Tuesday, September 14, 2010


ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் / வேலூர் கோட்டை

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்.


திருக்கோயில் அமைவிடம்:
ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர், சென்னையிலிருந்து 150 km தொலைவிலும், கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து 65 km தொலைவிலும், மலையே சிவனாகக் காட்சி தரும் திருவண்ணாமலையிலிருந்து 80 km தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பொதுவாக, நாம் திருப்பதியையும், திருவண்ணாமலையையும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்த்து விட வேண்டும் என்று நினைப்போம். வேலூரில் இருப்பவர்களுக்கு இந்த ஆசை சுலபமாக நிறைவேறும். ஏனென்றால், வேலூரின் வடக்கே திருமலை திருப்பதி 110 km தொலைவிலும், வேலூரின் தெற்கே, திருவண்ணாமலை 80 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தலமூர்த்தி : ஜலகண்டேஸ்வரர்
தலநாயகி : அகிலாண்டேஸ்வரி
தலவிருட்சம் : வன்னி
தலதீர்த்தம் : கங்கா பாலாறு, தாமரை புஷ்கரணி

திருத்தல வரலாறு:
சப்த ரிஷிகளுள் ஒருவர் அத்திரி. இவர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடி விட்டது. அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த பொம்மி என்னும் சிற்றரசர் கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட லிங்கத்தை சுட்டிக்காட்டி திருக்கோயில் எழுப்பும்படி கூறினார். இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனாலேயே ஜலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

அன்னியர் படையெடுப்பின் போது இந்த லிங்கத்தின் பாதுகாப்பு கருதி, லிங்கத்தை அருகில் உள்ள சத்துவாச்சாரி என்னும் ஊருக்கு எடுத்துச் சென்றனர். நெடுங்காலத்திற்கு இக்கோயில் தெய்வம் இல்லாத கோயிலாகவே இருந்தது. பின்னர் 1981-ம் வருடத்தில் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியரின் பெரும் முயற்சியினால், லிங்கம் மீண்டும் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சன்னதிகள்:
இக்கோயிலில், பிள்ளையார், பெருமாள், முருகன் வள்ளி தெய்வானை, அகிலாண்டேஸ்வரி, சரஸ்வதி, லெட்சுமி, சிவன், பிரம்மா, நவக்கிரகம், ஆதி சங்கரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

தலச் சிறப்பு:
வேலங்காடு என்ற புராணப் பெயர்கொண்ட வேலூரில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும், ஒருசேர அருள் பாலிக்கும் தலம் இது. இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின் புறம், திருப்பதி வெங்கடாசலபதி அமைப்பிலேயே பெருமாள் காட்சி தருகிறார். சூரியன், சந்திரனை விழுங்கும், ராகு, கேது மற்றும், தங்க, வெள்ளிப் பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆதி சங்கரர் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது.

திருத்தலபெருமை:
சித்திரை மாதம் நடைபெறும் இக்கோயில் ப்ரம்மோற்ஸவத்தின் போது 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம், 63 நாயன்மார்களும் வீதி உலா எடுத்துச் செல்லப்படுவர். ஒரே நேரத்தில் 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சியைக் காண கண் கோடி வேண்டும். செந்தமிழை, தெய்வீகத் தமிழை பாடல்கள் மூலமாக வளர்த்தவர்கள் அல்லவா இவர்கள். மொழியை வளர்க்க வரம் வாங்கி வந்தவர்கள் அல்லவா இவர்கள்.

சிவன் யானை வாகனத்தின் மேல் வலம் வருவார். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி விழாக்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் பெயர் செல்வ விநாயகர்.

கார்த்திகை தீபத்தன்று பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மாலை ராஜ கோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற்று, பின்பு வீதி உலா எடுத்துச் செல்வர். கார்த்திகை கடைசி சோமாவரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

இக்கோயில் சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி கொடுப்பதால் நோய் நீக்குபவராக ஜுரகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். திருக்கடையூரைப் போல இக்கோயிலிலும் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்றவை சிறப்பாக நடத்தி வைக்கப் படுகின்றன.

பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் காட்சி தருகிறது. இதற்கு அருகில் உள்ள சிவன் கங்கா பாலாறு ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த லிங்கம் லேசாக கூம்பு வடிவில் காணப்படுகிறது. இவரின் பின்புறம், பைரவர் காணப் படுகிறார். இவ்வாறு ஒரே இடத்தில் கங்கை, சிவன், பைரவரை காணும் பாக்கியம் கிட்டுகிறது. இவர்களை ஒரே இடத்தில் வழிபட காசி விஸ்வநாதரை வழி பட்ட புண்ணியம் கிடைக்குமாம்.

இக்கோயிலின் முன்புறத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப் பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெண்ணைப்பானையுடன் கிருஷ்ணர், பைரவர், கண்ணப்பர் வரலாறு, நடராஜர், சரபேஸ்வரர், கருடாழ்வார் வணங்கும் நரசிம்மர், மத்தளம் வாசிக்கும் பெருமாள், ஆஞ்சநேயர், மேற்கூரையைத் தாங்கும் கிளிகள் என அங்குள்ள சிற்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

****************

வேலூர் கோட்டை:
வேலூர் கோட்டை 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி நீர் நிரப்பப்பட்ட அகழி ஒன்று அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இங்கு படகு சவாரி நடத்தப் படுகிறது. வேலூர் மக்களுக்கு இந்த படகு சவாரி நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில் மட்டுமல்ல, ஒரு கிருஸ்தவ தேவாலயமும், இஸ்லாமிய தர்காவும் அமைந்துள்ளது. உள்ளே காவலர் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது.


இந்தியாவிலேயே தரையில் கட்டப்பட்ட கோட்டையில் மிகச் சிறந்த கோட்டையாக, இந்திய அளவில் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக இந்த வேலூர் கோட்டை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கோட்டையினைப் பற்றிய சிறப்புகள் அங்கங்கு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்டைக்குள்ளே, ASI அருங்காட்சியகமும், இந்திய அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கே பழங்காலத்து சிற்பங்களைப் பற்றியும், ஓவியங்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், அக்கால ரூபாய்கள், காசுகள் பற்றியும் பெரும்பாலான விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகள் இவற்றைப் பார்க்கும் போது தமிழன் பழங்காலத்தில் இருந்தே அயல் நாட்டினருடன், வணிக வியாபாரங்களில், திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க வாழ்ந்துள்ளான் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அருங்காட்சியகங்கள் வாரத்தில் வெள்ளிக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும்.


விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட காலத்தில் திப்புசுல்தான் அவரது குடும்பத்தினருடன் இந்த கோட்டையில் வந்து தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட வேலூர் புரட்சி 1806 ம் ஆண்டு இந்த வேலூர் கோட்டையில்தான் தொடங்கியது.

வேலூரை பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்திலிருந்தே வேலூர் போர் பூமியாகத்தான் திகழ்ந்துள்ளது. 1606 முதல் 1672 வரை விஜயநகரப் பேரரசின் தலை நகரமாக வேலூர் விளங்கியுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள், பீஜப்பூர் சுல்தான்கள் என பல்வேறு அரசர்கள் ஆண்ட வரலாற்று சிறப்புமிக்க ஊர் வேலூர். வேலூரில் முத்துமண்டபம் என்ற இடத்தில் இலங்கையை ஆண்ட கடைசி சிங்கள மன்னனின் கல்லறை அமைந்துள்ளது.


இவ்வாறாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட வேலூரை நமது குழந்தைகளுக்கு காட்டும்போது நமது முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Monday, September 13, 2010


வெந்தயக் கஞ்சி

தேவையான பொருட்கள்:
பச்சரிசி
: 1/4 படி
வெந்தயம் : 4 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு : 1 பிடி
பூண்டு : 5 பல்
பால் : 1/4 லிட்டர்
தேங்காய் : 1/4 மூடி
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
முதலில் பாலைக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் பச்சரிசி, பயத்தம் பருப்பு, வெந்தயம், பூண்டு இவற்றைப் போட்டு, சாதம் வடிப்பதற்கு ஊற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக வைக்கவும்.

வெந்த அரிசி கலவையில் உப்பு கலந்து தட்டில் நேரடியாக வைத்து பால் ஊற்றி, தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம். இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் இந்த கலவையைப் போட்டு கொஞ்சம், தண்ணீர், உப்பு, பால், தேங்காய் துருவல் கலந்து கஞ்சி பதத்தில் தயார் செய்தும் பருகலாம்.


நமக்கு சில நேரங்களில் நாம் செய்யும் சமையல் வேலை சீக்கிரமும் முடிய வேண்டும், வயிறும் அடங்க வேண்டும் என்று தோன்றும். இப்படிப்பட்ட நேரங்களில் செய்ய வேண்டிய சாப்பாடு தான் இந்த வெந்தயக் கஞ்சி. ஒரு வயது குழந்தை முதல் எண்பது வயது பெரியவர்கள் வரை உண்ணத் தகுதியான உணவு இது.

முதல் நாள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கவில்லை, பசியில்லை என்றால், அடுத்த நாள் காலையில் இந்த வெந்தயக் கஞ்சி சாப்பிட, அடுத்த இரண்டு மணி நேரத்தில் கபகபவென்று பசிக்க ஆரம்பித்துவிடும். நம் வயிற்றுப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். ஏனென்றால் வெந்தயத்தின் மகிமை அப்படி. வெந்தயத்திற்கு வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் திறன் உள்ளது.

வெந்தயம் நார்ச் சத்து நிறைந்தது. அதனாலேயே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை இவற்றின் அளவை சரியான அளவில் வைத்திட வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தினை அன்றாட சமையலில் சேர்ப்பதன் மூலம் பல உடல் கோளாறுகளை சரிசெய்யலாம்.

Sunday, September 12, 2010


மலேசியா வாசுதேவன் - என்றும் இனியவை

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில், கம்பீரமான, அதே நேரத்தில் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான பிரபல பாடகர் திரு. மலேசியா வாசுதேவன் அவர்களின் பேட்டியினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அத்தகைய சூழ்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் ஓரிருவரைத் தவிர யாரும் தன்னை வந்து பார்க்கவோ, தன்னை தொலைபேசியின் மூலமாகக் கூட யாரும் நலம் விசாரிக்கவில்லை என மிகவும் வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.


மலேசியா வாசுதேவன் அவர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேண்டுமானால் அவரை மறந்திருக்கலாம். அவரைப் பார்த்தே இராத, அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலமாக மட்டுமே அவரைக் காணும் எங்களைப் போன்ற கோடானுகோடி இசை ரசிகர்கள் அவரைப் போன்றவர்களை மறப்பதில்லை. நல்ல இசையையும் சரி, அதனை இவ்வுலகிற்குத் தருபவர்களையும் சரி இசை ரசிகர்கள் என்றுமே மறப்பதில்லை. என்னைப் பொறுத்த வரை இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் கடவுளுக்கு மிக அருகில் இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவரான திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடல்களை நாங்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு பின்வரும் பாடல்களே சாட்சி.

அள்ளி தந்த பூமி (நண்டு)


தேவனின் கோவிலிலே (வெள்ளை ரோஜா)


பூங்காத்து திரும்புமா (முதல் மரியாதை)


வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)


காதல் தீபம் ஒன்று (கல்யாண ராமன்)


குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் (என் உயிர் தோழன்)


வா வா வசந்தமே (புதுக்கவிதை)


வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)


ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு)


ஆகாய கங்கை (தர்மயுத்தம்)


ஒரு தங்க ரதத்தில் (தர்மயுத்தம்)


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (பதினாறு வயதினிலே)


பூவே இளைய பூவே (கோழி கூவுது)


காதல் வைபோகமே (சுவர் இல்லா சித்திரங்கள்)


இந்த மின்மினிக்கு (சிகப்பு ரோஜாக்கள்)


மலேசியா வாசுதேவன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Saturday, September 11, 2010


பிள்ளையார் கொழுக்கட்டை

கிண்ணம் செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி : 500 கிராம்
நல்லெண்ணெய் : 1/2 குழிக்கரண்டி
உப்பு : ஒரு சிட்டிகை

தித்திப்பு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 250 கிராம்
தேங்காய் : 1/2 மூடி
வெல்லம் : 250 கிராம்
ஏலக்காய் : 3

கார பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
முழு வெள்ளை உளுத்தம்பருப்பு : 250 கிராம்
சிவப்பு மிளகாய் : 4
தேங்காய் : 1/4 மூடி
கடுகு : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

மேல்மாவு செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பச்சரிசியை மிக்ஸியில் நன்றாக பட்டு போல, நீர்க்க அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்திரத்தில் சிறிது தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் விட்டு இதன்மேல், அரைத்து வைத்துள்ள அரிசி மாவினைக் கலந்து நன்றாகக் கிண்டிக்கொண்டே இருக்கவும். இந்த அரிசி கலவை மஞ்சள் நிறமாக, பளபளவென வந்ததும் இறக்கிவிடவும். நன்கு வெந்த இந்த மேல் மாவினை ஒரு பாத்திரத்தில் வைத்து வெள்ளைத் துணியால் மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

தித்திப்பு பூரணம் செய்முறை:
கடலைப் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பை குக்கரில் நன்றாக வேகவைக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லப்பாகு,
வேகவைத்து மசித்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் இவற்றை கலந்து கொதிக்க விடவும். இந்த கலவை பூரணம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.


கார பூரணம் செய்முறை:
முழு வெள்ளை உளுத்தம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், உப்பு, இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதினை இட்லி பானையில், இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெந்த உளுந்து கலவையை உதிர்த்து விடவும். இதில் தேங்காய் போட்டு பிரட்டவும்.


இத்தனையும் தயார் செய்து கொண்டு, மேல்மாவினை கிண்ணம் போல் செய்து அல்லது அவரவர் விருப்பம் போல் வடிவத்தில் செய்து, தயார் செய்து வைத்துள்ள பூரணங்களை உள்ளே வைத்து மூடி, இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும். எல்லோருக்கும் பிடித்த, பிள்ளையாருக்கும் பிடித்த கொழுக்கட்டை தயார்.

****************

விநாயகருக்கு மிக உகந்தது கொழுக்கட்டை என்றழைக்கப்படும் மோதகம். பிரம்மம் எப்படி எங்கும் பரந்து, பரவி இருக்கிறதோ, அதுபோல் விநாயகர் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கிறார். நம் உள்ளேயும், வெளியேயும் நிறைந்து இருக்கும் விநாயகர், தன் இல்லம் வரப் போகிறார் என குறிப்பால் அறிந்தாள் அருந்ததி. பிரம்மம் அண்ட வெளி எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்த அருந்ததி, இந்த உண்மையை இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பினாள்.


அண்டம் என்ற பொருள் பூரணமாக நிறைந்துள்ளது என்பதை உணர்த்தும் விதத்தில், உள்ளே அமிர்தம் போன்ற தித்திப்பான பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டை செய்து, தன் இல்லம் வரும் விநாயகருக்குப் படைத்தாராம். விநாயகரும் அதனை ஏற்று அருந்ததி தம்பதியருக்கு நன்மை தரும் வரங்களை அளித்தாராம்.

இந்த தத்துவத்தை உணர்த்தும் விதத்திலேயே கணபதி எப்போதும் தன் கையில் மோதகத்துடன் காணப் படுகிறார்.

****************

அருகம்புல்லின் மகிமை:
தமிழ் மொழியிலே அருகு என்றும், அருகம் புல் என்றும் வடமொழியிலே தூர்வா என்றும் அழைக்கப்படும் அருகம்புல் வீரியமுள்ள மருந்தாகும். அருகம்புல் பலவகைப்படும். அவை,
ருகு
உப்பருகு
கூந்தலருகு
சிற்றருகு
கொடியருகு
புல்லருகு
பேரருகு
பாளையருகு
வெள்ளருகு

அருகம்புல் இயற்கையில் முதல் மூலிகை. தெய்வீக மூலிகை. மிக குளிர்ச்சி உடையது. கோடையிலும் வாடாது. அருகம்புல்லைக் கொண்டு செய்யப்படும் தூர்வாதி தைலம், பலவிதமான நோய்களைத் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கு உகந்த மாலை அருகம்புல் மாலை.

****************

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய விநாயகர் பாடல்களில் இரண்டு..

விநாயகனே வினை தீர்ப்பவனே...


ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்...


****************

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Friday, September 10, 2010


விநாயகர் கவசம்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்

****************

காசிப
முனிவர் அருளிய விநாயகர் கவசம்



தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும் விளங்கிய
காசிபர்காக்க புருவந் தம்மைத்
தளர்வில் மாகோ தரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க:
கவின்வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைகார் காக்க
நனிவாக்கைவிநா யகபுதாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி காக்க
தவிர்தலுரு திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு
காக்க:
காமருபூ முகந்தன்னைக் குணேசர்
நனி காக்ககளக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க:
பக்கம் இரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங் களமூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்
காக்க:
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள்விநா யகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க:
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசைகாக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந்
திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க:
ஏகதந்தர் பகர்முழுதும் காக்க
இர வினும்சுந்தி இரண்டன் மாட்டும்
சையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க:
மதிஞானம் தவந்தரன ம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சசரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!


படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்:
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங் கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும் !!

Related Posts with Thumbnails