தேவையான பொருட்கள்: அவல் : 250 கிராம் சர்க்கரை : 400 கிராம் முந்திரி பருப்பு : 7 நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி நெய் : 100 கிராம்
செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும்.
அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் கலந்து சேர்த்துக் கிளறவும். இவ்வாறு கிளறும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் கிளறிக்கொண்டே இருக்கவும். இந்தக் கலவை முக்கால் பதம் வெந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி, அவல் கலவையை எடுத்துக் கொட்டவும்.
ஒரு கரண்டியால் மேல் புரத்தை சமன் படுத்தி, கத்தியில் நெய் தடவி அழகிய சிறுசிறு துண்டங்களாக வெட்டினால் அவல் பர்ஃபி தயார்.
அவலின் நலன்கள்: பொதுவாக அவலை சமைத்துதான் உண்ணவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவலுடன் வெல்லம், பொட்டுக் கடலை சேர்த்து சமைக்காமலேயே உண்ணலாம். அவல் சீக்கிரத்தில் செரிக்கும் தன்மையுடைய உணவு. அரிசியில் இருந்து செய்யப் படும் உணவுப்பொருள் என்பதால் அரிசியின் நன்மைகள் இதிலும் கிடைக்கின்றன. உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் அவலை அடிக்கடி சேர்த்துக் கொள்வதனால் எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் எடை சீராகக் குறைகிறது. பச்சரிசி அவலை விட புழுங்கல் அரிசி அவல் உடலுக்கு மிகவும் நல்லது.
மனித வாழ்க்கை, பிறந்த நொடியிலிருந்து இறப்பை நோக்கிய பயணமாகவே தொடர்கிறது. நேரான சாலையில் சிரமமின்றி செல்வது போல, ப்ரேக் அதிகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சிலரது வாழ்க்கை சுகமாக அமைந்து விடுகிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளைப் போல் பலரது வாழக்கை பல கஷ்ட நஷ்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறது. பிறப்பில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை சுவாரஸ்யமாக்குவது இசை மட்டுமே.
அது போகிற போக்கில் வாழ்பவர்கள்தான் பலபேர். ஆனால், தான் மறைந்த பிறகும் தன்னை எல்லோர் மனத்திலும் குடிவைத்துச் செல்ல வேண்டும் என்று தன் வாழக்கையைப் பாடமாக வாழ்ந்து செல்பவர்கள் சிலர் இருந்தார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள். என்னடா இது ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எல்லாம் A.M.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டதின் பலன் தான்.
சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. இரவின் மடியில் இனிமை சேர்க்கும் பாடல்கள் இவருடையது.
தென்னிந்திய இசை வானில் துருவ நட்சத்திரமாக விளங்கிய A.M.ராஜா, வட இந்தியத் திரையுலகிலும் தன் இசைத் திறமையை நிலைநாட்டியிருக்கிறார். ஹிந்தி சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான ராஜ்கபூரினால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் நிரம்ப பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் இவர் பிரபலம். நிறைய பாடகர்கள் பல மொழிகளில் பாடி இருந்தாலும், தான் பாடிய அத்தனை மொழிகளிலும் பிரபலமான சில பாடகர்களுள் இவரும் ஒருவர்.
*******
A.M.ராஜாவுக்கும், அதே காலகட்டத்தில் பிரபல பாடகியாக இருந்த ஜிக்கி அவர்களும் காதலித்து, இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் சமயத்தில், பிரபல பத்திரிக்கையில் வந்த செய்திதான் பலரை புருவம் உயர்த்தச் செய்ததாம். ராஜா, ஜிக்கி கல்யாணம் என்று செய்தி வெளியிடுவதற்கு பதிலாக, ராஜாஜிக்கி கல்யாணம் என்று பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டதாம். ராஜாஜிக்கு கல்யாணமா, என்று மக்கள் மததியில் பரபரப்பு நிலவியதாம்.
*******
களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற அருகில் வந்தாள், உருகி நின்றாள் என்ற பாடல், தன்னை மறந்து விட்ட காதலியை நினைத்து ஜெமினி பாடும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஜெமினி கையில் வைத்துப் பார்க்கும் சீட்டுக் கட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் சாவித்திரியின் முகம் வருவது போல காட்சி இருக்கும். அந்த காலத்திலேயே அழகாக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஜெமினியின் நடிப்பு அருமையாக இருக்கும். இதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் A.M.ராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல், தேனீ பூவிலிருந்து தேனை எடுத்து கூட்டில் சேர்க்காமல் நேராக நம் கையிலேயே கொடுத்தது போன்ற தித்திப்பான உணர்வு.
*******
A.M.ராஜா அவர்கள் இசையமைத்து, தமிழ் திரையுலகை முற்றிலுமாக வேறு திசைக்கு இட்டுச் சென்ற பெருமை மிகு இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான தேன் நிலவு படத்தில் வரும் காலையும் நீயே, மாலையும் நீயே பாடல் கரும்புச் சாறு. பாடல் வரிகளை A.M.ராஜா பாட, இன்றும் இளமை கொஞ்சும் குரலழகி ஜானகி அவர்களின், ஹம்மிங், பாடல் நெடுக வந்து கேட்பவர்களை மயக்கும் தேனிசை.
*******
ஆடாத மனமும் ஆடுதே என்ற களத்தூர் கண்ணம்மா பாடல் இசையுலகில் A.M.ராஜா, P.சுசீலா சேர்ந்து பாடிய பாடல்களில் சிகரத்தை தொட்ட பாடல். இந்த பாடலில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகம் கூட்டி இருப்பார்கள். A.M.ராஜாவை விட, P.சுசீலாவின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும் இப்பாடலில்.
*******
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மிஸியம்மா படப் பாடல். ஜெமினி, சாவித்திரியின் இளமையான தோற்றம், பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களின் கைதேர்ந்த நடிப்பு, A.M.ராஜாவின் குரல், இனிமையான இசை அனைத்து சங்கதிகளும் ஒருங்கே மிளிரும், காலத்தால் அழியாத, இந்தத் தலைமுறை ரசிகர்களும் விரும்பிக் கேட்கும் பாடல்.
*******
ஆடிப்பெருக்கு படத்தில் தோன்றும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தத்துவ முத்து. டூயட் பாடலாக இருந்தாலும் அதிலே தத்துவதத்தை நுழைத்தது பாடல் ஆசிரியரின் திறமை. "மலர் இருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை, செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை" என்று நீளும் பாடல் வரிகள், உலக வாழ்க்கைச் சக்கரத் தத்துவத்தை ஒரு எளிய பாடலில் உணர்த்தியுள்ளது.
*******
இப்படி எத்தனையோ பாடல்கள். A.M.ராஜா அவர்களின் குரல் இனிமையும், அவரது பாடல்களில் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை அமைப்பாளர்களின் மெட்டு விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து இவர் பாடிய பாடல்கள் உலக உருண்டை சுழலும் வரை எல்லோரது மனதையும் சுற்றி வரும் பாடல்கள்தான் என்பதில் ஐயமில்லை. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் இருந்து சில பாடல்கள் இதோ:
சின்ன சின்ன கண்ணிலே.. (தேன் நிலவு)
கண்களின் வார்த்தைகள் புரியாதோ.. (களத்தூர் கண்ணம்மா)
செங்கண் அவன்பால் திசைமுகன் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதா கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !! (17)
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல் கண்ணார்இரவி கதிர்வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !! (18)
உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க இங்குஇப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய் !! (19)
பூதங்கள் தோறும் நின் றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம் உனைக் கண்அறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய் எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !! (5)
பப்பற வீட்டி ருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்துறுத் தார்அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா செப்புறு கமலங்கண் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டு அருள் புரியும் எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !! (6)
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம் எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !! (7)
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே உனதொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே வண் திருப் பெருந்துறையாய் வழி அடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமுதே கரும்பே விரும் படியார் எண்ணகத் தாய் உலகுக்குயிரானாய் எம் பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !! (9)
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம் போக்குகின் றோம்அவ மே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய் திருமாலாம் அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !! (10)
*******
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்க இங்கே செல்லவும்.
பீடு உடையது, பெருமை உடையது மார்கழி மாதம். உலகமெங்குமே இந்த மார்கழி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு தெய்வம் சார்ந்த பண்டிகை நடந்தேறிக்கொண்டே இருக்கும். மத வேறுபாடின்றி, எல்லா மதத்திலும் மக்களை பக்தி மார்கத்தில் இட்டுச் செல்லும் மாதமாகவே இந்த மார்கழி திகழ்கிறது. மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து கோலம் போடுவதற்கும், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பதற்கும், திருக்கோயில் சென்று வழிபாடு நடத்துவதற்கும், உடல் ஆரோக்கியம் சம்பந்தமான காரணங்களை நமது முன்னோர்கள் முன் வைத்திருந்தார்கள்.
இந்த மார்கழி மாத ஆரம்பத்தில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் ஏகாதசி விரதத்தின் சிறப்பினை பக்தர்களுக்கு உணர்த்திய பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர்.
திருக்கோயில் இருப்பிடம்: மனித வடிவில் மட்டுமல்ல, மயில் வடிவிலும் இறைவனை வழிபட்ட திருத்தலம் விளங்கும் மயிலாடுதுறையில் உள்ளது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையிலிருந்து சுமார் 260 km தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை.
திருத்தலச் சிறப்பு: 108 திவ்யதேச திருத்தலங்களுள் 22-வது திவ்ய தேசமாக விளங்குகிறது இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். சோழநாட்டுத் திவ்யதேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில். இக்கோயிலின் பழமை இங்குள்ள சிற்பங்களில் தெரிகிறது.
திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். ஸ்ரீ ரங்கநாதர் சிறப்புடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பஞ்சரங்க திருத்தலங்களுள் ஒன்றாகவும் பரிமள ரங்கநாதர் ஆலயம் உள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்) ஸ்ரீரங்கம் கோயிலடி என அழைக்கப்படும் ஆதிரங்கம் கும்பகோணம் திருஇந்தளூர் என இவை அனைத்தும் பஞ்சரங்க திருத்தலங்கள்.
இத்திருக்கோயிலில் அருள்மிகு பரிமள ரங்கநாதரின் திருமுகத்தை சந்திர பகவானும், தாமரைப் பாதங்களை சூரிய பகவானும், தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பந்தத்தை உணர்த்தும் நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைப் பக்கத்தில் காவிரிப் பெண்ணும், கால் பக்கத்தில் கங்கைப் பெண்ணும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் ரங்கநாதரின் திருவடிகளை பூஜிக்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதத் தொடக்கம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதத்தில் ஐந்து நாட்கள் கண்ணன் புறப்பாடு, இக்கோயில் தாயாருக்கு புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடத்தில் பாதி நாட்கள் விழாக்கள் மயம்தான்.
ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக விளங்கிய திருத்தலம் இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்து வீர சயன கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேதச் சக்கர விமானம் என அழைக்கப்படுகிறது.
திருத்தல வரலாறு: விரதங்களில் சிறப்பு வாய்ந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். அம்பரீசன் என்ற அரசன் பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் பல ஆண்டுகளாக ரங்கநாதரை மனதில் இருத்தி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தார். ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று உணவு உண்டு விரதம் முடிப்பார். பல ஆண்டுகள் ஏகாதசி விரதம் இருந்ததின் பயனாக தேவலோகப் பதவி ஒரு மனிதப் பிறவிக்குக் கிடைத்து விட்டால் தேவர்களுக்கு மரியாதை குன்றிவிடும் என கலக்கம் கொண்டு தேவர்கள் அனைவரும் சென்று துர்வாச முனிவரை சந்தித்தனர். அவரும் தேவர்களுக்கு உதவுவதாகக் கூறி அம்பரீசனின் விரதத்தை முடிக்க விடாமல் தடுக்க பூலோகம் நோக்கி வந்தார். முனிவர் பூமி வந்து சேர்வதற்குள் மன்னன் ஏகாதசி விரதம் முடித்திருந்தார். ஆனாலும் துவாதசியன்று உணவு சாப்பிட்டால்தான் விரதம் முழுமையாக முடியும் என்பது ஐதீகம். இதன் காரணாமாக துவாதசியன்று மன்னனிடம் தான் நீராடிவிட்டு வருவதாகவும், வந்தபின் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் எனவும் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றார் துர்வாச முனிவர். தான் நேரம் தாழ்த்திச் சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்பதே முனிவரது திட்டம். இதனிடையே விரதம் முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தன் அரசவை பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டு, மூன்று மடக்கு தீர்த்தத்தை குடித்தாலே விரதம் முடித்ததற்கு சமம் எனக் கூற அவ்வாறே செய்தார் அரசர். விரதத்தை இனிதே முடித்தார் அம்பரீசன்.
தான் இத்தனை திட்டமிட்டும் மன்னர் விரதத்தை நல்ல விதத்தில் முடித்து விட்டாரே என்று ஆத்திரம் கொண்ட துர்வாசர், மன்னர் மீது கோபம் கொண்டு சாபமிட எத்தனித்தார். மன்னர் பெருமாளை சரணடைந்தார். பெருமாள் மன்னரை முனிவரின் கோபத்திலிருந்து காத்து, அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு தேவலோகப் பதவியெல்லாம் வேண்டாம், பெருமாள் இத்தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் தனது தவறை எண்ணி பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார். பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம்.
மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன. சிறப்புடைய நான்கு வேதங்களையும் ராட்சதர்கள் இருவர் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்து விட்டனர். அந்த வேதங்களைக் காப்பதற்காக மீன் வடிவம் கொண்டு ராட்சதர்களை அழித்து வேதங்களை காப்பாற்றி, அவற்றை பழைய வடிவத்திற்கு கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.
சந்திரன் வழிபட்ட தலம் இது. தனக்கு ஏற்பட்ட சரும பாதிப்பை போக்கிக்கொள்ள இத்தல இறைவனை வேண்டி, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட தனது பாதிப்பு நீங்கப் பெற்றார் சந்திரபகவான். இதன் காரணமாகவே சந்திர புஷ்கரணி என இத்தல தீர்த்தம் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. கோயில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன், அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது எத்தனை கேள்விகளை நம் மனத்துள் உண்டாக்கினாலும், தர்மத்தை நிலைநாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும், ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு.
தன்னை சீண்டுவதற்காக தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். ஒவ்வொரு வினைக்கும் செயலுக்கும், எதிர் வினை கட்டாயம் உண்டு. அவை நல்லவையோ, தீயவையோ, என்பதை உணர்த்தும் சிற்பம்.
காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம்.
மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி கண்முன்னே.
ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.
நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன்.
சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக, சீதா பிராட்டி தந்த கணையாழியை ராமரிடம் சேர்ப்பிக்கும் அன்பின் விசுவாசி அனுமன்.
உலகை காப்பவன் கண்ணன் என்றாலும், அவனைக் காப்பவள் தாயார் யசோதை தானே. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பல ஆயிரம் மடங்கு பெரிது என்பதை உணர்த்தும் தாய் மகன் உறவு, கண்ணன் யசோதை உறவு. அவர்கள் பாசம் சிற்ப வடிவில்.
தன் புல்லாங்குழல் இசையால் ஆறறிவு மனிதர்களை மட்டுமன்றி, ஐந்தறிவு ஜீவன்களையும் தன்வசப் படுத்திய வேணுகோபாலனின் இன்னிசை நமக்குக் கேட்கிறது அந்த சிற்பத்தை பார்க்கும்போது.
குழந்தை வடிவில் கண்ணன் ஆலிலை மேலே.
இது போன்ற கோயில் தரிசனத்தில், சிற்பங்களை காணும்போது கற்பனை வளமும், ஸ்லோகங்களை சொல்லி பாடும் போது மொழி வளமும், கடவுளைக் காணும்போது மன வளமும், என திருக்கோயில் செல்வதற்கு ஆன்மிகம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கியது திருக்கோயில் தரிசனம்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆண்டாள், பெருமாளை நினைத்து நாவிற்கினிய, மனதிற்கினிய தேன் தமிழில் இயற்றிய திருப்பாவை படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையான பாடல்களை உடையது. பெரியாழ்வார் பெருமானின் மகளே ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரழகுப் பெருமாளுடன் வீற்றிருக்கும் ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.