திருச்செங்கோடே!!

-- திருப்பணி மாலை

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்
தல விருட்சம்: இலுப்பை மரம்
தல தீர்த்தம்: தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்



திருத்தல அமைப்பு:
கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம்.


இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

ராசிபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக இத்திருத்தலத்தினை காணச் செல்லும்போது, சுமார் 15 km முன்பாகவே இந்த தெய்வீக மலையின் முழுத் தோற்றம் காணக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைத் தாண்டி இந்த மலையின் தோற்றம் காணும்போதே சிலிர்க்க வைக்கும் காட்சி. திருவண்ணாமலை போல மலையே தெய்வமாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை அமாவாசை தோறும் கிரிவலம் வந்து வணங்குகின்றனர் பக்தர்கள். இந்தப் பாதை 6 km தூரம் கொண்டது. இந்த மலையின் வடிவழகைக் காண்பதற்கே ஒருமுறையாவது எல்லோரும் திருச்செங்கோடு செல்ல வேண்டும். ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பாதையில் ஊருக்குள் செல்வதற்கு முன்பாகவே இத்திருத்தலம் வந்து விடுகிறது.


மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 km தூரத்திற்கு மலையிலேயே சாலை அமைக்கப் பட்டுள்ளது. மலை ஏறும் போதே இந்த மலையைச் சுற்றி உள்ள சில மலைகளின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இந்த மலைச் சாலை திருக்கோயிலின் வாசல் வரை நம்மை அழைத்துச் செல்கிறது. நாங்கள் சென்றிருந்த நாளில் அடித்த வெய்யிலின் உக்கிரத்தில், திருசெங்கோடு பாறை மலையே தக தகவென மின்னியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோயில் போற்றி பாடப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோயில் அமைப்புடன், ஒரே திருக்கோயிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு. இந்த திருச்செங்கோடு மலைக் கோயிலை மலைத்தம்பிரான் என்றும் அழைக்கின்றனர்.

இந்த திருக்கோயிலுடன் இணைக்கப்பெற்ற திருக்கோயில்களும், துணைக் கோயில்களும் பல உள்ளன.
1. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
2. அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோயில்
3. அருள்மிகு ஆபத்துக்காத்த விநாயகர் திருக்கோயில்
4. அருள்மிகு மலைக்காவலர் திருக்கோயில்
5. அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
6. அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயில்
7. அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில்
என இந்தக் கோயில் வரிசையில் முதல் ஆறு கோயில்கள் திருச்செங்கோடு நகருக்குள்ளேயும், பாண்டீஸ்வரர் திருக்கோயில் குமாரமங்கலத்திலும் அமைந்துள்ளன.

சாலைவழியாக மட்டுமல்லாது, சுமார் 1210 படிகளைக் கடந்தும் மலைக்கோயிலைச் சென்றடையலாம். நாமக்கல் செல்லும் பாதையில் சிறுது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து படி வழியாகச் செல்லலாம். முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கலாம். அருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோயில் அமைந்துள்ளது. இந்த முருகன் திருக்கோயிலின் முன்பிருக்கும் கிணற்றில் இருந்தே மலைக் கோயிலுக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.


மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோயில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோயில் உள்ளது. இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவர்.


நந்தி கோயிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.


பின் உயரே சென்றால் சிங்க மண்டபம் உள்ளது. இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள்.

இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது. பல்வேறு சண்டை சச்சரவுகள், வழக்குகள் இந்தப் படிகளின் மேல் செய்யப்படும் சத்தியத்தினால் முடிவுக்கு வருகின்றன என்று அங்கு ஈசனை காண வந்த பக்தர் சொல்லக் கேட்டோம். இதுபோன்ற ஐதீகங்களினால்தான் சத்தியங்களும், உண்மைகளும் ஓரளவேனும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.

வாழ்க மனிதனின் நல்ல நம்பிக்கைகள்!!

இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலின் ஆரம்பமாக உள்ளது. இந்த முருகன் கோயிலைக் கடந்தால் அறுபதாம்படி மண்டபம், இளைப்பாற்றி மண்டபம், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்களும் அமைந்துள்ளன.


இப்படியே பயணித்து திருக்கோயிலின் ராஜகோபுரத்தை அடைகிறோம். கோயிலின் உள்ளே நுழைந்த உடனே இடது புறத்தில் விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுகிறோம். பிள்ளையாரை வணங்கி பின்னர் செங்கோட்டு வேலவனின் சன்னதியை அடைகிறோம். இந்த அருள்மிகு செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்தை சிற்பங்கள் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளன. இவ்விடத்தில் மட்டுமல்லாது, எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களிலும் பல்வேறு விதமான சிற்பங்கள் அணிவகுக்கின்றன. திருக்கோயில் முழுக்க உள்ள எல்லா தூண்களிலும் சிற்பக்கலையின் உன்னதம் உச்சத்தைப் பெறுகிறது. ஒவ்வொவொரு சிற்பங்களின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்துடனும், சிற்பங்களை ரசிப்பதிலேயே அதிக நேரம் செலவானது.

வாழ்க நமது திருக்கோயில்களும், அவற்றில் காணப்படும் எண்ணிலடங்கா சிற்பக் களஞ்சியங்களும் என்று மனதார வேண்டி அவற்றை செய்த சிற்பிகளை மனதார வணங்கி திருமுருகன், செங்கோட்டுவேலவனை வழிபடச் சென்றோம்.



தனது வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தரும் முருகப்பெருமானது தரிசனம் காணக் கிடைக்கப் பெற்ற நமக்கு, நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானது வடிவழகைக் காண இரண்டு கண்கள் கண்டிப்பாக போதாது. இவ்வாறாக பேரழகன் முருகனின் அழகில் மயங்கியவாறே, அம்மையும் அப்பனுமாக ஒருசேர விளங்கும், அர்த்தநாரீஸ்வர சன்னதியை அடைகிறோம். அங்கே சன்னதியின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறார். ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொலவடைக்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை அங்கு கண்டு, உடலும் உள்ளமும் சிலிர்த்து, அம்மையப்பனை கண்ணிமை மூடாது, சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள் என்ற எந்த ஸ்வதீனமும் இல்லாமல், இந்த தெய்வீக நிலையிலிருந்து விடுபட சற்றுநேரம் ஆனது.

வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், தொன்மைக்கோலம் என்று அழைக்கிறார். இங்கிருத்து நாகேஸ்வரர் சன்னதியை அடைந்த பின், ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதை காணலாம். இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும்.

நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன.

இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோயில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் பெற இந்த புனித மரத்தினையும் சுற்றிவந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர்.


இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகளையும் வணங்கி நலம் பெறுவோம்.

இத்திருக்கோயிலின் கிழக்கு திசையில் சுமார் 350 அடி உயரம் ஏறிச் செல்ல, சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். உச்சிப் பிள்ளையார் கோயில் எனவும் இக்கோயில் அழைக்கப் படுகிறது. வந்தியா பாடன சிகரம் என்றும் வேறொரு பெயர் உண்டு.

திருத்தல வரலாறு:
திருச்செங்கோடு திருமலை உருவான வரலாறு:
ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.

இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.

உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு:
கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.

இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.

இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள் கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு:
ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.


தேர்க்கால் இடர் தவிர்த்து ஊமை பேசிய வரலாறு:
பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம் தம்பதியர் சிவ பக்தகளாய் வாழ்ந்து வந்தனர். இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர்.

இதனிடையே ஏமப்பள்ளி என்னும் ஊரில், எல்லா நற் குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான். அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன். இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.

இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன், இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது. பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது.

நமச்சிவாயம்!! நமச்சிவாயம்!!


ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடிய ஞான சம்பந்தர், இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார். இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்:
அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

முலைத்தடம்மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தாண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தெமைத் தீவினைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

விண்ணுல காள்கின்ற விச்சாதாரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழுப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்த உம் திருவடி அடைந்தோம்
செற்றெமைத்தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

மறக்கும் மனத்தினை மாற்றிஎம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச்சீரில் அடர்ந்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந்தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழித்தும்
பாக்கியமின்றி இருதலைப்போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

பிறந்த பிறவியில் பேணிஎம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே!!

திருச்சிற்றம்பலம்!!

Thursday, April 3, 2014


ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்

நமச்சிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க!!

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் (வாஞ்சிநாத சுவாமி)
தல இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை (மருவார்குழலி அம்பாள்)
தல விருட்சம்: சந்தனமரம்
தல தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்


திருக்கோயில் அமைப்பு:
இன்னும் கிராமங்களின் அழகை தன்னுள்ளே தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சியத்தில் இந்த அருள்மிகு வாஞ்சிநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்கள் 127 உள்ளன. அவற்றில் 70-வது தலமாக இத்தலம் அமைந்துள்ளது. அழகிய கோபுர தரிசனம் செய்துகோண்டே திருக்கோயில் உள்ளே நுழைகையில், வலதுபுறமாக சென்றால், குப்தகங்கை என அழைக்கப்படும் திருக்கோயில் குளம் அமைந்துள்ளது. சற்றே பெரிய குளம். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக் குழந்தைகள் சிலர் திருக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. திருக்கோயில் வளாகம், திருக்குளம் என அனைத்துப் பகுதிகளையும் மிக அழகாக தூய்மைப் படுத்தினர் அக்குழந்தைகள். அவர்கள் அனைவரது வாழ்வு சிறக்க வாஞ்சிநாதரை வேண்டி, நம் பயணத்தை தொடருவோம்.

புனித கங்கை ஒரு அம்சத்தை மட்டும் விடுத்து மீதமுள்ள 999 அம்சங்களுடன் இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் உறைதாக சொல்லப்படுகிறது. இத்தீர்த்த குளத்தில் நீராடி, அக்குளக் கரையோரமாகவே அமைந்துள்ள கங்கைக் கரை விநாயகரை விளக்கேற்றி வணங்கி, பின் திருக்கோயில் உள்ளே வந்தால், நுழைவு வாயிலின் இடப் புறமாக அமைந்துள்ளது இத்தலத்தில் சிறப்பம்சமாக விளங்கும் யமதர்மராஜன் சன்னதி. தனி கோபுரத்தின் கீழ் இச்சன்னதி அமையப் பெற்றுள்ளது. இப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். யமதர்மராஜனின் அருகில், நம் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த யமதர்மராஜன் சன்னதியில் ஒரு பழக்கம் உள்ளது. நாம் அர்ச்சனை செய்யும் எந்த பொருளையும் சரி, திருநீறு பிரசாதங்கள் என்று எதையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என அச்சன்னதி சிவாச்சாரியார் சொல்லக் கேட்டோம்.


இவ்வாறாக எமதர்மராஜனிடம் நம் வேண்டுதல்களை முன்வைத்துவிட்டு, திருக்கோயிலின் அடுத்த கோபுர வாசலை சென்றடையும் முன் இரு புறமும் முறையே அமைந்துள்ள அபயங்கர விநாயகரையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். அது போலே, உள் கோபுரத்தைத் தாண்டினால் இடப்புறம் மேலும் ஒரு விநாயகர் சன்னதியும், வலப்புறம் மருவார் குழலி எனும் மங்களாம்பிகை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி பகவான் என எல்லாம் வணங்கி விளக்கிட்டு, மூன்றாம் கோபுர வாயிலை அடைகிறோம். அக்கோபுர வாசலின் இருமருங்கிலும், இரட்டை விநாயகரும், அதிகார நந்தியும் அமர்ந்து நம்மை தெய்வ வழிபாட்டிற்கு இட்டுச் செல்கின்றனர்.

பொதுவாக விஷ்ணு திருக்கோயில்களில் கருடாழ்வாரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பின்னர் பெருமாளை வணங்கிட நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. அதே போலவே சிவன் திருக்கோயில்களில் கோபுர வாயிலில் அமைந்திருக்கும் அதிகார நந்தியை வணங்கி அவரிடம் அனுமதி வாங்கி சிவனை வழிபட, நினைத்த காரியம் செவ்வனே நிறைவேறும் என்பது காலங்காலமான நம்பிக்கை.

இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கேயும் ஒரு நந்தீஸ்வரர் நம்மை வரவேற்கிறார். அவரை வணங்கி துவாரபாலகர்களைக் கடந்து அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே கருவறையில் அருள்மிகு வாஞ்சிநாதரை கண்குளிர, ஆம் உண்மையிலேயே எந்த செயற்கையான வெளிச்சத் தூறல்கள் இல்லாமல், கருவறையில் சுவாமியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள, வட்டக் கண்ணாடியின் உதவியுடன் ஒற்றை ஜோதி நூறு மடங்காய் பரிமளிக்கும் வெளிச்சத்துடன், தீப வெளிச்சத்துடனும், சாம்பிராணி வாசத்துடனும், அதே சாம்பிராணி புகை மூட்டத்தினூடே, கருவறை மூலவரை தரிசிக்கும் இன்பம் எங்கும் எதிலும் கிடைக்காத பேரின்பம்.

பெருமானது தரிசனம் முடிந்து, சுவாமியின் வலப்புறமாக சன்னதியை சுற்றுகையில் சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் தரிசனமும் காணப் பெறுகிறோம்.

தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தின் தென் திசையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் ஒன்பது பேர், உமாமகேஸ்வரருடன் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கு திசையில் சந்திரமௌலீஸ்வரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாக்ஷி சொக்கநாதர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அஷ்டலிங்கம், மகாலட்சுமி என பரிவார தெய்வங்கள் அனைத்தும் தனித்தனி சன்னதிகளில் அமையப் பெற்றுள்ளன.


பின் தென் திசையைப் பார்த்தவாறு சனீஸ்வர பகவானும், பஞ்சபூத ஸ்தலங்களின் சிவலிங்கங்களும், துர்க்கையும், பிரகாரத்தின் வடக்கில் அமைந்துள்ளன.

இவர்களை தீபமேற்றி வணங்கிவிட்டு, சண்டிகேஸ்வரரை வழிபடுகிறோம். சண்டிகேஸ்வரர் ஒரு தீவிர சிவ பக்தர். ஆகையால் தான் எப்போதும் சிவ நாமத்தைச் சொல்வதும், நினைப்பதுவும், கேட்பதுவும் மட்டுமே செய்யக் கூடியவர். சிவ நாமத்தைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன் என்றிருப்பவர். சண்டிகேஸ்வரர் சன்னதி சென்று நமச்சிவாய! நமச்சிவாய! என ஐந்தெழுத்து மந்திரத்தை வாயார சொல்லிவர நம் வேண்டுதல்கள் தானே நிறைவேறும்.

சண்டிகேஸ்வரரை வணங்கி பின் கிழக்கு முகமாக அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி தெய்வத்தை வணங்கிச் சுற்றி வந்தால், சூரியன், சந்திரன், யோக பைரவர், ஒரே சிற்பமாக ராகு கேது போன்றோரது சன்னதி அமைந்துள்ளது. அங்கேயே நடராஜரது சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாஞ்சிநாதராகிய சிவபிரானே அனைத்துமாக விளங்குவதால் இத்திருத்தலத்தில் நவக்ரஹ சன்னதி அமையப் பெறவில்லை.

திருத்தலச் சிறப்பு:
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நான்கு முக்கிய நாயன்மார்களாலும் பாடல் பெற்ற ஸ்தலம்.

கங்காதேவி குப்த கங்கையாக 999 கலைகளுடன் இத்தலத் திருக்குளத்தில் உறையும் சிறப்புமிகு தலம்.

108 முறை தாமரை மலர்களைக் கொண்டு இத்தலத்தில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை அர்ச்சனை செய்து வழிபட எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.

மகாலக்ஷ்மியை திருமணம் செய்ய விரும்பி விஷ்ணு பெருமான் தவம் இருந்த தலம் என்பதால் ஸ்ரீ வாஞ்சியம் எனும் பெயர் வந்தது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் தலை சிறந்து விளங்கும் பெருமை உடைய தலம்.

பிரளயம் உண்டான காலத்திலும் அழிவு இல்லாமல், காலங்களைக் கடந்து நிற்கும் தலம்.

எமதர்மராஜனுக்கு தனியே சன்னதி அமையப் பெற்றுள்ள தனிச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம். இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார்.

காசிக்கு வீசம்படி அதிகம் என்ற சொல்லுக்கும் மேலாக காசியைவிட பல மடங்கு புண்ணியமிகு ஸ்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம்.

பிரம்மன், விஷ்ணு, சூரிய பகவான், தேவர்கள் எனப் பலரும் வழிபட்டு சிவனருள் பெற்ற தலம். சூரிய பகவானுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தருளிய திருத்தலம்.

ராகுவும் கேதுவும் தனித் தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக உள்ளது.

ஆயுள் விருத்திக்கு இத்தல தரிசனம் ஒரு அருமருந்து.


மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரின் கற்பகத்தைக் கண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலையைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேன்!!
என்ற பாடல் வரிகள் வாயிலாக இத்த்திருத்தலத்துப் பெருமையை நாம் அறியலாம்.

தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலத்தில் வாழ்ந்தாலும், இத்தலத்தை நினைத்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தலமாக விளங்குகிறது இந்த திருவாஞ்சியம்.

இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் மிக விசேஷமான தினங்கள். பொதுவாக கிரகண காலங்களில் திருக்கோயில்களை சாத்திவிடுவார்கள். ஆனால் கிரகண காலங்களிலும் கோயில் திறக்கப்பட்டு ஈசனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம்.

இத்தல தீர்த்தப் பெருமை:
கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும்,
திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும்,
துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும்,
கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும்,
போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.


கிருதயுகத்தில் விஷ்ணு பெருமானிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரை விட்டுச் செல்ல, மனைவி இல்லாமல் வாடிய திருமால் இந்த திருவாஞ்சியம் வந்து தேவர்கள் புடை சூழ தவமிருந்து, இத்தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதனை வழிபட, சிவபிரான் லக்ஷ்மி தேவியின் கோபம் தீர்த்து பெருமாளுடன் சேர்த்து வைத்தார். இதனாலேயே இத்தலம் திருவிழைந்ததென்று எனும் பொருள்படும் படியாக திருவாஞ்சியம் எனும் பெயருடன் விளங்குகிறது. கண்ணபிரானும், லக்ஷ்மியும் நீராடிய திருக்குளம் என்பதால் புண்ணிய புஷ்கரணி எனவாயிற்று.

திரேதாயுகத்தில் அத்திரி என்னும் முனிவர் பெருமானார், பிள்ளைச் செல்வம் இன்றி மிகவும் வேதனையுற்று, நாரதரின் உபதேசப்படி இந்த திருவாஞ்சியம் வந்து இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈசனை வேண்டி தவமிருக்க, சிவபெருமான் மனமிரங்கி முனிவருக்கு காட்சி தந்து தாத்தத்ரேயனை மகனாக வரமருளிய காரணத்தால் அத்திரி தீர்த்தம் என வழங்கப்பட்டது.

துவாபரயுகத்தில் பிறருக்கு தீங்கிழைத்த காரணத்தினால் மூன்று யுகங்களுக்கு அரக்கனாகவே பிறப்பான் என்ற தண்டனை பெற்ற வீரதனு எனும் அசுரன், அந்த தண்டனையில் இருந்து விடுபட பராசர முனிவரை வணங்கிட, அவர் திருவாஞ்சியம் சென்று அங்குள்ள தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து இவ்வசுரன் மேல் தெளித்து சாப விமோசனம் தந்தருளினார். இதன் காரணமாக பராசர தீர்த்தம் என விளங்க ஈசன் அருளினார்.

மாசி மக நாளன்று இத்திருக்குளத்தில் நீராட பாவ புண்ணியங்களில் இருந்தும், பிறவி பந்தத்தில் இருந்தும் விடுபட முடியும் என்கிறது புராணம்.

திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்:
1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்
2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்
3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை
4. ஸர்வ தீர்த்தம்
5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்
6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்
7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி
8. ராம தீர்த்தம் : வாயு திசையில்
9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்
10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே

திருவாஞ்சியம் திருத்தலம் பொன்மயமாக கிருதாயுகத்திலும், வெள்ளிமயமாக திரேதாயுகத்திலும், தாமிரமயமாக துவாபரயுகத்திலும் விளங்கியது. மண்மயமாக கலியுகத்தில் விளங்குகிறது.

காசியில் இறைவனடி சேர்ந்தோருக்கு ஒரு சில மணித்துளிகளாவது பைரவவாதனை உண்டாம். ஆனால் இத்தலத்தில் பைரவர் யோகநிலையில் அருள் பாலிப்பதால், பைரவ உபாதை கிடையாது என்னும் சிறப்புடைய தலம். ஏனெனில், பைரவர் ஒரு முறை சிவபிரானின் இஷ்ட திருத்தலமான இந்த ஸ்ரீவாஞ்சியம் வந்தடைந்து பொன்வண்டின் உருவத்தில் கடுந்தவம் இருந்து முக்கண்ணனை சரணடைய இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என திருவாஞ்சிநாதர் அருளிச்செய்தார்.

திருத்தல வரலாறு:
முன்பொரு சமயத்தில் கங்காதேவி சிவபிரானை தரிசனம் செய்து தனது மன வேதனையைத் தெரிவித்தார். உலக உயிர்கள் அனைத்தும் தத்தமது பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொள்வதால் என்னிடம் பாவங்கள் நிறைந்து விட்டது. இத்தகைய எனது பாவங்களை நான் எங்கு சென்று தீர்த்துக் கொள்வேன் என கங்கை ஈசனிடம் வேண்டிநின்றார். அதற்கு பெருமான், தெற்கே அமைந்துள்ள திருவாஞ்சியம் என்னும் திருத்தலம் எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த திருத்தலம், அங்கு சென்று உன் பாவங்களைப் போக்கிக்கொள் எனக் கூறி அருளினார். அதன்படியே இங்குவந்த கங்காதேவி இத்தல தீர்த்தத்தில் 999 கலைகளுடன் உறைந்து தங்கிவிட்டார் என்பது வரலாறு.


எமதர்மனுக்கும் சாப விமோசனம் அளித்த தலம்:
ஒருமுறை எமதர்மன் தன் நிலையை எண்ணி வருந்தியபடி இருந்தார். எவ்வளவோ விதமான பதவி நிலைகள் இருந்தும் தனக்கு மட்டும் இப்படி உயிர்களைப் பறிக்கும் பாவ காரியம் செய்யும் பதவி ஏன் வந்தது, என எண்ணி வருந்தினார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சினாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே இத்தலம் வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார் எமதர்மன். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். முதலில் உன்னை தரிசித்த பின்னரே என்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை ஸ்ரீ வாஞ்சிநாதர் எமனுக்கு வழங்கினார்.


இத்தலத்தில் விளங்கும் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி துர்க்கையின் மறு உருவமாய் எங்கும் காணக் கிடைக்காத ஒரு அரிய வடிவமாய் காட்சி தந்து அருள்புரிகிறாள்.

ஸ்ரீ வாஞ்சியம் துர்க்கை துதி:
மனமுடையவளே அச்சங்கடிபவளே
அம்பிகே தாயே வேதாந்தத்தால் அறியப்படுபவளே
கருமைத் தங்கிய மேனியை உடையவளே
அழகியவளே வளர்ந்த முன்மயிரையுடையவளே
மிக்க ஒளியை உடையவளே
யோகினியே நீலகண்டர் மனைவியே
முச்சூலம் தரித்த கையளே
எல்லாச் சிறப்பும் அமைந்த வடிவினளே
பயமகற்றுபவளே மதியணிபவளே
நெற்றிக்கண்ணி ஹே மகா கௌரி
ஹே மகாலட்சுமி, ஹே சரஸ்வதி, ஹே சர்வதேவி
உன் பொருட்டு நமஸ்காரம்
ஹே அம்பிகை கருணை செய்வாய்
காப்பாற்றுவாய் உனக்கு வந்தனம்!!!

திருவாஞ்சியம் திருத்தலத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் அருளிச் செய்த பதிகம்:
படையும் பூதமும் பாம்பும்புல் வாய்அதள்
உடையும் தாங்கிய உத்தம னார்க்குஇடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே!!

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே!!

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே!!

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்தாம் அமரர்க்கு அமரரே!!

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே!!

அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணை யாவன் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத்து ஆவதே!!

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடி யான்திக ழும்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யால்அடை வார்க்கு இல்லை அல்லலே!!

திருச்சிற்றம்பலம்!!

Saturday, March 29, 2014


காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், ஊத்துக்காடு

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த, குழலூதும் கண்ணன் வீற்றிருக்கும் ஊத்துக்காடு எனும் சிறிய ஊரில் அமைந்துள்ள காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில்.


காளிங்கன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள் முடியைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிபற தூமணி வண்ணனை பாடிபற!!
-- பெரியாழ்வார் திருமொழி

திருக்கோயில் அமைவிடம்:
இந்த ஊத்துக்காடு காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூரில் இருந்து 30 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 15 km தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக ஊத்துக்காடு திருக்கோயிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், பட்டீஸ்வரம், கோவிந்தகுடி வழியாக இத்திருக்கோயிலை அடையலாம்.

திருத்தல குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வேத நாராயண பெருமாள்
தல இறைவி: ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி
உற்சவர்: ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன்

திருத்தல வரலாறு:
பொதுவாக கண்ணன் கதைகளைக் கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். கிருஷ்ண பகவானின் லீலைகளை கேட்பதில் அப்படி ஒரு ஆனந்தம். சாதாரண மனித ரூபத்தில் அவதாரமெடுத்து, மனிதர்கள் சூழ, சக மனிதன் அனுபவித்த சுக துக்கங்களில் பங்கெடுத்து, தானும் அதே சுக துக்கங்களை அனுபவித்து, நமக்கு ஒரு நண்பனின் சொரூபத்தில் வாழ்ந்த கண்ணனின் மீது நமக்கு அதீத அன்பு ஏற்படுவது இயற்கைதானே.

அதே நேரத்தில், கண்ணன் மீது அளவில்லா அன்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அத்தனைக்கும் உண்டு என்பதை நிரூபிக்கிறது இத்தல இறைவனின் திருத்தல வரலாறு. தன் பக்தர்களுக்காக, பக்தர்களின் அன்பில் குழைந்து, திளைத்து, எதையும் செய்யத் துணியும் கண்ணனின் காருண்யம்தான் இத்தல வரலாறு.

இந்த ஊத்துக்காடு என்னும் இயற்கை அன்னையின் அருள் பெற்று அளவற்ற செழிப்புடன், பசுமை வண்ணத்தால் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும்படி அமைந்துள்ள சிற்றூருக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் சிவன் திருக்கோயில் ஒன்று உள்ளது.

இத்தல இறைவனான ஸ்ரீ கைலாசநாதரின் திருவடி சேவை செய்யும் பொருட்டு, தேவலோக பசுவாகிய ஸ்ரீ காமதேனு தன் குழந்தைகளான நந்தினி, பட்டி என்னும் இரு கன்றுப் பசுக்களையும் இத்தலத்திலேயே விட்டுச் சென்றது.

இவ்வாறாக நந்தினி, பட்டி என்கிற இவ்விரு பசுக்களும் அபிஷேகப் பிரியரான கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டும், பூஜைக்குரிய பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்து இறைவனுக்குப் படைத்துக் கொண்டும் தங்களது கைங்கர்யங்களைச் செய்து வந்தன. இது போல பசுக்களினால் தெய்வ ஆராதனை செய்யப்பட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற காரணப் பெயரும் உண்டானது.

இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்தமையினால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.

இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்ட நந்தினி, பட்டி பசுக்கள் கேவி, கேவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கி விட்டன. ஏன் இந்த அழுகை எனக் கேட்ட நாரத முனியிடம், அத்தகைய பெருத்த, பருத்த, பயமூட்டும் காளிங்கனிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு பகவான் போராடியிருப்பார்? அவ்வாறு போரிடும்போது கண்ணனது உடலெங்கும் காயங்கள் பட்டிருக்குமே. நீல வண்ண மேனி வலித்திருக்குமே எனப் பலவாறாக புலம்பித் தீர்த்து அழுது கொண்டே இருந்தன அந்த கன்று பசுக்கள்.

இது போன்ற மனதை நெகிழச் செய்யும் காட்சியினை தேவ லோகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ காமதேனுப் பசு, தன் பிள்ளைகள் கதறி அழுவதைக் காண முடியாமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து, தன் குழந்தைகளின் நிலையினை எடுத்துச் சொல்லி இப்படி ஒரு நிலைக்குத் தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

அவ்வாறே ஸ்ரீ காமதேனு பசுவின் வேண்டுகோளுக்கு இணங்க பூமாதேவி வாசம் செய்யும் பூலோகத்திற்கு வந்து இவ்விரு பசுக்களையும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

கண்ணன் ஆறுதல் படலத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் சென்று, இந்த ஊத்துக்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புஷ்ப வனத்திற்கு அருகாமையிலேயே ஒரு ஊற்றினை உருவாக்க, தண்ணீர் பெருக்கெடுத்து அங்கொரு குளம் உண்டானது. ஊத்துக்காடு எனும் பெயரும் பெற்றது. அக்குளத்திலேயே காளிங்க நர்த்தனத்தை மீண்டும் இப்பசுக்களுக்காக ஒரு முறை செய்து காண்பித்தார். தான் காளிங்க நர்த்தன லீலையை புரியும்போது எவ்விதத்திலும் கஷ்டப் படவில்லை, துன்பப் படவில்லை என்பதை அப்பசுக்களுக்கு உணர்த்தினார்.

இந்த காளிங்க நர்த்தன லீலையைக் கண்ணுற்ற இவ்விரு பசுக்களும் மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தன. பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளினால் மயக்கம் தெளிந்து, பெரும்மூச்சும் வந்ததால் மூச்சுக்காடு என்றும் இத்தலம் பெயர் பெற்றது.

திருத்தல அமைப்பு:
மெத்தச் சிறப்பு வாய்ந்த புனிதத் தன்மை உடைய காவிரி ஆற்றினாலும், அதன் கிளை நதிகளாலும் சூழப்பட்டு, வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தேனுஸ்வாஸபுரம் என வடமொழியிலும், மூச்சுக்காடு என தேன் தமிழிலும் ஆதிகாலப் பெயர் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த இவ்வூர் சிவஸ்தலமாகவும், விஷ்ணுஸ்தலமாகவும் விளங்குகிறது.

சங்க காலத்தில் இச்சிறிய கிராமம் கோவூர் என்ற திருநாமத்துடன் பெருமை பெற்று விளங்கியது. தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தனது கிருஷ்ண லீலையை செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் இன்றுவரை விளங்குகிறது. இந்த பெருமை மிகு காளிங்க நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இவ்வூருக்கு தென் கோகுலம் என்னும் பெயரும் உண்டு.

இந்த ஆலயத்தின் மேற்கு திசையில் ஏரியைப் போன்ற தோற்றத்தில் பெரிய தாமரைத் தடாகம் ஒன்று அமைந்துள்ளது.

மிகவும் பழமையானதும், பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு சிறப்பம்சங்களை தானகத்தே கொண்டுள்ள இத்திருக்கோயில் நுழைவு வாயிலின் இடப்புறமாக அருள்மிகு கணேசமூர்த்தி, நர்த்தன கோலத்தில் காட்சி அளித்து அருள் செய்கிறார். திருக்கோயில் மூலஸ்தான சன்னதியில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வேதநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ பாமா சமேதராக ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் காளிங்கன் என்னும் சர்ப்பத்தின் சிரசின் மேல் நடன கோலத்தில் உற்சவ மூர்த்தியாக ஐம்பொன் சிலா ரூபமாக காட்சி அளிக்கிறார். இதுபோன்ற பாம்பின் மேல் நடனமாடும் கோலத்தில் காளிங்க நர்த்தன பெருமாளை உலகில் வேறு எங்கும் காண இயலாது.

ஸ்ரீ நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாங்கள் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடிய லீலையை மீண்டும் இங்கே புரிந்ததால் நீங்கள் இங்கேயே விக்கிரகமாகி ஊத்துக்காட்டிலேயே தங்கி உலக மக்களுக்கெல்லாம் அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெருமானும் இங்கேயே தங்கி விட்டார். ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஸ்ரீ நாரதரே பிரதிஷ்ட்டையும் செய்துள்ளார். இந்த உற்சவ மூர்த்தி காளிங்க நர்த்தனரின் காலடியிலேயே நந்தினி, பட்டி எனும் இரு பசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அண்ணாந்து, கண்ணனையே பார்த்த கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

தனிச்சிறப்பு:
ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமான், காளிங்கனின் சிரசின் மேல் தன் இடது திருவடியை வைத்துள்ளார். தனது வலது காலை நர்த்தன கோலத்தில் உயர்த்தியபடி உள்ளார். ஆக இறைவனது ஒற்றைப் பாதமே பாம்பின் சிரசின் மேல் உள்ளது. அவரது பாதத்திற்கும் பாம்பின் சிரசிற்கும் ஒரு நூல் விட்டு எடுக்கும் இடைவெளி உள்ளது. ஒரு கையை நானிருக்கிறேன் என்னும் பொருள்படும்படி அபயஹஸ்தமாகவும், மற்றொரு கையினால் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார். அதுவும் காளிங்க பாம்பின் வாலினை பகவானின் கட்டை விரல் மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை.

இவ்வாறாக வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை என இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சிற்பத்தின் சிறப்பினை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்ந்த மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஊத்துக்காடு வெங்கடகவி:
உலகமெங்கும் இசை உலகில் பிரபலமாகவும், எல்லா இசைக் கலைஞர்களாலும் பாடப்படும் பாடல்களை இயற்றிய பெருமை கொண்டவர் ஊத்துக்காடு வெங்கடகவி. இவர் பிறந்த ஊரோ பல்வேறு சிறப்புக்களை உடைய மன்னார்குடி. ஆனால் அவர் வளர்ந்து கண்ணன் மேல் பாடல் பாடி உலகப் புகழ் பெற்ற ஊர் ஊத்துக்காடு. இந்த ஊரின் பெயரே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

இவருக்கு ஸ்ரீ காளிங்க நர்த்தன் பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். பெருமானை கண்ட பெரு மகிழ்ச்சியில் இத்தல இறைவன் மேல் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அனேக கர்னாடக சங்கீத பாடகர்களால் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.

கதிரும் மதியும் என
நயன விழிகள் இரு நளினமான
சலனத்திலே காளிங்க சிரத்திலே
கதித்தபதத்திலே என்
மனத்தை இருத்தி கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும் கனிந்துருக
வரந்தருக.....
(பால் வடியும் முகம்) எனத் தொடங்கும் பாடல்
-- ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வெங்கட கவி எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஆடாது அசங்காது, அலை பாயுதே கண்ணா, அசைந்தாடும், குழலூதும் எனத் தொடங்கும் மிகப் பிரபலமான கர்னாடக சங்கீத கீர்த்தனைகளும் அடங்கும்.

இவ்வாறாக பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை நமது வாழ்நாளில் நாம் நமது குடும்பத்துடன் சென்று இத்தல பெருமானது தனித்த தன்மையையும், பேரழகையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத இப்பெருமானது தோற்றப் பொலிவையும், பெருமானது கண்ணில் பொங்கும் கருணையையும் கண்ணார மனதாரக் கண்டு களித்து வருவோம். இந்த காளிங்க நர்த்தன பெருமாளைக் காணும் அந்த கணம் அந்த நொடிப் பொழுது அப்படியே நின்று விடாதா? என நினைக்கும் வண்ணமும், நம்முடன் பகவான் பேசுவது போலவும், பல்வேறு நிலைப்பாடுகள் நம்முள்ளே வந்து வந்து செல்கின்றன. இப்படி ஒரு உன்னத அனுபவம் இத்திருக்கோயில் சென்று நர்த்தன பெருமாளை நேரில் காணும்போது மட்டுமே கிடைக்கும் அனுபவம்.

நமது இந்திய நாடு, குறிப்பாக தமிழகம் எத்தனையோ கால மாற்றங்களைச் சந்தித்தாலும் இந்தத் திருக்கோயில் வடிவங்களும் அதன் அமைப்புகளும், திருக்கோயிலில் காணப்பெறும் பல்வேறு சிலாரூபங்களும், அவற்றின் அதிசய சிறப்புக்களும், இத்தனை யுகங்களைத் தாண்டி வந்த நமது பாரத நாட்டின் சொத்துக்களாகிய இவை, இனியும் எத்தனை யுகங்கள் ஆனாலும் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் துளியும் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. நமது பெருமைமிகு சிறப்புமிகு சொத்துக்களைக் காத்திடுவோம்!

இவற்றுக்கெல்லாம் மேலாக, இத்தகைய சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இத்திருத்தலம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால், இக்கோயிலை சீரமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது.


திருக்கோயில் தொலை பேசி எண்:
ஊத்துக்காடு: 04374 - 268549, 94426 99355
சென்னை: 98846 20129

ஊத்துக்காடு வேங்கடகவி பாடல் தொகுப்பு


பட உதவி : www.oothukkadu.com
Related Posts with Thumbnails