Friday, July 2, 2010


கைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 km தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களை ஒத்துள்ளது. இக்கோயிலின் பழமையாலும், மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை பாதுகாக்கும் நோக்குடனும், இக்கோயிலை அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும்.


கைலாசநாதர் கோயிலின் உள் பிரகாரத்தில் கைலாசநாதர் சன்னதி மட்டுமே உள்ளது. அந்த சன்னதியை சுற்றி வர பாதாளம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய அளவு இடமே அதில் உள்ளது. நாம் தவழ்ந்துதான் அதிலிருந்து வெளியே வரமுடியும். அதற்குள் நுழைந்து நாம் வெளியே வந்தால் நமது பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.


காஞ்சிபுரத்தை ஆயிரம் கோயில்கள் கொண்ட ஊர் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி என்றும், திருவண்ணாமலை என்று மனதில் நினைத்தால் முக்தி என்றும், காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் சொல்வார்கள். இங்குள்ள ஆயிரம் கோயில்களைப் பார்க்கவே நமக்கு வாழ்நாள் முழுதும் ஆகும் அல்லவா? அதனால்தான் அவ்வாறு சொல்கிறார்கள் போல?! அதுமட்டுமல்ல இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும். காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.


இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம், சென்னையிலிருந்து 75 km தொலைவிலும், வேலூரில் இருந்து 65 km தொலைவிலும், வைணவப் பெருந்தகை ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்பதூரில் இருந்து 29 km தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 48 km தொலைவில் உள்ளது.



காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் மற்றும் இங்கிருந்து 7 km தொலைவில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயிலுக்கும் சென்று வரலாம். விஷ்ணு காஞ்சியில் நமது மாண்புமிகு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் வாழ்ந்த இல்லத்தையும் கண்டு வரலாம்.

திருக்கோயில்கள் செல்வோம்! நம் வாழ்வில் திருப்பங்களை உண்டாக்குவோம்!

5 comments:

எல் கே said...

கைலாச நாதர் கோவில் இப்பொழுது கவனிப்பார் இன்றி உள்ளது :(((

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

கிருபாகரன் said...

http://treasuresoftamilnadu.blogspot.com/2010/08/blog-post.html

சமீபத்தில் நான் காஞ்சி சென்று வந்ததை பற்றிய பதிவு

Anonymous said...

”கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன.” சமீபத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேரா. பத்மாவதியுடன் நாங்கள் இக்கோயிலுக்குச் சென்று வந்தோம். உள்ளே இருக்கும் சிற்பங்கள் சுடுமண் சிற்பங்கள் அல்ல. அவை sand rock என்று சொல்லப்படக்கூடிய மண்பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இதே வகை பாறைகளில்தான் மாமல்லபுரம் கடற்கரை கோயிலும் செதுக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லதொரு பயனுள்ள, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா. வருகை தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails