Thursday, November 25, 2010


நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்.

பொன்கொண்ட மலர்அயனும் நெடுமாலும்
அமரர்களும் புகழ்ந்து போற்ற
மின்கொண்ட மருங்குமையாள் இடம்பயில்
நடம்புரியும் விமல மேலோன்
கொன்கொண்ட ஐங்கரனும் அறுமுகனும்
புடைசூழுங் கோமான் எம்மான்
மன்கொண்ட நெல்வேலி நாதன் இரு
பாதமலர் மனத்துள் வைப்பாம்!!!


என வேணுவன புராணத்தில் நெல்வேலி நாதரைப் பற்றியும்,

ஏர்கொண்ட நெல்லை நகர் இடங்கொண்டு
வலங்கொண்டங் கிறைஞ்சு வோர்கள்
சீர்கொண்ட தன்னுருவும் பரனுருவும்
விளங்க அருள்செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும் வேய்ஈன்ற
முத்தைமிக விரும்பிப் பூணும்
வார்கொண்ட கபளமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வாம்!!!


என வேணுவன புராணத்தில் காந்திமதி அம்மனைக் குறித்தும் பாடப்பட்டுள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் நெல்லை பூமிக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்பதால் வயல்வெளிகள் செழிப்போடு காட்சி அளிக்கின்றன. இவ்வூர் மக்கள் பேசும் நெல்லைத் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர்களது தமிழிலும் சரி, பேச்சு நடையிலும் சரி அன்பு இழையோடுகிறது. அன்பு மட்டுமல்ல வீரம் விளைந்த மண்ணும் கூடத்தான். நம் நாட்டில் நிறைய இரட்டை நகரங்கள் உள்ளன. அவற்றுள் பெருமை மிகு திருநெல்வேலியும் ஒன்று. பாளையங்கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாக திகழ்வது கூடுதல் பெருமை.

இத்திருநெல்வேலி நகரம் சிவபிரான் ஆட்சி செய்யும் திருக்குற்றாலத்திற்கு கிழக்கு திசையிலும், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு தெற்கு திசையிலும், ஆறுமுகன், வேல்முருகன் ஆட்சி செய்யும் திருச்செந்தூருக்கு மேற்கு திசையிலும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரியை அடுத்த சுசீந்திரத்திற்கு வடக்கு திசையிலும் அமையப் பெற்றுள்ளதாக நெல்லை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 km தொலைவிலும், மதுரையில் இருந்து 154 km தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்வாவிற்கும் புகழ் கொண்டதல்லவா? இந்த அல்வா கிடைக்கும் இருட்டுக் கடை கூட இத்திருக்கோயிலின் எதிரே தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காந்திமதி அம்மனுக்கும், நெல்லையப்பருக்கும் என இரு தனித்தனி கோயில்களாக அமைந்துள்ளன.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நெல்லையப்பர் (வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)
தல இறைவி : காந்திமதி அம்மை (வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)
தல விருட்சம் : மூங்கில்
தல தீர்த்தம் : மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.


திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென்காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது. சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றி பாடப்பட்டுள்ளன.

நான்கு வேதங்களும் சிவபிரானிடம், ஈசனின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் வேண்டும் எனக் கேட்க, அதன்படியே இறைவன், தான் நடனம் புரியும் இருபத்தியோரு திருத்தலங்களில் தென்காஞ்சி எனப்படும் திருநெல்வேலியில், மூங்கில் மரங்களாய் வேதங்கள் தோன்ற லிங்க உருவில் சிவன் அருள்பாலிக்கிறார்.


ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து
பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேரே சென்றால் நெல்வேலி நாதரை வழிபடலாம். பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை

என இந்த வரிசையில்,
5. திருநெல்வேலி - தாமிரசபை
அமைந்துள்ளது.


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை


அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.


அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இருந்து நமக்குத் தெரிய வரும் விஷயம் திருநெல்வேலி மாநகரம் அக்காலத்தில் இருந்தே சீரும் சிறப்புமாக விளங்கியுள்ளது என்பது. மதுரை நாயக்க மன்னர் தனது ஆட்சிகாலத்தில் தங்களது தெற்கு பிராந்தியப் பகுதிகளுக்கு திருநெல்வேலியையே தலை நகராகக் கொண்டிருந்தனர். நவாப் ஆட்சி காலத்திலும் திருநெல்வேலி தலைநகரமாக விளங்கியுள்ளது.

இத்திருக்கோயில் வேணுவன நாதரின் திருவிளையாடல்கள்:
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார்.

திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்:
முன்னொரு காலத்தில் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடினர். வேதசன்மா என்னும் சிவனடியாரிடம் அவரது பக்திக்கு இணங்கி, "நீ, நான் குடியிருக்கும் நெல்லை நகருக்கு வந்தால் உன் துயர் நீங்கும்", எனக் கட்டளை இட்டார் ஈசன். அவ்வண்ணமே அங்கு சென்றார் வேதசன்மா. அவ்வாறு வந்த சிவனடியாருக்கு இறைவன் நிறைய செல்வங்களை வழங்கினார். அதுமுதல் நாடு செழிப்புடன் விளங்கியது. தன்னிடம் இருந்த நெல்லைக் கொண்டு நாள்தோறும் இறைவனுக்கு பூஜை செய்து அமுது படைத்தார் வேதசன்மா. பஞ்ச காலத்தில் தனது அடியவரை சோதிக்க நினைத்தார் சிவபிரான். தான் வைத்திருந்த நெல் அனைத்தும் அமுது படைத்து தீர்ந்து போன நிலையில் அன்றைய பொழுதிற்கு மட்டும் மீதம் வைத்திருந்தார் வேதசன்மா.

பொருநை நதியில் நீராடிவிட்டு வந்து இறைவனுக்கு உணவு படைக்கலாம் என நினைத்து, அந்த நெல்லினை உலர வைத்துவிட்டு நீராடச் சென்றார் அடியவர். அந்த நேரத்தில் இறைவன் பெருமழையினைப் பொழியச் செய்தார். இதனைக் கண்ட வேதசன்மா ஒரு நாளைக்கு மட்டுமே மீதம் இருந்த நெல் இந்த மழையில் நனைந்தால் ஈசனுக்கு அமுது படைக்க முடியாதே என வேகமாக வந்து காய வைத்த நெல்லை அள்ள முயல, அவர் கண்ட அதிசயக் காட்சி இறைவனின் பேராற்றலை அவருக்கு உணர்த்தியது. சுற்றி மழை பெய்து கொண்டிருக்க நெல் காயும் இடத்தில் மட்டும் வேலி இட்டது போல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட சிவனடியாரும், அந்நாட்டு மன்னரும் வேணுவன நாதரின் தாள் பணிந்தனர். அன்று முதல் வேணுவன நாதர், நெல்வேலி நாதர் என்ற திருநாமத்துடனும் விளங்கினார்.

இத்திருக்கோயிலில் நிகழ்ந்த மற்றொரு திருவிளையாடல் சுவேதகேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல். இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென் கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலி நாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்ற சீர் நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல், என பல்வேறு திருவிளையாடல்களை இத்தலத்தில் புரிந்துள்ளார் இறைவன்.

திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

இத்திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடி பெருமை கொண்டுள்ளனர். நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் நாட்டு திருக்கோயில்களின் சிறப்பம்சமான சிற்ப வேலைப்பாடுகள் இத்திருக்கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்றன. திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.


உள்ளே சென்றால் கொடிமரத்தின் முன்னே நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.


தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு.









ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


போர்காட்சியை கண்முன்னே நிறுத்தும் புடைப்புச் சிற்பம்.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


மல்யுத்த வீரர்கள் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி அப்படியே சாளர வடிவத்தில். மேல் புறம் ஒரு தலை, கீழ்புறம் ஒரு தலை வடிவம். ஒருவரது ஒரு காலால் மற்றவரது காலினையும், கையினால், கையினையும், துளி கூட நகர முடியாத அளவிற்கு கால் கைகளாலேயே கிடுக்கி பிடி பிடித்திருக்கும் மல்யுத்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பக் காட்சி.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


அக்காலத்திய சிவனடியார்களின் தோற்றத்தினை அப்படியே நம் கண் முன் காட்டும் சிலை வடிவம். தலையைச் சுற்றிய உத்திராட்ச மாலை. கழுத்தில் அணிந்திருக்கும் மாலையின் வடிவம் அனைத்தும் வடிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் வரிசையாக நீண்ட தூண்களை படுக்கை வாக்கில் அடுக்கியது போன்ற அமைப்பு.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் எத்தனை அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இக்கோயிலில் அமையப் பெற்றுள்ள சிற்பங்களைக் காண ஒரு நாள் போதாது.


திருக்கோயிலில் உள்ளே மட்டுமல்லாது வாயிற் கதவுகளில் கூட அழகிய சிற்ப வடிவங்கள்.


நிலைக் கதவுகள் உயரமாகவும், கலை வண்ணத்துடன் காட்சி தருவது, எங்கு திரும்பினாலும், கோயிலுக்குள் எங்கு சென்றாலும் அங்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு சிற்ப வடிவத்தை கண்டாகவேண்டிய அளவிற்கு கணக்கிலடங்கா சிற்பங்கள்.

****************

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:
மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***

28 comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா, எங்கள் ஊர் கோவிலை அற்புதமாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் தல புராணத்துடனும், விளக்கங்கள் படங்களுடனும். மிக்க நன்றி புவனேஸ்வரி.

கடந்த விஜயத்தின் போது நான் எடுத்த புகைப்படங்களுடனான இடுகையே எனது அடுத்த புகைப்படப் பதிவாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது draft-ல். ஒருசில சிலைகளில் இருப்பது யார் என்ற எனது சந்தேகத்தைத் தனிமடலில் தீர்த்து வைத்ததற்கும் இங்கு என் நன்றிகள்:)!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேடம். தங்களின் நெல்லையப்பர் கோவில் புகைப்படப் பதிவைக் காண ஆவலாக உள்ளேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஐயா.

Menaga Sathia said...

ஆஹா அருமை,கோயிலுக்கே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு..படங்கள் அழகு!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி மேனகா.

Chitra said...

எங்க ஊரு...... ரொம்ப நன்றிங்க..... ரசித்தேன்.

Vikis Kitchen said...

Thanks madam. Appreciate your efforts in bringing out the real charm of Nellaiappar temple. ஒவ்வொரு புகைப்படமும் அருமை . இந்த கோவில் ஒரு அருங்காட்சியகம் போன்றது. ஒவ்வொரு சிலையும் ஒரு கதை சொல்லும், ஒரு வேளை என் ஊர் என்பதால் அப்படி நினைத்தேன் என்றிருந்தேன். ஆனால் உங்கள் பதிவு பார்த்த பின் இன்னும் அழகாக தோன்றுகிறது. அம்மா கை பிடித்து நடந்த உணர்வு , இக்கோவிலை பற்றி வாசித்தபோது:) பழைய ஞாபகம் , முழுவதும் பார்க்க ஒரு நாள் போதாது . இந்த பதிவை என் friends kku காட்டப் போகிறேன், என் ஊர் , நான் போய் வந்த கோவிலென்று:) திருக்கல்யாணம் ரொம்ப சிறப்பாக செய்வார்கள். விடுமுறை போது , இங்கு போய் சாமி கும்பிட ஆசையை தூண்டி விட்டீர்கள் :) I like the way they care their elephant. Everyday is a festive day there, as you said:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Viki's Kitchen,
இப்பதிவு உங்கள் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது என்பதில் மிகுந்த சந்தோஷம். மிக்க நன்றி விக்கி.

KANA VARO said...

அருமை! பகிர்வுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

மிக நீண்ட பதிவு. அம்மாடி. படிக்க, முடிக்க, மூச்சு வாங்குது.
ஆனாலும் ஆன்மீக பதிவு. நல்லா வந்திருக்கு.
புகைப்படங்கள் நல்லா இருக்கு.
உங்களின் ரசிப்புத்தன்மை ரசிக்க வைக்கிறது.

எனக்கொரு கவலை:
தென்னிந்தியாவின் பல பழங்கால கோயில்கள் கேட்பாரற்று கவனிக்க ஆளில்லாமல்....
எவ்விதமான பராமரிப்பும் இல்லாமல் கிடக்கிறது. அவற்றை நாம் புனரமைத்து சீராக பராமரிக்கலாம்.
புதிதாய் புனிதம் இல்லாமல் கோயில் கட்டுவதை விட சாஸ்திர முறைப்படி அமைந்த அக்காலத்தில் மிகசிறப்பாக இருந்த கோயில்களையும் அவற்றின் குளங்களையும் ( முக்கியமாக ) பராமரித்தால் நமக்கு நன்மைகள் உண்டு.
ஏதாவது செய்ய முடியுமா பார்ப்போம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சரியாகச் சொன்னீர்கள். பழங்கால கோயில்களையும் சிற்பங்களையும் பாதுகாத்தல் மற்றும் குளங்களை பராமரித்தல் மிக அவசியம். பொறுமையாக படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தமிழ்க் காதலன்.

Geetha6 said...

அருமை madam.
good information!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கீதா.

விஜய் said...

தகவல்களுக்கும் அழகு படங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சகோ.

R.Gopi said...

அட.... ராமலஷ்மி நெல்லையை சேர்ந்தவரா? பெங்களூர் க்ளைமேட் எப்படி இருக்கு மேடம்?

புவனா மேடம்...

இந்த பதிவில் புகைப்படங்களை நேர்த்தியாக இணைத்தமை பாராட்டுக்குறியது.... குறிப்பாக இந்த நீளளளளமாமாமானனனனன பதிவுக்காக நீங்கள் செலவிட்டு இருக்கும் நேரத்திற்காக ஒரு ஸ்பெஷல் சல்யூட்....

மிக மிக அருமை....

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோபி.

ராமலக்ஷ்மி said...

@ R. கோபி,

நெல்லையில் இருக்கும் யாருடன் பேசினாலும், கடந்த சிலநாட்களாக அங்குள்ள வெதர், ‘பெங்களூரைப் போல ரொம்பக் குளிராக உள்ளது’ என்கிறார்கள்:))!

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

மதார் said...

எத்தனை முறை நேரில் பார்த்திருந்தாலும் மறுபடியும் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி எங்க ஊர் கோயில் என்னை மறுபடியும் அங்கேயே போய் நேரில் பார்த்த அனுபவம் .

புவனேஸ்வரி ராமநாதன் said...

@செந்தழல் ரவி.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மதார்,
ரொம்ப சந்தோஷம் மதார். மிக்க நன்றி.

uma said...

yenga uur than aanal yenna pandrathu pengal yendrale pirantha idam sonthamillai inimel yenkku kumpakonam than sontha idam

புவனேஸ்வரி ராமநாதன் said...

சரியாச் சொன்னீங்க உமா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனாலும் நாம்
பிறந்த ஊரை மறக்க முடியாது இல்லையா. மிக்க நன்றி உமா.

Anonymous said...

Vannakam, this is P.srinivasan. from Pondicherry,SouthIndia. Your Blog and Photos are Marvelous, super,Miracle,Extra-ordinary. It creates a small tour to tamil temples.

புவனேஸ்வரி ராமநாதன் said...


தங்களது கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

Post a Comment

Related Posts with Thumbnails