Friday, December 17, 2010

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்

பீடு உடையது, பெருமை உடையது மார்கழி மாதம். உலகமெங்குமே இந்த மார்கழி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு தெய்வம் சார்ந்த பண்டிகை நடந்தேறிக்கொண்டே இருக்கும். மத வேறுபாடின்றி, எல்லா மதத்திலும் மக்களை பக்தி மார்கத்தில் இட்டுச் செல்லும் மாதமாகவே இந்த மார்கழி திகழ்கிறது. மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து கோலம் போடுவதற்கும், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பதற்கும், திருக்கோயில் சென்று வழிபாடு நடத்துவதற்கும், உடல் ஆரோக்கியம் சம்பந்தமான காரணங்களை நமது முன்னோர்கள் முன் வைத்திருந்தார்கள்.

இந்த மார்கழி மாத ஆரம்பத்தில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் ஏகாதசி விரதத்தின் சிறப்பினை பக்தர்களுக்கு உணர்த்திய பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர்.


திருக்கோயில் இருப்பிடம்:
மனித வடிவில் மட்டுமல்ல, மயில் வடிவிலும் இறைவனை வழிபட்ட திருத்தலம் விளங்கும் மயிலாடுதுறையில் உள்ளது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையிலிருந்து சுமார் 260 km தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : பரிமள ரங்கநாதர் (மருவினிய மைந்தன், சுகந்தவனநாதன்)
தல இறைவி : பரிமள ரங்கா நாயகி (சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீகவல்லி)
தல தீர்த்தம் : இந்து புஷ்கரணி(சந்திர புஷ்கரணி)

திருத்தலச் சிறப்பு:
108 திவ்யதேச திருத்தலங்களுள் 22-வது திவ்ய தேசமாக விளங்குகிறது இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். சோழநாட்டுத் திவ்யதேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில். இக்கோயிலின் பழமை இங்குள்ள சிற்பங்களில் தெரிகிறது.

திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். ஸ்ரீ ரங்கநாதர் சிறப்புடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பஞ்சரங்க திருத்தலங்களுள் ஒன்றாகவும் பரிமள ரங்கநாதர் ஆலயம் உள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்)
ஸ்ரீரங்கம்
கோயிலடி என அழைக்கப்படும் ஆதிரங்கம்
கும்பகோணம்
திருஇந்தளூர்

என இவை அனைத்தும் பஞ்சரங்க திருத்தலங்கள்.


இத்திருக்கோயிலில் அருள்மிகு பரிமள ரங்கநாதரின் திருமுகத்தை சந்திர பகவானும், தாமரைப் பாதங்களை சூரிய பகவானும், தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பந்தத்தை உணர்த்தும் நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைப் பக்கத்தில் காவிரிப் பெண்ணும், கால் பக்கத்தில் கங்கைப் பெண்ணும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் ரங்கநாதரின் திருவடிகளை பூஜிக்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதத் தொடக்கம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதத்தில் ஐந்து நாட்கள் கண்ணன் புறப்பாடு, இக்கோயில் தாயாருக்கு புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி மாதம் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடத்தில் பாதி நாட்கள் விழாக்கள் மயம்தான்.

ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக விளங்கிய திருத்தலம் இந்த பரிமள ரங்கநாதர் திருக்கோயில். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்து வீர சயன கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேதச் சக்கர விமானம் என அழைக்கப்படுகிறது.

திருத்தல வரலாறு:
விரதங்களில் சிறப்பு வாய்ந்த விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். அம்பரீசன் என்ற அரசன் பெருமாள் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் பல ஆண்டுகளாக ரங்கநாதரை மனதில் இருத்தி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தார். ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று உணவு உண்டு விரதம் முடிப்பார். பல ஆண்டுகள் ஏகாதசி விரதம் இருந்ததின் பயனாக தேவலோகப் பதவி ஒரு மனிதப் பிறவிக்குக் கிடைத்து விட்டால் தேவர்களுக்கு மரியாதை குன்றிவிடும் என கலக்கம் கொண்டு தேவர்கள் அனைவரும் சென்று துர்வாச முனிவரை சந்தித்தனர். அவரும் தேவர்களுக்கு உதவுவதாகக் கூறி அம்பரீசனின் விரதத்தை முடிக்க விடாமல் தடுக்க பூலோகம் நோக்கி வந்தார். முனிவர் பூமி வந்து சேர்வதற்குள் மன்னன் ஏகாதசி விரதம் முடித்திருந்தார். ஆனாலும் துவாதசியன்று உணவு சாப்பிட்டால்தான் விரதம் முழுமையாக முடியும் என்பது ஐதீகம். இதன் காரணாமாக துவாதசியன்று மன்னனிடம் தான் நீராடிவிட்டு வருவதாகவும், வந்தபின் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் எனவும் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றார் துர்வாச முனிவர். தான் நேரம் தாழ்த்திச் சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்பதே முனிவரது திட்டம். இதனிடையே விரதம் முடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், தன் அரசவை பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டு, மூன்று மடக்கு தீர்த்தத்தை குடித்தாலே விரதம் முடித்ததற்கு சமம் எனக் கூற அவ்வாறே செய்தார் அரசர். விரதத்தை இனிதே முடித்தார் அம்பரீசன்.

தான் இத்தனை திட்டமிட்டும் மன்னர் விரதத்தை நல்ல விதத்தில் முடித்து விட்டாரே என்று ஆத்திரம் கொண்ட துர்வாசர், மன்னர் மீது கோபம் கொண்டு சாபமிட எத்தனித்தார். மன்னர் பெருமாளை சரணடைந்தார். பெருமாள் மன்னரை முனிவரின் கோபத்திலிருந்து காத்து, அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு தேவலோகப் பதவியெல்லாம் வேண்டாம், பெருமாள் இத்தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் தனது தவறை எண்ணி பெருமாளிடம் மன்னிப்பு கேட்டார். பக்தியின் பெருமையையும், விரதத்தின் வலிமையையும் விளக்கும் திருத்தலம் இந்த திருஇந்தளூர் திருத்தலம்.

மேலும் இத்தலத்தை குறித்து வேறு கதைகளும் உள்ளன. சிறப்புடைய நான்கு வேதங்களையும் ராட்சதர்கள் இருவர் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்து விட்டனர். அந்த வேதங்களைக் காப்பதற்காக மீன் வடிவம் கொண்டு ராட்சதர்களை அழித்து வேதங்களை காப்பாற்றி, அவற்றை பழைய வடிவத்திற்கு கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

சந்திரன் வழிபட்ட தலம் இது. தனக்கு ஏற்பட்ட சரும பாதிப்பை போக்கிக்கொள்ள இத்தல இறைவனை வேண்டி, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட தனது பாதிப்பு நீங்கப் பெற்றார் சந்திரபகவான். இதன் காரணமாகவே சந்திர புஷ்கரணி என இத்தல தீர்த்தம் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. கோயில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.


மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன்,
அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.


வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது எத்தனை கேள்விகளை நம் மனத்துள் உண்டாக்கினாலும், தர்மத்தை நிலைநாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும், ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு.

தன்னை சீண்டுவதற்காக தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். ஒவ்வொரு வினைக்கும் செயலுக்கும், எதிர் வினை கட்டாயம் உண்டு. அவை நல்லவையோ, தீயவையோ, என்பதை உணர்த்தும் சிற்பம்.


பிரிதிவிராஜன், சம்யுக்தையை சிறைபிடிப்பது போன்றதொரு சிற்பவடிவம்.

காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம்.

மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி கண்முன்னே.


ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.

நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன்.


சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக, சீதா பிராட்டி தந்த கணையாழியை ராமரிடம் சேர்ப்பிக்கும் அன்பின் விசுவாசி அனுமன்.

உலகை காப்பவன் கண்ணன் என்றாலும், அவனைக் காப்பவள் தாயார் யசோதை தானே. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பல ஆயிரம் மடங்கு பெரிது என்பதை உணர்த்தும் தாய் மகன் உறவு, கண்ணன் யசோதை உறவு. அவர்கள் பாசம் சிற்ப வடிவில்.


தன் புல்லாங்குழல் இசையால் ஆறறிவு மனிதர்களை மட்டுமன்றி, ஐந்தறிவு ஜீவன்களையும் தன்வசப் படுத்திய வேணுகோபாலனின் இன்னிசை நமக்குக் கேட்கிறது அந்த சிற்பத்தை பார்க்கும்போது.

குழந்தை வடிவில் கண்ணன் ஆலிலை மேலே.


இது போன்ற கோயில் தரிசனத்தில், சிற்பங்களை காணும்போது கற்பனை வளமும், ஸ்லோகங்களை சொல்லி பாடும் போது மொழி வளமும், கடவுளைக் காணும்போது மன வளமும், என திருக்கோயில் செல்வதற்கு ஆன்மிகம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கியது திருக்கோயில் தரிசனம்.

25 comments:

  1. படங்கள் - குறிப்பாக சிலைகளின் படங்கள் அருமைங்க.

    ReplyDelete
  2. அத்தனை சிற்பங்களையும் ரசித்தேன். விளக்கங்களும் அருமை. நல்ல பதிவு. நன்றி புவனேஸ்வரி.

    ReplyDelete
  3. Very informative post,thanks for sharing.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.. நானும் இந்தக் கோவில் சென்று தரிசனம் பெற்றேன். அது ஒரு கடைமுக தினம். காவிரி ஸ்நானம்.. பெருமாள் சேவை.. பாக்கியமடைந்தேன்.

    ReplyDelete
  5. @Chitra,
    படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சித்ரா.

    ReplyDelete
  6. @ராமலக்ஷ்மி,
    பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  7. @Madhavan Srinivasagopalan,
    அருமையான தரிசனம் போல. மிக்க நன்றி மாதவன்.

    ReplyDelete
  8. திருஇந்தளூர் பற்றிய முழுமையான குறிப்புக்கள் தந்ததற்கு நன்றிகள்..

    ReplyDelete
  9. மிக்க நன்றி பாரத் பாரதி.

    ReplyDelete
  10. "பரிமள ரங்கநாதர் " கோயில் தர்சித்தேன்.

    சிற்பங்கள் விளக்கங்களுடன் அருமை.

    ReplyDelete
  11. Very nice post, lovely Temple and I like that legend beyond the Viratham too.

    ReplyDelete
  12. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி விக்கி.

    ReplyDelete
  13. அருமை!!!
    congratulations.

    ReplyDelete
  14. படங்கள் அருமை.நல்ல பதிவு.

    ReplyDelete
  15. மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  16. மிகவும் அருமை

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சகோ ஆன்மீக பணி தொடர

    விஜய்

    ReplyDelete
  18. பகிர்விற்கு நன்றி. திருமங்கைக்கும், பரிமள ரங்கனுக்கும் நடக்கும் உரையாடல் சுவையாக இருக்குமே! நான் எழுதுகிறேன் அதைப் பற்றி!

    ReplyDelete
  19. உங்கள் பதிவில் உரையாடலைப் பற்றி அவசியம் கூறுங்கள். மிக்க நன்றி கோபி.

    ReplyDelete
  20. பரிமள ரெங்கநாதர் கோவில் பக்கத்துல ஆதிநாராயணன் கோவிலும் இருக்கு அதையும் உங்க பதிவுல சேருங்க புவனா. அப்பறம் கடலுர்ப் பக்கதுல திருவந்திபுரம்ற ஒரு ஊர் இருக்கு . அங்க தேவநாத சுவாமி கோவில் இருக்கு (நான் வளர்த்த ஊர் ). முடிஞ்ச அதைப் பற்றியும் எழுதுங்க.

    ReplyDelete
  21. @முரளி ஐயங்கார்......

    உங்க ஊர் தேவநாதசுவாமி கோவிலுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன் முரளி. கண்டிப்பாக நீங்கள் சொன்ன திருக்கோயில்கள் பற்றி எழுத முயற்சிக்கிறேன்.உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி முரளி.

    ReplyDelete