Thursday, January 5, 2012


ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கோட்டியூர்

நகரங்களின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நமக்கு செட்டிநாட்டுப் பக்கம் காரைக்குடிப் பக்கம் செல்லச் செல்ல, பிரம்மாண்டமான வீடுகள், விஸ்தாரமான தெருக்கள், சுத்தமான தண்ணீர் நிறைந்த, நிறைய குளங்கள், எங்கு பார்த்தாலும் விசாலமான பரந்த பூமி, திருக்கோயில் சுற்றுலா முடிந்து அவ்வூர் பகுதியை விட்டு வர மனமே இல்லை. எத்தனை கோயில்கள், அத்தனையும் பெரிது, பேரழகு. கண்ணையும் மனதையும் விட்டு அகலாத காட்சிகள் எல்லாமே. ஒவ்வொரு வீடும் அரண்மனையாய் தெரிவது, அந்நாளைய தமிழன் வாழ்ந்த சிறப்பான வாழ்வின் சுவடுகள், இன்று நம் கண்முன்னே வாய்பேசா சாட்சிகளாய்.

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில், காரைக்குடி அருகே அமைந்துள்ள, ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கோட்டியூர்.


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தல றாயிற்றே எனவும்
- முதலாம் திருமொழி

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்குந் திரிந்து விளையாடும் என் மகன் எனவும்
குளிந்துறைகின்ற கோவிந்தன் கொம்பினார் பொழில் வாழ்
குயிலினம் கோவிந்தன் குணம்பாடும் சீர்
- பெரியாழ்வார்

திருக்கோயில் இருப்பிடம்:
இத்திருக்கோட்டியூர் திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சிவகங்கையில் இருந்து 28 km தொலைவிலும், திருப்புத்தூரில் இருந்து 10 km தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாக திருப்புத்தூரை சென்று அடையலாம். இத்திருத்தலம் காரைக்குடியில் இருந்து 25 km தூரத்திலும் உள்ளது. இத்தலத்தின் அருகாமையிலேயே குருஸ்தலமான பட்டமங்கலம், பைரவர் ஸ்தலமான வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி தென்திருப்பதி, கோவிலூர் சிவன் தலம், சிற்பக் கலையின் சிறப்பை உணர்த்தும் காளையார்கோயில் என, இன்னும் நிறைய திருக்கோயில்களின் அணிவகுப்பு.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள்
தல இறைவி : ஸ்ரீ பூமி நீளா
தல தீர்த்தம் : அமர புஷ்கரணி தீர்த்தம் (திருப்பாற்கடல்)
தல விருட்சம் : பலா மரம், வில்வ மரம்


திருத்தல வரலாறு:
ஆழ்வார்களின் பாசுர அமைப்பின்படி, 108 திவ்ய தேசங்களில் முதலாவதாகவும், பாண்டிநாட்டு திவ்ய தேசங்கள் 18ல் ஒன்றாகவும் திகழ்கிறது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஹிரண்யன் என்ற அசுர அரசன், அனைத்து மக்களையும் இம்சித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யன் தான் செய்த தவத்தின் பலனாக, தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், ஆயுதங்கள் என இவை எவற்றினாலுமோ, இரவிலோ, பகல் நேரத்திலோ, வீட்டின் உள்ளேயோ, வெளியிலோ, தன் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அந்த வரம் தந்த பலத்தினால் எல்லோரையும் துன்புறுத்தினான்.

ஹிரண்யனின் கொற்றத்தை அடக்க தேவர்களுடன், சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் ஒன்றாய்க் கூடி ஆலோசனை செய்தனர். இறைவன் கட்டளைப்படி ஹிரண்யன் மனைவி, வசந்தமாலை என்ற கயாவின் வயிற்றில், பிரகலாதன் பிறந்து, ஸ்ரீமந் நாராயணனின் பரம பக்தனாய் வாழ்ந்தான். அது பொறுக்காத, தானே கடவுள், தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள தனக்கு முன்பாகவே, நாராயண மந்திர ஓதும் தன் மகன் என்றும் பாராமல், பிரகலாதனை கொல்லத் துணிந்தான் ஹிரண்யன். அவ்வேளையில், நாராயணா நாராயணா என்று ஒவ்வொரு நொடியும் நீ அன்புடன் அழைக்கும் உன் கடவுள் நாராயணனைக் காட்டு என ஹிரண்யன், பிரகலாதனிடம் கேட்க, அந்த தெய்வக் குழந்தை, எம்பெருமான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூற கோபம் கொண்ட ஹிரண்யன், தூணை எட்டி உதைத்தான்.

பொறுமை எல்லை கடந்த பெருமாள், மனித உருவும் இல்லாத, மிருக உருவமும் இல்லாத, இரண்டும் கலந்த வடிவத்தில், காலையும் அல்லாத, இரவும் அல்லாத, அந்தி மாலை நேரத்தில், இருப்பிடத்தின் வெளியேயும் அல்லாமல், உள்ளேயும் அல்லாமல், வாசற்படியில், எந்த ஆயுதமும் இன்றி, தன் விரல் நகங்களாலேயே, தூணில் இருந்து தோன்றி, ஹிரண்யனை அழித்தார், தன் பக்தர்கள் மேல் கருணை உள்ளம் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்த நாராயணன். அதன் பின் பிரகலாதனின் பிரார்த்தனையை ஏற்று யோக நிலைக்குச் சென்றார் நரசிம்ம பெருமான்.

திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயிலின் திருவாசலான ராஜகோபுரத்தில் ஐந்து நிலைகள் உள்ளன. ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லக்ஷ்மி வராகர், சயனக் கோலத்தில் ரெங்கநாதர், ஸ்ரீ மகாலட்சுமி, கீதா உபதேசக் காட்சிகள், ஹனுமனது இதயக் கோவிலில் சீதாராமர், ஹிரண்யவதம், ராமாயணக் காட்சிகள், ஆஞ்சநேயர் சூடாமணி தருவது, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், கண்ணன் உரிப்பானை உடைப்பது, லக்ஷ்மி நரசிம்மர் என நூற்றுக்கணக்கான சுதைச் சிற்பங்களின் வண்ண விளையாட்டு கோபுரத்தின் முழுவதும் வடிக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுரம் 85 அடியில் காணப்படுகிறது.

திருக்கோயில் உள்ளே, ஏகாதசி மண்டபம், கருடாழ்வார் சன்னதி, சமூக சீர்திருத்தத்தை பல்லாயிரம் வருடங்கள் முன்பாகவே கொண்டு வந்த ராமானுஜரின் சன்னதி, இவரது குருவான திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதி, திருவந்திக் காப்பு மண்டபம், திருக்கல்யாண மண்டபம், தாண்டி சிற்பங்களின் திருக்காட்சி. மகாலட்சுமி, கிருஷ்ணர், கள்ளழகர், ரதி தேவி, ஸ்ரீ ராமரிடம் கணையாழி பெறும் ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம், அபய வரதம் தாங்கிய ஹனுமான், வீர ஆஞ்சநேயர், மார்கண்டேயர் சிவலிங்க ஆராதனை, வீரபத்திரர், பிச்சாடனர், பைரவர், போர்பயிற்சி சிலைகள் என இன்னும் எத்தனையோ எண்ணிலடங்கா சிற்பங்கள்.

ஒரே திருக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அமைந்துள்ள சிறப்பு பெற்ற திருக்கோயில். ஆகம முறைப்படி, ஆவுடையாரின் உயரத்திற்கும் குறைவாக லிங்கம் வடிக்கப் பட்டிருந்தால் சயன கோலம் என்றும், ஆவுடையார் உயரத்திற்கு சமமாக இருந்தால், அமர்ந்த திருக்கோலம் என்றும், ஆவுடையாரை விட உயரமாக லிங்கம் வடிக்கப் பெற்றிருந்தால், நின்ற திருக்கோலம் என்றும் பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. அதனாலேயே இக்கோயில் சிவன், அதே கோவில் மூலவர் மாதவ பெருமாள் சயன கோலத்தில் அமைந்துள்ளது போல சயன கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.

மகா மண்டபத்தில் பிள்ளையார், கையில் வேலுடன் சுப்பிரமணியர், நந்திகேஸ்வரர் என நிறைய சுவாமி உருவங்கள் காட்சி தருகின்றன. மேலும் இராமாயணத்தில், இராவணனின் இளைய மகன் அட்சயகுமாரன், தேவாந்தகன், நராந்தகன், ஆகியோரை வெற்றிகொண்ட, ஹனுமான் விஜய ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். பன்னிரு ஆழ்வார்களின் சன்னதியும் உள்ளது.


இத்திருக்கோயிலின் சிறப்பு அமைப்பு:
96 வகையான விமான அமைப்புகள், திவ்ய தேசங்களில் அமைக்கப் படுவது வழக்கம். இத்திருக்கோயிலின் விமானம் அஷ்டாங்க திவ்ய விமானம் என அழைக்கப்படுகிறது. இந்த விமானம், கீழ்த்தளம் மட்டுமல்லாமல், மேல்தளம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. கோவிலின் கருவறையில் மூலவர் ஸ்ரீ மாதவ பெருமாள் சயன கோலத்திலும், இரண்டாம் தளத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ உபேந்திர நாராயணன் என்ற திருப் பெயரிலும், மூன்றாம் தளத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதராகவும் காட்சி தருகிறார் பெருமாள். இவை அனைத்திற்கும் மேல் எண்கோண அடித்தளத்துடன் தங்கஸ்தூபி அமைந்துள்ளது. இது கீழிருந்து 96 அடி உயரத்தில் உள்ளது.

இத்திருக்கோயில் விமான தரிசனம் படி ஏறிச் சென்று எல்லோரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. கோபுரத்தின் எல்லா அடுக்குகளையும் தரிசிக்கலாம். எல்லா பெருமாள் கோயில்களிலும் வருடத்தில் ஒரு முறை தான் பரமபத வாசல் தரிசனம். ஆனால் இத்திருக்கோவிலில் மூன்றாம் அடுக்கில் அமைந்துள்ள ஸ்ரீ பரமபத நாதர் தரிசனத்தால் தினம் தோறும் சொர்கவாசல் திறப்புதான்.

இத்திருக்கோயிலில் கிழக்குநோக்கிய கருவறையின் வாசலில் கூத்தாடும் நிலையில் நர்த்தனக் கண்ணன் சத்யபாமா, ருக்மணியுடன் காட்சி தருகிறார். இதன்மூலம் பெருமாள் இத்தலத்தில் நடன, சயன, அமர்ந்த, நின்ற என நான்கு கோலத்தில் காட்சி தருவது இத்திருக்கோயிலின் மிகப்பெரும் சிறப்பு.

மேலும் இங்கே தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி, மஹா சுதர்சனர் போன்ற சன்னதிகளும் உள்ளன.

இத்திருக்கோயிலின் சிறப்பு:
ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தினை உலக மக்கள் அனைவருக்கும் தந்தருளிய தலம் இந்த திருக்கோட்டியூர் திருத்தலம். இத்திரு மந்திரத்தை தெரிந்து கொள்ள ஸ்ரீரங்கத்தில் இருந்து பதினெட்டு முறை நடந்தே திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண இவ்வூருக்கு வந்து சென்றார் ராமனுஜர்பெருமான். பதினெட்டாவது முறை சீடனது பொறுமையைக் கண்டு மகிழிச்சி அடைந்த குரு, இக்கோயில் நரசிம்மர் சன்னதி முன்பாக, இந்த திருமந்திரத்தை, திருக்கோட்டியூர் நம்பிகள், தனது வம்சத்தினருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் இதனை உனக்கு சொல்லி அருளுகிறேன், நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் உன் மண்டை வெடித்து, நீ நரகம் செல்வாய் என ராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு திரு மந்திரத்தை ஓதினார். அவ்வாறு ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தை தெரிந்து கொண்டு அடுத்த கணமே, இத்திருக்கோயில் கோபுரம் மீது ஏறி நின்று கொண்டு, அந்த ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்தார். மக்களே, "ஓம் நமோ நாராயணா" என அனைவரும் மனதார கூறுங்கள். நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்லலாம் என கூறலானார்.

இதனை கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் ராமனுஜரிடம் வந்து, எனக்கு செய்வித்த சத்தியத்தை மீறி, நீ இதுபோல செய்யலாமா எனக் கேட்டார். நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை. இம்மந்திரம் சொல்லும் மானிடர்கள் அனைவரும் சொர்க்கம் சென்றாலே எனக்கு சந்தோஷம், எனக் கூறியதைக் கேட்டதும், ராமானுஜரை தழுவிக் கொண்டு, எங்கள் எல்லோருக்கும் மேலானவர் நீ எனப் போற்றி, எம்பெருமானார் என வாழ்த்தி அருளினார். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லாமை வேண்டும், என்ற உயரிய கருத்தை உருவாக்கிய, உயர்ந்த உள்ளம் கொண்டவர் ராமானுஜர்.

திருக்கோயில் விழாக்கள்:
சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம், வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா, கஜேந்திர மோட்ச உற்சவம், ஆடி மாதத்தில் ஆண்டாள் பிரமோற்சவம், ஆவணி மாதத்தில் ஸ்ரீபவித்ர உற்சவம், ஸ்ரீ ஜெயந்தி விழா, புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம், கார்த்திகை மாதம் பல்லக்கு பவனி, மார்கழி மாதம் பகல்பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தைலக்காப்பு திருவிழா, ஆண்டாள் திருக் கல்யாணம், மாசி மதம் மாசி பிரமோற்சவம், பங்குனி மாதத்தில் தாயார் பெருமாளுடன் ஊஞ்சல் உற்சவம் காணும் விழா என வருடம் முழுக்க இக்கோயிலில் விழாக்கள்தான்.

திருக்கோட்டியூர் சென்றால் பரமபதம் அடையலாம் என்பது நம்பிக்கை.

"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின் வெல்லாம்
நிலம் தரம் செய்யும் நெல்விதம் பகுளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்"!!


திருக்கோட்டியூர் திவ்ய நாமம்:
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாமங் கையால் தொழுதும் நன்நெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தன்துழாய்
கண்ணனையே காண்க நம்கண் !
- பேயாழ்வார்

எமக்கென்றிறு நிதியம் ஏமாந்திராதே
தமக்கென்றும் சார்வமறிந்து நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம் படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து என்று மானிட !
- பூதத்தாழ்வார்

வேதம் ஓதுவது நன்று. அது இயலவில்லை எனில், மாதவனின் பெயரைச் சொன்னாலே வேதம் ஒதுவதர்க்குச் சமம் என்பது ஆழ்வார்களின் நம்பிக்கை.

12 comments:

Madhavan Srinivasagopalan said...

பகவத் சிந்தனைகள் மனதிற்கு சுகம் தரும்.
உங்கள் பதிவு என்னாது மனதிற்கு இனிமையான சுகம் தந்தது.

ஒரு முறை இந்தக் கோவிலுக்கு சென்று பகவான் க்ருபை கிடைக்கப் பெற்றேன். எனது தந்தை எனக்கு 'மாதவன்' என்று பெயரிட்டது இந்த கோவில் மூர்த்தியின் பெயரானதாலேயே.

Menaga Sathia said...

தெரியாத கோயில்,சுவையான தகவல்.பகிர்வுக்கு நன்றிங்க....எப்படி இருக்கீங்க??

கோமதி அரசு said...

ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கோட்டியூர்.//

புவனேஸ்வரி, இந்த பெருமாள் எங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்களை செய்தவர்.
செய்து கொண்டும் இருப்பவர். இரண்டு, மூன்று முறை போய் இருக்கிறேன். இன்னும் போக வேண்டும்.
உங்கள் பதிவின் மூலம் அவரை வணங்கி கொண்டேன். நன்றி.

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் ’இறையருள்’

Kanchana Radhakrishnan said...

.பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

இத்திருக்கோவிலில் மூன்றாம் அடுக்கில் அமைந்துள்ள ஸ்ரீ பரமபத நாதர் தரிசனத்தால் தினம் தோறும் சொர்கவாசல் திறப்புதான்.

நிறைவான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதில்லை. படங்களோடு விவரங்களும் அருமை.
ஒரு ட்ரிப் அடிச்சுட வேண்டியது தான்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan...

தங்களது வார்த்தைகள் கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது மாதவன். வருகைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga....

நல்லா இருக்கேன் மேனகா. உங்கள் விசாரிப்புக்கும்,
வருகைக்கும் மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு....

முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Kanchana Radhakrishnan....

மிக்க நன்றி காஞ்சனா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@இராஜராஜேஸ்வரி....

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@அப்பாதுரை....

கண்டிப்பாக போயிட்டுவாங்க அப்பாதுரை சார்.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails