இன்று மஹாளய அமாவாசை எனப்படும் புண்ணியதினம். மஹாளய பட்சம் என்றும், பித்ரு பட்சம் என்றும் அழைக்கப்படும் மஹாளய புண்ணிய காலம் 15 தினங்கள். இந்த மஹாளய பட்ச காலத்தில் செய்யப்படும் பித்ரு பூஜைகளை நம் முன்னோர்கள் நம்முடன் வந்து இருந்து நேரில் பெற்றுச்செல்வதாக நம்பிக்கை, ஐதீகம்.
நாம் நமது குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்கள் உண்மையிலேயே நிரந்தர சொத்துக்கள் இல்லை. நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் மட்டுமே நமது குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து. நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் நமது குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு நன்மையை உண்டாக்குகிறது என்பதைப் பற்றி சில சான்றோர்கள் மூலம் அறிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்துவைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோயிலில் தீபம் ஏற்றி வைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அன்னதானம் செய்வது 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பித்ரு பூஜை செய்ய உதவுதலுக்கு 6 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோயில்களுக்கு புனர்நிர்மாணம் செய்விப்பதற்கு 7 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திமக்கிரியை செய்வித்தல் 9 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. இவற்றைப் போலவே, முன்னோர்களுக்கு கயா க்ஷேத்திரத்தில் திதி பூஜை செய்தல் 21 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.
நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது இந்த பித்ரு பூஜை. அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கூட நாம் இது போன்ற விஷயங்களை செய்யலாம். மஹாளய அமாவாசை என்கிற இந்த புண்ணிய நாளில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களது நல்லாசியினைப் பெறுவோம்.
இந்த மஹாளய அமாவாசை தினத்தன்று திலதர்ப்பணபுரி திருக்கோயிலை தரிசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
திருத்தலம் அமைவிடம்:
இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்)
தல இறைவி: சொர்ணவல்லி (பொற்கொடி)
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தார மரம்
தல வரலாறு:
திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.
இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து செல்லும்போது ஜடாயு என்ற பறவை, இராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லெட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. அதே நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார். அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீ ராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு ஸ்தலம் ஆகியது.
கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒரு நாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த ஸ்தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார். அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றனரோ, அந்தத் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.
திருத்தலப் பெருமை:
திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும்போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதி விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுக விநாயகர், மனித முக விநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.
திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார். நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சுவாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைப் பாடுகளுடனும், அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன. கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முக்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது.
சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார். அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தார மரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார். சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ராமர் தர்ப்பணம் செய்யும் காட்சி, நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம் .
இக்கோயிலில் மஹாளய பட்சமாகிய 15 நாட்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப் படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலெட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோயில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோயிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.
****************
திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பாடல்:
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே !!
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே !!
அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக உண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே !!
கங்கைதிங்கள் வன்னிதுன் நெருக்கின்னொடு கூவிளம்
வெங்கணாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப் பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்தழகார் மதிமுத்தமே !!
புரவியேழும் மணிபூண்டு இயங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே !!
விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந்து அருள்பேண நின்றம் மதிமுத்தமே !!
ஆறுசூடி அடையார்புரம் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனல்அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே !!
கடுத்துவந்த கனல்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோர் அடர்த்தார்க்கு இடமாவது
புடைக்கொள் பூகத்து இளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளும் திலதைம் மதிமுத்தமே !!
படங்கொள்நாகத் தணையானும் பைந்தா மறையின்மிசை
இடங்கொள்நால்வே தனும்ஏத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே !!
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர் சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே !!
மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேல்
கந்தமாரும் கடற்காழி யுளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே !!
திருச்சிற்றம்பலம் !!!!!
12 comments:
நல்ல பதிவு ..!நன்றி..!
எங்க ஊர் கோயில் பத்தி இங்கே ஒரு
பதிவு http://pirathipalippu.blogspot.com/2009/05/blog-post.html
வினைகள் தீர்க்கும் விநாயகனே
நன்றி தமிழ் அமுதன். உங்கள் ஊர் கோயில் பற்றிய பதிவு மிக்க நன்று.
ஆம் nis.
பகிர்வுக்கு நன்றிங்க!! இப்போழுதுதான் இத்திருத்தலத்தை அறிகிறேன்..இந்த கோயில் எந்த ஊருக்கு அருகில் இருக்கு??
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது இக்கோயில். நன்றி மேனகா.
அருமையாக இருக்கிறது.
நன்றி சித்ரா.
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். மஹாளய அமாவாசை அன்று இந்தப் பதிவு மிகப் பொருத்தம்.
நான் கிட்டத்தட்ட ஒரு நூறு திருமுறைத் தலங்களை தரிசித்துள்ளேன். அதைப் பற்றியும் ஒரு தொடர் எழுத எண்ணம் உள்ளது.
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
நல்ல பதிவு. நீத்தார் கடன் எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
அவசியம் நீங்கள் சென்று பார்த்த திருமுறை தலங்களைப் பற்றி எழுதுங்கள். நன்றி கோபி.
super post.
நன்றி வானதி.
Post a Comment