Friday, April 27, 2012


தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.


வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே!!
நம்மாழ்வார்

திருக்கோயில் அமைவிடம்:
இந்த தென்திருப்பேரை திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.


வருணன் பாசம் பெற்ற வரலாறு:
ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.


இத்திருக்கோயிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108 அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.

மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வது அந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வழக்கில் உள்ள கூற்று. இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.


அதைசாகி வையமுழுதாண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசாரும்
தென் திருப்பேரைப் பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப் பேரைப்பதியாதார்!!
108 திருப்பதி அந்தாதி

22 comments:

சீனு said...

அருமையான பதிவு இத்தளம் பற்றிய பல அறிய தகவல்கள் அறியப் பெற்றேன். பகிர்வுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

@சீனு....

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சீனு.

Madhavan Srinivasagopalan said...

உங்கள் திருத்தல பதிவுகள் உடலிற்கு புத்துயிருவும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது..

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan...

எல்லாம் கடவுள் செயல். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மன்னை மைந்தரே.

கோமதி அரசு said...

கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வழக்கில் உள்ள கூற்று. இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.//

முகில் வண்ணன் ஈடு இணையில்லாத அழகை உடையவன் தான். என்ன அழகு என்ன அழகு!
அவ் ஊர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் உண்மை.

ADHI VENKAT said...

அருமையான பகிர்வு. நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு...

ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி...

மிக்க நன்றி ஆதிவெங்கட்.

Menaga Sathia said...

நீண்ட நாள் கழித்து அருமையான பதிவு,இத்திருத்தலம் பற்றி அறிந்துக்கொண்டேன்,மிக்க நன்றிங்க...

பால கணேஷ் said...

மகர நெடுங்குழைக் காதர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதுண்டு. எங்கே என்று தெரியாது. இன்று உங்களால் தெரிந்து கொண்டதுடன், இந்த இறைவன் பற்றிய பல சுவாரஸ்யமான புராண சம்பவங்களையும் அறிந்து மகிழ்ந்தேன். அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு. அடுத்த முறை நெல்லை சென்றால் அவசியம் சென்று தரிசித்து வருவேன். நன்றிகள் பல உங்களுக்கு!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga...

மிக்க நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கணேஷ்...

கண்டிப்பாக சென்றுவாருங்கள் கணேஷ் சார்.
வருகைக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

எங்கள் ஊருக்குப் பக்கம்தான். அருமையான பகிர்வு. மேலும் தொடருங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி...

ரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி.
வரவிற்கு மிக்க நன்றி.

பால கணேஷ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவைக குறிப்பிட்டுள்ளேன். சமயம் கிடைக்கும்போது வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

அப்பாதுரை said...

படங்களின் பளிச் ஈர்க்கிறது. கிளைக் கதைகள் சுவாரசியம். பூமாதேவி ஸ்ரீதேவியை விட அழகு என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கணேஷ்...

என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி கணேஷ் சார்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை...

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
அப்பாதுரை சார்.

arul said...

arumai

புவனேஸ்வரி ராமநாதன் said...

@arul...

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி அருள்.

மாதேவி said...

தலம் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டோம். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி.....

மிக்க நன்றி மாதேவி.

Post a Comment

Related Posts with Thumbnails