வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். ஆம்!! வந்தவர்கள் மட்டுமே வாழும் பூமி இது!! இந்த விஷயம் எந்தத் துறையில் சாத்தியப்படுகிறதோ இல்லையோ தமிழ் திரைத் துறையில் அதிகம் சாத்தியப்பட்ட விஷயம். தமிழ் மண்ணில் தமிழுக்கும், தமிழனுக்கும் கொஞ்சம் மதிப்பு குறைவு தான். தமிழை ஒரு பாட மொழியாக எடுத்து பயிற்றுவிக்கவே பெற்றோர் தயங்கும் காலமிது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அநியாயம் நடக்கும். அப்படியிருக்க, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆகட்டும், திரைப்பட நடிகை ஆகட்டும், தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால் வாய்ப்பு சற்று குறைவுதான். வாய்ப்பு கிடைப்பதே கடினம் தான். இங்கு தமிழை கொச்சையாகப் பேசுபவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.
ஒரு காலத்தில் இசைத்துறையில் உச்சரிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த வழக்கம் தேய்ந்து, திருக்கோயிலை, தெருக்கோயில் என்றும், பரவாயில்லை என்பதை பருவாயில்லை என்றும், பாடுபவர்களுக்கே வாய்ப்புக்கள் வந்து குவிந்தது. இசையுலகிலும் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் தெரிந்த, தமிழை நன்றாக உச்சரிக்கத் தெரிந்த பாடகர், பாடகியர் பெரிதாக சோபிக்கவில்லை. அப்படி, தமிழை நன்றாக தெளிவாக, நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடிய தமிழ் பாடகிகளில் ஒருவர்தான் B.S.சசிரேகா. அதனால்தான் குறைந்த காலமே, குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே அவரால் பாட முடிந்துள்ளது. தற்போது திரை இசைப் பாடல்கள் எதுவும் பாடுவதாகத் தெரியவில்லை. இவரது குரலில் ஒரு கம்பீரமும், ஒரு வித சோகமும் இழையோடும். இவரது குரல் ஒரு அபூர்வமான குரல். இவரது இனிய குரலில் ஒலித்த சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.
இதோ இதோ என் நெஞ்சிலே (வட்டத்துக்குள் சதுரம்)
கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள்)
கண்மணி நில்லு (ஊமை விழிகள்)
மாமரத்து பூவெடுத்து (ஊமை விழிகள்)
தென்றல் என்னை முத்தமிட்டது (ஒரு ஓடை நதியாகிறது)
எம்புருஷந்தான் (கோபுரங்கள் சாய்வதில்லை)
இளமனதினில் (மஞ்சள் நிலா)
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி (உறவைக் காத்த கிளி)
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருக்கடவூர் மயானம் திருக்கோயில், திருக்கடையூர்.
அமைதி என்பது இன்றைய உலகில் நம் அனைவருக்குமே அரிதான ஒரு விஷயம் ஆகிவிட்டது. பொதுவாகவே நமது அன்றாட வாழ்க்கையில் மன அமைதி தேடி திருக்கோயில் செல்வது வழக்கம். இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில் செல்லும்போது அமைதியின் சிகரத்திற்கே நம்மால் செல்ல முடிகிறது. இக்கோயிலின் அமைப்பு அவ்வாறாக உள்ளது.
திருக்கோயில் அமைவிடம்: இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து 20 km தொலைவிலும், காரைக்காலில் இருந்து 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் நேர் பின் திசையில் சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
தல வரலாறு: இந்த சிறப்பு மிக்க திருக்கடவூர் மயானம் திருக்கோயில் கி.பி. 557-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக் கலையின் நேர்த்தியினை நமக்குப் பறைசாற்றும், உலக அரங்கில் நமக்குப் பெருமை தேடித்தரும் தஞ்சை பெரிய கோயிலைவிட பழமையான திருக்கோயில் இது. காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் என்று சைவ சமயத்தில் ஐந்து விதமான மயானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. காசி மயானம் காஞ்சிபுரத்திலும், காழி மயானம் சீர்காழியிலும், கச்சி மயானம் திருவீழிமிழலையிலும், நாலூர் மயானம் குடவாசல் அருகிலும், இவற்றுள் ஐந்தாவதாக விளங்கும் கடவூர் மயானம், இந்த திருக்கடவூரிலும் அமைந்துள்ளன. இங்கே மயானம் என்ற சொல் திருக்கோயிலையே குறிக்கிறது. மயானம் என்பது சிவன் குடியிருக்கும் இடமாகவே சைவ சமயத்தில் கருதப்படுகிறது. இந்த ஐந்து தலங்களும் மயானத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு பிரம்மகர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் சிவபிரான் வெகுண்டெழுந்து பிரம்மதேவரை எரித்து சாம்பலாக்கி விட்டார். இதன் காரணமாக படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு சிவபிரானால் பிரம்மதேவர் எரிக்கப் பட்ட இடமே கடவூர் மயானம்.
பிரம்மதேவரை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் பொருட்டு தேவர்கள் அனைவரும் கடவூர் மயானம் வந்து பிரம்மபுரீஸ்வரரை வேண்டி தவம் புரிந்தனர். சிவபெருமான் கருணை உள்ளத்துடன் மனம் இறங்கி சிவஞானத்தை போதித்து, சிறப்பாக படைப்புத் தொழிலை செய்யும்படி பிரம்மனுக்குத் திருவருள் புரிந்தார். பிரம்மன் சிவஞானம் உணர்ந்த இடமே இத்திருக்கடவூர் மயானம். தற்போது திரு மெய்ஞானம் என அழைக்கப் படுகிறது.
தலச் சிறப்பு: சைவத் திருத்தலங்களில் பாடல் பெற்றத் தலங்கள் 274. அவ்வாறாக பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று இந்த மயானக் கடவூர். அதிலும் மூவர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 44. அவற்றுள் ஒன்றாக இருப்பது இத்தலத்தின் சிறப்பு. மேலும் இத்தலம் காவிரி தென்கரை திருத்தலம். பாடல் பெற்ற ஸ்தலங்களுள் 48வது திருத்தலம். திருமெய்ஞானம் என்றும், திருமயானம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. பிரம்மன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். தில்லை சிவபிரான், சிவாலய முனிவருக்குக் கூறியபடி அகத்திய முனிவரால் தொகுத்து வழங்கப்பட்ட 25 திருத்தலங்களுள் ஒன்று.
இத்திருக்கோயிலில் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. சிவனடியார்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகப் பாடல்கள் இக்கோயில் சிவாச்சாரியாரால் பாடப்படுகின்றன. பொதுவாக திருக்கடையூர் செல்லும் பக்தர்கள் அனைவரும் கடவூர் மயானத் தலம் என்றால் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலைத்தான் குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்தான் கடவூர் மயானம். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் உள்ளூர் மக்களுக்கோ, சுற்றுவட்டார மக்களுக்கோ இப்படி ஒரு திருக்கோயில் இங்கு இருப்பதே தெரியவில்லை என்பதுதான். இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற மிகப் பழமையான கோயில்களின் நிலை இதுதான். இதுபோன்ற பழமையான கோயில்களை கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி மக்களின் பார்வைக்குக் கொண்டுவருவது இந்து அறநிலையத் துறையின் கடமை. நம்முடைய பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமைகளுள் ஒன்று.
எல்லா திருக்கோயில்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுவது வழக்கம். அக்காலத்திய வாழ்க்கைமுறை கோயிலைக் கட்டியவர்களின் விபரங்கள், என்பதுபோன்ற வரலாற்றுச் செய்திகளைப் பற்றிய ஆவணங்களே இவை. வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் கல்வெட்டுக்கள் பொதுவாக கிரந்த எழுத்துக்களிலேயே காணப்படும். இக்கோயிலில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கல்வெட்டுக்கள் தமிழிலேயே எழுதப் பட்டுள்ளன. இக்கோயில் சிறப்புகளில் இதுவும் ஒன்று.
திருக்கோயில் அமைப்பு: மேற்கு பார்த்த சிவத்தலங்கள் 40ல் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீ முருக பெருமான் இக்கோயிலில் சிங்கார வேலன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். கையில் வில்லும், வேலும் வைத்துக் கொண்டு பாதகுறடு அணிந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆலயத்தின் மேற்குப் பிரகாரத்தின் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீ பிள்ளைபெருமாள் விளங்குகிறார். இக்கோயிலில் சிவனுக்கு முன்னால் மட்டுமல்லாது அம்மனுக்கு முன்பும் நந்தி பகவான் வீற்றிருக்கிறார்.
பக்தி மார்கத்தின் சிறப்பை மனித குலத்திற்கு உணர்த்திய மார்க்கண்டேயர், தினந்தோறும் சிவ பூஜை செய்வதற்காக காசி கங்கா தீர்த்தத்தை வரவழைத்துத் தந்த இடமும் இதுவே. இந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரம் கூடிய சுப தினம். ஆண்டுதோறும் இந்த தினத்தில் பக்தர்கள் இங்கே புனித நீராடுவர். அருள்மிகு திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கும், ஸ்ரீ அபிராமி அம்மையாருக்கும், ஐந்து கால அபிஷேகத்திற்கும் இங்குள்ள காசி தீர்த்தத்தினால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற தீர்த்தங்களினால் அபிஷேகம் கிடையாது. மன்னன் பாகுலேயன், இத்தல காசி தீர்த்தத்தை பிற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று எண்ணி , ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்தார். அதன் காரணமாக, சிவலிங்கத்தின் மீது ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்தத் தழும்பு இக்கோயில் சிவலிங்கத்தின் மேல் இப்போதும் காணப்படுகிறது.
ஒவ்வொரு திருக்கோயிலிலும் அக்கோயில் சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இத்திருக்கோவிலிலோ கோயில் பிரகாரம்தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எத்தனை பெரிய தாழ்வாரம். ஒரு ஆயிரம் பேரை வரவழைத்து அமோகமாக திருமணம் நடத்தலாம். அத்தனை பெரியது. இக்கோயிலில் பல வருடங்களுக்கு முன், இப்போது திருக்கடையூரில் நடப்பது போல் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணங்கள் வெகு சிறப்போடு நடை பெற்றுள்ளன. இக்கோயில் பிரகாரமே இதற்கு சாட்சி.
இக்கோயிலில் தற்போது புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இத்திருக்கோயில் மதில் சுவர்களின் மேல் மொத்தமாக 171 நந்திகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் செல்லும் அனைவரும் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலையும் சேர்த்து தரிசனம் செய்வதால், திருக்கடையூர் என்னும் தலத்திற்குச் செல்வதன் பூரண பலனையும் நாம் அடையலாம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
ஆலயம் என்பதில் ஆ என்பது ஆன்மாவையும், லயம் என்பது லயித்திருத்தல் என்பதையும் குறிக்கின்றன. ஆன்மா தெய்வத்தின்பால் லயித்திருக்கக் கருவியாக அமையும் இடமே ஆலயம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவன் முன் நம் ஆன்மாவை தரிசிக்கச் செல்வோம் ஆலயங்கள் பல!!
****************
திருஞானசம்பந்தர் அவர்களால் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலில் பாடப்பட்ட தேவாரப் பதிகம்:
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், விஜயாசன பெருமாள் திருக்கோயில், நத்தம், தூத்துக்குடி(வரகுணமங்கை).
திருக்கோயில் அமைவிடம்: அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
திருத்தல வரலாறு: இந்த விஜயாசனர் பெருமாள் திருக்கோயில், நவதிருப்பதிகள் எனப்படும் ஒன்பது கோயில்களில் இரண்டாவது திருப்பதியாக அமைந்துள்ளது. நவகிரஹ ஸ்தலங்களில் சந்திரன் ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான திருக்கோயில். இக்கோயில் உற்சவர் அருள்மிகு எம்இடர்கடிவான் என அழைக்கப்படுகிறார்.
ரோசமர் என்னும் முனிவர் இந்த வரகுணமங்கையில் தவம் புரிந்து வந்தார். ரோசமர் முனிவரிடம் சத்தியவான் என்பவர் சீடராக இருந்தார். சத்தியவான் ஒரு நாள் வரகுணமங்கை திருப்பதியில் உள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் குளத்தில் ஒரு செம்படவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். வலையை மீண்டும் மீண்டும் வீசி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது பின்னாலில் இருந்து ஒரு நாகம் அவரைத் தீண்டியது. அதனால் செம்படவன் உயிர் நீத்தார். நாகமும் மறைந்து சென்றது.
உயிர் நீத்த செம்படவன் சொர்க்கம் சென்றடைந்தார். அவரது சரீரத்தை பறவைகள் உண்டன. இதனைக் கண்ட சத்தியவான் தன் குரு ரோமசரிடம் சென்று, பிற உயிர்களுக்கு பாவம் செய்து வாழ்ந்த இவருக்கு எவ்வாறு சொர்கலோகப் பதவி கிடைத்தது , என்று வினவினார். அதற்கு ரோசமர் முனிவர், வரகுணமங்கை என்னும் இத்தலத்தில் உயிரை விட்டதால் அவருக்கு சொர்க்கம் கிடைத்தது என்று கூறினார்.
மேலும் ரோசமர் முனிவர் கூறியதாவது, முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் இடத்தில் வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தார். அவர் தன் தாய், தந்தை, குரு ஆகியோரை வணங்கி வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வந்தார். தனது பெற்றோரது காலத்திற்குப் பிறகு இறைவனை, பெருமாளை எண்ணி கடும் தவம் புரிய நினைத்தார். அவர் இவ்வாறு நினைத்தவுடன் பெருமாள் ஒரு பிராமண ரூபத்தில் தோன்றி ஸஹ்ய மலைகளின் நடுவே உள்ள வரகுணமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று தவம் புரியும் படி கூறினார். உடனே வேதவித் வரகுணமங்கை சென்று தவம் இருந்தார். இவரது தவத்தினை ஏற்ற பெருமாள் வேதவித் முன் தோன்றினார். பெருமாளிடம் வேதவித், இந்த வரகுணமங்கை தலத்தில் விஜயாசனன் என்ற திருநாமத்துடன் எழுந்தருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே பெருமாளும் இத்தலத்தில் விஜயாசன பெருமாளாக வீற்றிருந்து அனைவருக்கும் அருள் புரிகிறார். வேதவித் பிரம்மச்சாரியாக வாழ்ந்து முக்தி அடைந்தார்.
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயம் என்கிற ஆதிவிநாயகர் ஆலயம், திலதர்ப்பணபுரி.
இன்று மஹாளய அமாவாசை எனப்படும் புண்ணியதினம். மஹாளய பட்சம் என்றும், பித்ரு பட்சம் என்றும் அழைக்கப்படும் மஹாளய புண்ணிய காலம் 15 தினங்கள். இந்த மஹாளய பட்ச காலத்தில் செய்யப்படும் பித்ரு பூஜைகளை நம் முன்னோர்கள் நம்முடன் வந்து இருந்து நேரில் பெற்றுச்செல்வதாக நம்பிக்கை, ஐதீகம்.
நாம் நமது குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்கள் உண்மையிலேயே நிரந்தர சொத்துக்கள் இல்லை. நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் மட்டுமே நமது குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து. நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் நமது குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு நன்மையை உண்டாக்குகிறது என்பதைப் பற்றி சில சான்றோர்கள் மூலம் அறிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்துவைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோயிலில் தீபம் ஏற்றி வைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அன்னதானம் செய்வது 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பித்ரு பூஜை செய்ய உதவுதலுக்கு 6 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோயில்களுக்கு புனர்நிர்மாணம் செய்விப்பதற்கு 7 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திமக்கிரியை செய்வித்தல் 9 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. இவற்றைப் போலவே, முன்னோர்களுக்கு கயா க்ஷேத்திரத்தில் திதி பூஜை செய்தல் 21 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.
நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது இந்த பித்ரு பூஜை. அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கூட நாம் இது போன்ற விஷயங்களை செய்யலாம். மஹாளய அமாவாசை என்கிற இந்த புண்ணிய நாளில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களது நல்லாசியினைப் பெறுவோம்.
இந்த மஹாளய அமாவாசை தினத்தன்று திலதர்ப்பணபுரி திருக்கோயிலை தரிசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
திருத்தலம்அமைவிடம்: இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.
திருத்தலக்குறிப்பு: தலமூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்) தலஇறைவி: சொர்ணவல்லி (பொற்கொடி) தலதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தலவிருட்சம் : மந்தார மரம்
தலவரலாறு: திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.
இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து செல்லும்போது ஜடாயு என்ற பறவை, இராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லெட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. அதே நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார். அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீ ராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு ஸ்தலம் ஆகியது.
கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒரு நாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த ஸ்தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார். அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றனரோ, அந்தத் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.
திருத்தலப்பெருமை: திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும்போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதிவிநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுகவிநாயகர், மனிதமுகவிநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.
திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார். நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சுவாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைப் பாடுகளுடனும், அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன. கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முக்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது.
சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார். அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தாரமரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார். சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ராமர் தர்ப்பணம் செய்யும் காட்சி, நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம் .
இக்கோயிலில் மஹாளய பட்சமாகிய 15 நாட்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப் படும் காருண்யதர்ப்பணம்இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலெட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோயில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோயிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.
****************
திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பாடல்:
படங்கொள்நாகத் தணையானும் பைந்தா மறையின்மிசை இடங்கொள்நால்வே தனும்ஏத்த நின்ற இறைவன்னிடம் திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடும் திலதைப்பதி மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே !!
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் பித்தர் சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம் பத்தர்சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே !!
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு : 100 கிராம் ரோஸ் பீன்ஸ் பருப்பு : 100 கிராம் தக்காளி : 100 கிராம் கேரட் : 100 கிராம் பெரிய வெங்காயம் : 1 இஞ்சி : சிறியதுண்டு பூண்டு : 3 பல் பச்சை மிளகாய் : 2 சிவப்பு மிளகாய் : 1 சீரகம் : 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் : 1/2 தேக்கரண்டி மிளகு,சீரகப் போடி : 1 தேக்கரண்டி தேங்காய்ப் பால் : 1 கரண்டி நெய் : 1 ஸ்பூன் நல்லெண்ணெய் : 1 ஸ்பூன் உப்பு : தேவையானஅளவு
செய்முறை: ரோஸ் பீன்ஸ் பருப்பினை நன்றாக அலசி தனியே வைக்கவும். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கேரட் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், உருளைக் கிழங்கு, ரோஸ் பீன்ஸ் பருப்பு இவற்றை போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு வதக்கினால், காய்கறிகள் சீக்கிரமே வெந்துவிடும். இதன் மேல் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள், மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் அடுப்பை இளந்தீயில் வைத்து கடாயை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து காய்கள் நன்றாக வெந்து மசாலா கலந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து அடுப்பை நிறுத்தி விடவும். ரோஸ் பீன்ஸ் மசாலா தயார். இந்த மசாலாவை வெஜிடபிள் ரைஸ், பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.