Thursday, September 2, 2010


கூடலழகர்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் கூடலழகர் திருக்கோயில், மதுரை.


திருக்கோயில் அமைவிடம்:
இத்திருக்கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளது.

திருத்தலக் குறிப்பு:
மூலவர் : கூடலழகர்
உற்சவர் : வியூக சுந்தரராஜர்
தாயார் : மதுரவல்லி (வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் : கதலி
தல தீர்த்தம் : ஹேமபுஷ்கரணி


தல வரலாறு :
பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார். சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை
வடிவமைக்கச் சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகி
றது. இத்தலம் கிருதாயுகத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில். கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்ற நான்கு யுகங்களையும் கடந்து நிற்கிறது. யுகங்களைக் கடந்து நிற்பதால் இக்கோயில் பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப் படுகிறார்.

தலச்சிறப்பு:
பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் போன்ற ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். எல்லா பெருமாள் கோயில்களிலும், அதிகாலையில் பாடப்படும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பெரியாழ்வாரால் பாடப்பட்ட திருப்பல்லாண்டு இயற்றப்பட்ட திருத்தலம் இதுவே. மார்கழி மாதத்தில் இத்திருக்கோயில் தரிசனம் மிகவும் சிறப்பு. வைகுண்ட ஏகாதசியும், நவராத்திரி விழாவும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

பெருமாள் கோயில்களில் பொதுவாக 96 வகையான விமானங்கள் அமைக்கப் படுவது வழக்கம். அவற்றுள் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 108 திவ்யதேச திருத்தலங்களில் இவ்வூரிலும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைக்கப்பட்டு, தலமூர்த்தி அதன் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதன் மேல் உள்ள கலசம் 10 அடி உயரம் கொண்டது.

திருக்கோயில் கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் போது அவற்றுள் நவதானியங்களை நிரப்பி வைப்பார்களாம். ஏனெனில், இயற்கை சீற்றங்களின் போது, எல்லாம் தண்ணீரில் அடித்துச்சென்றுவிடும் நிலையில், மிஞ்சி இருக்கும் சில மனிதர்கள் உயிர்வாழ அந்த தானியங்கள் தேவைப்படும் என்பதற்காக கலசத்தில் நவதானியங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இச்செய்தி சமீபத்தில் ஒரு வரலாற்று ஆய்வாளர் மூலம் நான் தெரிந்து கொண்டது. அக்காலத்தில் எல்லா செயல்களுமே ஏதோ ஒரு நல்ல நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

பிற சன்னதிகள்:
எட்டு பிரகாரங்களுடன் இக்கோயில் அமைக்கப் பட்டுள்ளது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவகிரகங்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணர், கருடர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்மர் ஆகிய சன்னதிகள் உள்ளன. பெருமாள் கோயிலில் நவகிரகங்களுக்கு சன்னதி இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

தலப்பெருமை:
இத்தல உற்சவர் வியூக சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார். மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன் இவரை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஓவிய வடிவில் காட்சி தருகின்றனர். அதனால் இத்தளம் ஓவிய மண்டபம் என அழைக்கப் படுகிறது. மூன்றாவது தளத்தில் ரெங்கநாதப் பெருமாள் சயன கோலத்தில் தாயார்களுடன் காட்சி தருகிறார். இவ்வாறாக சுவாமி நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களில் முக்கோல முகுந்தன் ஆக இக்கோயிலில் கூடலழகர் காட்சி தருகிறார்.


பூவராகர், லக்ஷ்மி நரசிம்மர், நாராயணன், ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவதுபோல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். திருக்கோயில் விமானத்தை பார்க்க இக்கோயிலில் ரூ. 5/- வசூல் செய்கிறார்கள். இரவு 8:00 மணிவரை விமானத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். பாண்டிய மன்னனுக்கு மீன் வடிவில் பெருமாள் காட்சி கொடுத்த காரணத்தினால், பாண்டியர்களது சின்னம் மீனாக அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

காப்பு:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன்
சேவடி செவ்விற் திருக்காப்பு
(2 முறை)

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவின் சோதி வலத் துறையும் சுடரா ழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு
(2 முறை)

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக் கதர்வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருத்தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே

அண்டகுலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு
தொண்டைக்குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண் டென்மினே

எந்தை தந்தை தந்தை தந்தை தம்முத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்நியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை திரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே

தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலந்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூழக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டனுக்குப் பல்லாண்டு கூறுதுமே

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

அல்வழக்கொன்று மில்லா அணி கேடியார்கோன் அபிமான துங்கன்
செல்வனைப்போலத் திருமாலே ! நானும் உனக்குப் பழவடியேன்
நல்லவகையால் நமோநாராயணா வென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே !
(2 முறை)

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே !
(2 முறை)

ராமலக்ஷ்மி அவர்கள் எடுத்த கூடலழகர் கோபுரத்தின் புகைப்படத்தைக்காண இங்கே செல்லவும்.


12 comments:

Jey said...

தகவல்கள் அருமை... விரிவா எழுதிருக்கீக...:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி Jey.

a said...

அருமையான தகவல்கள்.............

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பதிவு.

இந்தக் கோவிலுக்கு நான் கடந்த வருடம் சென்றிருக்கிறேன். முதல் படம் கோபுரத்தின் முன்புறமென நினைக்கிறேன். படிக்கட்டெல்லாம் வைத்து அழகாக உள்ளது. கோவிலின் முதல் தளத்திலிருந்து எடுத்த படம் போலும்.

கோவிலின் பின்பக்கமிருந்து கோபுரத்தை நான் எடுத்த படம் கீழ்வரும் புகைப்படப் பதிவில் நான்காவதாய்:
http://tamilamudam.blogspot.com/2010/07/pit.html

அவசியம் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானால் அதை இந்தப் பதிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:)! நன்றி.

Vikis Kitchen said...

ரொம்ப நல்லா எழுதறிங்க. நன்றி .

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி யோகேஷ்.

நன்றி ராமலக்ஷ்மி. அவசியம் நீங்கள் சொன்ன படத்தை சேர்த்துக்கொள்கிறேன்.

நன்றி Viki.

Menaga Sathia said...

thxs for sharing!!nice post....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

R.Gopi said...

ஆஹா....

கூடலழகரின் திவ்ய தரிசனம் கண்டேன்....

நேரிலும் காண ஆசை... விரைவில் செல்ல உத்தேசித்திருக்கிறேன்....

நன்றி.....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமுடன் சென்று வாருங்கள். நன்றி கோபி.

Madhavan Srinivasagopalan said...

waaw.. fantastic experience.. I am happy just seeing this post..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன்.

Post a Comment

Related Posts with Thumbnails