Friday, April 13, 2012


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.


திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

திருக்கோயில் அமைவிடம்:
பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், சாலியமங்கலத்தில் இருந்து 10 km தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.

திருக்கோயில் குறிப்பு:
தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)
தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)
தல விருட்சம்: முல்லைக்கொடி
தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)


இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். திருநாவுக்கரசர் மேலும் இவ்விறைவனை தனது அன்பின் பக்தியின் மிகுதியால் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி, எட்டுருவ மூர்த்தி என்றும் தனது பாடல்கள் மூலம் போற்றிப் புகழ்கிறார்.

திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.

கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.


இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.

பழைய தலவரலாறு:
பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.


திருக்கோயில் அமைப்பு:
திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:
1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.
2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.
3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.
4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.
5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.

திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,
தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்

இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


இராசகோபுரத்தினை வணங்கி உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது நடவான மண்டபமும், வசந்த மண்டபமும்தான். அதன் பின் உட்கோபுரம் இரண்டாம் கோபுரத்தினை அடைந்து உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரத்தில் சுவாமி சன்னதியும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் அமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும், ஒரு மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:
சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:
இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!!


திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்:
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

22 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!!

அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

இனிய தமிழ்ப்புத்தாண்டு நந்தன நல்வாழ்த்துகள்

கோமதி அரசு said...

திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்

பகிர்வுக்கு நன்றி புவனேஸ்வரி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. எனக்கு இந்த கோயிலில் இருந்து எண்ணெய் வரவழைத்து தந்தாங்க. சுகப்பிரசவம் தான் ஆனது. 2010 அக்டோபரில் கருகாத்த நாயகியையும், முல்லைவனநாதரையும் சென்று தரிசித்து வந்தோம்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@இராஜராஜேஸ்வரி....

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு.....

மிக்க நன்றி கோமதியம்மா. உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழத்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஸாதிகா....

உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி.....

உங்களது இனிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து
கொண்டமைக்கு மிக்க நன்றி ஆதி வெங்கட். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பிரகாசம் said...

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியமைக்கு நன்றிகள். குழந்தை இல்லாதவர்களுக்கு நெய்யும் கருவுற்ற பெண்களுக்கும் விளக்கெண்ணையும் பூஜித்துத் தருகிறார்கள். எனது இரண்டு மகள்களுக்கும் இங்கு வேண்டி சுகப்பிரசவத்தில் குழைந்தைப்பேறு பெற்றார்கள்.

Anonymous said...

திருகருகாவூர் பற்றி கொஞ்சம்தான் தெரியும். இப்பொழுது இந்த பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். அழகான படங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும் என்று மனதில் குறித்து வைத்து கொண்டிருக்கும் கோவிலில் இந்த கோவிலும் இருக்கிறது. என் பெரியம்மா பெண் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு பிறந்ததால் அவளுக்கு 'கர்பரக்ஷை' என்றே பெயர். பிரசவம் சுலபமாக ஆகவேண்டி இந்த அம்மன் பெயரில் ஒரு சுலோகம் இருக்கிறது. கர்பிணி பெண்கள் பிரசவ ஆகும்வரை இந்த சுலோகம் சொன்னால் மிகவும் நல்லது என்பார்கள்.
சமீபத்தில்தான் உங்கள் பதிவு அறிமுகம். தாராசுரம் கோவிலை பற்றி பிரமாதமாக எழுதி இருந்தீர்கள். திருவெண்காடு கோவில் பற்றி நீங்கள் எழுதி இருக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். அங்குள்ள ஈஸ்வரனின் பெயரும், அந்த கோவிலும் அவ்வளவு அழகு. ஒரு முறை சென்றிருக்கிறேன். நான் மிகவும் ரசித்த கோவில் இது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@பிரகாசம்....

தங்களது வாழ்க்கை அனுபவத்தையும்,அழகிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மீனாக்ஷி.....

தங்களது அருமையான தகவலுக்கும்,வருகைக்கும்
மிக்க நன்றி மீனாக்ஷி. திருவெண்காடு திருக்கோயில்
பற்றி விரைவில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
நன்றி.

அப்பாதுரை said...

ஆளைக்காணோமேனு பார்த்தேன்.. திடீர்னு திருக்கருகாவூர்! மிஸ் பண்ணிட்னே?!
எங்கம்மாவோட பூர்வீக ஊர். நிறைய சுத்தியிருக்கேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை......

ரொம்ப சந்தோஷம் அப்பாதுரை சார். அம்மாவின்
சொந்த ஊர் என்றாலே நமக்கெல்லாம் கொஞ்சம்
ஸ்பெஷல் தானே. மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியமைக்கு நன்றிகள்.

Vikis Kitchen said...

நல்ல பதிவு புவனா. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan....

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காஞ்சனா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Vikis Kitchen.....

மிக்க நன்றி விக்கி.

மாதேவி said...

முல்லைவனமாக இருந்த அழகிய கோயில் மணம் கமழ்கின்றது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி...

தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி
மாதேவி.

Unknown said...

கர்ப்பரட்சாம்பிகை அம்மா தாயே

ஈஸ்வரா

புவனேஸ்வரி ராமநாதன் said...

@வடுவூர் விநாயகமூர்த்தி பெத்தபெருமாள்.....

தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

Post a Comment

Related Posts with Thumbnails