Thursday, July 22, 2010


நெடுங்களநாதர் கோயில்

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

இன்றைய திருக்கோயில் பதிவில் திருநெடுங்களம் என்னும் திருக்கோயிலை தரிசிப்போம்.

கோயில் அமைவிடம்:
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் துவாக்குடி என்ற ஊர் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். துவாக்குடியில் இருந்து 6 km தொலைவில் உள்ளது இந்த திருநெடுங்களம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெடுங்களம் செல்ல பேருந்து வசதி உள்ளது. இந்த நகர வாழ்க்கையின் வாகன நெரிசல், புகை மண்டலமாகிவிட்ட நமது சுற்றுச்சூழல், அமைதியற்ற தன்மை, இவற்றிலிருந்து விடுபட்டு துவாக்குடியில் இரு
ந்து ஆரம்பிக்கும் கிராம சாலையில் பயணித்து, அந்த கிராமத்து சுத்தமான காற்று, அங்குள்ள மரம், செடி, கொடிகளில் இருந்து வீசும் சுகந்தமான மணம், ஆடு, மாடுகள், அமைதியான சூழல் இவற்றைக் கடந்து கோயிலை அடைவதே ஒரு சுகமான அனுபவம்தான்.


திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : நித்தியசுந்தரர் (திருநெடுங்களநாதர்), சுயம்புலிங்கம்
தல இறைவி : ஒப்பிலாநாயகி (மங்களாம்பிகை)
தல
தீர்த்தம் : சுந்தர தீர்த்தம் (அகத்திய தீர்த்தம்)
தல இலக்கியம் : திருநெடுங்கம் பாடல் பெற்ற ஸ்தலமாகும். திருஞானசம்பந்தரின் இடர் களையும் தேவாரப்பாடல், திருப்புகழ், திருவருட்பா போன்றவை இங்கே பாடப்பட்டுள்ளன.


கோயில் கோபுரம் தாண்டி உள்ளே செல்லும்போதே அழகிய தென்னந்தோப்பு நம்மை வரவேற்கிறது. பகலும், இரவும் சந்திக்கும் இனிய அந்தி மாலைப் பொழுது. தாயின் சேலையில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் குழந்தை போல, மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் சிவந்த சூரியன். இந்த அழகிய சூழலில் திருக்கோயில் தரிசனம் ஓர் அற்புத அனுபவம்.


காசி மாநகரத்தில் உள்ளது போல் இத்திருக்கோயிலின் கருவறை மேல் இரண்டு விமானங்கள் அமைந்திருப்பதால் தட்சிண கைலாயம் என்று அழைக்கப் படுகிறது. கோயில்கள் பண்டைய வரலாறுகளை நமக்குக் காட்டுபவை. அதற்கு ஏற்ப சோழர் காலத்திய கலை நயம் மிகுந்த கல் உரல் ஒன்று இங்கு உள்ளது.


வராகிக்கு விரளி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், தடை பட்டு வரும் திருமணங்கள் விரைவில் நடக்கின்றன. அலங்காரப் பிரியர் பெருமாள், அபிஷேகப் பிரியர் சிவன் என்பது சொல் வழக்கு. இதற்கிணங்க, சிவனுக்கு மாதுளம்பழம் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நடக்கும்.


சித்திரை
மற்றும் ஆடி மாதத்தில் சூரிய ஒளி
இத்தல இறைவன் மீது பட்டு, வழிபடுவது ஒரு அற்புத நிகழ்வாகும். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் இயற்றப் பட்ட இடர் களையும் பதிகத்தை நாள்தோறும் படித்து நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள்.

திருஞானசம்பந்தர் அருளிய இடர் களையும் திருப்பதிகம்:
திருநெடுங்களத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு திருஞானசம்பந்தர் இத்திருப்பதிகத்தைப்
பாடியருளினார். பதிகத்தின் பத்து பாடல்களிலும் அடியாரின் இடர்களையுமாறு இறைவனை வேண்டிக்கொண்டதனால் இப்பதிகம் இடர் களையும் திருப்பதிகமாகப் போற்றப்படுகிறது.

மறை உடையாய் தோல் உடையாய் வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(1)

கனைத்து எழுந்த வெண்திரை சூழ்கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(2)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல்கூற்று உதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(3)

மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(4)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(5)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி கங்கையாளைக் கமழ்சடைமேல் கரந்தாய்
அருத்தன் ஆய ஆதி தேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(6)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டி ஓர் வெம் கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(7)

குன்றின் உச்சி மேல் விளங்கும் கோடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அரு வரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(8)

வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(9)

வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
(10)

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே!
(11)

திருச்சிற்றம்பலம்!

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

மிக அற்புதமாக பதிந்து உள்ளீர்கள். போகும் இடம், போகும் முறை, பேருந்து ரயில் தடங்கள் இவைதான் மிகவும் அவசியம்.
நன்றிகள் பல

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ராம்ஜி.

அபி அப்பா said...

அருமை!! பார்க்க தூண்டுகின்றது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி அபி அப்பா.

Menaga Sathia said...

thxs for sharing...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

RVS said...

மிகவும் அருமை. நெடுங்களநாதர் பற்றி பாலகுமாரன் பக்தியிலோ, சக்தியிலோ ஒரு வருடம் முன்பு ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் கூட ஒரு நூறு திருத்தலங்களுக்கு மேல் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதிகளில் தரிசித்திருக்கிறேன். முடிந்தால் பகிர்கிறேன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ். தாங்கள் சென்று பார்த்த தலங்களைப்பற்றி அவசியம் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

R.Gopi said...

எழுத்தாளர் பாலகுமாரன் தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் தான் பார்த்த கோயில்களை பற்றி சிலாகித்து எழுதி இருப்பார்...

உங்களின் இந்த திருநெடுங்களம் நெடுங்களநாதரை பற்றிய ஆன்மீக குறிப்பும் (இப்படி சொல்லலாம் இல்லையா!!??) மிக மிக நன்றாகவும், விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது....

நானே நேரில் சென்று தரிசித்ததை போலுள்ளது...

வாழ்த்துக்கள் புவனா....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நிச்சயமாக சொல்லலாம். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபி.

Post a Comment

Related Posts with Thumbnails