Thursday, April 3, 2014

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்

நமச்சிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க!!

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் (வாஞ்சிநாத சுவாமி)
தல இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை (மருவார்குழலி அம்பாள்)
தல விருட்சம்: சந்தனமரம்
தல தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்


திருக்கோயில் அமைப்பு:
இன்னும் கிராமங்களின் அழகை தன்னுள்ளே தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சியத்தில் இந்த அருள்மிகு வாஞ்சிநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்கள் 127 உள்ளன. அவற்றில் 70-வது தலமாக இத்தலம் அமைந்துள்ளது. அழகிய கோபுர தரிசனம் செய்துகோண்டே திருக்கோயில் உள்ளே நுழைகையில், வலதுபுறமாக சென்றால், குப்தகங்கை என அழைக்கப்படும் திருக்கோயில் குளம் அமைந்துள்ளது. சற்றே பெரிய குளம். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக் குழந்தைகள் சிலர் திருக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. திருக்கோயில் வளாகம், திருக்குளம் என அனைத்துப் பகுதிகளையும் மிக அழகாக தூய்மைப் படுத்தினர் அக்குழந்தைகள். அவர்கள் அனைவரது வாழ்வு சிறக்க வாஞ்சிநாதரை வேண்டி, நம் பயணத்தை தொடருவோம்.

புனித கங்கை ஒரு அம்சத்தை மட்டும் விடுத்து மீதமுள்ள 999 அம்சங்களுடன் இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் உறைதாக சொல்லப்படுகிறது. இத்தீர்த்த குளத்தில் நீராடி, அக்குளக் கரையோரமாகவே அமைந்துள்ள கங்கைக் கரை விநாயகரை விளக்கேற்றி வணங்கி, பின் திருக்கோயில் உள்ளே வந்தால், நுழைவு வாயிலின் இடப் புறமாக அமைந்துள்ளது இத்தலத்தில் சிறப்பம்சமாக விளங்கும் யமதர்மராஜன் சன்னதி. தனி கோபுரத்தின் கீழ் இச்சன்னதி அமையப் பெற்றுள்ளது. இப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். யமதர்மராஜனின் அருகில், நம் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த யமதர்மராஜன் சன்னதியில் ஒரு பழக்கம் உள்ளது. நாம் அர்ச்சனை செய்யும் எந்த பொருளையும் சரி, திருநீறு பிரசாதங்கள் என்று எதையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என அச்சன்னதி சிவாச்சாரியார் சொல்லக் கேட்டோம்.


இவ்வாறாக எமதர்மராஜனிடம் நம் வேண்டுதல்களை முன்வைத்துவிட்டு, திருக்கோயிலின் அடுத்த கோபுர வாசலை சென்றடையும் முன் இரு புறமும் முறையே அமைந்துள்ள அபயங்கர விநாயகரையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். அது போலே, உள் கோபுரத்தைத் தாண்டினால் இடப்புறம் மேலும் ஒரு விநாயகர் சன்னதியும், வலப்புறம் மருவார் குழலி எனும் மங்களாம்பிகை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி பகவான் என எல்லாம் வணங்கி விளக்கிட்டு, மூன்றாம் கோபுர வாயிலை அடைகிறோம். அக்கோபுர வாசலின் இருமருங்கிலும், இரட்டை விநாயகரும், அதிகார நந்தியும் அமர்ந்து நம்மை தெய்வ வழிபாட்டிற்கு இட்டுச் செல்கின்றனர்.

பொதுவாக விஷ்ணு திருக்கோயில்களில் கருடாழ்வாரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பின்னர் பெருமாளை வணங்கிட நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. அதே போலவே சிவன் திருக்கோயில்களில் கோபுர வாயிலில் அமைந்திருக்கும் அதிகார நந்தியை வணங்கி அவரிடம் அனுமதி வாங்கி சிவனை வழிபட, நினைத்த காரியம் செவ்வனே நிறைவேறும் என்பது காலங்காலமான நம்பிக்கை.

இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கேயும் ஒரு நந்தீஸ்வரர் நம்மை வரவேற்கிறார். அவரை வணங்கி துவாரபாலகர்களைக் கடந்து அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே கருவறையில் அருள்மிகு வாஞ்சிநாதரை கண்குளிர, ஆம் உண்மையிலேயே எந்த செயற்கையான வெளிச்சத் தூறல்கள் இல்லாமல், கருவறையில் சுவாமியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள, வட்டக் கண்ணாடியின் உதவியுடன் ஒற்றை ஜோதி நூறு மடங்காய் பரிமளிக்கும் வெளிச்சத்துடன், தீப வெளிச்சத்துடனும், சாம்பிராணி வாசத்துடனும், அதே சாம்பிராணி புகை மூட்டத்தினூடே, கருவறை மூலவரை தரிசிக்கும் இன்பம் எங்கும் எதிலும் கிடைக்காத பேரின்பம்.

பெருமானது தரிசனம் முடிந்து, சுவாமியின் வலப்புறமாக சன்னதியை சுற்றுகையில் சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் தரிசனமும் காணப் பெறுகிறோம்.

தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தின் தென் திசையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் ஒன்பது பேர், உமாமகேஸ்வரருடன் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கு திசையில் சந்திரமௌலீஸ்வரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாக்ஷி சொக்கநாதர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அஷ்டலிங்கம், மகாலட்சுமி என பரிவார தெய்வங்கள் அனைத்தும் தனித்தனி சன்னதிகளில் அமையப் பெற்றுள்ளன.


பின் தென் திசையைப் பார்த்தவாறு சனீஸ்வர பகவானும், பஞ்சபூத ஸ்தலங்களின் சிவலிங்கங்களும், துர்க்கையும், பிரகாரத்தின் வடக்கில் அமைந்துள்ளன.

இவர்களை தீபமேற்றி வணங்கிவிட்டு, சண்டிகேஸ்வரரை வழிபடுகிறோம். சண்டிகேஸ்வரர் ஒரு தீவிர சிவ பக்தர். ஆகையால் தான் எப்போதும் சிவ நாமத்தைச் சொல்வதும், நினைப்பதுவும், கேட்பதுவும் மட்டுமே செய்யக் கூடியவர். சிவ நாமத்தைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன் என்றிருப்பவர். சண்டிகேஸ்வரர் சன்னதி சென்று நமச்சிவாய! நமச்சிவாய! என ஐந்தெழுத்து மந்திரத்தை வாயார சொல்லிவர நம் வேண்டுதல்கள் தானே நிறைவேறும்.

சண்டிகேஸ்வரரை வணங்கி பின் கிழக்கு முகமாக அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி தெய்வத்தை வணங்கிச் சுற்றி வந்தால், சூரியன், சந்திரன், யோக பைரவர், ஒரே சிற்பமாக ராகு கேது போன்றோரது சன்னதி அமைந்துள்ளது. அங்கேயே நடராஜரது சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாஞ்சிநாதராகிய சிவபிரானே அனைத்துமாக விளங்குவதால் இத்திருத்தலத்தில் நவக்ரஹ சன்னதி அமையப் பெறவில்லை.

திருத்தலச் சிறப்பு:
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நான்கு முக்கிய நாயன்மார்களாலும் பாடல் பெற்ற ஸ்தலம்.

கங்காதேவி குப்த கங்கையாக 999 கலைகளுடன் இத்தலத் திருக்குளத்தில் உறையும் சிறப்புமிகு தலம்.

108 முறை தாமரை மலர்களைக் கொண்டு இத்தலத்தில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை அர்ச்சனை செய்து வழிபட எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.

மகாலக்ஷ்மியை திருமணம் செய்ய விரும்பி விஷ்ணு பெருமான் தவம் இருந்த தலம் என்பதால் ஸ்ரீ வாஞ்சியம் எனும் பெயர் வந்தது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் தலை சிறந்து விளங்கும் பெருமை உடைய தலம்.

பிரளயம் உண்டான காலத்திலும் அழிவு இல்லாமல், காலங்களைக் கடந்து நிற்கும் தலம்.

எமதர்மராஜனுக்கு தனியே சன்னதி அமையப் பெற்றுள்ள தனிச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம். இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார்.

காசிக்கு வீசம்படி அதிகம் என்ற சொல்லுக்கும் மேலாக காசியைவிட பல மடங்கு புண்ணியமிகு ஸ்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம்.

பிரம்மன், விஷ்ணு, சூரிய பகவான், தேவர்கள் எனப் பலரும் வழிபட்டு சிவனருள் பெற்ற தலம். சூரிய பகவானுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தருளிய திருத்தலம்.

ராகுவும் கேதுவும் தனித் தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக உள்ளது.

ஆயுள் விருத்திக்கு இத்தல தரிசனம் ஒரு அருமருந்து.


மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரின் கற்பகத்தைக் கண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலையைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேன்!!
என்ற பாடல் வரிகள் வாயிலாக இத்த்திருத்தலத்துப் பெருமையை நாம் அறியலாம்.

தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலத்தில் வாழ்ந்தாலும், இத்தலத்தை நினைத்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தலமாக விளங்குகிறது இந்த திருவாஞ்சியம்.

இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் மிக விசேஷமான தினங்கள். பொதுவாக கிரகண காலங்களில் திருக்கோயில்களை சாத்திவிடுவார்கள். ஆனால் கிரகண காலங்களிலும் கோயில் திறக்கப்பட்டு ஈசனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம்.

இத்தல தீர்த்தப் பெருமை:
கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும்,
திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும்,
துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும்,
கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும்,
போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.


கிருதயுகத்தில் விஷ்ணு பெருமானிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரை விட்டுச் செல்ல, மனைவி இல்லாமல் வாடிய திருமால் இந்த திருவாஞ்சியம் வந்து தேவர்கள் புடை சூழ தவமிருந்து, இத்தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதனை வழிபட, சிவபிரான் லக்ஷ்மி தேவியின் கோபம் தீர்த்து பெருமாளுடன் சேர்த்து வைத்தார். இதனாலேயே இத்தலம் திருவிழைந்ததென்று எனும் பொருள்படும் படியாக திருவாஞ்சியம் எனும் பெயருடன் விளங்குகிறது. கண்ணபிரானும், லக்ஷ்மியும் நீராடிய திருக்குளம் என்பதால் புண்ணிய புஷ்கரணி எனவாயிற்று.

திரேதாயுகத்தில் அத்திரி என்னும் முனிவர் பெருமானார், பிள்ளைச் செல்வம் இன்றி மிகவும் வேதனையுற்று, நாரதரின் உபதேசப்படி இந்த திருவாஞ்சியம் வந்து இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈசனை வேண்டி தவமிருக்க, சிவபெருமான் மனமிரங்கி முனிவருக்கு காட்சி தந்து தாத்தத்ரேயனை மகனாக வரமருளிய காரணத்தால் அத்திரி தீர்த்தம் என வழங்கப்பட்டது.

துவாபரயுகத்தில் பிறருக்கு தீங்கிழைத்த காரணத்தினால் மூன்று யுகங்களுக்கு அரக்கனாகவே பிறப்பான் என்ற தண்டனை பெற்ற வீரதனு எனும் அசுரன், அந்த தண்டனையில் இருந்து விடுபட பராசர முனிவரை வணங்கிட, அவர் திருவாஞ்சியம் சென்று அங்குள்ள தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து இவ்வசுரன் மேல் தெளித்து சாப விமோசனம் தந்தருளினார். இதன் காரணமாக பராசர தீர்த்தம் என விளங்க ஈசன் அருளினார்.

மாசி மக நாளன்று இத்திருக்குளத்தில் நீராட பாவ புண்ணியங்களில் இருந்தும், பிறவி பந்தத்தில் இருந்தும் விடுபட முடியும் என்கிறது புராணம்.

திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்:
1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்
2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்
3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை
4. ஸர்வ தீர்த்தம்
5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்
6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்
7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி
8. ராம தீர்த்தம் : வாயு திசையில்
9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்
10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே

திருவாஞ்சியம் திருத்தலம் பொன்மயமாக கிருதாயுகத்திலும், வெள்ளிமயமாக திரேதாயுகத்திலும், தாமிரமயமாக துவாபரயுகத்திலும் விளங்கியது. மண்மயமாக கலியுகத்தில் விளங்குகிறது.

காசியில் இறைவனடி சேர்ந்தோருக்கு ஒரு சில மணித்துளிகளாவது பைரவவாதனை உண்டாம். ஆனால் இத்தலத்தில் பைரவர் யோகநிலையில் அருள் பாலிப்பதால், பைரவ உபாதை கிடையாது என்னும் சிறப்புடைய தலம். ஏனெனில், பைரவர் ஒரு முறை சிவபிரானின் இஷ்ட திருத்தலமான இந்த ஸ்ரீவாஞ்சியம் வந்தடைந்து பொன்வண்டின் உருவத்தில் கடுந்தவம் இருந்து முக்கண்ணனை சரணடைய இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என திருவாஞ்சிநாதர் அருளிச்செய்தார்.

திருத்தல வரலாறு:
முன்பொரு சமயத்தில் கங்காதேவி சிவபிரானை தரிசனம் செய்து தனது மன வேதனையைத் தெரிவித்தார். உலக உயிர்கள் அனைத்தும் தத்தமது பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொள்வதால் என்னிடம் பாவங்கள் நிறைந்து விட்டது. இத்தகைய எனது பாவங்களை நான் எங்கு சென்று தீர்த்துக் கொள்வேன் என கங்கை ஈசனிடம் வேண்டிநின்றார். அதற்கு பெருமான், தெற்கே அமைந்துள்ள திருவாஞ்சியம் என்னும் திருத்தலம் எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த திருத்தலம், அங்கு சென்று உன் பாவங்களைப் போக்கிக்கொள் எனக் கூறி அருளினார். அதன்படியே இங்குவந்த கங்காதேவி இத்தல தீர்த்தத்தில் 999 கலைகளுடன் உறைந்து தங்கிவிட்டார் என்பது வரலாறு.


எமதர்மனுக்கும் சாப விமோசனம் அளித்த தலம்:
ஒருமுறை எமதர்மன் தன் நிலையை எண்ணி வருந்தியபடி இருந்தார். எவ்வளவோ விதமான பதவி நிலைகள் இருந்தும் தனக்கு மட்டும் இப்படி உயிர்களைப் பறிக்கும் பாவ காரியம் செய்யும் பதவி ஏன் வந்தது, என எண்ணி வருந்தினார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சினாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே இத்தலம் வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார் எமதர்மன். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். முதலில் உன்னை தரிசித்த பின்னரே என்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை ஸ்ரீ வாஞ்சிநாதர் எமனுக்கு வழங்கினார்.


இத்தலத்தில் விளங்கும் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி துர்க்கையின் மறு உருவமாய் எங்கும் காணக் கிடைக்காத ஒரு அரிய வடிவமாய் காட்சி தந்து அருள்புரிகிறாள்.

ஸ்ரீ வாஞ்சியம் துர்க்கை துதி:
மனமுடையவளே அச்சங்கடிபவளே
அம்பிகே தாயே வேதாந்தத்தால் அறியப்படுபவளே
கருமைத் தங்கிய மேனியை உடையவளே
அழகியவளே வளர்ந்த முன்மயிரையுடையவளே
மிக்க ஒளியை உடையவளே
யோகினியே நீலகண்டர் மனைவியே
முச்சூலம் தரித்த கையளே
எல்லாச் சிறப்பும் அமைந்த வடிவினளே
பயமகற்றுபவளே மதியணிபவளே
நெற்றிக்கண்ணி ஹே மகா கௌரி
ஹே மகாலட்சுமி, ஹே சரஸ்வதி, ஹே சர்வதேவி
உன் பொருட்டு நமஸ்காரம்
ஹே அம்பிகை கருணை செய்வாய்
காப்பாற்றுவாய் உனக்கு வந்தனம்!!!

திருவாஞ்சியம் திருத்தலத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் அருளிச் செய்த பதிகம்:
படையும் பூதமும் பாம்பும்புல் வாய்அதள்
உடையும் தாங்கிய உத்தம னார்க்குஇடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே!!

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே!!

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே!!

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்தாம் அமரர்க்கு அமரரே!!

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே!!

அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணை யாவன் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத்து ஆவதே!!

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடி யான்திக ழும்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யால்அடை வார்க்கு இல்லை அல்லலே!!

திருச்சிற்றம்பலம்!!

22 comments:

  1. படித்து மகிழ்ந்தோம். நன்றி!

    ReplyDelete
  2. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. விரிவான தகவல்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  5. Very nice post and amazing pictures dear. Happy to see your writing again. Welcome back !

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி விக்கி.

    ReplyDelete
  7. ரொம்ப நாட்களுக்குப்பிறகு இங்கே உங்களை பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது புவனேஸ்வரி! திருவாஞ்சியம் பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! மறுபடியும் நம் பக்கத்து கோவில்களின் பெருமைகளை தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  8. வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மனோம்மா.

    ReplyDelete
  9. சமீபத்துல புதுக்கோட்டை டூர் அடிச்சப்ப திருவாரூரை கிராஸ் பண்ணி வந்தோம். அங்க ஒரு அற்புதத் தலம் இருக்கறது தெரியாமப் போச்சே... அடுத்த முறை போகும் போது அவசியம் பார்த்துடறேன். நலம்தானே நீங்களும்...1

    ReplyDelete
  10. நலமாக உள்ளேன் கணேஷ் சார். வாழ்நாளில் ஒரு முறையாவது
    தரிசிக்க வேண்டிய தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம். வருகை தந்து
    கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் பற்றி வாஞ்சையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  13. விளக்கமான தகவல்களுடன் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயிலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    நான் இப்பொழுது தான் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சொக்கன்.

    ReplyDelete
  15. Thanks for the useful and detailed post..

    ReplyDelete
  16. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சரண்யா.

    ReplyDelete
  17. அறியாத கோவில்... அறியாத விவரங்கள்! கோவிலின் சிறப்பம்சமாய் விளங்கும் யமதர்மராஜா சன்னதி வியப்பு! பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  18. வருகை தந்து தங்களது அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  19. படங்கள் கோயிலைப்பற்றிய விரிவான செய்திகள், தேவார பாடல்கள் என்று பதிவு மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மிகவும் நன்றி கோமதி அம்மா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete