Monday, October 25, 2010


கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில், கோழிக்குத்தி.

லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட கிருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம் !!



திருக்கோயில் அமைவிடம்:
இந்த அருள்மிகு வானமுட்டிப் பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து 5 km தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 5 km தொலைவிலும், மூவலூர் என்னும் சிற்றூரில் இருந்து 2 km தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வலதுபுறம் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தல இறைவி : ஸ்ரீ தயா லெட்சுமி
தல தீர்த்தம் : விஸ்வரூபபுஷ்கரணி


திருத்தல வரலாறு:
நமது பெருமை மிகு சோழநாட்டில் பிப்பலர் என்றொரு மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்கமுடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி பெருமாளை நினைத்து, தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டினார். ஒருநாள் பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், அவரிடம், ''முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தாய். அப்போது, ஒரு உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய்,அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் சரும நோயால் பாதிக்கப் பட்டுள்ளாய்" எனவும் ''அந்த பாவம் தீர காவிரிக் கரையோரமாகவே உனது பயணத்தைத் தொடங்கு'' என பெருமாள் கூறினார். மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரர் பிப்பல மகரிஷிக்கு வழிகாட்டுவார் எனவும் கூறினார். அந்த வழிகாட்டுதலின் படி நடக்க மகரிஷியின் சரும நோய் தீரும் என அருளினார் பெருமான்.

பெருமானின் அறிவுரையின்படி, மகரிஷி பிப்பலர் தனது பயணத்தை ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரரை முதலில் தரிசித்துத் தொடங்கினார். மனம் குளிர்ந்த சிவ பிரான் வடக்குப் பக்கமாக வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் சென்று காவிரி நதியில் நீராடி கோழிக்குத்தி எனும் ஊரை வந்தடைந்தார். அப்போது ஒரு நெடிய, நீண்டு வளர்ந்த அத்திமரத்தில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் பிப்பல மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். இப்படிப்பட்டதொரு காட்சியினை மனதில் நினைத்துப் பார்க்கும்போதே மெய் சிலிர்க்கிறது. விஸ்வரூப தரிசனத்தை நேரில் கண்ட மகரிஷிக்கு எத்தனைக் கொடுப்பினை, இத்தகு காணக் கிடைக்காத காட்சியினைக் காண.

இப்படியோர் அற்புத தரிசனத்தைக் கண்டதும் மகரிஷியின் சரும நோய் அவரிடமிருந்து விடை பெற்றது. அதே நேரத்தில் மூவலூர் ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரரின் முன்பாக வீற்றிருக்கும் நந்தி பகவானும் மகரிஷிக்கு அருள் மழை பொழிந்தார்.

பிப்பல மகரிஷியின் சரும நோய் நீங்குவதற்காக மூவலூர் சிவபிரான் இந்த திசை நோக்கிச் செல் என்று கோடி காட்டியதால் கோடிஹத்தி என்ற பெயர் வழங்கலாயிற்று. பிப்பல மகரிஷியின் கோடி தோஷங்கள் நீங்கப் பெற்றதால் கோடிஹத்தி, பாப விமோசனபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. கோடிஹத்தி என்ற பெயரே கோழிக்குத்தி என்று மருவியது. ஆகையால் இத்தல பெருமானை தரிசிக்க நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.


திருத்தலச் சிறப்பு:
தனது சரும நோய் நீங்கப் பெற்ற பிப்பலர் மகரிஷி காவிரிக் கரையில் தவம் புரியலானார். இதன் காரணமாகவே இக்கோயிலை ஒட்டி ஓடும் காவிரித் தீர்த்தத்தை பிப்பலர் மகரிஷி தீர்த்தம் எனவும் அழைக்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து உடல் உபாதைகளும், நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூவலூரில் உள்ள ஸ்ரீ மார்க்கஸகாயேஸ்வரர் திருக்கோயிலின் பிரகாரத்தில் பிப்பல மகரிஷிக்கு தனிச் சன்னதி உள்ளது.

பின்னொரு காலத்தில் இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட சோழ அரசர், தான் புரிந்துள்ள போர்களின் வாயிலாக எத்தனை உயிர் பலி ஏற்பட தான் காரணமாகிவிட்டோம் என எண்ணி, அரசன் தான் செய்த பாவம் நீங்கப் பெற கடும் தவம் புரிந்தார். இதன் காரணமாக அரசருக்கும் அதே அத்திமரத்திலே விஸ்வரூப காட்சி தந்தார் வானமுட்டி பெருமாள். பெருமாளின் அருளும் அரசருக்குக் கிடைத்தது.

பின்னர் சோழ அரசர் சிற்பக் கலையில் வல்லவர்களைக் கொண்டு, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் 4 கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம், ஆகியவற்றுடன் காட்சி தரும்படி வானமுட்டி பெருமாளைச் செய்து அதற்கு அஜந்தா வர்ணம் தீட்டி, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பினார்.


இத்திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திய கோயில். சோழ அரசர் இக்கோயிலை 7 பிரகாரங்களுடன் கட்டியுள்ளார். தற்போது இக்கோயில் ஒரு பிரகாரத்துடன் தான் உள்ளது. இக்கோயில் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. பெருமாளின் வலது மார்பில் ஸ்ரீ மகா லெட்சுமி குடிகொண்டுள்ளார். சீனிவாச பெருமாளின் இடப் பக்கமாக பூமாதேவி சிலை வடிவில் காட்சி தருகிறார்.

திருக்கோயிலின் உள்ளே சுவாமி எழுந்தருளி இருக்கும் கோயில் கோபுர விமானம் பார்க்க அத்தனை அழகு. ஒரு கலசத்துடன், ஒரு பெரிய, பல வண்ணங்களால் ஆன குடையைப் போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.


மிகப் பெரிய அத்தி மரமே பெருமானாக மாறியுள்ளதால், அம்மரத்தின் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் உலகில் எங்கும் இல்லாத காணக் கிடைக்காத அதிசய தரிசனம். சோழ அரசரால் இக்கோயில் கட்டப் பட்டதால் இவ்வூருக்கு சோழன்பேட்டை என்ற பெயர் உண்டானது. இத்தல வானமுட்டிப் பெருமாள் 14 அடி உயரத்தில் காணப் படுகிறார். அத்திமரப் பெருமான் என்பதால் இவருக்கு கற்பூர எண்ணைக் காப்பு மட்டுமே நடைபெறுகிறது.

இங்கு பிப்பலர் கடும் தவம் செய்து அருளிய சனி காயத்ரி மந்திரம் சனிகிரக தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாக உள்ளது. இத்தலமும் சனிதோஷ பரிகாரமாகத் தலமாக உள்ளது. இதனை இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ - சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய : படேத்
சனைச்சர கிருதா பீட நகதாசித் பவிஷ்யதி !!


இங்கு கிடைத்துள்ள கல்வெட்டின்படி, சனிதோஷ பரிகாரத்திற்கு, ஒரு தமிழ் ஆண்டில் உள்ள 51 வாரங்களுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் 10 பேருக்கு தலை குளிக்க எண்ணையும், ஐந்து விதமான காய்கறிகளுடன், ஒரு இலைக் காய்கறி சேர்த்து, உணவும் அளிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிடைத்துள்ள மூன்று கல்வெட்டுகளின்படி, இக்கோயில் பெருமானுக்கு ஸ்ரீ பக்தப்பிரியர், பக்தப்பிரியத்தாழ்வார் என்ற பெயர்களும் உண்டு என அறியப் படுகிறது. பக்தர்களின் துன்பங்களை கருணை உள்ளத்துடன் சரி செய்பவள் இத்தல தாயார் ஸ்ரீ தயாலெட்சுமி. ஸ்ரீ யோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, இரண்டு திருக்கரங்களை யோக திருவடி மீது வைத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரதோஷ காலத்தில் இக்கோயில் நரசிம்மரை மனதார தரிசனம் செய்ய அங்காரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் மூன்று அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். இவர் வாலைச் சுருட்டி தலையில் வைத்திருப்பதும், வாலின் நுனியில் மணி தொங்கும்படியும் அமைந்துள்ளது மிகவும் சிறப்பான விஷயம். இவர் சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயராக விளங்குகிறார். இவரது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு ஒலி உண்டாகிறது. அவ்வித ஒலியானது ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வர ஒலி அமைப்பில் உள்ளது அதிசயிக்கத் தக்க விஷயம். இவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வது, அந்த அபிஷேகத்தை காண்பது விசேஷமான ஒன்று.



மேலும் தும்பிக்கையாழ்வார். ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர், நர்த்தன கிருஷ்ணர், விஷ்வக்ஷேனர், பிப்பலர் சன்னதிகளும் உள்ளன. விஸ்வரூபபுஷ்கரணி தீர்த்தக் குளம் கோயிலுக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. இத்திருக்குளம் 7 கிணறுகள், 7 நதிகளாக பெருமானால் உருவாக்கப் பட்டதாக நம்பப் படுகிறது.

இது போன்ற அமைதியான சூழ்நிலையில் ஆற்றோரமாக அமைந்துள்ள திருக்கோயில்களுக்குச் செல்லும்போது மனம் மகிழ்ச்சியும், அமைதியும் பெறுகிறது.

33 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது உங்கள் பதிவு வாழ்த்துக்கள் ..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி புதிய மனிதா..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

//திருக்கோயிலின் உள்ளே சுவாமி எழுந்தருளி இருக்கும் கோயில் கோபுர விமானம் பார்க்க அத்தனை அழகு. ஒரு கலசத்துடன், ஒரு பெரிய, பல வண்ணங்களால் ஆன குடையைப் போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.//

ஆம் மிக அழகாக உள்ளது.

//இது போன்ற அமைதியான சூழ்நிலையில் ஆற்றோரமாக அமைந்துள்ள திருக்கோயில்களுக்குச் செல்லும்போது மனம் மகிழ்ச்சியும், அமைதியும் பெறுகிறது.//

உண்மை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

தமிழ் அமுதன் said...

நல்ல பகிர்வு. நன்றி..!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி தமிழ் அமுதன்.

Madhavan Srinivasagopalan said...

தெரியாமலிருந்த கோவில்.. தெரியப் படுத்தியதற்கு நன்றிகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

Menaga Sathia said...

இப்போழுதுதான் இத்திருத்தலத்தை அறிகிறேன்,பகிர்வுக்கு நன்றிங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராம்ஜி_யாஹூ,
தங்களின் பின்னூட்டத்தை தவறுதலாக அழித்துவிட்டேன். நன்றி ராம்ஜி.

அரசூரான் said...

இந்தமுறை ஊருக்கு வந்த போதுதான் வானமுட்டி பெருமாள் கோவிலுக்கு சென்றுவந்தேன். கோவிலின் வரலாற்றை சிறப்பாக பதிந்திருக்கிறீர்கள்... நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராஜா.

அபி அப்பா said...

இப்போ ஒரு மாதம் முன்பு தான் ப்திவர் ஷைலஜா அக்காகிட்டே இந்த கோவில் பத்தி சொல்லிகிட்டு இருந்தேன். பதிவாக போடுகிறேன் என்று. மிக அழகாக பதிந்து விட்டீகள். மிக்க நன்றி!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அபி அப்பா.

துளசி கோபால் said...

அட! இப்படி ஒரு கோவிலா!!!!!

விவரம் எனக்குப் புதுசு.

அருமையான பதிவு.

கோமதி அரசு said...

வானமுட்டி பெருமாளை கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்தபடம் அல்லவா? அதில் அவரை முழுமையாய் பார்க்க முடிகிறது.

இப்போது நிறைய மாற்றங்கள் மேலே குடை அலங்கார துணிகள் என்று அவர் பாத தரிசனம் முழுமையாய் பார்க்க முடிவது இல்லை.

இடிந்து இருக்கும் போதும் பார்த்தேன் இப்போதும் பார்க்கிறேன்,நீங்கள் சொல்வது போல் மனம் மகிழ்ச்சியும்,அமைதியும் பெறுகிறது.

மூவலூர் மார்க்கஸாகாயேஸ்வரர் கோவில் சிறப்பையும் எழுதுங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@துளசி கோபால்,
மிக்க மகிழ்ச்சி. நன்றி துளசி கோபால்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
ஆமாம், இந்த படம் முன்னமே எடுத்தது தான். மூவலூர் கோயில் பற்றியும் விரைவில் எழுதுகிறேன். மிக்க மகிழ்ச்சி மேடம். நன்றி.

RVS said...

மாயவரம் சுற்றி நிறைய சைவ திருமுறைத் தலங்கள் பார்த்திருக்கிறேன். நல்ல பகிர்வு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆர்.வி.எஸ்.

Kurinji said...

அருமை!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி குறிஞ்சி.

Akila said...

wow arumaiyana post... never heard of the place... mayiladudhurai poi iruken. inge ponathu illai.... swami padangal romba nalla iruku...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அகிலா.

அபி அப்பா said...

அட கோமதிஅரசு அக்கா! நீங்க எங்க ஊர்பக்கம் வந்திருக்கீங்களா? ரொம்ப சந்தோஷம். இப்ப நீங்க பின்னூட்டத்தில் சொன்னது போல தான் இருக்கு.

@ டீச்சர்! ஷைலஜா அக்காவுக்கு இந்த லிங் அனுப்பிடுங்களேன், நான் அவங்க கிட்ட பொங்கி பொங்கி இதை பத்தி சொல்லிகிட்டு இருந்தேன்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நேர்ல பார்த்த உணர்வு.... நல்லா எழுதி இருக்கீங்க.. படங்களும் அருமை

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அபி அப்பா,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாவி தங்கமணி,
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@சித்ரா,
நன்றி.

Anonymous said...

Surya's corner is very nice. :)

Madhu

புவனேஸ்வரி ராமநாதன் said...

Thank you very much Madhu.

Post a Comment

Related Posts with Thumbnails