Friday, October 29, 2010


பச்சை பூமி

சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. காவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.

இந்த பூமியும் வானம் பார்த்த பூமியாகி பல காலம் ஆகிவிட்டது. மனிதர்கள் தராத தண்ணீரை மகேசன் தருகிறார் மழையாக. மூன்று புறமும் கடல் நீரால் சூழப்பட்ட நாம் ஒருபக்கம் சுயநல நெருப்பால் சூழப்பட்டுள்ளோம். இவர்கள் தண்ணீருக்கு மட்டும் அணை கட்டவில்லை. மனித நேயத்திற்கும் சேர்த்து அணை கட்டுகிறார்கள். இங்கே நம்மில் இரும்பிலே இதயம் முளைக்கின்ற காலத்தில் அங்கே இதயங்கள் இரும்பாகிப் போயினவே. குதிரை பேரத்தில் மூழ்கி காணாமல் போனவர்கள் தண்ணீர் என்றதும் ஒன்று கூடும் மனிதர்கள் வாழும் பூமியில் இருந்து தண்ணீருக்கு நாம் கையேந்தி நிற்க அவசியம் ஏற்படாதவாறு இந்த ஆண்டு நல்ல மழை, காலத்தே பொழிய இறைவனை பிரார்த்தித்து வருண பகவானை துணைக்கு அழைப்போம். வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.

பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார் போன்ற ஊர்களில் சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான். இப்பகுதியில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வதில் எந்த வித உடல் சோர்வோ, பயணக் களைப்போ தெரியாது. இதற்கு முக்கிய காரணம், பசுமையான வயல்வெளிகள், அடர்த்தியான மரங்கள், ஆற்றுப் படுகைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், வயல்வெளிகளின் உட்புறத்திலே காணப்படும் பெரிய கிணறுகள், தண்ணீர் அருவி போல் கொட்டும் ஆழ் குழாய் கிணறுகள், இவற்றின் உதவியால் வருடம் முழுவதும் பசுமை வண்ணமே இங்கு படர்ந்திருக்கும்.

பேருந்திலே பயணம் செய்யும் போது எஸ்.ஏ. ராஜ்குமாரின் புண்ணியத்தில் பிரபலமான லா லா லா பாடல்கள் ஒலித்த காலம் அது. இது போன்ற வளமான பகுதிகளைக் கடந்து செல்லும் வேளையில் இந்தப் பாடல்கள் செவிக்கு உணவாகவும், பயிர்கள் கண்ணிற்கு உணவாகவும் ஒன்றிணைந்த பயணம், ஆஹா, சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் பகுதிகளில் பயணம் செய்வது போல் வருமா. அநேகமாக இப்படி நாங்கள் பேருந்து பயணத்தில் கேட்டுத்தான் லா லா லா மிகவும் பிரபலமானதோ என்னவோ. நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் இப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அந்த சுகானுபவத்தை பெறலாம்.


உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இப்பகுதி விளை நிலங்களில் காணும் அழகு பச்சை வண்ணத்தை வேறு எங்கும் காணமுடியாது. இந்த மண்ணின் தன்மை அப்படிப்பட்டது. நாங்கள் சொந்த ஊர்ப் பக்கம் செல்லும்போது எங்களைத் தலையாட்டி முதலில் வரவேற்பது அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள்தான். காவிரித் தாய் கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து , தனது நெடுந்தூரப் பயணத்தை பல ஊர்கள் வழியாக வந்து கடைசியில் கடலில் கலப்பது எங்கள் ஊர் பகுதியான பூம்புகாரில் தான்.

இங்கே வாழும் மக்களை மதங்கள் கூட பிரித்துப் பார்த்ததில்லை. எங்கள் குடும்பங்களில் வேண்டுதல்கள் கோயில்களோடு நின்று விடுவதில்லை. மன்னார்குடியில் உப்புக்காரத்தெருவில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கே இஸ்லாமியர்கள் வந்து உடல் பிரச்சினைகள் தீர மந்திரம் போட்டுச் செல்வார்கள். நாகூர் தர்காவிலும் நேர்த்திக்கடனை செலுத்துவோம், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரக்கண் வாங்கி நட்டு வேண்டுதல் நிறைவேற்றுவோம். சிக்கல் சிங்கார வேலன் கோயிலிலும் நிறைவேற்றுவோம். நாகை பகுதிக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, சிக்கல் சிங்கார வேலன் மூவரையும் தரிசித்த பின்னரே எங்கள் பயணம் நிறைவுபெறும். இது ஏதோ வினோதமான அதிசயமான விஷயமாக நாங்கள் கருதுவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட புனிதமான விஷயம் இது. இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.

மன்னை, இன்றும் திண்ணை வைத்த வீடுகளைப் பார்க்கலாம். பழமை மாறாத ஊர்.

மயிலாடுதுறை, பழமையை வெளியேற்றாமல் புதுமை புகுந்து விளையாடும் ஊர்.

கும்பகோணம், குட்டி மும்பை என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில், வியாபாரத்தில் செழித்தோங்கும் ஊர்.

தஞ்சை, தமிழ் மாநாடு நடத்திய பெருமை கொண்ட ஊர். கலையழகு கொஞ்சும் தரணி போற்றும் ஊர்.

நாகை, சுனாமி சுழற்றி அடித்தாலும் சுயம்பாய் எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையின் இருப்பிடமாய் விளங்கும் ஊர்.

திருவாரூர், இந்த ஊரைப் பற்றி நான் சொல்வதை விட இவ்வூரின் பெருமை என்னவென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அழகான ஆழித் தேர் கொண்ட ஊர் என்பது தனி கதை.

திருவையாறு இசை ஆசான்களின் இருப்பிடம். இசைப் பிரியர்களின் கொள்ளிடம்.

நாகூர், மெக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் வரவிரும்பும் ஊர்.

வேளாங்கண்ணி, வாடிகன் சிட்டிக்கு அடுத்து அதிகம் மக்கள் வர பிரியப் படும் ஊர்.

வேதாரண்யம், முத்துப்பேட்டை கடல் மாதாவின் முத்துக்கள்.

பூம்புகார், தமிழன் கடல் மார்கமாகவும் தன் வாணிபங்களை விரிவு படுத்தியுள்ளான் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள உதவும் ஊர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சோழவளநாட்டின் பெருமைகளை. இந்த காவிரிப் படுகை சார்ந்த ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் செல்லும்போதும் சொந்த ஊருக்குச் சென்ற நினைப்புதான் வருமே தவிர வேறு ஊருக்குச் சென்ற எண்ணம் தோன்றாது. ஆனால் விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் இங்கும் நிகழ்கிறது. விவசாயத்தை படித்தவர்களும் ஒரு தொழிலாக எடுத்து செய்யும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டிற்கே படியளக்கும் வண்ணம் எங்கள் தஞ்சை மண் நெற்களஞ்சியமாக விளங்கியது ஒரு காலத்தில். மீண்டும் அதே போன்றதொரு நல்ல நிலை வர வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் அவா.

ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே தங்கள் காலத்தைக் கழிக்க வாய்ப்பில்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு , நாடுகளுக்கு சென்று வாழ்பவர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இன்னும் சொல்லப் போனால் இப்போது நாங்கள் வாழும் பூமிதான் இன்றைய பொழுதிற்கு எங்களுக்கு சோறு போடும் ஊர். இந்த சொந்த ஊர் பாசமெல்லாம் வருடத்தில் எப்போதாவது வரும் பண்டிகைகளின் சந்தோஷங்களைப் போல கனவில் வந்து போகும் கடவுள் முகம் போல.

மரம் தன் கிளைகளை எங்கு பரவி வளர்ந்தாலும் வேர்தான் அடிப்படை. ஊர் பாசம் உள்ளவர்களுக்கு சொந்த மண் தான் அடிப்படை. இப்படி நான் குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.

பட உதவி:
gkamesh.wordpress.com

Wednesday, October 27, 2010


குணுக்கு

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 50 கிராம்
உளுத்தம் பருப்பு : 50 கிராம்
துவரம் பருப்பு : 50 கிராம்
பயத்தம் பருப்பு : 50 கிராம்
தேங்காய் துருவல் : 1 பிடி
பச்சை மிளகாய் : 4
பெரிய வெங்காயம் : 2
பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
பொரிக்க எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பருப்புக்களையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை அரியாமல் மிக்ஸியில் போட்டு ஒரு நொடி, ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊறிய பருப்புகளில், ஒரு பிடி அளவு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியுள்ள பருப்பினை மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்து, இதனுடன் எடுத்து வைத்துள்ள முழு பருப்புகள், அரைத்த பச்சை மிளகாய், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு, இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இந்த கலவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசறவும். இவ்வாறு செய்வதால் செய்யும் பலகாரம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் வைத்து இந்த கலவையை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் நிரம்ப சுவையான குணுக்கு தயார்.


தமிழர்களின் அன்றாட உணவில் அரிசியைப் போல், பருப்பும் சேர்த்து சமைப்பது வழக்கம். தினமும் சாப்பாட்டில் பருப்பு சேர்த்து சமைப்பதும் நல்லதல்ல என ஒரு மருத்துவர் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பருப்பை சாம்பாரில் மட்டும் சேர்த்து சமைக்காமல், இதுபோல செய்து சாப்பிடும்போது ஒரு பருப்பினுடைய நலன் மட்டுமல்லாது எல்லா பருப்புகளுடைய நலன்களும் ஒன்றாகக் கிடைக்கிறது. பருப்புகளில் ப்ரோட்டின் சத்து மட்டுமல்லாது, நார் சத்துக்களும் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் எலும்புகள் மிகவும் வலுவிழந்து விடுகின்றன. இத்தகைய சமயங்களில் சுண்டல் போன்ற உணவுகளை மட்டுமின்றி இது போல எல்லா பருப்புகைளை சேர்த்து செய்யக் கூடிய உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன. வளரும் குழந்தைகளுக்கும் நல்ல, சீரான எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது. நாம் எல்லோரும் பயப்படும் கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல கொழுப்பு இத்தகைய உணவு வகைகளை உண்ணும் போது சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.

Monday, October 25, 2010


கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில், கோழிக்குத்தி.

லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட கிருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம் !!



திருக்கோயில் அமைவிடம்:
இந்த அருள்மிகு வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து 5 km தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 km தொலைவிலும், மூவலூர் என்னும் சிற்றூரில் இருந்து 2 km தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வலதுபுறம் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தல இறைவி : ஸ்ரீ தயா லெட்சுமி
தல தீர்த்தம் : விஸ்வரூபபுஷ்கரணி


திருத்தல வரலாறு:
நமது பெருமை மிகு சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம், ''முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய்,அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்" எனவும் ''அந்த பாவம் தீர காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்கு'' என பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமான்.

பெருமானின் அறிவுரையின்படி, மகரிஷி பிப்பலர் தனது பயணத்தை ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரரை முதலில் தரிசித்துத் தொடங்கினார். மனம் குளிர்ந்த சிவ பிரான் வடக்குப் பக்கமாக வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் சென்று காவிரி நதியில் நீராடி கோழிக்குத்தி எனும் ஊரை வந்தடைந்தார். அப்போது ஒரு நெடிய, நீண்டு வளர்ந்த அத்திமரத்தில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் பிப்பல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். இப்படிப்பட்டதொரு காட்சியினை மனதில் நினைத்துப் பார்க்கும்போதே மெய் சிலிர்க்கிறது. விஸ்வரூப தரிசனத்தை நேரில் கண்ட மகரிஷிக்கு எத்தனைக் கொடுப்பினை, இத்தகு காணக் கிடைக்காத காட்சியினைக் காண.

இப்படியோர் அற்புத தரிசனத்தைக் கண்டதும் மகரிஷியின் சரும நோய் அவரிடமிருந்து விடை பெற்றது. அதே நேரத்தில் மூவலூர் ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரரின் முன்பாக வீற்றிருக்கும் நந்தி பகவானும் மகரிஷிக்கு அருள் மழை பொழிந்தார்.

பிப்பல மகரிஷியின் சரும நோய் நீங்குவதற்காக மூவலூர் சிவபிரான் இந்த திசை நோக்கிச் செல் என்று கோடி காட்டியதால் கோடிஹத்தி என்ற பெயர் வழங்கலாயிற்று. பிப்பல மகரிஷியின் கோடி தோஷங்கள் நீங்கப் பெற்றதால் கோடிஹத்தி, பாப விமோசனபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. கோடிஹத்தி என்ற பெயரே கோழிக்குத்தி என்று மருவியது. ஆகையால் இத்தல பெருமானை தரிசிக்க நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.


திருத்தலச் சிறப்பு:
தனது சரும நோய் நீங்கப் பெற்ற பிப்பலர் மகரிஷி காவிரிக் கரையில் தவம் புரியலானார். இதன் காரணமாகவே இக்கோயிலை ஒட்டி ஓடும் காவிரித் தீர்த்தத்தை பிப்பலர் மகரிஷி தீர்த்தம் எனவும் அழைக்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து உடல் உபாதைகளும், நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூவலூரில் உள்ள ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரர் திருக்கோயிலின் பிரகாரத்தில் பிப்பல மகரிஷிக்கு தனிச் சன்னதி உள்ளது.

பின்னொரு காலத்தில் இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட சோழ அரசர், தான் புரிந்துள்ள போர்களின் வாயிலாக எத்தனை உயிர் பலி ஏற்பட தான் காரணமாகிவிட்டோம் என எண்ணி, அரசன் தான் செய்த பாவம் நீங்கப் பெற கடும் தவம் புரிந்தார். இதன் காரணமாக அரசருக்கும் அதே அத்திமரத்திலே விஸ்வரூப காட்சி தந்தார் வானமுட்டி பெருமாள். பெருமாளின் அருளும் அரசருக்குக் கிடைத்தது.

பின்னர் சோழ அரசர் சிற்பக் கலையில் வல்லவர்களைக் கொண்டு, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் 4 கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம், ஆகியவற்றுடன் காட்சி தரும்படி வானமுட்டி பெருமாளைச் செய்து அதற்கு அஜந்தா வர்ணம் தீட்டி, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பினார்.


இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திய கோயில். சோழ அரசர் இக்கோயிலை 7 பிரகாரங்களுடன் கட்டியுள்ளார். தற்போது இக்கோயில் ஒரு பிரகாரத்துடன் தான் உள்ளது. இக்கோயில் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. பெருமாளின் வலது மார்பில் ஸ்ரீ மகா லெட்சுமி குடிகொண்டுள்ளார். சீனிவாச பெருமாளின் இடப் பக்கமாக பூமாதேவி சிலை வடிவில் காட்சி தருகிறார்.

திருக்கோயிலின் உள்ளே சுவாமி எழுந்தருளி இருக்கும் கோயில் கோபுர விமானம் பார்க்க அத்தனை அழகு. ஒரு கலசத்துடன், ஒரு பெரிய, பல வண்ணங்களால் ஆன குடையைப் போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.


மிகப் பெரிய அத்தி மரமே பெருமானாக மாறியுள்ளதால், அம்மரத்தின் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் உலகில் எங்கும் இல்லாத காணக் கிடைக்காத அதிசய தரிசனம். சோழ அரசரால் இக்கோயில் கட்டப் பட்டதால் இவ்வூருக்கு சோழன்பேட்டை என்ற பெயர் உண்டானது. இத்தல வானமுட்டிப் பெருமாள் 14 அடி உயரத்தில் காணப் படுகிறார். அத்திமரப் பெருமான் என்பதால் இவருக்கு கற்பூர எண்ணைக் காப்பு மட்டுமே நடைபெறுகிறது.

இங்கு பிப்பலர் கடும் தவம் செய்து அருளிய சனி காயத்ரி மந்திரம் சனிகிரக தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக உள்ளது. இத்தலமும் சனிதோஷ பரிகாரமாகத் தலமாக உள்ளது. இதனை இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ - சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய : படேத்
சனைச்சர கிருதா பீட நகதாசித் பவிஷ்யதி !!


இங்கு கிடைத்துள்ள கல்வெட்டின்படி, சனிதோஷ பரிகாரத்திற்கு, ஒரு தமிழ் ஆண்டில் உள்ள 51 வாரங்களுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் 10 பேருக்கு தலை குளிக்க எண்ணையும், ஐந்து விதமான காய்கறிகளுடன், ஒரு இலைக் காய்கறி சேர்த்து, உணவும் அளிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிடைத்துள்ள மூன்று கல்வெட்டுகளின்படி, இக்கோயில் பெருமானுக்கு ஸ்ரீ பக்தப்பிரியர், பக்தப்பிரியத்தாழ்வார் என்ற பெயர்களும் உண்டு என அறியப் படுகிறது. பக்தர்களின் துன்பங்களை கருணை உள்ளத்துடன் சரி செய்பவள் இத்தல தாயார் ஸ்ரீ தயாலெட்சுமி. ஸ்ரீ யோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, இரண்டு திருக்கரங்களை யோக திருவடி மீது வைத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரதோஷ காலத்தில் இக்கோயில் நரசிம்மரை மனதார தரிசனம் செய்ய அங்காரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் மூன்று அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். இவர் வாலைச் சுருட்டி தலையில் வைத்திருப்பதும், வாலின் நுனியில் மணி தொங்கும்படியும் அமைந்துள்ளது மிகவும் சிறப்பான விஷயம். இவர் சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயராக விளங்குகிறார். இவரது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு ஒலி உண்டாகிறது. அவ்வித ஒலியானது ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வர ஒலி அமைப்பில் உள்ளது அதிசயிக்கத் தக்க விஷயம். இவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வது, அந்த அபிஷேகத்தை காண்பது விசேஷமான ஒன்று.



மேலும் தும்பிக்கையாழ்வார். ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர், விஷ்வக்ஷேனர், பிப்பலர் சன்னதிகளும் உள்ளன. விஸ்வரூபபுஷ்கரணி தீர்த்தக் குளம் கோயிலுக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. இத்திருக்குளம் 7 கிணறுகள், 7 நதிகளாக பெருமானால் உருவாக்கப் பட்டதாக நம்பப் படுகிறது.

இது போன்ற அமைதியான சூழ்நிலையில் ஆற்றோரமாக அமைந்துள்ள திருக்கோயில்களுக்குச் செல்லும்போது மனம் மகிழ்ச்சியும், அமைதியும் பெறுகிறது.

Saturday, October 23, 2010


கொள்ளு துவையல்

தேவையான பொருட்கள்:
கொள்ளு : 1 பிடி
தேங்காய் : 1/2 மூடி
சிவப்பு மிளகாய் : 7
பூண்டு : 7 பல்
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

பூண்டினை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும். இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.


கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

Thursday, October 21, 2010


மயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. இச்சொல் வழக்கு முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சொல்வழக்கு. மயிலாடுதுறையில் வாழ்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அத்தனை சிறப்புக்கள் வாய்ந்த ஊர் மயிலாடுதுறை. இந்த ஐப்பசி மாத ஆரம்பத்தில் மாயவரம் பற்றிய பதிவினைப் போடுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
கலைகளாய வல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே
-- திருநாவுக்கரசர்


அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கையே இங்கு வந்து காவிரியில் மூழ்கி தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மாயூரநாதரை கௌரி, இந்திரன், பிரம்மன், ப்ரஹஸ்பதி, அகத்தியர், நாதசர்மா-அனவித்தை, திலீபன், சப்த மாதாக்கள், திக்குபாலகர்கள் மற்றும் பலவகையான விலங்குகளும், தேவர்களும் வழிபாடு செய்துள்ளனர்.


இத்தலத்தின் பெருமைகளை பல சான்றோர்கள் போற்றிப் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.

பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நூல்களிலும், தனது கல்கி பத்திரிக்கையிலும் இவ்வூரின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் இவ்வூரில் வாழ்ந்த பெருமை கொண்டவர்.

மயிலாடுதுறை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் விளிக்கப் பட்டுள்ளது. திருமயிலாடுதுறை, மாயூரம், கௌரிமாயூரம், தென்மயிலை, பிரமவனம், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம் என பல பெயர்கள் உண்டு மயிலாடுதுறைக்கு. வடமொழியில் உள்ள ஸ்காந்தம், சிவரகசிய மகாஇதிகாசம், துலா காவிரி மகாத்மியம், சிதம்பர புராணம், சிவ புராணங்கள் 10, பிரம்மாண்ட புராணம், ஆக்கினேய புராணம் போன்றவற்றிலும், கந்தபுராணத்திலும், இத்தலப் பெருமை சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது என்ற பழமொழி மயிலைப் போன்ற அழகான பறவை உலகில் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட பழமொழி. திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்களும் இவ்வூரில் வாழ்ந்தவர். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராக திருவாவடுது
றையிலும், மயிலாடுதுறையிலும் வாழ்ந்தவர். இவர் இல்லையென்றால் தமிழில் தோன்றிய காவியங்களை நம்மால் கண்டு ரசித்து படித்திருக்க முடியாது. அக்கால சுவடிகளைக் கண்டறிந்து சேகரித்து ஐம்பெரும் காப்பியங்களை தொகுத்து அச்சில் ஏற்றியவர் இவர். தமிழ் வாழும் வரை இவரது புகழும் வாழும்.

இவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:
*அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை
*அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை
*சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை
*அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்
*புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை
*அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி
*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை பெரியகடைவீதி


இத்தலத்து சித்தராகப் போற்றப் பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணஸ்வாமி ஐயர். இத்தலத்து அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி இவரால் பாடப்பட்டது 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம்.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : மயூரநாதர் (கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்)
தல இறைவி : அபயாம்பிகை (மயிலம்மை, அஞ்சலைநாயகி, அஞ்சலை)
தல விருட்சம் : மாமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்


திருத்தலம் அமைவிடம்:
இந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.

ஆதி மயூரநாதர் திருக்கோயில்:
சுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.


இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.


கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.


கி.பி 1070 - 1118-ம் வருடங்களில் கட்டப்பட்ட செங்கல் கற்றளி மண்டபங்களாக இருந்த சுவாமி, அம்பாள் திருக்கோயில் இடிக்கப் பட்டு இப்போது உள்ள கருங்கல் கற்றளி 1928-ம் ஆண்டு எழுப்பப் பட்டுள்ளது. இங்கே அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.


இத்தல வரலாறு:
தட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.


அனைவரும் தாம் செய்த பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்து ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரி விருஷப தீர்த்தத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. கங்கையைத் தேடி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுரைக்கே வந்துவிட்டனர். அந்த நாள் ஐப்பசி மாதம் 30-ம் நாள். அன்று வந்தவர்கள் மயிலாடுதுறையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் மயிலாடுதுறையின் புனிதச் சிறப்பு அனைவருக்கும் புரியும்.

ஐப்பசி மாதம் முப்பது நாட்களும், கார்த்திகை மாதம் முதல் தேதி வரையிலும் இத்திருத்தலம் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை, வள்ளலார்கோயில், காவிரி வடகரை காசிவிஸ்வநாதர், தென்கரை காசி விஸ்வநாதர், ஐயாறப்பர், போன்ற 5 திருக்கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் ஐப்பசி முதல் நாள், ஐப்பசி அமாவாசை, ஐப்பசி கடைசி நாள்களில் தீர்த்தம் கொடுத்து அருள்வர். இவற்றுள் கடைமுழுக்குத் தீர்த்தமே மிக விசேஷமானது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கடை முழுக்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனின் அருளைப் பெறுவர். இந்த விழா இப்போது, ஐப்பசி மாதம் ஆரம்பமாகிவிட்டதால், ஐப்பசி முதல் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமயிலாடுதுறையில் வாழ்பவர்கள் மட்டுமல்ல இந்த கடை முழுக்கு தீர்த்த விழாவில் கலந்து கொள்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே !!!!

****************

பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.

திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே !!

நின்றுஉண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மைஉயர்ந்த
வென்றி அருளான் அவன்ஊரான்
மன்றல் மயிலாடு துறையே !!

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலால் உரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே !!

திருச்சிற்றம்பலம் !!

Tuesday, October 19, 2010


பாகற்காய் மதுரம்

தேவையான பொருட்கள்:
பாகற்காய் : 1/4 கிலோ
மிளகாய்த்தூள் : 1 தேக்கரண்டி
பெருங்காயம் : 1 சிட்டிகை
மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
எலும்பிச்சம் பழம் : சிறியது 1
நாட்டு சர்க்கரை : 3 தேக்கரண்டி
கருவேப்பிலைப் பொடி : 1 தேக்கரண்டி
அரிசி மாவு : 1/2 கப்
கடலை மாவு : 2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு


செய்முறை:
பாகற்காயை நன்றாக அலசி விட்டு வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன்மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலும்பிச்சம் பழச் சாறு, பெருங்காயம், நாட்டு சர்க்கரை, கருவேப்பிலைப் பொடி, உப்பு போன்றவற்றைக் கலந்து, இந்தக் கலவையை ஒரு அரைமணி அப்படியே ஊற விடவும்.

ஊறிய இந்தக் கலவையில் அரிசிமாவு, கடலைமாவு கலந்து நன்கு பிசறவும். ஒரு கடாயில் எண்ணெய் வைத்து, பாகற்காய் கலவையை உதிரி உதிரியாக போட்டு வறுவல் பதத்தில் வறுத்து எடுக்கவும். பாகற்காய் மதுரம் தயார்.

Sunday, October 17, 2010


மந்திரங்களின் மகிமைகள் - பகுதி 8

விஜய தசமி விழா:
நவராத்திரி கொண்டாட்டத்தின் நிறைவு நாளில் பத்தாம் நாளில் கொண்டாடப்படும் விழா விஜதசாமி விழா. விநாயகருக்கு சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது போல ஆதி பராசக்திக்கு விஜதசாமி விழா கொண்டாடப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடமும், அக்னிதேவரிடமும் வரங்களைப் பெற்றவன் எருமைத் தலையுடன் கூடிய மகிஷன் என்கிற அசுரன். பெண்களால் தனக்கு அழிவு வராது என்ற எண்ணத்தில், தனக்கு பெண்களால் தான் முடிவு வரவேண்டும் என வரம் பெற்றான். மகிஷாசுரனது ஆணவத்தை அடக்க முடிவு செய்து மும்மூர்த்திகளும் தங்கள் மனைவிகளாகிய பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சக்திகளை ஒன்றாக இணைத்து, துர்க்கை என்னும் மாபெரும் சக்தியை உருவாக்கினர்.

துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்தாள். ஆதிபராசக்தி துர்க்கை வடிவம் கொண்டு மகிஷாசுரனை வெற்றி கொண்ட தினமே விஜய தசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ துர்கா அஷ்டகம்:

வாழ் வுமானவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் துர்க்கா இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உலகையீன்றவள் துர்க்கை உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைகாப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்தையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

செம்மையானவள் துர்க்கா ஜெகமுமானவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பதிந்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்பதீபமே
திருவுமானவள் துர்கா திரிசூலிமாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னை காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே !!

ஆதி பராசக்தியே சரணம் !!

****************

அனைவரும் வாழ்வில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற விஜயதசமி விழா நல்வாழ்த்துக்கள்.

Saturday, October 16, 2010


கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

என்பது வள்ளுவர் வாக்கு. இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடையும் போது செல்வங்கள் எனப்படும் நவநிதிகளும் கிடைத்தன. இந்த நவநிதிகளில் அனைத்து செல்வங்களும் இருந்தன. கல்விச் செல்வம் மட்டும் இல்லை. ஸ்ரீ ஹயக்ரீவரால் சரஸ்வதிக்கு இந்த கல்விச் செல்வம் அளிக்கப்பட்டதாக புராதன நூல்களில் கூறப் பட்டுள்ளது.


நவராத்திரி விழா வரலாறு:
சுபாகு என்பவர் ஆதி பராசக்தி அன்னையின் தீவிர பக்தராக விளங்கினார். சுபாகுவின் மகள் சசிகலையும் அப்படியே. சுபாகுவின் முறை மாமன் சுதர்சனன் என்பவரும் பராசக்தயின் பக்தராகவே விளங்கினார். ஆகவே சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி , நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள். அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர். இப்படி சுதர்சனனாலும், சுபாகுவினாலும் செய்விக்கப்பட்டதுதான் நவராத்திரி விழா.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற புனிதத் தத்துவத்தை உணர்த்தும் விழாவே இந்த ஆயுத பூஜை. இந்த ஆயுத பூஜை நம் நாட்டில் மத வேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் தொழிலுக்கு உதவக் கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய திருக்கோயில் பதிவில் கூத்தனூரில் அமைந்துள்ள அருள்மிகு மஹா சரஸ்வதி அம்மன் ஆலய தரிசனம் செய்வோம்.

திருக்கோயில் அமைவிடம்:
இந்த மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 km தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 20 km தொலைவில் அமைந்துள்ளது.


திருக்கோயில் அமைப்பு:
தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயில் இந்த கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்தான். இக்கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது.


கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக்கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

திருத்தல வரலாறு:
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தவர்
ஒட்டக்கூத்தர். இராமாயண காவியத்தில் ஏழாவது காண்டமாகிய உத்திரகாண்டத்தையும், குலோத்துங்க சோழனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட தக்கயாக பரணி என்ற நூலையும் படைத்த பெரும் புலவர் ஓட்டக்கூத்தர். இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். ஒட்டாக்கூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி தேவி. பிரம்ம லோகத்துக்கே தான்னால் தான் பெருமை என்று சரஸ்வதி, பிரம்மா என இருவருக்குள்ளும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக பூலோகத்தில், சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோமனை என்ற தம்பதிக்கு மகனாக பிரம்மா பிறந்தார். பகுகாந்தன் என்ற பெயர் சூட்டப் பெற்றார். சிரத்தை என்ற பெயருடன் சாஸ்வதி தேவி பிறந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாட்டை புண்ணியகீர்த்தி செய்யும் வேளையில், சிரத்தைக்கும், பகுகாந்தனுக்கும் முன்ஜென்ம நினைவு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர்.

சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். கங்காதேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதி தேவியும், பிரம்மனும் ஒன்று சேர்ந்தனர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமள நாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹா சரஸ்வதி அம்மனாகக் குடிகொண்டாள். இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது.


இக்கோயில் விஷேசங்கள்:
இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜய தசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிள்ளைகளை அன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் இக்கோயிலில் மழலைகளுக்கு முதன் முதலாக கல்வி போதிக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ் வருடப் பிறப்பிலிருந்து தொடங்கி நாற்பத்தைந்து நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். ஆடி, தை வெள்ளிகளில் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் அன்னைக்கு செய்விப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் நல்வித்தை பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நர்த்தன கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியன்றும், விநாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன. மூலைப் பிள்ளையாரிடம் தண்ணீரை நிரப்பி வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

பிரம்ம புரீஸ்வரருக்கு மகா சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது.

ஸ்ரீ குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலை...


Friday, October 15, 2010


பூசணி அல்வா

சாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதை. தன் வாழ்க்கையை சாதனைகளால் நிரப்பி, நிரூபித்துக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய திரு. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று. 1931-ம் ஆண்டு இதே நாளில் பிறந்த திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் சென்று தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கும் அப்துல் கலாம் அவர்கள் இந்தியர்கள் அனைவருக்குமே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். சிலருக்கு பதவியால் பெருமை. ஆனால் அப்துல் கலாம் அவர்களால் அந்த பதவி பெருமை கொண்டது. அவர் மேலும் பல அகவைகளக் கடந்து பல்வேறு சாதனைகளைப் படைக்க நாங்கள் அனைவரும் தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

****************

பூசணி அல்வா

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் : ஒரு கீற்று
நெய் : ஒரு குழி கரண்டி
சர்க்கரை : 100 கிராம்
கேசரி பொடி : ஒரு சிட்டிகை
ரோஸ் மில்க் எசன்ஸ் : 5 சொட்டு
முந்திரி : 5

செய்முறை:
பூசணிக்காயை தோல் சீவி, காய்கறி சீவும் கட்டையில் நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் துருவிய பூசணிக்காயைப் போட்டு, நன்கு வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

பூசணி நெய்யுடன் சேர்ந்து நன்றாக வெந்ததும், தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். சேர்த்த நெய் வெளியேறும்வரை கிளறவும். இதன் மேல் கேசரி பொடி கலந்து, விருப்பமுள்ளவர்கள், ரோஸ் மில்க் எசன்ஸை கலக்கவும். (ரோஸ் மில்க் எசன்ஸ் கலப்பதால் அல்வாவின் வண்ணமும் பார்க்க அழகாக இருக்கும். அல்வாவும் நல்ல வாசனையாக இருக்கும்).

இதன் மேல் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைத் தூவ மணமான பூசணி அல்வா தயார்.


பூசணிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய். இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதால் வெயிலினால் நம் உடம்பில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைவானது சீராகும். குழந்தைகளுக்கு இவ்வாறு இனிப்பாக செய்து தர, அவர்கள் சத்தான உணவை விரும்பி உண்ணுவர்.

Wednesday, October 13, 2010


என்றும் இனியவை - B.S.சசிரேகா

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆம்!! வந்தவர்கள் மட்டுமே வாழும் பூமி இது!! இந்த விஷயம் எந்தத் துறையில் சாத்தியப்படுகிறதோ இல்லையோ தமிழ் திரைத் துறையில் அதிகம் சாத்தியப்பட்ட விஷயம். தமிழ் மண்ணில் தமிழுக்கும், தமிழனுக்கும் கொஞ்சம் மதிப்பு குறைவு தான். தமிழை ஒரு பாட மொழியாக எடுத்து பயிற்றுவிக்கவே பெற்றோர் தயங்கும் காலமிது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அநியாயம் நடக்கும். அப்படியிருக்க, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆகட்டும், திரைப்பட நடிகை ஆகட்டும், தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் வாய்ப்பு சற்று குறைவுதான். வாய்ப்பு கிடைப்பதே கடினம் தான். இங்கு தமிழை கொச்சையாகப் பேசுபவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.


ஒரு காலத்தில் இசைத்துறையில் உச்சரிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த வழக்கம் தேய்ந்து, திருக்கோயிலை, தெருக்கோயில் என்றும், பரவாயில்லை என்பதை பருவாயில்லை என்றும், பாடுபவர்களுக்கே வாய்ப்புக்கள் வந்து குவிந்தது. இசையுலகிலும் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் தெரிந்த, தமிழை நன்றாக உச்சரிக்கத் தெரிந்த பாடகர், பாடகியர் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி, தமிழை நன்றாக தெளிவாக, நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடிய தமிழ் பாடகிகளில் ஒருவர்தான் B.S.சசிரேகா. அதனால்தான் குறைந்த காலமே, குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே அவரால் பாட முடிந்துள்ளது. தற்போது திரை இசைப் பாடல்கள் எதுவும் பாடுவதாகத் தெரியவில்லை. இவரது குரலில் ஒரு கம்பீரமும், ஒரு வித சோகமும் இழையோடும். இவரது குரல் ஒரு அபூர்வமான குரல். இவரது இனிய குரலில் ஒலித்த சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.

இதோ இதோ என் நெஞ்சிலே (வட்டத்துக்குள் சதுரம்)


கேள்வியின் நாயகனே
(அபூர்வ ராகங்கள்)


கண்மணி நில்லு
(ஊமை விழிகள்)


மாமரத்து பூவெடுத்து
(ஊமை விழிகள்)


தென்றல் என்னை முத்தமிட்டது
(ஒரு ஓடை நதியாகிறது)


எம்புருஷந்தான்
(கோபுரங்கள் சாய்வதில்லை)


இளமனதினில்
(மஞ்சள் நிலா)


எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
(உறவைக் காத்த கிளி)


Monday, October 11, 2010


மயானக்கடவூர்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருக்கடவூர் மயானம் திருக்கோயில், திருக்கடையூர்.


அமைதி என்பது இன்றைய உலகில் நம் அனைவருக்குமே அரிதான ஒரு விஷயம் ஆகிவிட்டது. பொதுவாகவே நமது அன்றாட வாழ்க்கையில் மன அமைதி தேடி திருக்கோயில் செல்வது வழக்கம். இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில் செல்லும்போது அமைதியின் சிகரத்திற்கே நம்மால் செல்ல முடிகிறது. இக்கோயிலின் அமைப்பு அவ்வாறாக உள்ளது.

திருக்கோயில் அமைவிடம்:
இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து 20 km தொலைவிலும், காரைக்காலில் இருந்து 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் நேர் பின் திசையில் சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : பிரம்மபுரீஸ்வரர்
தல இறைவி : அம்மலகுஜநாயகி (வாடாமுலையாள், மலர்க்குழல் மின்னம்மை)
தல தீர்த்தம் : காசி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : கொன்றை மரம்


தல வரலாறு:
இந்த சிறப்பு மிக்க திருக்கடவூர் மயானம் திருக்கோயில் கி.பி. 557-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக் கலையின் நேர்த்தியினை நமக்குப் பறைசாற்றும், உலக அரங்கில் நமக்குப் பெருமை தேடித்தரும் தஞ்சை பெரிய கோயிலைவிட பழமையான திருக்கோயில் இது. காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் என்று சைவ சமயத்தில் ஐந்து விதமான மயானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. காசி மயானம் காஞ்சிபுரத்திலும், காழி மயானம் சீர்காழியிலும், கச்சி மயானம் திருவீழிமிழலையிலும், நாலூர் மயானம் குடவாசல் அருகிலும், இவற்றுள் ஐந்தாவதாக விளங்கும் கடவூர் மயானம், இந்த திருக்கடவூரிலும் அமைந்துள்ளன. இங்கே மயானம் என்ற சொல் திருக்கோயிலையே குறிக்கிறது. மயானம் என்பது சிவன் குடியிருக்கும் இடமாகவே சைவ சமயத்தில் கருதப்படுகிறது. இந்த ஐந்து தலங்களும் மயானத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


ஒரு பிரம்மகர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் சிவபிரான் வெகுண்டெழுந்து பிரம்மதேவரை எரித்து சாம்பலாக்கி விட்டார். இதன் காரணமாக படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு சிவபிரானால் பிரம்மதேவர் எரிக்கப் பட்ட இடமே கடவூர் மயானம்.

பிரம்மதேவரை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் பொருட்டு தேவர்கள் அனைவரும் கடவூர் மயானம் வந்து பிரம்மபுரீஸ்வரரை வேண்டி தவம் புரிந்தனர். சிவபெருமான் கருணை உள்ளத்துடன் மனம் இறங்கி சிவஞானத்தை போதித்து, சிறப்பாக படைப்புத் தொழிலை செய்யும்படி பிரம்மனுக்குத் திருவருள் புரிந்தார். பிரம்மன் சிவஞானம் உணர்ந்த இடமே இத்திருக்கடவூர் மயானம். தற்போது திரு மெய்ஞானம் என அழைக்கப் படுகிறது.

தலச் சிறப்பு:
சைவத் திருத்தலங்களில் பாடல் பெற்றத் தலங்கள் 274. அவ்வாறாக பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று இந்த மயானக் கடவூர். அதிலும் மூவர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 44. அவற்றுள் ஒன்றாக இருப்பது இத்தலத்தின் சிறப்பு. மேலும் இத்தலம் காவிரி தென்கரை திருத்தலம். பாடல் பெற்ற ஸ்தலங்களுள் 48வது திருத்தலம். திருமெய்ஞானம் என்றும், திருமயானம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. பிரம்மன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். தில்லை சிவபிரான், சிவாலய முனிவருக்குக் கூறியபடி அகத்திய முனிவரால் தொகுத்து வழங்கப்பட்ட 25 திருத்தலங்களுள் ஒன்று.


இத்திருக்கோயிலில் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. சிவனடியார்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகப் பாடல்கள் இக்கோயில் சிவாச்சாரியாரால் பாடப்படுகின்றன. பொதுவாக திருக்கடையூர் செல்லும் பக்தர்கள் அனைவரும் கடவூர் மயானத் தலம் என்றால் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலைத்தான் குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்தான் கடவூர் மயானம். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் உள்ளூர் மக்களுக்கோ, சுற்றுவட்டார மக்களுக்கோ இப்படி ஒரு திருக்கோயில் இங்கு இருப்பதே தெரியவில்லை என்பதுதான். இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற மிகப் பழமையான கோயில்களின் நிலை இதுதான். இதுபோன்ற பழமையான கோயில்களை கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி மக்களின் பார்வைக்குக் கொண்டுவருவது இந்து அறநிலையத் துறையின் கடமை. நம்முடைய பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமைகளுள் ஒன்று.

எல்லா திருக்கோயில்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுவது வழக்கம். அக்காலத்திய வாழ்க்கைமுறை கோயிலைக் கட்டியவர்களின் விபரங்கள், என்பதுபோன்ற வரலாற்றுச் செய்திகளைப் பற்றிய ஆவணங்களே இவை. வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் கல்வெட்டுக்கள் பொதுவாக கிரந்த எழுத்துக்களிலேயே காணப்படும். இக்கோயிலில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கல்வெட்டுக்கள் தமிழிலேயே எழுதப் பட்டுள்ளன. இக்கோயில் சிறப்புகளில் இதுவும் ஒன்று.


திருக்கோயில் அமைப்பு:
மேற்கு பார்த்த சிவத்தலங்கள் 40ல் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீ முருக பெருமான் இக்கோயிலில் சிங்கார வேலன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். கையில் வில்லும், வேலும் வைத்துக் கொண்டு பாதகுறடு அணிந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆலயத்தின் மேற்குப் பிரகாரத்தின் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீ பிள்ளைபெருமாள் விளங்குகிறார். இக்கோயிலில் சிவனுக்கு முன்னால் மட்டுமல்லாது அம்மனுக்கு முன்பும் நந்தி பகவான் வீற்றிருக்கிறார்.

பக்தி மார்கத்தின் சிறப்பை மனித குலத்திற்கு உணர்த்திய மார்க்கண்டேயர், தினந்தோறும் சிவ பூஜை செய்வதற்காக காசி கங்கா தீர்த்தத்தை வரவழைத்துத் தந்த இடமும் இதுவே. இந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரம் கூடிய சுப தினம். ஆண்டுதோறும் இந்த தினத்தில் பக்தர்கள் இங்கே புனித நீராடுவர். அருள்மிகு திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கும், ஸ்ரீ அபிராமி அம்மையாருக்கும், ஐந்து கால அபிஷேகத்திற்கும் இங்குள்ள காசி தீர்த்தத்தினால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற தீர்த்தங்களினால் அபிஷேகம் கிடையாது. மன்னன் பாகுலேயன், இத்தல காசி தீர்த்தத்தை பிற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று எண்ணி , ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்தார். அதன் காரணமாக, சிவலிங்கத்தின் மீது ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்தத் தழும்பு இக்கோயில் சிவலிங்கத்தின் மேல் இப்போதும்
காணப்படுகிறது.

ஒவ்வொரு திருக்கோயிலிலும் அக்கோயில் சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இத்திருக்கோவிலிலோ கோயில் பிரகாரம்தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எத்தனை பெரிய தாழ்வாரம். ஒரு ஆயிரம் பேரை வரவழைத்து அமோகமாக திருமணம் நடத்தலாம். அத்தனை பெரியது. இக்கோயிலில் பல வருடங்களுக்கு முன், இப்போது திருக்கடையூரில் நடப்பது போல் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணங்கள் வெகு சிறப்போடு நடை பெற்றுள்ளன. இக்கோயில் பிரகாரமே இதற்கு சாட்சி.


இக்கோயிலில் தற்போது புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இத்திருக்கோயில் மதில் சுவர்களின் மேல் மொத்தமாக 171 நந்திகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் செல்லும் அனைவரும் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலையும் சேர்த்து தரிசனம் செய்வதால், திருக்கடையூர் என்னும் தலத்திற்குச் செல்வதன் பூரண பலனையும் நாம் அடையலாம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

ஆலயம் என்பதில் என்பது ஆன்மாவையும், லயம் என்பது லயித்திருத்தல் என்பதையும் குறிக்கின்றன. ஆன்மா தெய்வத்தின்பால் லயித்திருக்கக் கருவியாக அமையும் இடமே ஆலயம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவன் முன் நம் ஆன்மாவை தரிசிக்கச் செல்வோம் ஆலயங்கள் பல!!

****************

திருஞானசம்பந்தர் அவர்களால் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலில் பாடப்பட்ட தேவாரப் பதிகம்:

வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் உசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம் பெருமான் அடிகளே !!

மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளேறு ஏறிச் செல்வம்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவர்எம்பெருமான் அடிகளே !!

ஈடல்இடபம் இசைய ஏறி மழுவொன்று ஏந்திக்
காடதுஇடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே !!

இறைநின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கரைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவர்எம்பெருமான் அடிகளே !!

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவர்எம்பெருமான் அடிகளே !!

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர்மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையர் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே !!

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்மேல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே !!

செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமேல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வழிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர்எம்பெருமான் அடிகளே !!

வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் இடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனும் தேர்ந்துங் காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவர்எம்பெருமான் அடிகளே !!

தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
தீயகருமம் சொல்லும் சிறுபுன்தேரர் அமணர்
பெய்பேய்என்ன வருவார் அவரஎம் பெருமான் அடிகளே !!

மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னு(ம்)மயானம் அமர்ந்த
அரவம்அசைத்த பெருமான் அகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே !!

திருச்சிற்றம்பலம் !!

Related Posts with Thumbnails