எந்த ஒரு விளையாட்டிலும் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தை பெறுவது கடினம். அதிலும் ஐந்து முறை தொடர்ந்து முதலிடம் பெறுவதென்பது மிக அரிது. எதுஎதையோ இமாலயச் சாதனை என்கிறார்கள். மேரி கோமின் சாதனை தான் உண்மையான இமாலயச் சாதனை.
மணிப்பூரில் பிறந்த மேரி கோம், ஆரம்பத்தில் தடகள விளையாட்டில் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 54 kg பிரிவில் தங்கம் வென்ற டிங்கோ சிங் மணிப்பூரைச் சேர்ந்தவராவார். சக மணிப்பூர் வீரரின் சாதனையால் ஈர்க்கப்பட்ட மேரி கோம், 2000-ம் ஆண்டு முதல் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். கடும் பயிற்சியினால் ஒரே ஆண்டில் உலக அளவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். உலக அளவில் 17 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், தேசிய அளவில் 11 தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளார். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். விளையாட்டு உலகின் ஆஸ்கார் என்றழைக்கப்படும் லாரியஸ் விருதையும் (Laureus World Sports Award) மேரி கோம் மிக விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் அனுமதிக்கப்படவுள்ளன. லண்டன் போட்டிகளில் தங்கம் வெல்வதே தனது முக்கிய குறிக்கோள் என மேரி கோம் தெரிவித்துள்ளார். இவரைத்தவிர, நடந்து முடிந்த பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டிகளில் 81 kg பிரிவில் வெண்கலம் வென்ற கவிதா, லட்சுமி (81 kg), சரிதா தேவி (54 kg), ஆண்கள் பிரிவில் விஜேந்தர் சிங், தொக்சோம் சிங், சுரன்ஜோய் சிங், ஷிவா தாபா ஆகியோர்க்கு லண்டனில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. கியூபா போல் இந்தியா குத்துச்சண்டையில் பிரகாசிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
இந்திய விளையாட்டு வீரர்களில் பலர் உலக தரத்தில் இருப்பதில்லை என்கிற கருத்தை முறியடிக்கும் வகையில் கடந்த சில மாதங்களில் மட்டுமே நான்கு பேர் உலக சாம்பியன்களாகி உள்ளனர். மே மாதத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார் (ஆனந்த் மயிலாடுதுறையில் பிறந்தவர்). ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேஜஸ்வினி சாவந்த் உலக சாதனையை சமன் செய்து தங்கம் வென்றார். இம்மாத ஆரம்பத்தில் மாஸ்கோவில் முடிவடைந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 66 kg பிரிவில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார். இவர்களையடுத்து மேரி கோம்.
மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் மட்டுமல்லாது ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், வில்வித்தை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உருவாகி வருகின்றனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கணிசமான பதக்கங்களை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
ஆரம்ப காலங்களில் ஸ்பான்சர்கள் ஆதரவின்றி சிரமப்பட்ட மேரி கோமிற்கு இப்பொழுது ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளனர். இதே போன்று திறமையிருந்தும் ஆதரவின்றி தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவ Olympic Gold Quest (OGQ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் கீத் சேத்தியும், முன்னாள் 'ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்' பிரகாஷ் படுகோனும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்பொழுது மேலும் சில முக்கிய வீரர்கள் இணைந்துள்ளனர். திறமை உள்ளவர்களையும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவர்களையும் கண்டறிந்து, அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் உதவியுடன் பயிற்சி கொடுத்து, அவர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாய் மாற்றுவதே இவ்வமைப்பின் குறிக்கோள். துப்பாக்கி சுடுதல், தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், வில்வித்தை ஆகிய ஆறு பிரிவுகளில் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கிறது OGQ. மேரி கோமும் OGQ ஆதரவு பெற்றவர்களில் ஒருவர்.
இந்த OGQ என்ற அமைப்பு "குடத்தில் இட்ட விளக்காய் இருப்பவர்களை குன்றில் இட்ட விளக்காய்" உருவாக்கிக் கொண்டுள்ளது. காலத்துடனும், நேரத்துடனும் செய்யாத எந்த உதவியும் உரியவரைப் போய்ச் சேராது என்பதை அரசாங்கமும் புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்ய முற்படவேண்டும்.
அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் முழு ஆதரவில்லாமலயே உலகத்தரம் வாய்ந்த பல வீரர்களையும், பதக்கங்களையும் இந்தியா பெற்றுவருகிறது. முழு ஆதரவு கிடைத்தால்.... வானமே எல்லை.
12 comments:
நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கிறேன் . பெற்றுக் கொள்ளவும்
http://lksthoughts.blogspot.com/2010/09/blog-post_19.html
மிக்க நன்றி ஆசியா மேடம்.
விருதுக்கு மிக்க நன்றி கார்த்திக்.
dear friend v nice
வழக்கமான ஆன்மீக பதிவுகளுக்கு இடையில் இந்தமாதிரியான பதிவுகளை அடிக்கடி எழுதுங்கள்..
இந்தியா விளையாட்டில் கிரிக்கெட்டை மற்றும் முன்னிலைப் படுத்துகிறது.. காரணம் அதில் புழங்கும் அபரிதமான பணம்.. தேசிய விளையாட்டான ஹாக்கி பற்றி கவனிக்கவே ஆள் இல்லை ..
அதிலும் காமன்வெல்த் போட்டிகளில் மலிந்து கிடக்கும் ஊழல்.. இந்தியா இப்போதைக்கு விளையாட்டு வீரர்களை முன்னுக்கு கொண்டு வரவும்.. ஆதரிக்கவும் தயாராக இல்லை என்றுதான் எண்ணுகிறேன்..
மேரி கொமுக்கு என் வந்தனங்கள் ...
மிக்க நன்றி மோகன்.
நீங்கள் சொல்வது உண்மை தான் செந்தில். ஊழல் குறைந்து அரசு ஆதரவும் இருந்தால் நிச்சயம் முன்னேறலாம். அவசியம் இது மாதிரி பதிவுகளை அடிக்கடி எழுதுகிறேன். மிக்க நன்றி.
நல்லதொரு தொகுப்பு,பகிர்வுக்கு நன்றி!!
நன்றி மேனகா.
அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் முழு ஆதரவில்லாமலயே உலகத்தரம் வாய்ந்த பல வீரர்களையும், பதக்கங்களையும் இந்தியா பெற்றுவருகிறது. முழு ஆதரவு கிடைத்தால்.... வானமே எல்லை.
...rightly said! :-)
நன்றி சித்ரா.
புவனா மேடம்...
மிக மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது...
இந்த நாட்டில் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற நிலையில், தேசிய விளையாட்டு ஹாக்கிக்கே ஆதரவு இல்லை... எங்கெங்கு நோக்கினும் ஊழல், சதுரங்க வீரர் ஆனந்த் அவர்களை நோக்கி நீங்கள் இந்தியரா என்ற கேள்வி என்று பல்வேறு விஷயங்களில் கேலிக்குறியதாகி இருக்கிறது..
இந்த நேரத்தில், இந்த பதிவு மிகவும் அவசியம்..
//அரசு மற்றும் விளையாட்டு வாரியங்களின் முழு ஆதரவில்லாமலயே உலகத்தரம் வாய்ந்த பல வீரர்களையும், பதக்கங்களையும் இந்தியா பெற்றுவருகிறது. முழு ஆதரவு கிடைத்தால்.... வானமே எல்லை.//
மிக சரியாக சொன்னீன்ர்கள்...
ஆன்மீகத்திலும், ரெசிப்பிகளிலும் அசத்தும் நீங்கள் இது போன்ற பதிவுகளிலும் இனி அசத்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபி.
Post a Comment