Thursday, September 9, 2010


சிருங்கேரி வித்யாசங்கரா கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் உள்ள வித்யாசங்கரா ஆலயம்.


கோயில் அமைவிடம்:
இக்கோயில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த அழகிய திருக்கோயில். ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் அமைக்கப்பட்ட நான்கு மடங்களுள் இங்கு சிருங்கேரியில் அமைக்கப்பட்ட சாரதா தேவி பீடம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

சிருங்கேரி பெங்களூருவிலிருந்து 336 km தொலைவில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம். ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

கோயில் வரலாறு:
சிருங்கேரியில் அமைந்துள்ள வித்யாசங்கரா ஆலயம், ஆதி குரு வித்யாசங்கரா அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது. 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசர்கள் இக்கோயிலைக் கட்டுவதற்கு நிறைய உதவி புரிந்துள்ளனர். இக்கோயிலுக்கு விஜயநகரப் பேரரசர்களால் அளிக்கப்பட்ட பல்வேறு கொடைகளைப் பற்றிய விபரங்களை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


கோயில் சிறப்புகள்:
இக்கோயில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள தளத்தின் மேல் அமைந்துள்ளது. இக்கோயிலின் உள்ளே செல்வதற்கு ஆறு வாயிற்கதவுகள் உள்ளன. இக்கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள 12 தூண்கள், ராசித் தூண்கள் என பெயரிடப்பட்டுள்ளன. அந்த 12 தூண்களிலும் சூரியனின் கதிர்கள், சூரிய ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூணின் மேல் படும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.


இங்கே அமைக்கப்பட்டுள்ள கர்ஜிக்கும் சிங்கத்தின் சிற்பத்தின் வாயில் கல்லால் ஆன பந்து ஒன்று உருண்டு கொண்டு இருப்பது பார்க்கும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. சுற்றுப் பிரகாரத்தில் 61 விதமான சிற்பங்கள், புராணங்களில் உள்ள காட்சிகளை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்டுள்ளன. துங்கபத்ரா நதியின் மற்றொரு கரையிலிருந்து காணும்போது, இக்கோயில், ஒரு பிரம்மாண்ட அன்னப் பறவையை காண்பது போல் உள்ளது.

மைசூர் மகாராஜா திப்பு சுல்தான் அவர்கள், அவரது காலத்தில் இக்கோயிலில், நாட்டு மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்ட, சஹஸ்ர சண்டி யாகத்திற்காக, பரிசுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள ஸ்படிகலிங்கம் மிகப் பழமை வாய்ந்தது. சிவபெருமானால் ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு அளிக்கப் பட்ட லிங்கமாகக் கருதப்படுகிறது. புத்தர் பிரான் இங்கு விஷ்ணுவாக வழிபடப்படுகிறார்.

இங்கே பாயும் துங்கபத்ரா நதியில் வாழும் மீன்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் பொரி உணவைப் போடும்போது அந்த மீன்கள் கூட்டமாக வந்து சாப்பிடும் அழகே அழகு.



சன்னதிகள்:
இக்கோயிலின் அன்னை சாரதாதேவி கையில் ஜபமாலையுடனும், கிளியுடனும் கருணையே வடிவமாக காட்சி தருகிறார். ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் அமைக்கப்பட்ட சாரதாதேவி சிலை, சந்தன மரத்தால் செய்யப்பட்டது எனக் கூறுகிறார்கள். பிற்காலத்தில் அதனை மாற்றி தங்கத்தினால் செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இக்கோயிலில் சக்தி கணபதி, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, ஆதி சங்கராச்சாரியார் போன்ற தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. நவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

SIRIMANE FALLS:
சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 km தொலைவிலும், kigga என்ற இடத்திலிருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ள sirimane நீர் வீழ்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சி.


கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் சிறியதாக இருந்தா
லும் மிக அழகியது. வருடம் முழுவதும் நீர் வரத்து உள்ள நீர் வீழ்ச்சி. துங்கபத்ரா நதியில் இருந்து இங்கு தண்ணீர் வருவதாக சொல்கிறார்கள். அடர்ந்த பசுமையான மரங்கள் நிறைந்த பாதை வழியாக இந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்வதே மிக சுகமான அனுபவம்.

18 comments:

R.Gopi said...

நெடு நாட்களாக போக வேண்டும் என்று நினைத்திருந்து இது வரை போக முடியவில்லை... அடுத்த முறை இந்தியா வரும்போது, போய் வரலாம் என்றிருக்கிறேன்..

தல புராணம் மிக அழகாகவும், விரிவான விளக்கத்துடனும் எழுதப்பட்டுள்ளது...

வாழ்த்துக்கள்....

RVS said...

சிருங்கேரி கோயிலுக்கு போய்வந்தது போல் இருந்தது.. நல்ல பகிர்வு....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமுடன் சென்று வாருங்கள். நன்றி கோபி.

நன்றி ஆர்.வி.எஸ்.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
பாரதி வித்யா தீர்த்த ஸ்வாமிகள் மேடம் சென்றீர்களா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அங்கு செல்லவில்லை. நன்றி ராம்ஜி.

Menaga Sathia said...

அழகான விளக்கங்கள்...பகிர்ந்தமைக்கு நன்றிங்க!!இந்த கோவிலை சிருங்கேரி சாராதாம்பாள் போவில் என்றும் சொல்வார்கள் தானே??அல்லது அது வேற கோவிலா?? நவராத்திரிகேத்த நல்ல பதிவு...

புவனேஸ்வரி ராமநாதன் said...

இது வேற கோயில். நீங்கள் கூறிய சிருங்கேரி சாரதாம்பா கோயில் வேறு. மிக்க நன்றி மேனகா.

Chitra said...

அழகான படங்களுடன் விளக்கங்கள். நன்றி.

dogra said...

அருமையான கட்டுரை. என் வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சிந்தனை அவர்களே.

K.S.Muthubalakrishnan said...

I want info about Kateel Durgaparameshwari, Manglore manladevi , Horanadu Annapoornesharei , Kukke Subramanya and temples in chikmanglore Dist.

மோகன்ஜி said...

நிறைவான விளக்கங்களுடனும்,படங்களுடனும் உங்கள் பதிவு நேரில் காணும் வண்ணம் அமைந்திருக்கிறது. நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் கூறிய கோயில்களைப்பற்றிய தகவல் என்னிடம் இப்போது இல்லை. தகவல் சேகரித்ததும் அவசியம் பதிவிடுகிறேன். நன்றி முத்துபாலகிருஷ்ணன்.

நன்றி மோகன்ஜி.

துளசி கோபால் said...

அருமையான இடுகை. நன்றி.


முத்துபாலகிருஷ்ணன்,

இங்கே சில கர்னாடகா கோவில் விவரங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது நூல் பிடித்துப்போகவும்:-)

http://thulasidhalam.blogspot.com/2010/05/blog-post_13.html

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி துளசி கோபால்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Mrs.Menagasathia,
வித்யசங்கரா கோயிலும் சாரதாம்பா கோயிலும் ஒரே பிரகாரத்தில் தான் அமைந்துள்ளது.

R. Gopi said...

2007 செப்டம்பர் மாதம் சிருங்கேரி சென்றிருந்தேன்.

சிருங்கேரி ஸ்தல மகாத்மியம் மிகப் பிரசித்தம். சங்கரர் மேடம் நிறுவ இடம் தேடிப் புறப்பட்டபோது நிறைமாதத் தவளை ஒன்று வெயிலில் அவதிப்படுவதைக் குறைக்க நாகப் பாம்பு ஒன்று அதற்குக் குடையாக இருந்தது. இயற்கையில் ஒன்றுகொன்று எதிரிகளான இரண்டு ஜீவன்கள் நட்புடன் இருப்பதைப் பார்த்த அவர் மடம் நிறுவ இதுதான் சிறந்த இடம் என்று முடிவு செய்து முதல் மடத்தை இங்கே நிறுவினார்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு மிக்க நன்றி கோபி.

Post a Comment

Related Posts with Thumbnails