Thursday, December 2, 2010

பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)

பயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்லும் உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி, நமது வேலை நிமித்தமான வெளியூர் பயணமாக இருந்தாலும் சரி, பயணம் என்கிற விஷயம் சுவாரஸ்யம் மிகுந்த ஒன்று. நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய முகங்களைத் தவிர, பல ஊர்களைத் தாண்டிச் செல்லும் நெடுந்தூரப் பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பயணத்தில் ஏற்படும் புதிய நட்பு, சில நேரத்தில் வாழ்நாள் முழுக்க தொடரும் நட்பாகக் கூட அமைந்து விடுகிறது. பேருந்தில் ஏறியதும், யாரோ முகம் தெரியாத புதிய நபர் நமக்கு உட்கார இடம் தருவார். உட்கார இடம் கிடைக்கா விட்டாலும் நமது பையின் பாரத்தை யாரோ ஒருவர் மடியில் வாங்கிக் கொள்வார். இந்த இடத்தில் எல்லா மனிதரிடத்திலும் இருக்கும் சின்னச் சின்ன மனிதாபிமானம் எட்டிப் பார்க்கும். பேருந்தை விட்டு இறங்கி நாம் செல்லும் இடத்திற்கு வழி கேட்கும் வேளையில் தானே முன்வந்து வழி சொல்லும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.

சாதாரண பயணத்திற்கே இப்படி என்றால் நம் சொந்த மண்ணை நோக்கிச் செல்லும் பயணம் என்றால் குதூகலத்திற்கு அளவே இல்லைதானே. மழையில் பயணம் அதை விட சுகானுபவம். ஜெயச்சந்திரன் ஒரு பாடலில் பாடியது போல "மழைக் காலமும் பனிக் காலமும் சுகமானது". சூரியனைப் பார்த்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது பெய்யும் மழை பலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு மிகுந்த சிரமத்தையும் கொடுத்துள்ளது. வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தானே. ஒருவருக்கு நல்லதாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்கு கஷ்டத்தைத் தருவது அன்றாடம் நிகழ்வது.

இது போன்றதொரு மழைக் காலத்தில் தொடங்கியது எங்கள் பயணம் கும்பகோணத்தை நோக்கி. திருச்சியிலிருந்து, தஞ்சை வழியாக கும்பகோணம், புகை வண்டிப் பயணம். நகர நெரிசல்களில் இருந்து விடுபட்டு தூய காற்றினை சுவாசித்தபடியே, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே தொடர்ந்தது உல்லாசப் பயணம். வெயில் காலத்திலேயே இவ்வூர் வயல்களின் வனப்பு கண்ணைப் பறிக்கும். இப்போதோ மழையில் நனைந்த வயல்களின் பச்சை வண்ணமோ ஜொலிக்கிறது!!! இயற்கை அழகை விஞ்சியது உலகில் வேறெதுவும் இல்லை.


இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல சோழ வளநாடு. கலை அழகிலும் விஞ்சி நிற்கும் பகுதிதான். சோழர்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உள்ளார்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது மட்டுமல்ல, இது போன்ற பயணங்களின் போதும் நமக்குத் தெரிய வருகிறது. இசை, நாட்டியம், இலக்கியம் தவிர சிற்பக் கலையிலும் மேலோங்கி திகழ்ந்துள்ளனர் என்பது இப்பகுதி கோயில்களைக் காணும்போது நிரூபணமாகிறது. மிகவும் வலிமை வாய்ந்த பேரரசர்களாக விளங்கிய சோழ மன்னர்கள் தங்களது ஆட்சிப் பகுதிகளை கடல் தாண்டியும் விரிவுபடுத்தி இருந்திருக்கிறார்கள்.

சோழர்களது சிற்பக் கலையின் உன்னதம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக, முதலாம் இராஜராஜ சோழனால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், இராஜேந்திர சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம், இரண்டாம் இராஜராஜ சோழனால் 12- ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், என அடுக்கிக்கொண்டே போகலாம் சோழர்கள் சிற்பக் கலையின் மேல் கொண்டிருந்த தீராத காதலை.

இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த சோழநாட்டின் முக்கிய பகுதி கும்பகோணம். குடந்தை, குடமூக்கு, திருக்குடந்தை, பாஸ்கரக்ஷேத்திரம் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆன்மீகத் தலம் இந்த கும்பகோணம். கோயில்களையும், குளங்களையும் அதிகம் கொண்ட ஊர் கும்பகோணம். காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தை சுற்றியும், ஊருக்குள்ளேயும் சுமார் 180 கோயில்களுக்கு மேல் உள்ளதாகச் சொல்கிறார்கள். கும்பகோணம் வெற்றிலை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ள திருபுவனம் பட்டிற்கு பெயர் பெற்ற ஊராகத் திகழ்கிறது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயில், தென்னிந்தியாவிலேயே பித்தளை குத்துவிளக்குகள், பூஜை சாமான்கள், தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. நவக்ரஹ ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்யதேசங்கள், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை என பல்வேறு முக்கியமான ஆன்மீகத் தலங்கள் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. இங்குள்ள அரசு கல்லூரி தென்னிந்தியாவின் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. கணித மேதை ராமானுஜம் இந்தக் கல்லூரியில் பயின்றவர்தான்.

கும்பகோணம் என்றால் காட்டாயம் நம் நினைவில் வந்து நிற்பது மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம், அந்த மகாமகக் குளத்தில் நீராடுவது, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, மகாநதி, நர்மதா, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடிய புண்ணியம் கிட்டும். இந்த கும்பகோணம் நகரம் புராண காலத்தில் இருந்து, பல்வேறு காவியங்களில் இடம்பெற்றுள்ளது. இது போன்றதொரு அமைதியும், அதே நேரத்தில் சகல வசதிகளும், அதிக செலவும் இல்லாத, இயற்கை எழில் கொஞ்சும் கும்பகோணத்தில் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியையாவது வாழ மனம் ஏங்குகிறது.

இப்படி கும்பகோணம் பல்வேறு ஆன்மீகத் தலங்களின் குடியிருப்பாக இருந்தாலும், அவற்றுள் சிற்பக் கலையின் மகோன்னதமாக ஒரு கோயில் திகழ்கிறது. அதுவே கும்பகோணத்தில் இருந்து 3 km தூரத்தில் அருள்மிகு ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள அழகிய கிராமம் தாராசுரம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சிற்றுந்தை(மினி பஸ்) பிடித்து ஏறி அமர்ந்தால் பத்தே நிமிடத்தில் வந்து விடுகிறது தாராசுரம். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக சென்று, அரசலாற்றின் மேலே உள்ள சிறிய பாலத்தின் வழியாக நடந்து, சில தெருக்களைக் கடந்து சென்றால் பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது தாராசுரம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்.


இத்திருக்கோயில் மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழும், மத்திய அரசின் ASI எனப்படும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழும், உலகெங்கும் அமைந்துள்ள கலைப் பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்துவரும் UNESCO அமைப்பின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் நிரம்பி வழியும் சிற்பங்களும், அவற்றின் பேரழகும், நுணுக்கங்களுமே இந்த அனைத்து அமைப்புக்களையும் இந்த கோயிலை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.


இத்திருக்கோயிலின் அமைப்பு அப்படியே தஞ்சை பெரிய கோயிலின் வடிவத்தை போன்றே அமையப் பெற்றுள்ளது. 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜ ராஜ சோழனால் கட்டப் பட்ட சிற்பக் கோயில் இது. மழை பெய்து திருக்கோயிலே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு ஆற்றின் நடுவே அமைக்கப் பட்ட கோயிலைப் போல காட்சி அளித்தது. முதலில் நம்மை வரவேற்பது நந்தி பகவான். அதையடுத்து ஐந்து கலசங்களைத் தாங்கிய அழகிய கோபுர வாசல் வழியாக திருக்கோயில் பிரவேசம். இத்திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்களுடன், திருக்கோயிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது. இந்த மழையில் அவை நீரால் நிரம்பி உள்ளன.

நந்தி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறிய மண்டபத்தின் தூண்கள், படிகள் என அனைத்திலும் சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகள். இக்கோயில் சிறப்புகளில் ஒன்றான இசைப் படிகள் இந்த நந்தி பகவான் அமர்ந்துள்ள மண்டபத்தின் பின் புறம் அமைந்துள்ளது. ஏழு கருங்கற் படிகள் ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.



நாம் கோயிலுக்குள் நுழையும்போது உள்ள மண்டபத்திலும் சரி, உள்ளே உள்ள கோபுரங்களிலும் சரி ஒவ்வொரு அடுக்குகளிலும், ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சிற்பக் களஞ்சியமாக விளங்குகிறது. இயற்கை சீற்றம் முதற்கொண்டு பல்வேறு சூழ்நிலைகளைத் தாண்டி இக்கோயிலின் எதிரே காணப்படும் ஒரு வாயிலுடன் கூடிய மண்டபம். உடைந்த நிலையில் கோபுரம் எழும்பாத நிலையில் காணப் படுகிறது.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கோயில் என்பதால் கோயிலைச் சுற்றி அழகிய புல் தரையுடன் கூடிய பூங்கா ஒன்று அமைக்கப் பட்டு அழகாக பராமரிக்கப் பட்டு வருகிறது. இத்திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு கற்களாக கழற்றி எடுத்து அதில் எண்கள் இட்டு, அந்த கற்களை சுத்தம் செய்து மீண்டும் ஒன்று சேர்த்து மிக நல்ல முறையில் கோயில் சிற்பங்கள் பாதுகாக்கப் பட்டுவருகின்றன.


கொடி மரத்தை வணங்கி கோயிலின் உள்ளே சென்றதும் ஏதோ சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தது போன்ற பிரமை நமக்கு. ஏற்கனவே புதுப் பொலிவுடன் விளங்கும் கோயில் மழையில் நனைந்து புளி போட்டு தேய்த்த பித்தளைப் பாத்திரம் போல பளபளவென காட்சி அளித்தது. கோயில் முழுவதும் தூண்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மண்டபங்களின் கீழ் பகுதியில் நடனத் தாரகைகளின் நடன அமைப்புக்கள், குத்துச் சண்டை வீரர்களின் சண்டைக் காட்சி, இரண்டு செம்மறி ஆடுகள் தலையால் முட்டிக் கொண்டு சண்டையிடுவது போன்ற சிற்பக் காட்சி, பூதகணத்தின் பின் செல்லும் காளை மாட்டின் தோற்றம், மனித உருவமும் விலங்கு உருவமும் சேர்ந்து அமைந்துள்ள சிற்பம், யோகாசனம் செய்வது போன்ற தோற்றத்துடன் கூடிய சிற்ப அமைப்பு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சிற்பங்களின் அமைப்பினை.




இத்திருக்கோயிலே ஒரு தேர் போன்ற அமைப்புடனேயே காணப் படுகிறது. தாராசுரம் கோயில் உள்ளே உள்ள கோபுரம் ஒற்றைக் கலசத்துடன் கூம்பிய வடிவில் தோன்றுகிறது. இந்த கூம்பிய விமானத் தோற்றமும் அதற்குக் கீழே இரு புறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய தேர், ரதம் போல காட்சி தருகிறது. இது போன்ற மண்டபத்தின் அமைப்பு வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக வான்வெளி அறிஞர்கள் கூறியதாக தகவல்.


இராமாயணம், மகாபாரதம், ரதி மன்மதன் கதைகள், சிவபுராண கதைகள், மேலும் அதிபத்தர், இயற்பகையார், இசைஞானியார், அமர்நீதியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் உட்பட அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளும் கோயில் முழுதும் ஆங்காங்கே சிற்ப வடிவில் காணப்படுகின்றன. பரதநாட்டிய அடவுச் சிற்பங்கள் அதிகம் காணப் படுகின்றன.

ஒவ்வொரு தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்பங்கள் அழகிய அரிய சிற்பவகைகள். தூண்களில் காணப்படும் சிற்பங்கள், இரண்டு பெண்கள் ஒன்றாக நடனமாடும் தோற்றம், ஓருடல் சிற்பங்கள், நர்த்தன விநாயகரின் வடிவம், போருக்குச் செல்லும் வீரர்கள் கையில் வில், வேல் என போர்கருவிகளுடன் காணப் படுவது, சிவபிரான் நந்தி மேல் அமர்ந்தும் பூதகணங்கள் அவருக்கு பணிவிடை செய்வதும், சிவனும் பார்வதியும் நந்தி தேவர் மேல் பவனி வர பக்தகோடிகள் பின்தொடரும் காட்சி, சிவபிரான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்க, அவரது சீடர்கள் குருவின் போதனைகளை கேட்கும் விதமான தோற்றம், என பலவகையான சிற்ப வடிவங்கள்.






மண்டபங்களின் கீழ்புறம், தூண்களின் நான்குபுறம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மண்டபங்களின் மேற்கூரையிலும் கணக்கிலடங்கா சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. இங்கும் நடன மங்கைகளின் தோற்றம், விநாயகர் தோற்றம் என சிற்ப வேலைப்பாடுகள். கட்டம் கட்டமாக வடிவமைக்கப் பட்டு அந்த கட்டங்களுக்குள்ளே பல நூறு சிற்பங்களா, சிற்ப ஓவியங்களா என ஐயப் பட வைக்கும் தோற்றம்.



இத்திருக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.


நீண்ட மண்டபத்துடன் கூடிய கோபுரத்தில் சுவர் முழுக்க சிற்பங்களோடு, கருப்பு வண்ண கருங்கற்களில் அன்னை, அப்பனது பல்வேறு அவதாரங்களின் சிற்ப வடிவம். அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் லிங்கோத்பவரின் சிற்ப வடிவம் கோயில் சுவற்றின் ஒரு பக்கம்.


கோயில் கோபுரத்தின் மேற்புறத்தில் எத்தனை சிற்பங்கள், அவற்றில் ஒன்றாக கலைகளின் தந்தை நடராஜரின் அழகிய சிற்பம்.


வண்ணமயமான ரதத்தினை குதிரை இழுத்துச் செல்வது போன்ற அற்புதத் தோற்றம் தேர் சக்கரத்துடன்.


ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற தோற்றம். அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வடிவமாக இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. என்ன விஷயத்தை உணர்த்த இந்த வடிவத்தை செதுக்கினார்களோ தெரியவில்லை. இந்த சிற்பத்தை பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரு விஷயம், தற்கால மனிதன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விடுத்து, நல்ல குணங்களை தக்க வைத்துக் கொண்டு, இந்த விலங்குகளிடம் உள்ள நல்ல குணங்களைப் பெற்று நல்ல மனிதனாய் வாழ வேண்டும் என்பதை இந்தச் சிற்பம் உணர்த்துவதாகப் பட்டது.


வேணுகோபாலனின் இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் யாருமுண்டோ. இசையில் மயங்கி நிற்கும் இராதை வேணுகோபாலனுடன்.


தானத்தில் சிறந்தது கண்தானம். இதனை அப்போதே நிரூபித்துக் காட்டிய கண்ணப்ப நாயனாரின் அழகிய தோற்றம். கடவுள் முன் கவி பாடுபவனும் ஒன்றுதான், காட்டு வாசியும் ஒன்றுதான். தன் அன்பை மென்மையாக அல்லாமல், மேன்மையாக வெளிப்படுத்தி நாயன்மார்களுள் ஒருவராகிப் போன புண்ணியவானின் உன்னதச் சிற்பம்.

கல்விக்குத் தலைவியான சரஸ்வதி தேவியின் அழகிய சிற்பம்.

இவரிடம் அனுமதி பெற்றே சிவனை காணச் செல்வது கோயில் மரபு. சிவபிரானின் ஆயுட்கால காவலன். அதிகார நந்தியின் அற்புதத் தோற்றம்.

உலகத்துக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணித் தாயாரின் வார்த்தைகளால் வடிக்க முடியாத காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பம். அன்னப் பாத்திரம் ஏந்திய இவரது கை விரல்களின் நகங்கள் கூட தத்ரூபமான வடிவத்துடன் காட்சி அளிக்கிறது. கால் விரல்களும் அவ்வாறே.



முனிவரின் தவக்கோலம் நம் கண் முன்னே.

எட்டு கையுடன் தோன்றும் மகிஷாசுரமர்த்தினியின் முழு வடிவம்.

முப்புரம் எரித்த திரிபுராந்தகன் கதை சொல்லும் சிற்பம்.

யானையை வதம் செய்து அதன் தோலைத் தன்மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் கஜசம்ஹாரமூர்த்தியின் கதை மற்றொரு சிற்பம்.



இடப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளையின் உருவம், வலப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானையின் வடிவம் தெரிகிறது. இந்தச் சிற்பம் அதிசயத்தின் உச்சம்.


கண்ணப்ப நாயனாரின் காலணிகள் சிற்பவடிவில். காட்டில் அலையும் அவர் அணிந்திருந்த காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அமைப்பு.


இந்திரனின் வெள்ளை யானை, துர்வாச முனிவரின் சாபத்தினால் நிறம் மாறியது. தனது சாபம் நீங்கி சுய உருவம் அடைய வேண்டி இத்திருக்கோயில் குளத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றது. இந்த யானையின் பெயர் ஐராவதம் என்றும், இதன் சாபம் இக்கோயிலில் நீங்கப் பெற்றதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பதும் தல வரலாறு.

மேலும் எமன் ஒரு ரிஷியின் சாபத்தால் தனக்கேற்பட்ட சரும நோய் நீங்க இக்கோயில் குளத்தில் குளிக்க சரும நோய் நீங்கப் பெற்றான் எமதருமன். இதன்காரணமாகவே இக்கோயில் தீர்த்தம் எம தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.


பல நூறு கோயில்களுக்குச் சென்று பல ஆயிரம் சிற்பங்களை, அவற்றைக் காணும் பாக்கியத்தினை ஒரே கோயிலிலேயே காணும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த தராசுரம் திருக்கோயில். மத வேறுபாடுகளின்றி அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இதன் சிற்பக் கலை சிறப்பிற்காகவே நம் அடுத்த தலைமுறையினரும் கட்டாயம் காண வேண்டிய கலைப் பொக்கிஷம்.

பச்சை பூமி - முதல் பாகம்

52 comments:

  1. மழையில் நனைந்த கோயில் கோபுரம் எனக்கு பார்க்க பார்க்க பிடிக்கும். அட்டகாசமான படங்களுடன் அமர்க்களமான பதிவு. கார் பார்க் பண்ணும் இடத்தில் நிறைய மரங்கள் இருக்குமே... பார்த்தாலே கண்ணுக்குள் பச்சை வந்து ஒட்டிக்கொள்ளும்... அதுவும் மழையில் நனைந்த செடிகொடிகள்...சூப்பர்... ;-)

    ReplyDelete
  2. ஆமாம், மரங்கள் நிறைய உள்ளன. அனைத்தின் அழகையும் மழை மேலும் கூட்டியது. மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  3. Sirpangal migavum alagu. Unga post romba nalla irukku. I am not getting any words. Simply superb!

    ReplyDelete
  4. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி காயத்ரி.

    ReplyDelete
  5. நல்லா எழுதி இருக்கீங்க..

    // இத்திருக்கோயிலின் அமைப்பு அப்படியே தஞ்சை பெரிய கோயிலின் வடிவத்தை போன்றே அமையப் பெற்றுள்ளது.//

    மூணாவது படம் (கருவறை விமானம்) பாத்தப்பவே நெனைச்சேன்.. பாத்தப்பவே நெனைச்சேன்.. தஞ்சாவூர் கோபுரம் எப்ப குள்ளமாகிடுச்சுனு..

    ReplyDelete
  6. //மூணாவது படம் (கருவறை விமானம்) பாத்தப்பவே நெனைச்சேன்.. பாத்தப்பவே நெனைச்சேன்.. தஞ்சாவூர் கோபுரம் எப்ப குள்ளமாகிடுச்சுனு..//
    :)

    மிக்க நன்றி மாதவன்.

    ReplyDelete
  7. சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் தாராபுரம் படங்களுடன் அருமையான பதிவு.

    ReplyDelete
  8. அற்புதமான பொக்கிஷங்கள்... புகைப்படங்கள்.

    ReplyDelete
  9. ஆஹா அருமை அருமை..புகப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு...பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  10. @தமிழ் உதயம்,
    மிக்க நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  11. சிற்பங்களை ரசித்தேன்.

    //இதன் சிற்பக் கலை சிறப்பிற்காகவே நம் அடுத்த தலைமுறையினரும் கட்டாயம் காண வேண்டிய கலைப் பொக்கிஷம்.//

    நெரிலும் ரசிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. விவரங்களை மிக அருமையாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  12. கலக்குறீங்க...கைட் மாதிரி
    எப்டி விவரம் சேகரிக்கிறீங்க...?

    ReplyDelete
  13. @ராமலக்ஷ்மி,
    நிச்சயம் தங்களின் புகைப்பட ரசனைக்காகவே செல்லலாம். மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  14. @வார்த்தை,
    கோயில்களில் பணிபுரிபவர்களிடம் தான் விவரங்களை சேகரிக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. அட்டகாசமான படங்களுடன் அமர்க்களமான பதிவு.

    ReplyDelete
  16. மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  17. எனக்கும் இந்த கோயில் ரொம்ப பிடிக்கும்.அனைவரும் ஒரு முறை கட்டாயம் பார்க்கணும். படங்கள் அருமை..

    ReplyDelete
  18. @அமுதா கிருஷ்ணா,
    கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

    ReplyDelete
  19. @Chitra,
    கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சித்ரா.

    ReplyDelete
  20. அற்புதமான ஆரம்பம்
    பச்சை வர்ணத்தின் ஜாலம்
    விரிவான விவரணைகள்

    அதுவும் அந்த விலங்குகளின் மொத்த உருவத்தோற்றத்திற்கு கற்பிதம் உங்க கருத்து அருமை...

    ReplyDelete
  21. சிற்பக்கலைகளின் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு சிற்பங்கள்

    இந்த மே மாதம் கும்பகோணம் டூர் கண்டிப்பாக போகவேண்டியதுதான்

    நன்றி சகோ அருமையான தகவல்களுக்கும், படங்களுக்கும் (அதிலும் தண்ணீரில் மிதக்கும் கோயில் படம் கொள்ளை அழகு )

    விஜய்

    ReplyDelete
  22. @முத்துலெட்சுமி/muthuletchumi,
    மிக்க நன்றி முத்துலெட்சுமி.

    ReplyDelete
  23. @விஜய்,
    நிச்சயம் நல்ல சுற்றுலாவாக இருக்கும். மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  24. போட்டோக்கள் அருமை... நீங்கள் தொகுத்திருக்கும் அழகு அதனிலும் அருமை...

    ReplyDelete
  25. இத்தனை அழகிய புகைப்படங்கள், விபரங்கள் தொகுப்பதற்கு நிறைய உழைப்பும் ஆய்வுகளும் வேன்டும். மிக‌ அழகாய்ச் செய்திருக்கிறீர்கள் புவனேஸ்வ‌ரி! 10 வருடங்களுக்கு முன் சென்று பார்த்து ரசித்திருக்கிறேன் தோழியருடன். ஆனால் ரசித்ததை விடவும் சிதிலமடைந்து கிடந்த இடங்கள், சிற்பங்களைப் பார்த்து மனம் புலம்பியதுதான் அதிகம்! அதற்கப்புறம்தான் ஒரு வேளை மத்திய அரசின் தொல்துறைக்குக் கீழ் வந்திருக்குமோ? நான் பார்த்தபோது பூங்கா எல்லாம் இல்லை!

    ReplyDelete
  26. அருமையான பதிவுங்க.. ரொம்ப நாளா பார்க்கனும்னு ஆசைப்படுக்கிட்டு இருக்குற இடம்.. உங்க புண்ணியத்துல புகைப்படங்கள்ள பார்த்திருக்கேன்.. நன்றி..

    ReplyDelete
  27. @வழிப்போக்கன் - யோகேஷ்,
    தங்களின் பாராட்டு மிக்க நன்றி யோகேஷ்.

    ReplyDelete
  28. @மனோ சாமிநாதன்,
    மாநில அரசின் இந்து அறநிலையத் துறை, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, இந்த மூன்று அமைப்புகளின் கீழும் இக்கோயில் கொண்டுவரப்பட்டுள்ளது. பூங்காவும் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி மனோம்மா.

    ReplyDelete
  29. @கார்த்திகைப் பாண்டியன்,
    நேரிலும் சென்று அவசியம் பாருங்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  30. அருமையான படங்களுடன் தாராசுரம் கோவில் பற்றிய செய்திகள் அருமை.

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

    கண்ணப்ப நாயனாரின் காலணிகள் விளக்கம் உண்மை.
    சிற்ப கலையின் உன்னதம் போற்றப் பட வேண்டியது,அது நம் கடமை.நன்றி புவனேஸ்வரி.

    ReplyDelete
  31. //சிற்ப கலையின் உன்னதம் போற்றப் பட வேண்டியது,அது நம் கடமை.//உண்மை.
    மிக்க நன்றி கோமதியம்மா.

    ReplyDelete
  32. சிந்தைக் கவரும் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. தொகுப்பு அருமை.

    ReplyDelete
  34. அற்புதம் . பலமுறை இதை ரசித்திருக்கிறேன் . நல்ல நடையில் எழுதி உள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.

    ராதாகிருஷ்ணன் , திருப்பூர்

    ReplyDelete
  35. அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  37. தங்களது வாழ்த்துக்களுக்கும், தங்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ரத்னவேல் நடராஜன்.

    ReplyDelete
  38. நேரமே அரிதாக உள்ளது. முன்பு போல் இங்கு வளைய வர முடிவதில்லை. பணிச்சுமை அதிகம். நல்ல பதிவுகளை படிக்காமல் தவற விடும் சோகமும் உண்டுதான். நான் பட்டீச்சுரம்.
    குடந்தை கல்லூரியில்தான் அறிவியலும் படித்தேன். கல்லூரி முடிந்து சைக்கிளில் வரும் போது நண்பர்கள் குழுவுடன் நிறைய தடவை தாராசுரம் கோவிலில் கழித்த நினைவுகளை உங்கள் பதிவு எனக்கு மீண்டும் அளித்தது. மிக்க சிரத்தையுடன் அருமையாக மிகுந்த அழகுணர்வுடன் எழுதியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அற்புதமான பொக்கிஷம். அந்த பசுமையான வயல் வெளிகள் என்னுள் ஏனோ பொறாமை உணர்வைத்தூண்டியது. இந்த பதிவினை நாம் எழுத வில்லையே என்று.மழையில் நனைந்த அழகுடன் அந்த கோவிலின் படங்களை டவுன் லோடு செய்து விட்டேன் உங்களின் அனுமதி இன்றி. அழகான பதிவிற்கு நன்றியும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  39. நம் மனதில் பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருக்கும், இளமைகாலத்தில் நாம் பிறந்த ஊரில், நம் பெற்றோருடன், நம் நட்பு வட்டத்துடன்
    கழித்த இளமை கால நினைவுகள்தான், இன்றைய அவசர யுகத்தில் நமக்கு அவ்வப்போது மயிலிறகாய் வருடிச் செல்கிறது. இந்தப் பதிவு உங்கள் இளமைக் கால நினைவுகளை சற்று நேரம் மீட்டு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. உங்களது இந்த வார்த்தைகள்,
    இந்த பதிவு எழுதியதன் பலனை எனக்குத் தந்ததாகவே கருதுகிறேன். மிக்க நன்றி மாணிக்கம்.

    ReplyDelete
  40. அருமையான தகவல்களும், அற்புதமான சிற்பங்களின் அழகான புகைப்படங்களும் சேர்ந்த சிறப்பான பதிவு. மிக்க நன்றி!

    ReplyDelete
  41. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மீனாக்ஷி.

    ReplyDelete
  42. மிகவும் அருமையான பகிர்வு.நான் என் பேஸ்புக்கில் இந்த கட்டுரையை என் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.மேலும் பல பயணக் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றேன்.நன்றி.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. @Mohan Raj Gopal...

    தங்களது facebook ல் எனது பதிவை பகிர்ந்து கொண்டமைக்கும்,வருகை தந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி மோகன் ராஜகோபால்.

    ReplyDelete
  44. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  45. narayana recently vist this temple 13/9/2013 your photes super article super

    ReplyDelete