தேவையான பொருட்கள்: ரவா : 1/4 படி அச்சு வெல்லம் : 12 நெய் : 5 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு : 12 காய்ந்த திராட்சை : 12 ஏலக்காய் பொடி : 1 தேக்கரண்டி ஃபுட் கலர் (மஞ்சள்) : ஒரு சிட்டிகை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும். இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும். ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவா பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள்: ரவா : 1/4 படி பெருங்காயப்பொடி : 1 சிட்டிகை மிளகு : 1 தேக்கரண்டி சீரகம் : 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் : 1 கருவேப்பிலை : சிறிதளவு இஞ்சி : சிறிதளவு நெய் : 3 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு : 10 உப்பு : தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும். இதில் நன்கு வறுத்த 1/4 படி ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.
இன்னொரு வாணலியில் நெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி போன்றவற்றை வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா பொங்கல் (காரம்) தயார்.
கிளர்முடி அண்ட கோளம் கெழும நாற்புயமும் எண்திக்கு அளவினைக் காட்ட மேனி அனந்த சூரியரிற் சிறப்ப தளர்உறு சுரர்பால் வைத்த தண்ணிய கருணையாலே வளர்ஒளி நாமத் தீசன் வயிரவக் கோலம்கொண்டான் !! - வைரவர் பாடல்
தாயிற் தயை வுடையாய் சாலைநகர்க் காக்குமலைக் கோயி லவிர்வானே கொற்றமிகு நாயில் இவர் வானே என்றன் உண்மை யாவும் அறிவாய் தவராசர் மெச்சும் வரம் தா !! - வைரவர் பதிகம்
திருக்கோயில் இருப்பிடம்: சிறப்புமிகு வைரவன் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் பாதையில் திருப்புத்தூரில் இருந்து 7 km தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 km தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருக்கோட்டியூரில் இருந்து 5 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூர் என்னும் ஊருக்குச் செல்லலாம்.
பழம்பெருமை வாய்ந்த இந்தத் தலம் வீரபாண்டியபுரம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்தலத்திற்கு மேலும் வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் எனவும் பல்வேறு பெயர்கள் உள்ளன.
அறுபத்துநான்கு வேறுபட்ட வடிவங்களில் வைரவர் அமைப்புகள் உள்ளன. இருபத்துநான்கு வேறுபாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அடிப்படையான எட்டு பைரவ தோற்றங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.
எட்டு பைரவர்களின் வாகனங்கள்: அசிதாங்க பைரவர் - அன்ன வாகனம் குரு பைரவர் - காளைமாடு சண்ட பைரவர் - மயில்வாகனம் குரோத பைரவர் - கழுகு வாகனம் உன்மத்தபைரவர் - குதிரை வாகனம் கபால பைரவர் - யானை வாகனம் பீஷண பைரவர் - சிம்ம வாகனம் கால பைரவர் - நாய் வாகனம்
திருத்தல வரலாறு: சிவபெருமானுடைய பல வடிவங்களில் பைரவரும் ஒருவராகவே கருதப்படுகிறார். மூன்று கண்களுடன், கைகளில் சூலத்தோடு, உடுக்கை, கபாலம், பாசம் போன்றவற்றை ஏந்தியும், காலில் சிலம்பும், மார்பில் தலைகளால் ஆன மாலையும் அணிந்தவர். கோரைப்பற்களும் செஞ்சடையும் கொண்டவராகக் காணப்படுகிறார்.
சிவபுராணமும், கந்தபுராணமும் பைரவரைப் பற்றி பாடுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக, தனது நெற்றிப் புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்க, பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்யச் சொன்னார். அவ்வாறே செய்தார் பைரவர். இதனாலேயே, பைரவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது, ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டும், காலில் சிலம்புடனும், முத்துமாலையும், தலை மாலையும் கழுத்தில் அணிந்தும் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறாக, அசுரர்களின் கொடுமை தாங்காமல் வேதனைப்பட்ட தேவர்களுக்காக, காசியில் ப்ரகதாரணன் என்ற முனிவர் செய்த யாகத்தில் தோன்றிய பைரவர், அசுரர்களைக் கொன்று சூலத்தில் அவர்களது தலையைக் கோர்த்துக்கொண்டார். நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாக்கிக் கொண்டார். எல்லா திருக்கோயில்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் காக்கும் கடவுளாக பைரவர் உள்ளார். எல்லா சிவ ஆலயங்களிலும், விநாயகரில் ஆரம்பிக்கும் பரிவாரத் தெய்வங்கள் பைரவருடன் முடிவதை அனைவரும் பார்த்திருக்கலாம். பைரவரே காவல் தெய்வம். இதன் காரணமாகவே முற்காலத்தில், திருக்கோயில் முழுவதும் பூட்டி அந்த சாவிகள் அனைத்தையும் பைரவரின் காலடியில் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்தது. இன்றைய கால மாற்றத்தில், இது போன்ற பழக்கம் மாறிவிட்டது.
வைரவன் கோயில் பைரவர், பிரம்மனின் கபாலத்தையும், திருமாலின் தோலையே சட்டையாகவும் அணிந்து காணப்படுவதாக வைரவன்கோவில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்கள் இழைத்த பெருங்கொடுமை தாங்காத தேவர்கள் சிவபிரானிடம் முறையிட, அவர் அந்தணர் கோலத்தில் இவர்கள் முன் தோன்றி, கோலவனம், அழிஞ்சில் வனம், புராதன வனம் என பெயர் கொண்ட இடத்திற்குச் சென்று உங்களது துயரங்களை போக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அவ்வாறே தேவர்கள் தன் தலைவனுடன் அந்தணர் சொன்ன இடத்திற்கு வந்த போது, அங்கே வளரொளிநாதரும், வடிவுடையம்பாளும் கோயில் கொண்டிருப்பதைக் கண்டனர். அப்போதுதான் தேவர்களுக்கு, முன்பு திருமாலும், பிரம்மனும் தானே பிரம்மம் என்ற போட்டி வந்த போது ஒளி வடிவமாக சிவன் தோன்றி, பின்பு மலையாகக் குளிர்ந்ததும், அவருக்கே வளரொளிநாதர் என்ற பெயர் உருவானதும் நினைவில் வந்தது. அத்தகைய வளரொளிநாதரே அகந்தை அடங்கிய தேவர்களுக்காக பைரவர் வடிவம் கொண்டார்.
இந்த வைரவன்பட்டி திருத்தலம் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. இத்தலம் அழிஞ்சிக்காடாய் இருந்ததாகவே கூறப்படுகிறது. வைரவன்கோயிலில் இரண்டு அழிஞ்சி மரங்கள் காணப் படுகின்றன. பொதுவாக இரண்டு விதமான அழிஞ்சி மரங்கள் உள்ளன. ஏறழிஞ்சி மரம், இறங்கழிஞ்சி மரம் என்பன அவை. இந்த வைரவன்பட்டியின் தலவிருட்சமாகக் கருதப்படும் அழிஞ்சி மரம் ஏறழிஞ்சி மரம் ஆகும். இயற்கையையே கடவுளாக வழிபடும் ஒரு மிக நல்ல பழக்கத்தை நாம் காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். மரங்களை கடவுளாய் நினைத்து தலவிருட்சமாய் வளர்த்து வந்துள்ளோம். அவற்றில்தான் எத்தனை அழகான உள்நோக்கங்களை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இக்கோயில் ஏறழிஞ்சி மரம் அதிசயத்தின் ஊற்றாகவே அமைந்துள்ளது. இந்த அழிஞ்சி மரத்து விதைகள் கீழே விழுவதில்லை. அந்த மரத்து காய் கனிகளில் இருந்து வெளிவரும் விதைகள் கீழே விழாமல் நேராகச் சென்று மரப் பட்டைகளில் ஒட்டிக் கொள்கின்றன. அந்த மரப் பட்டைகளில் முத்துக்கள் ஒட்டியதைப் போல இந்தக் காட்சியைக் காணும் போது, உடம்பே ஒரு நொடி சிலிர்த்து எழுகிறது. அந்த பைரவரையும், இந்த அழிஞ்சி மரத்தையும் காணவே எல்லோரும் ஒரு முறை இந்த வைரவன்பட்டி திருக்கோயிலுக்குச் சென்று வர வேண்டும். இந்த அழிஞ்சி மரத்து விதை கீழே விழாத காரணத்தினால், இம்மரம் புதிதாக விருட்சம் ஆகாமலேயே இருந்துள்ளது. அதனாலேயே இந்த மரத்தைப் போன்ற ஒரு வடிவத்தை கருங்கல்லில் செய்து கோயிலின் உள்ளே நிறுவி உள்ளனர். மரமே இல்லாமல் இருந்து பின்பு அழிஞ்சி மர விதை கிடைத்து அதன் மூலம் உண்டான மரங்கள்தான் தற்போது திருக்கோயில் சுற்றுப் பாதையில் உள்ளதாகும்.
இந்த அழிஞ்சி மரம் உருவானதற்கு வேறு கதையும் கூறப்படுகிறது. நம் தமிழர்களின் சொத்தாகிய வாழ்வியல் கவிஞன் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில், முன்பொருகாலத்தில், செட்டியார் தம்பதியர் தங்களுக்கு குழந்தை வரம்வேண்டி துறவி ஒருவரிடம் வேண்டி நின்றனர். அவர் அய்யனாரை வேண்டி சிவத் தலம் ஒன்றில் அழிஞ்சி மரக் கன்று ஒன்றை நீங்கள் நட்டு வளருங்கள். அந்த கன்று செழித்து வளர வளர தங்களது குலம் தழைக்கும் என்று அருளினார். அவ்வாறே நன்மை அக்குடும்பத்திற்கு நடந்தது. அந்த மரமே இன்று இக்கோயிலில் அமைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
திருக்கோயில் அமைப்பு: இத்திருக்கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சன்னதி, பள்ளியறை, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சன்னதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வயிரவர் பீடம், வயிரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
இக்கோயில் கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப் பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன், போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. நவக்ரஹ மேடையும் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு படித் துறைகளுடன் மிக அழகாக அமைந்துள்ளது.
வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறை மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சி மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். இத்திருகோயில் மண்டபங்கள், மற்றும் கோயில் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ள, வெள்ளை கற்கள், வயிரவன் பட்டி, திருமெய்யம், தென்கரை, குன்றக்குடி போன்ற ஊர்களில் உள்ள மலைகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது.
இக்கோயில் விமானம், உபபீடம் (துணை பீடம்) அதிட்டானம் (பீடம்) சுவர் (கால்) பிரஸ்தரம் (கூரை) கிரீவம் (கழுத்து) சிகரம் (தலை) ஸ்தூபி (குடம்) என ஏழு பகுதிகளுடன் நுண்ணிய வேலைப் பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் மஹா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்ணையும் மனதையும் கவர்கின்றது. மகாமண்டபத்தூண்கள் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலைகளுடன் கூடிய கொடிகளை அலகினால் பிடித்திருக்கும் அன்னப்பறவை, வட்டக் கருவியை கையில் ஏந்தி நிற்கும் கந்தர்வர், மானோடும், சிவகணத்தோடும் தாருகாவனத்தில் தோன்றிய பிச்சாடனர், தாமரை மலரில் வீணை மீட்டும் வனிதா, மீனாட்சி கல்யாண திருக்கோலம், மயில் மேல் சுப்பிரமணியர், சிவனும் பெருமாளும் ஒன்றாய் சங்கரநாராயணனாய், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாள், ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சிவன் பார்வதி ரிஷபாருடர் கோலத்தில், ஹிரண்யனை மடியில் போட்டு அவன் குடலை மாலையாய் போட்டுக்கொள்ளும் நரசிம்ம மூர்த்தி, மார்க்கண்டேயரின் பக்திக்கு இணங்கி காலனை அழிக்கும் கால சம்ஹாரமூர்த்தி, ஆறுமுகப் பெருமான் மயில் மேலே, அங்குசம், பாசம் ஏந்திய நடனமாடும் நர்த்தன கணபதி.
முக மண்டபத்தின் பதினான்கு தூண்களில்:, ஊர்த்துவ தாண்டவம் எண் தோள் காளி தாண்டவம் வைரவ மூர்த்தி தெய்யனாஞ்செட்டியார் அகோரவீரபத்திரர் அக்னிவீரபத்திரர் ஆடவல்லான் மணிவாசகப்பெருமான் மலைமகள் திரிபுரசுந்தரி பார்வதி வீணை மீட்டும் வனிதை ரதி மன்மதன் வேட்டுவன் வேட்டுவச்சி கோதண்ட ராமர் இலட்சுமணப் பெருமாள் சீதாப்பிராட்டி பரதன் மீனாட்சி திருக்கல்யாணம் ஆகிய சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பெரிய அளவில் பிரமாண்டமாய் செதுக்கப் பட்டுள்ளன.
வைரவன் கோயிலில் சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகைப் பகுதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி வகையைச் சேர்ந்தது. ஆலமரமும், முனிவர்களும் இல்லாமல் தனித்து காணப் படுகிறது.
மற்றொரு தட்சிணாமூர்த்தி அளவில் பெரியதாகவும், கருவறை வெளிச் சுவரின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது. கருமை நிறக் கல்லில் ஆன மரத்தின்கீழே ஆசனத்தில் அமர்ந்து, முனிவர்களுக்கு தத்துவம் போதிக்கும் வண்ணம் உள்ளது. இவரைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.
சிவன் கோயிலில் இராமரது சிற்பமும் ஹனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப் பட்டுள்ளது எங்கும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது அதிசயக் கோலம். இராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப் பட்டுள்ளது. ஹனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ஸ்ரீ ராமரிடம் கொண்டு சேர்த்தார். அந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ந்த இராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயக் காட்சி. வேறெங்கும் இல்லாத காட்சி.
கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் பக்தியின் வெளிப்பாட்டிற்கு மகோன்னதமான உதாரணமாய், பக்தியின் உச்சத்தை விளக்கும், சாதாரண மனிதன் சிவ பக்தியில் உயர்ந்து நாயன்மார் அளவிற்கு உயர்ந்து கண்ணப்ப நாயனாராய் மாறலாம் என்பதை உணர்த்திய கண்ணப்பனின் சிற்பம் சிவபிரானுடன். கானகத்தின் தலைவன் கண்ணப்பன் காளஹஸ்திநாதரின் கண்ணில் வழியும் இரத்தத்தைக் கண்டு பொறுக்காமல் தன் கண்ணை எடுத்து சிவபெருமானுக்கு வைக்கும் நோக்கோடு தனது கண்ணை அம்பால் அகற்றும் வேளையில் அதனை தடுத்தாட் கொள்ளும் சிற்ப வடிவம் கண் கொள்ளக் காட்சி. எதையும் எதிர்பாராத அன்பின் அடையாளம் கண்ணப்ப நாயனார் கடவுளுக்குச் சமமானவர்.
மேலும் நடராஜர் சபையின் முன் மண்டபம் அடையும் வாயிலில் பாயும் குதிரையை அடக்கி ஆளும் வீரர்களின் சிற்ப அமைப்பு சிறப்பு. வீரர்களின் உடை அலங்காரங்கள், அவர்களின் உடல் அசைவுகள், அவர்களின் முக உணர்ச்சிகள் தத்ரூபமாய் நம் கண் முன்னே சிற்ப வடிவில்.
இராஜ கோபுர வாயிலின் நிலைகளில் கொடிப் பெண்களின் சிற்பங்களைக் காணலாம். அவர்களின் முக அலங்காரமும், உடை அலங்காரமும், தலை அலங்காரமும் அக்காலத்திய பழக்க வழக்கத்தை நமக்குக் காட்டும் கண்ணாடிகள்.
திருக்கோயிலின் உள்ளே கல் மண்டபத்தின் மேற்கூரையில் ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் பல்வேறு வடிவங்கள் வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. எல்லாமே இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளது. அவற்றில் திருமாலின் பத்து அவதாரங்கள், பஞ்சபாண்டவர்களின் உருவங்கள், வளரொளிநாதர், வடிவுடையம்மன் ஆகிய தெய்வங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
வைரவ தீர்த்தம்: இத்தலம் பைரவரின் இதயமான தலமாக விளங்குவதாக சொல்கிறார்கள். இத்தல பைரவ தீர்த்தம், வடுக தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகிறது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீ வைரவர் தனது சூலத்தை கோயிலின் தென் திசைப் பக்கம் ஊன்ற, அங்கு ஓர் ஊற்று தோன்றியது. இன்றும் வற்றாத ஊற்று இங்கு பெருகுவதாகச் சொல்கிறார்கள் மக்கள்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் பைரவரின் அமைப்புகளைப் பற்றிய குறிப்பு: மதுரை மீனாட்சி திருக்கோயிலில் எட்டு கையுடனும் மூன்று கண்களுடனும் ஐம்பொன்னால் ஆன பைரவரின் உற்சவர் சிலை காணப்படுகிறது.
காரைக்குடியில் இருந்து 20 km தூரத்தில் உள்ள திருப்புத்தூரில் உள்ள பைரவர் திருக்கோயிலில் அமர்ந்த நிலையில் யோக பைரவரைக் காணலாம்.
தஞ்சை பெரிய கோயிலில், எட்டு கைகளுடன் கூடிய பைரவரைக் காணலாம்.
கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் மூன்று கால்களுடன் கூடிய பைரவரைக் காணலாம்.
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 4 km தொலைவில் அமைந்துள்ள க்ஷேத்திரபாலபுரம் என்னும் ஊரில் பைரவருக்கு என தனி கோயில் உள்ளது. இத்திருத்தலம் காசிக்கு இணையான திருத்தலம். இது போல பைரவருக்கு என தனி கோயில் வேறு எங்கும் இல்லை. இங்கு பைரவருக்கு வாகனம் எதுவும் இல்லை. இவர் மேற்கு நோக்கிய திசையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. மேக்கு நோக்கிய சிவன், மேற்கு நோக்கிய பைரவருக்கு சக்தி அதிகம் என்பது ஐதீகம்.
திருவண்ணமலையில் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் ஏழு அடி உயரத்தில் பைரவரைக் காணலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் எட்டு கரத்துடன் ஜடா மண்டல கால பைரவர் என்ற பெயருடன் பைரவர் அருள் புரிகிறார்.
சங்கரன்கோவில் சிவன் கோவிலில் நின்ற கோலத்துடன், செங்குத்தாக பாம்பை கையில் ஏந்தியபடி பைரவர் சர்ப்ப பைரவர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆறு கரங்களுடன் பலவித ஆயுதங்கள் தாங்கி சாந்த முகத்துடன் பைரவர் காணப் படுகிறார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லு சாலையில் இலஞ்சி என்னும் இடத்தில் அமைந்துள்ள குமரன் கோவிலில் பைரவரின் வாகனம் நாய் இடப்பக்கமாகத் திரும்பி இருப்பது சிறப்பு. பொதுவாக நாய் வாகனம் வலப் பக்கமாகவே திரும்பி இருக்கும்.
கும்பகோணம் திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் நின்ற கோலத்தில் கோரைப் பற்களுடனும் பயங்கர உருவத்துடன் சூலாயுதம் தாங்கி பைரவர் காட்சி தருகிறார். பைரவரது வாகனமான நாய் இடப்புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது சிறப்பு.
கொல்லிமலையில் உள்ள அறப்பலீஸ்வரர் ஆலயத்திலும் பைரவரது வாகனம் நாய் இடப்புறம் திரும்பி பைரவரைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்திற்கு கிழக்கே 6 km தொலைவில் திருவீசநல்லூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு சௌந்திர நாயகி உடனுறை சிவயோகி நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. சதுர்காலபைரவர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு மக்களின் ஆயுட்காலம் 120 ஆண்டுகளாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்வை நான்காகப் பிரித்திருந்தனர். இதன் அடிப்படையில் இங்கு ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு பைரவர் என்ற விதத்தில் நான்கு பைரவர்கள் இங்கே உள்ளனர். அவை முறையே, முதல் கட்டத்தில் முதல் 30 ஆண்டுகள் ஞானம் பெரும் நோக்கத்தில் ஞான பைரவரை வணங்க வேண்டும். அடுத்த இரண்டாம்கட்டத்தில் 31 முதல் 60 வயது வரை மகாலட்சுமி சன்னதியின் எதிரே திருவாட்சியுடன் காட்சி தரும் ஸ்வர்ணஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும்.
மூன்றாம் கட்டத்தில் 61 முதல் 90 வயது வரை உள்ள காலத்திற்கு உன்மத்த பைரவரை வணங்கவேண்டும். நான்காம் கட்டத்தில் 91 முதல் 120 வரை உள்ள காலத்திற்கு யோக பைரவரை வணங்க வேண்டும். இவ்வாறாக இத்திருக்கோயிலில் ஞானபைரவர், ஸ்வர்ணஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என நான்கு வடிவங்களில் பைரவர் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.
மனிதனின் ஆயுள் காலத்தைப் பிரித்து அவன் எப்படி வாழ வேண்டும் அந்தந்த வயதில் என்னென்ன செய்யவேண்டும் என்பன போன்ற விளக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதோடு மட்டும் அல்லாமல் வாழ்ந்தும் காட்டி, திருக்கோயில்களை தன் வாழ்வின் ஒரு பகுதியாக அமைத்து வாழ்ந்தது தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் செயல்.
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் 10 km தொலைவில் நாச்சியார் கோயிலுக்கு அருகில் உள்ள திருச்சேறையில் அமைந்துள்ள செந்நெறியப்பர் ஆலயம், சிவன் தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம். எல்லா திருக்கோயிலிலும் சிவன் மேலேயே நாயன்மார்களால் பாடல் இயற்றப்படும். இங்கு பைரவருக்கு தனி பாடல் திருநாவுக்கரசரால் பாடப் பட்டுள்ளது.
விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே !
ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்: தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந்திரந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் !!
நகரங்களின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நமக்கு செட்டிநாட்டுப் பக்கம் காரைக்குடிப் பக்கம் செல்லச் செல்ல, பிரம்மாண்டமான வீடுகள், விஸ்தாரமான தெருக்கள், சுத்தமான தண்ணீர் நிறைந்த, நிறைய குளங்கள், எங்கு பார்த்தாலும் விசாலமான பரந்த பூமி, திருக்கோயில் சுற்றுலா முடிந்து அவ்வூர் பகுதியை விட்டு வர மனமே இல்லை. எத்தனை கோயில்கள், அத்தனையும் பெரிது, பேரழகு. கண்ணையும் மனதையும் விட்டு அகலாத காட்சிகள் எல்லாமே. ஒவ்வொரு வீடும் அரண்மனையாய் தெரிவது, அந்நாளைய தமிழன் வாழ்ந்த சிறப்பான வாழ்வின் சுவடுகள், இன்று நம் கண்முன்னே வாய்பேசா சாட்சிகளாய்.
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில், காரைக்குடி அருகே அமைந்துள்ள, ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கோட்டியூர்.
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்தல றாயிற்றே எனவும் - முதலாம் திருமொழி
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்குந் திரிந்து விளையாடும் என் மகன் எனவும் குளிந்துறைகின்ற கோவிந்தன் கொம்பினார் பொழில் வாழ் குயிலினம் கோவிந்தன் குணம்பாடும் சீர் - பெரியாழ்வார்
திருக்கோயில் இருப்பிடம்: இத்திருக்கோட்டியூர் திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சிவகங்கையில் இருந்து 28 km தொலைவிலும், திருப்புத்தூரில் இருந்து 10 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூரை சென்று அடையலாம். இத்திருத்தலம் காரைக்குடியில் இருந்து 25 km தூரத்திலும் உள்ளது. இத்தலத்தின் அருகாமையிலேயே குருஸ்தலமான பட்டமங்கலம், பைரவர் ஸ்தலமான வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி தென்திருப்பதி, கோவிலூர் சிவன் தலம், சிற்பக் கலையின் சிறப்பை உணர்த்தும் காளையார்கோயில் என, இன்னும் நிறைய திருக்கோயில்களின் அணிவகுப்பு.
திருத்தலக் குறிப்பு: தல மூர்த்தி : ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் தல இறைவி : ஸ்ரீ பூமி நீளா தல தீர்த்தம் : அமர புஷ்கரணி தீர்த்தம் (திருப்பாற்கடல்) தல விருட்சம் : பலா மரம், வில்வ மரம்
திருத்தல வரலாறு: ஆழ்வார்களின் பாசுர அமைப்பின்படி, 108 திவ்ய தேசங்களில் முதலாவதாகவும், பாண்டிநாட்டு திவ்ய தேசங்கள் 18ல் ஒன்றாகவும் திகழ்கிறது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஹிரண்யன் என்ற அசுர அரசன், அனைத்து மக்களையும் இம்சித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யன் தான் செய்த தவத்தின் பலனாக, தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், ஆயுதங்கள் என இவை எவற்றினாலுமோ, இரவிலோ, பகல் நேரத்திலோ, வீட்டின் உள்ளேயோ, வெளியிலோ, தன் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அந்த வரம் தந்த பலத்தினால் எல்லோரையும் துன்புறுத்தினான்.
ஹிரண்யனின் கொற்றத்தை அடக்க தேவர்களுடன், சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் ஒன்றாய்க் கூடி ஆலோசனை செய்தனர். இறைவன் கட்டளைப்படி ஹிரண்யன் மனைவி, வசந்தமாலை என்ற கயாவின் வயிற்றில், பிரகலாதன் பிறந்து, ஸ்ரீமந் நாராயணனின் பரம பக்தனாய் வாழ்ந்தான். அது பொறுக்காத, தானே கடவுள், தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள தனக்கு முன்பாகவே, நாராயண மந்திர ஓதும் தன் மகன் என்றும் பாராமல், பிரகலாதனை கொல்லத் துணிந்தான் ஹிரண்யன். அவ்வேளையில், நாராயணா நாராயணா என்று ஒவ்வொரு நொடியும் நீ அன்புடன் அழைக்கும் உன் கடவுள் நாராயணனைக் காட்டு என ஹிரண்யன், பிரகலாதனிடம் கேட்க, அந்த தெய்வக் குழந்தை, எம்பெருமான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூற கோபம் கொண்ட ஹிரண்யன், தூணை எட்டி உதைத்தான்.
பொறுமை எல்லை கடந்த பெருமாள், மனித உருவும் இல்லாத, மிருக உருவமும் இல்லாத, இரண்டும் கலந்த வடிவத்தில், காலையும் அல்லாத, இரவும் அல்லாத, அந்தி மாலை நேரத்தில், இருப்பிடத்தின் வெளியேயும் அல்லாமல், உள்ளேயும் அல்லாமல், வாசற்படியில், எந்த ஆயுதமும் இன்றி, தன் விரல் நகங்களாலேயே, தூணில் இருந்து தோன்றி, ஹிரண்யனை அழித்தார், தன் பக்தர்கள் மேல் கருணை உள்ளம் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்த நாராயணன். அதன் பின் பிரகலாதனின் பிரார்த்தனையை ஏற்று யோக நிலைக்குச் சென்றார் நரசிம்ம பெருமான்.
திருக்கோயில் அமைப்பு: திருக்கோயிலின் திருவாசலான ராஜகோபுரத்தில் ஐந்து நிலைகள் உள்ளன. ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லக்ஷ்மி வராகர், சயனக் கோலத்தில் ரெங்கநாதர், ஸ்ரீ மகாலட்சுமி, கீதா உபதேசக் காட்சிகள், ஹனுமனது இதயக் கோவிலில் சீதாராமர், ஹிரண்யவதம், ராமாயணக் காட்சிகள், ஆஞ்சநேயர் சூடாமணி தருவது, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், கண்ணன் உரிப்பானை உடைப்பது, லக்ஷ்மி நரசிம்மர் என நூற்றுக்கணக்கான சுதைச் சிற்பங்களின் வண்ண விளையாட்டு கோபுரத்தின் முழுவதும் வடிக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுரம் 85 அடியில் காணப்படுகிறது.
திருக்கோயில் உள்ளே, ஏகாதசி மண்டபம், கருடாழ்வார் சன்னதி, சமூக சீர்திருத்தத்தை பல்லாயிரம் வருடங்கள் முன்பாகவே கொண்டு வந்த ராமானுஜரின் சன்னதி, இவரது குருவான திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதி, திருவந்திக் காப்பு மண்டபம், திருக்கல்யாண மண்டபம், தாண்டி சிற்பங்களின் திருக்காட்சி. மகாலட்சுமி, கிருஷ்ணர், கள்ளழகர், ரதி தேவி, ஸ்ரீ ராமரிடம் கணையாழி பெறும் ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம், அபய வரதம் தாங்கிய ஹனுமான், வீர ஆஞ்சநேயர், மார்கண்டேயர் சிவலிங்க ஆராதனை, வீரபத்திரர், பிச்சாடனர், பைரவர், போர்பயிற்சி சிலைகள் என இன்னும் எத்தனையோ எண்ணிலடங்கா சிற்பங்கள்.
ஒரே திருக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அமைந்துள்ள சிறப்பு பெற்ற திருக்கோயில். ஆகம முறைப்படி, ஆவுடையாரின் உயரத்திற்கும் குறைவாக லிங்கம் வடிக்கப் பட்டிருந்தால் சயன கோலம் என்றும், ஆவுடையார் உயரத்திற்கு சமமாக இருந்தால், அமர்ந்த திருக்கோலம் என்றும், ஆவுடையாரை விட உயரமாக லிங்கம் வடிக்கப் பெற்றிருந்தால், நின்ற திருக்கோலம் என்றும் பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. அதனாலேயே இக்கோயில் சிவன், அதே கோவில் மூலவர் மாதவ பெருமாள் சயன கோலத்தில் அமைந்துள்ளது போல சயன கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.
மகா மண்டபத்தில் பிள்ளையார், கையில் வேலுடன் சுப்பிரமணியர், நந்திகேஸ்வரர் என நிறைய சுவாமி உருவங்கள் காட்சி தருகின்றன. மேலும் இராமாயணத்தில், இராவணனின் இளைய மகன் அட்சயகுமாரன், தேவாந்தகன், நராந்தகன், ஆகியோரை வெற்றிகொண்ட, ஹனுமான் விஜய ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். பன்னிரு ஆழ்வார்களின் சன்னதியும் உள்ளது.
இத்திருக்கோயிலின் சிறப்பு அமைப்பு: 96 வகையான விமான அமைப்புகள், திவ்ய தேசங்களில் அமைக்கப் படுவது வழக்கம். இத்திருக்கோயிலின் விமானம் அஷ்டாங்க திவ்ய விமானம் என அழைக்கப்படுகிறது. இந்த விமானம், கீழ்த்தளம் மட்டுமல்லாமல், மேல்தளம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. கோவிலின் கருவறையில் மூலவர் ஸ்ரீ மாதவ பெருமாள் சயன கோலத்திலும், இரண்டாம் தளத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ உபேந்திர நாராயணன் என்ற திருப் பெயரிலும், மூன்றாம் தளத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதராகவும் காட்சி தருகிறார் பெருமாள். இவை அனைத்திற்கும் மேல் எண்கோண அடித்தளத்துடன் தங்கஸ்தூபி அமைந்துள்ளது. இது கீழிருந்து 96 அடி உயரத்தில் உள்ளது.
இத்திருக்கோயில் விமான தரிசனம் படி ஏறிச் சென்று எல்லோரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. கோபுரத்தின் எல்லா அடுக்குகளையும் தரிசிக்கலாம். எல்லா பெருமாள் கோயில்களிலும் வருடத்தில் ஒரு முறை தான் பரமபத வாசல் தரிசனம். ஆனால் இத்திருக்கோவிலில் மூன்றாம் அடுக்கில் அமைந்துள்ள ஸ்ரீ பரமபத நாதர் தரிசனத்தால் தினம் தோறும் சொர்கவாசல் திறப்புதான்.
இத்திருக்கோயிலில் கிழக்குநோக்கிய கருவறையின் வாசலில் கூத்தாடும் நிலையில் நர்த்தனக் கண்ணன் சத்யபாமா, ருக்மணியுடன் காட்சி தருகிறார். இதன்மூலம் பெருமாள் இத்தலத்தில் நடன, சயன, அமர்ந்த, நின்ற என நான்கு கோலத்தில் காட்சி தருவது இத்திருக்கோயிலின் மிகப்பெரும் சிறப்பு.
மேலும் இங்கே தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி, மஹா சுதர்சனர் போன்ற சன்னதிகளும் உள்ளன.
இத்திருக்கோயிலின் சிறப்பு: ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தினை உலக மக்கள் அனைவருக்கும் தந்தருளிய தலம் இந்த திருக்கோட்டியூர் திருத்தலம். இத்திரு மந்திரத்தை தெரிந்து கொள்ள ஸ்ரீரங்கத்தில் இருந்து பதினெட்டு முறை நடந்தே திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண இவ்வூருக்கு வந்து சென்றார் ராமனுஜர்பெருமான். பதினெட்டாவது முறை சீடனது பொறுமையைக் கண்டு மகிழிச்சி அடைந்த குரு, இக்கோயில் நரசிம்மர் சன்னதி முன்பாக, இந்த திருமந்திரத்தை, திருக்கோட்டியூர் நம்பிகள், தனது வம்சத்தினருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் இதனை உனக்கு சொல்லி அருளுகிறேன், நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் உன் மண்டை வெடித்து, நீ நரகம் செல்வாய் என ராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு திரு மந்திரத்தை ஓதினார். அவ்வாறு ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தை தெரிந்து கொண்டு அடுத்த கணமே, இத்திருக்கோயில் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டு, அந்த ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்தார். மக்களே, "ஓம் நமோ நாராயணா" என அனைவரும் மனதார கூறுங்கள். நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்லலாம் என கூறலானார்.
இதனை கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் ராமனுஜரிடம் வந்து, எனக்கு செய்வித்த சத்தியத்தை மீறி, நீ இதுபோல செய்யலாமா எனக் கேட்டார். நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. இம்மந்திரம் சொல்லும் மானிடர்கள் அனைவரும் சொர்க்கம் சென்றாலே எனக்கு சந்தோஷம், எனக் கூறியதைக் கேட்டதும், ராமானுஜரை தழுவிக் கொண்டு, எங்கள் எல்லோருக்கும் மேலானவர் நீ எனப் போற்றி, எம்பெருமானார் என வாழ்த்தி அருளினார். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லாமை வேண்டும், என்ற உயரிய கருத்தை உருவாக்கிய, உயர்ந்த உள்ளம் கொண்டவர் ராமானுஜர்.
திருக்கோயில் விழாக்கள்: சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம், வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா, கஜேந்திர மோட்ச உற்சவம், ஆடி மாதத்தில் ஆண்டாள் பிரமோற்சவம், ஆவணி மாதத்தில் ஸ்ரீபவித்ர உற்சவம், ஸ்ரீ ஜெயந்தி விழா, புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம், கார்த்திகை மாதம் பல்லக்கு பவனி, மார்கழி மாதம் பகல்பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தைலக்காப்பு திருவிழா, ஆண்டாள் திருக் கல்யாணம், மாசி மதம் மாசி பிரமோற்சவம், பங்குனி மாதத்தில் தாயார் பெருமாளுடன் ஊஞ்சல் உற்சவம் காணும் விழா என வருடம் முழுக்க இக்கோயிலில் விழாக்கள்தான்.
திருக்கோட்டியூர் சென்றால் பரமபதம் அடையலாம் என்பது நம்பிக்கை.
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின் வெல்லாம் நிலம் தரம் செய்யும் நெல்விதம் பகுளும் அருளொடு பெருநில மளிக்கும் வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"!!
திருக்கோட்டியூர் திவ்ய நாமம்: நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாமங் கையால் தொழுதும் நன்நெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தன்துழாய் கண்ணனையே காண்க நம்கண் ! - பேயாழ்வார்
எமக்கென்றிறு நிதியம் ஏமாந்திராதே தமக்கென்றும் சார்வமறிந்து நமக்கென்றும் மாதவனே யென்னும் மனம் படைத்து மற்றவன்பேர் ஓதுவதே நாவினால் ஓத்து என்று மானிட ! - பூதத்தாழ்வார்
வேதம் ஓதுவது நன்று. அது இயலவில்லை எனில், மாதவனின் பெயரைச் சொன்னாலே வேதம் ஒதுவதர்க்குச் சமம் என்பது ஆழ்வார்களின் நம்பிக்கை.